தீராத தீவிரவாதம்.. (கவிதை) வித்யாசாகர்!

.

து தீவிரவாதம்?
எச்சில் உமிழும் வேகத்திலும்
எட்டி குதிக்கிறது தீவிரவாதம்..

எழுந்து நடைபழகும் வயதில்
முட்டை கொடுத்து
பின் மீனறுத்து
பிறகு கோழி விரட்டிப் பிடித்து
துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து
குழந்தைக்குப் பரிட்சையமாகிறது
தீவிரவாதம்..

எதிரியைச் சுடுவது வெற்றி
தான் விழுந்தால் கொலையெனும்
மனோபாவம்
தீவிரவாதத்தின் முதல் போதனையாகப்
பதிகிறது
மனதுள் பிற கேள்விகளின்றி..அப்பா அம்மாவிற்கிடையே
விழும் கோடுமிழும்
பேத பிரிவினையை,

ஆசிரியர் தவறாக அடிக்கும்
ஒரு அடி கற்பிக்கும்
அதர்மத்தின் சீற்றத்தை,

நண்பன் இழைக்கும் காழ்ப்புணர்வு கொடுக்கும்
தீவிரவாதத்திற்கான
சிறு தீயை,

என் வீடு
என் நாடு
எனது மொழி
எனது மக்கள் எனும்
பிடிப்பு இடர்கையில் கூடும் வெறியில்
முரண்பட்டப் புரிதலில்
முளைத்துவிடுகிறது தீவிரவாதம்..

அனிச்ச மலருக்கு வலிக்குமோ
பச்சைப்பிள்ளை பாவம் துடிக்குமோ
என்று பதறும் மனசுதான்
எல்லோருக்கும்
பிறக்கையிலிருக்கிறது,

அதில்
அறமறுக்கும் கத்தியை
நாம் தீட்டாதவரை -
குழந்தைகளுக்குத் தெரியாது தீவிரவாதம்;

அதைப் புரிந்து நாம் மாறாதவரை
முற்றிலும்
தீராதிந்த தீவிரவாதம்..
———————————————————————-
வித்யாசாகர்