“எழுத்தாளர்கள்:பரிசுகள், விருதுகள், பாராட்டுகள்”

.

சென்னைப் பல்கலைக்கழக பவள விழாக் கலையரங்கில் 26.04.2013ல் நிகழ்ந்த விளக்கு விருது வழங்கும் வைபவத்தில் எம். ஏ. நுஃமான் ஆற்றிய ஏற்புரை

எல்லோருக்கும் வணக்கம்

இது எனக்கொரு புது அனுபவம். இதுவரை இத்தகைய விருது விழாக்களில் விருதுபெறும் ஒருவனாக நான் இருந்ததில்லை. விருதுகளுக்கு எதிரான ஒரு மனநிலையில் இவ்வளவுகாலமும் இருந்து விட்டேன். இன்று இவ்விருதினைப் பெற்றுக்கொண்டு ஏற்புரையாக என்ன பேசுவது என்று யோசித்தேன். எழுத்தாளர்கள்: பரிசுகள், விருதுகள்,பாராட்டுகள் பற்றியே பேசலாம் என்று நினைத்தேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ‘காத்திருங்கள்என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். எனக்கு அறுபது வயது பூர்த்தியாவதை முன்னிட்டு எனது சில நண்பர்களும் மாணவர்களும் எனக்கு ஒரு விழா எடுக்கும் நோக்கில் என்னை அணுகிய போது அதை மறுதலித்த மனநிலையில் பரிசுகள் விருதுகள் பாராட்டுகளுக்கு எதிராக எழுதிய கவிதை அது. கவிதை இதுதான்:

மன்னிக்கவேண்டும்
எனக்கு எதற்கு இப்போது பாராட்டு,
பட்டம், பரிசு, விருதுகள்,
விழாக்கள் எல்லாம்?
காத்திருங்கள்
நான் இறந்து நூறாண்டுகள் ஆகட்டும்
நான் புதைக்கப்பட்ட இடத்தில்
புல் முளைக்கட்டும்
இன்னும் நூறாயிரம்பேர் புதையுண்டு போகட்டும்
அதன்பின்பும்
என் புதைகுழியின் அடையாளத்தை
உங்களால் கண்டுகொள்ள முடிந்தால்,
என் எச்சங்களில் ஏதாவது ஒரு துணுக்கு
எஞ்சியிருந்தால்,
மின்மினிபோல் அது சற்றேனும் ஒளி உமிழ்ந்தால்
என்னை நினைவுகூருங்கள்
அதுவரை காத்திருங்கள்
தயவுசெய்து
காத்திருங்கள்


இப்போதும் அதே மனநிலையில்தான் நான் இருக்கிறேன். இந்த விருதைப் பெறுவதற்கு இவ்வளவு தூரம் வருவதில் ஏதாவது அர்த்தம் உண்டா என கடைசி நிமிடம் வரை நான் யோசித்ததுண்டு.

பரிசுகள் விருதுகள் பாராட்டுகள் எல்லாம் தமிழ்ச்சூழலில் மலினப்படுத்தப்பட்டிருப்பதுபோல் வேறு எங்கும் மலினப்படுத்தப்பட்டிருக்காது என்பது என் எண்ணம். பாராட்டு விழாக்களும் கௌரவிப்புகளும் அவற்றுக்குரிய அர்த்தத்தையும் மதிப்பையும் இழந்துவிட்டன. பொன்னாடைகள் பன்னாடைகளுக்குச் சமனாகிவிட்டன. அபத்தமான, அலங்காரமான பட்டங்கள் வழங்கப்படுவதும், அவற்றை நம்படைப்பாளிகள் பலர் ஆவலுடனும், ஆர்ப்பாட்டத்துடனும் சுமந்து திரிவதும் சுயமதிப்பீட்டின் வீழ்ச்சியையே நமக்கு உணர்த்துகின்றன. பரிசுகள், விருதுகளுக்காக நம் படைப்பாளிகள் பலர் படும் பாடுகளும், ஒவ்வொர முறையும் இவை தொடர்பாக எழும் சர்ச்சைகளும் இவற்றை மதிப்பிறக்கம் செய்துவிட்டன.


இத்தகைய சூழலில் விருதுகள் எவையும் பெறாது இருப்பதே ஒரு எழுத்தாளனுக்குக் கௌரவம் என்ற கருத்து எனக்குள் உறுதியாகிவிட்டது. இந்த உறுதியுடனேயே, தவிர்க்க முடியாத இரண்டொரு சந்தர்ப்பங்களைத் தவிர, இவற்றை நான் புறக்கணித்துவந்திருக்கிறேன். இலங்கை அரசு வழங்கிய கலாசூரி விருது, கலாசார அமைச்சு விருது, வடகிழக்கு மாகாண கவர்னர் விருது ஆகியவற்றை இவ்வாறு நான் நிராகரித்திருக்கிறேன். இலக்கிய விழாக்களில் கௌரவிப்புக்கான அனேக அழைப்புகளை மறுதலித்திருக்கிறேன். அரச அல்லது தனியார் நிறுவனங்களின் பரிசுத் தேர்வுக்காக இதுவரை எனது நூல்கள் எவற்றையும் நான் அனுப்பியதில்லை.

எனக்குள் ஒளித்து வாழும் எனது மனஅமைப்பும் இதற்கு ஒரு காரணம் என்று சொல்லவேண்டும் . எனது முதலாவது நூல் தவிர வேறு எதற்கும் நான் வெளியீட்டு விழாக்கள் செய்ததில்லை. எனது எழுத்துக்கள் மூலமாக அன்றி வேறுவகையில் எனது இருப்பை வெளிக்காட்ட நான் முயன்றதில்லை. அலுவலகத் தேவைகளுக்காக அன்றி, வேறு சந்தர்ப்பங்களில் எனது பெயருக்குமுன் கலாநிதி என்ற கல்விசார் பட்டத்தையோ, பேராசிரியர் என்ற பதவிப் பெயரையோ நான் பயன்னடுத்தியதில்லை. இதை நான் ஒரு பெருமையாகச் சொல்லவில்லை, இதுவே என் இயல்பாக இருந்திருக்கிறது. நான் என்ன எழுதுகிறேன், என்னைப்பற்றிப் பிறர் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதையெல்லாம், தாங்களாக அறிந்துகொண்டாலன்றி, எனது மனைவி, மக்களுக்குக் கூட நான் சொல்வதில்லை. இன்றுவரை அதில் எனக்கு ஒரு கூச்சம் இருக்கிறது. ஒரு நல்ல கவிதை எழுதியிருக்கிறேன், ஒரு நல்ல கட்டுரை எழுதி யிருக்கிறேன் என்று சொல்லும் தற்துணிபு இன்றுவரை எனக்குச் சித்திக்கவில்லை. என்எழுத்துக்களின் தரம் பற்றி எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.

இத்தகைய மன அமைப்புடைய ஒருவனுக்குத்தான் இவ்வாண்டு விளக்கு விருது அறிவிக்கப்பட்டது. பலவகையில் இது என்னை மிகுந்த சங்கடத்துள் ஆழ்த்திய அறிவிப்பு. இதை எவ்வாறு எதிர்கொள்வது என பல நாட்கள் யோசித்தேன்.

ஏற்கனவே நான் நிராகரித்த விருதுகள் போல் அத்தனை எளிதாக நிராகரிக்கக் கூடிய ஒன்றல்ல இது. ‘தீவிர எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் நோக்கில்விளக்கு இலக்கிய அமைப்பு புதுமைப்பித்தன் நினைவாக நிறுவிய விருது இது. இதுவரை விளக்கு விருது பெற்றவர்கள் எல்லோரும், சி.சு. செல்லப்பா முதல் திலிப்குமார் வரை, நவீன தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் வெவ்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்ற ஆளுமைகள். விளக்கு விருது தன்னை மலினப்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்கு இவர்கள் சாட்சி.இந்த விருதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது வரை விருதுபெற்ற இப்படைப்பாளிகளை அவமதித்து விடுவேனோ என்ற தயக்கம் எனக்கு இருந்தது. அதேவேளை விருதுகள் பெறாதிருப்பதே ஒரு எழுத்தாளனுக்குக் கௌரவம் என்ற என் நிலைப்பாட்டை விட்டுக் கொடுப்பதும் சங்கடமாக இருந்தது. இதை ஏற்றுக்கொள்வதனால் கிடைக்கும் பாராட்டு சங்கோசத்தை ஏற்படுத்தியது. இத்தகைய உணர்வு பூர்வமான தடுமாற்றங்களுக்கு மத்தியில், இறுதியில், தயக்கத்துடனும், சங்கோசத்துடனும், சுந்தர ராமசாமி, அசோக மித்திரன் ஆகிய நம் காலத்துப் பெரும் சாதனையாளர்கள் பெறாத விருதை நான் பெறுகிறேன் என்ற குற்ற உணர்வுடனும் இந்த விருதை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானித்து அமைப்பாளர்களுக்கு அறிவித்தேன்.

ஒரு விருதின் மதிப்பு அதை வழங்குபவர் யார், அதைப் பெறுபவர் யார் என்ற இரண்டு அம்சங்களில் தங்கியிருக்கின்றது. இரண்டுக்கும் இடையிலான சமன்பாட்டிலேயே ஒரு விருதின் பெறுமதி உயர்கின்றது. இவற்றுக்கிடையே முரண்பாடு காணப் படும் போதே விருது பற்றிய சர்ச்சைகள் எழுகின்றன. ‘விருதுகளால் ஒரு படைப்பாளி யின் மதிப்பு உயர்வதில்லை, பதிலாக விருது பெறும் ஆளுமைகளைப் பொறுத்தே ஒரு விருது மதிப்புப் பெறுகிறதுஎன சில ஆண்டுகளுக்கு முன் ‘இயல் விருதுதொடர்பான ஒரு சர்ச்சையின் போது நான் எழுதியதாக ஞாபகம். நோபல் இலக்கியப் பரிசின் அரசியல் பற்றிப் பல விமர்சனங்கள் இருந்தாலும், மூன்றாம் தரப் படைப்பாளிகள் யாருக்கும் அப்பரிசு வழங்கப்படவில்லை என்பதாலேயே உலகளாவிய நிலையில் நோபல் பரிசு மதிக்கப்படுகின்றது. தமிழில் இத்தகைய மதிப்பீட்டைத் தொடர்ச்சியாகப் பேணுகின்ற இலக்கிய அமைப்புகள் மிகச் சிலவே உள்ளன. விளக்கு இலக்கிய அமைப்பு அவற்றுள் ஒன்று என்பது என் கருத்து.

ஆனால், விளக்கு விருதுக்கு நான் தகுதியானவன்தானா? எனக்கு வழங்கப்பட்டதன் மூலம் விளக்கு விருது தன்தரத்தை உயர்த்திக் கொண்டதா அல்லது தாழ்த்திக்கொண்டதா என்ற கேள்விகள் உள்ளன. இதற்கு என்னிடம் விடை இல்லை. இந்த விருது அறிவிக்கப்பட்ட கடந்த நான்கு மாதங்களில் இது பற்றிய சர்ச்சைகள் எவையும் எளவில்லை என்று நினைக்கின்றேன். பல்வேறு சஞ்சிகைகளும், இணைய தளஙகளும் இச்செய்தியை வெளியிட்டு எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தன. என்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லாத நண்பர் ஜெயமோகன் கூட தன் இணையத்தில் இச்செய்தியை வெளியிட்டு எனக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார். அவ்வகையில் என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர்களும் விளக்கு இலக்கிய அமைப்பும் திருப்தி அடையலாம்.

ஆயினும், என்னைப் பற்றி எனக்கு ஒரு சுயமதிப்பீடு உண்டு. அது எனக்குச்சாதகமானது அல்ல. 68 வயதுவரை ஆரோக்கியமாகவும், சற்றுப் பொருளாதார வசதியுடனும் வாழக் கிடைத்திருக்கிறது எனக்கு. இந்த நீண்ட வாழ்க்கையில் எழுத்துத்துறையில் என் சாதனைகள் என்ன? இதுவரை முப்பது நூல்கள் வெளியிட்டிருக்கிறேன், இன்னும் பத்து நூல்கள் அளவுக்கான ஆக்கங்கள் என் கோப்புகளில் உள்ளன என்பது எனக்குத் திருப்தி தருவதாக இல்லை.என்னைப் பொறுத்தவரை எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. 40 வயதுக்குள் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்ட பாரதி, புதுமைப்பித்தன் சாதனைகளுடன் ஒப்பிடும்போது நான் எங்கு நிற்கிறேன் என்பது எனக்கு முக்கியமாகப்படுகின்றது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்க யாரும் இருக்கவில்லை. பரிசுகளையும் விருதுகளையும் எதிர்பாராமலேயே, பஞ்சத்தோடும், பட்டினியோடும் வாழ்ந்து பெரும் சாதனைகள் படைத்தவர்கள் அவர்கள். நமது அதிஷ்டமோ, துரதிஷ்டமோ, நமக்குப் பரிசுகளும், விருதுகளும் பாராட்டுகளும் வழங்கிக் கௌரவிக்க இன்று ஏராளமான அமைப்புகள் உள்ளன. அவைதான் இல்லாவிட்டாலும், நாமே ஒரு இணையத்தை, ஒரு பத்திரிகையைத் தொடங்கி நம்மைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைச் சுழலவிடும் வாய்ப்புகள் இன்று நமக்கு உள்ளன.

இன்றுவரை நான் எனக்கென்று ஒரு இணைய தளத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. படைப்பிலக்கியத் துறையில் 1960 - 70கள்தான் எனது வளமான காலம். 1980க்குப் பின்னர் நான் 100 கவிதைகள்கூட எழுதியிருக்கமாட்டேன். அவையும் பெரும்பாலும் துப்பாக்கி பற்றிய கவிதைகள்தான். எண்பதுக்குப் பின்னர் நாங்கள் துப்பாக்கிகளுடன் வாழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடுகள் அவை. அவற்றைக் கவிதைகள் என்று ஏற்றுக் கொள்ளாத தீவிர படைப்பாளிகள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர்.

ஆராய்ச்சி, விமர்சனம், மொழிபெயர்ப்புத் துறைகளில் நான் சிறிது பங்களிப்புச் செய்திருக்கிறேன். ஆனால் அவை போதுமானவை அல்ல என்பது என் கணிப்பு. நான் செய்திருக்கக்கூடியவற்றுள் பத்தில் ஒரு பங்குதானும் நான் செய்யவில்லை என்பது என்னைப் பற்றிய எனது குற்றச்சாட்டு. ‘இன்னும் பத்து ஆண்டுகள் வாழக் கிடைத்தால் ஏதேனும் சாதிக்கலாம்என மூன்றாவது மனிதன் சஞ்சிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில் நான் குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு சொல்லி சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் திருப்தியுறும் அளவுக்கு, குறிப்பிடும்படி ஒன்றும் சாதிக்க வில்லை. நான் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்வதற்கான வாய்ப்பு சந்தேகத்துக்குரியது. வாழ்ந்தாலும் எழுதுவதற்கான ஆரோக்கியம் இருக்குமா என்பதும் ஐயத்துக்குரியது. அவ்வகையில் இவ்வளவுதான் நான் என்று அமைதிகாண்பதைத் தவிர எனக்கு வேறுவழி இல்லை.

இவ்வளவையும் பெரிதாக மதித்து விருது வழங்கி என்னைக் கௌரவிக்க முன்வந்த விளக்கு இலக்கிய அமைப்புக்கும், என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் இங்கு குழுமியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருது வழங்கும் வைபவத்தை முன்னிட்டு என் எழுத்துகள் பற்றி ஒரு காத்திரமான கருத்தரங்கை ஏற்பாடு செய்த சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைக்கும், அதன் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களுக்கும், கட்டுரை படித்த வ. கீதா, அ. மங்கை, அ. சதீஷ், வி. அரசு ஆகியோருக்கும் எனது நன்றிகள். இதுவரை விளக்கு விருது தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இப்போது முதல் முறையாக இலங்கை எழுத்தாளர் ஒருவர் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதை இலங்கை எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் ஒரு கௌரவமாகவும் கருதுகின்றேன். அதற்காகவும் மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
                                       ---0---