தேசாந்தரியின் இல்லத்தில் சில மணிநேரங்கள் -முருகபூபதி

.


ஒரு ஊரில் ஒருதேநீர் தயாரித்துவிற்பவன் இருந்தான். ஒருநாள் அந்த ஊரில் பிரபலமான ஒரு மல்யுத்தவீரன் அவன் கடைக்குவந்து தேநீர் கேட்டிருக்கிறான். அந்தத்தேநீர் தயாரிப்பவன் அன்று அந்த மல்யுத்தவீரனுக்கு தேநீர் தயாரிக்க சற்று காலதாமதமாகிவிட்டது. அதனால் கோபமுற்ற அந்த மல்யுத்த வீரன், “எனக்கு உனது தேநீர் வேண்டாம். என்னை காத்திருக்கவைத்து அவமதித்துவிட்டாய். அதனால் நாளை நீ என்னுடன் மல்யுத்தப்போட்டிக்கு வரவேண்டும். உனக்கு நாளை ஒரு பாடம் கற்பிக்கின்றேன்எனச்சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அந்த அப்பாவி ஏழை தேநீர்கடைக்காரன் என்ன செய்வது என்று தெரியாமல் அவதியுற்றான். நாளை மல்யுத்தவீரனோடு எப்படி போட்டிபோடப்போகிறேன்? அதில் தான் தோற்பது நிச்சயம். தோற்றால் அடி, உதையும் வாங்கிக்கொண்டு என்ன தண்டனை பெறப்போகிறேனோ தெரியவில்லையே என்று மனம்கலங்கினான். அவனால் தொடர்ந்தும் தனது வேலையை கவனிக்கமுடியவில்லை. ஒரு துறவியிடம் தனது இயலாமையைச்சொல்லி வருந்தி, இனி நான் என்னதான் செய்வது? எனக்கேட்கிறான்.


அந்தத்துறவி, அமைதியாக நிதானமாக அவனுக்கு ஒரு ஆலோசனை சொல்கிறார். இப்பொழுதுமுதல் நீ தொடர்ந்து தேநீர் தயாரித்துக்கொண்டே இரு. வேகமாக.... அதிவேகமாகத்தயாரித்துக்கொண்டிரு. ஒரு கணமேனும் ஓய்வின்றி தயாரித்துக்கொண்டிரு. அவ்வளவுதான் நான் உனக்குத்தரும் அறிவுரை. அந்த அப்பாவிக்கு எதுவும் புரியவில்லை. தனது தேநீர்க் கடைக்குத் திரும்பி அந்தத்துறவி சொன்னவாறே வேகவேகமாக தேநீர் தயாரித்தான். உண்ணாமல் உறங்காமல் ஓய்வின்றி தொடர்ச்சியாகத் தேநீர் தயாரித்துக்கொண்டே இருந்தான். அடுத்தநாள் காலை புலர்ந்துவிட்டது. அப்பொழுதும் அதிவேகமாக தேநீர் தயாரிக்கிறான்.
சொன்னவாறு அந்த மல்யுத்த வீரனும் வருகிறான்.
வந்துவிட்டேன். போட்டிக்குத்தயாரா?” எனக்கேட்கிறான். அந்த விநோதப்போட்டியை பார்க்க ஊரே திரண்டுவிடுகிறது.
அந்தத் தேநீர் தயாரிப்பவன் , “ வாருங்கள். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு தேநீர் அருந்திவிட்டு தொடங்கலாமே... இதோ உங்களுக்கு ஒரு தேநீர் தயார்எனச்சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் தேநீர் தயாரித்துக்கொடுக்கிறான்.
அந்த மல்யுத்த வீரன் தயங்கிவிட்டான். மின்னல் வேகத்தில் தேநீர் தயாரிக்கும் இவன் மின்னல் வேகத்தில் என்னை விழுத்தியும் விடுவான். மிகுந்த பலசாலியாகவும் இருப்பான் என நினைத்துக்கொண்டு அந்தப்போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறான்.
அர்ப்பணிப்பும் தீவிர ஈடுபாடுமே இக்கதை சொல்லும் செய்தி.
இது ஒரு ஜென் கதை. இதனை உலக இலக்கியப்பேருரைகள் வரிசையில் பாஷோவின் ஜென்கவிதைகள் பற்றிய உரையில் தமிழகத்தின் இன்றைய முன்னணி படைப்பாளி எஸ்.ராமகிருஷ்ணன் சொன்ன கதை.
ராமகிருஷ்ணன். சாலிக்கிராமத்தில் வசிக்கிறார்.  ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் எடுத்திருக்கவேண்டியவர். தேசாந்தரியாக அலைந்து நூலகங்களிலெல்லாம் பொழுதைக்கழித்து இந்திய தேசத்தை முடிந்தவரையில் சுற்றியலைந்து தரிசித்து, இந்திய இலக்கியங்களையும் உலக இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்து நீண்ட காலமாகவே முழுநேர எழுத்தாளராக வாழ்ந்துகொண்டிருப்பவர்.
இலக்கியத்தில் தேடல், பயணங்களில் லயிப்பு, எழுத்தில் வேகம், பேச்சில் ஆழ்ந்த புலமை, நட்புறவாடலில் மேட்டிமையற்ற எளிமை... இவ்வாறு பல எனக்கு மிகவும் பிடித்தமான இயல்புகள் ராமகிருஷ்ணனிடம் இருந்தமையால் அவர் எனது விருப்பத்துக்குரிய படைப்பாளி.
ராமகிருஷ்ணனும் அவுஸ்திரேலியா வந்து சுமார் ஒரு மாதகாலம் இருந்தவர்தான். ஆனால் இங்கு எந்தவொரு எழுத்தாளரும் அவரை சந்தித்திருக்கவில்லை. அவர் வந்ததும் தெரியாது திரும்பிச்சென்றதும் தெரியாது.
ஜீவாவின் இயக்கத்தில் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட உன்னாலே... உன்னாலே திரைப்படத்தின் வசனகர்த்தா ராமகிருஷ்ணன். அவுஸ்திரேலியாவில் பல தமிழ்த்திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் ஜீவாவின் இயக்கத்தில் வெளியான உன்னாலே...உன்னாலே மாத்திரமே அவுஸ்திரேலியாவை, குறிப்பாக நான் வாழும் மெல்பனை கவிதைநயத்துடன் சித்திரித்த, கண்களையும் நெஞ்சத்தையும் கவரும்விதமாக எடுக்கப்பட்ட படம் என்பது எனது அபிப்பிராயம்.
ஜீவா என்ற இளம் இயக்குநர் மாரடைப்பினால் அற்பாயுளிலேயே மறைந்துவிட்டமை தமிழ்த்;;திரை உலகிற்கு இழப்பு. அந்தக்கவலையையும் ராமகிருஷ்ணன் அன்று என்னுடன் பகிர்ந்துகொண்டார். குறிப்பிட்ட திரைப்படவேலைகளுக்காக அவுஸ்திரேலியா வந்திருந்தபொழுது சந்திக்கத்தவறிவிட்டோம் என்ற குறையையும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம்.
ராமகிருஷ்ணனின் படைப்புலகம் மீது எனக்கு ஈர்ப்பு நேர்ந்தமைக்கு அவுஸ்திரேலியாவில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளியான நண்பர் நடேசனின் உதயம் இருமொழி மாத இதழும் காரணம் என நினைக்கின்றேன்.
உதயம் இதழில் இலக்கியப்பகுதிகளை நான் கவனித்தேன். அதில் ஜெயமோகன், சாருநிவேதிதா, பாவண்ணன், ஆகியோருடன் ராமகிருஷ்ணனும் சிறிதுகாலம் சில பத்திகளை தொடர்ந்து எழுதினார்.
உப்பிட்ட வார்த்தைகள், சிறிது வெளிச்சம் என்பன இவர் உதயத்தில் எழுதிய தொடர்பத்திகள்.அதில் அவர் எழுதும் ஏதாவது ஒரு பத்தி எனக்கு மிகவும் பிடித்துவிட்டதென்றால் உடனே ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசி எடுத்து, எனது வாசிப்பு அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துவிடுவேன். முகம் பார்க்காமலேயே அவருடன் நான் தொடர்ந்த இலக்கிய நட்புறவு அப்படித்தான் துளிர்த்தது.
ஒரு தடவை அவர் மறைந்த தமிழக முன்னணி நடிகை சாவித்திரி பற்றி எழுதியிருந்தார். சாவித்திரி சின்னவயதிலிருந்தே எனது அபிமானத்துக்குரிய நடிகை. அவர் நடித்த பாசமலர் படத்தை பார்க்கும்போது எனக்கு பத்துவயது. எப்பொழுதும் எனது தங்கையுடன் சண்டைபிடிக்கும் நான், அந்தப்படம் பார்த்தபிறகு பாசத்தைப் பொழிந்தேன். அது இன்றுவரை தொடருகிறது. அந்தளவுக்கு என்னை பாதித்த படம். அதிக தடவைகள் பார்த்த படம். சாவித்திரியின் அந்திமகாலம் கண்ணீரை வரவழைக்கும். அவர் மறைந்தபோது வீரகேசரியில் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன்.
உதயம் இதழில் ராமகிருஷ்ணன் சாவித்திரியின் அந்திமகால ஒளிப்படத்துடன் அந்தக்கட்டுரையை எழுதியதும் எனக்கு பழைய நினைவுகள் மலர்ந்தன.
சென்னை தி. நகர் அபிபுல்லா ரோடில் சாவித்திரி வாழ்ந்த வீட்டை பார்த்த கதையை ராமகிருஷ்ணனிடம் சொன்னேன். என்றாவது ஒருநாள் சந்திப்பேன் என்றும் வாக்களித்தேன். அந்த விருப்பம் இம்முறைதான் நிறைவேறியது.
உயிர்மை இதழில் ராமகிருஷ்ணன் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு விழித்திருப்பவனின் இரவு. பல உலக இலக்கிய மேதைகளின் வாழ்வையும் பணிகளையும் விரிவாக பதிவு செய்த நூல். எனக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பு 2009 இல் சென்னையில் நடந்த புத்தகச்சந்தையில் வாங்கியிருந்தேன். அந்த நூல்பற்றிய எனது திறனாய்வை உதயத்திலும், இலங்கையில் தினக்குரலிலும் எழுதியிருக்கிறேன். உலக இலக்கியங்கள் பற்றிய தேடலில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்கவேண்டிய நூல் விழித்திருப்பவனின் இரவு.
உலக வரைபடம் பார்த்திருக்கிறோம். நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிரான பாதைகளை தெரிந்துகொள்ளவேண்டுமாயின் இந்தத்தொகுப்பையும் ராமகிருஷ்ணனின் உரையில் கஸட்டுகளில் பதிவாகியிருக்கும் உலக இலக்கிய பேருரைகளையும் அவசியம் பார்க்கவேண்டும்.
ராமகிருஷ்ணன், சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பயண இலக்கியம், பத்தி எழுத்து, உலக இலக்கிய மற்றும் இந்திய இலக்கிய ஆளுமைகள் குறித்தெல்லாம் நிறையவே நிறைவாக எழுதியிருப்பவர். சிறந்த பேச்சாளர். அடுக்குவசன உணர்ச்சியூட்டும் பேச்சாளர் அல்ல. அவரது படைப்புகளை வாசிக்கும்போது எப்படி வாசகனையும் தன்னோடு அழைத்துச்செல்வாரோ அதுபோன்று தனது பேச்சின்பொழுதும் அதனைக்கேட்டுக்கொண்டிருப்பவர்களை கூடவே அழைத்துச்செல்லும் இயல்பினைக்கொண்டவர். இது ஒருவகை ரஸவாதம்தான்.
அன்று அவரது மனைவி எடுத்துவந்து, எனது தமிழகப்பயண நினைவாகத்தந்த ராமகிருஷ்ணனின் உலக இலக்கிய தொடர்பேருரைகள் அடங்கிய 7 கஸட்டுகளிலும் அவரது ரஸவாதத்தை அவுஸ்திரேலியா வந்ததும் பார்த்து ரசித்தேன். அட்சரம் வெளியிட்டிருக்கும் இந்தத் தொடரில் பாஷோவின் ஜென் கவிதைகள், ஹோமரின் இலியட், டால்ஸ்டாயின் ‘அன்னாகரீனா, தாஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும், ஷேக்ஸ்பியரின் ;மெக்பெத்;’ ஆயிரத்தொரு அராபிய இரவுகள், ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்ஆகியன தனித்தனி தொகுப்புகளாக வந்துள்ளன.
டால்ஸ்டாய், ஹெமிங்வே, தாஸ்தாயெவ்ஸ்கி முதலானோரின் வாழ்வின் புதிர்கள் எம்மை அதிரவைப்பவை. ரஷ்யாவிலிருந்து இயற்கையை வழிபட்ட குற்றத்திற்காக கனடா கியூபெக்கிற்கு நாடுகடத்தப்பட்ட மக்களின் கப்பல் பயண செலவுக்காக தனது புத்துயிர்ப்;பு நாவலை எழுதி பணம் தேடிக்கொடுத்த டால்ஸ்டாயின் அந்திமகாலம் ஒரு ரயில் நிலையத்தில் அவரது கதாபத்திரம் (அநாகரினா) போன்று அநாதரவாக முடிந்தமையும், எத்தனையோ வீரசாகசங்கள் செய்து உயிர்பிழைத்த ஒரு இராணுவ வீரனாக வாழ்ந்து நோபல் பரிசும் வென்ற பின்னர், தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்ட ஹெமிங்வேயும், வாழ்நாள்;பூராகவும் வலிப்பு நோயினாலும் வறுமையாலும் துர்க்கனேவ் போன்ற ரஷ்ய இலக்கிய மேதைகளினாலும் அவமதிக்கப்பட்ட தாஸ்தாயெவ்ஸ்கி பற்றியும் ராமகிருஷ்ணன் வழங்கிய எளிமையான விளக்கவுரைகள், அவற்றைக்கேட்ட பின்பும் பல நாட்களுக்கு மனதில் ஒருவகை பதட்டத்தையும் மேதைகளின் மறுபக்கத்தின் புதிர்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
எனது வாழ்நாளில் பல சமயபிரசங்கிகளின் தொடர்சொற்பொழிவுகளைப் பார்த்திருக்கின்றேன். இராமாயண, மகாபாரத உபந்யாசங்களும் கேட்டிருக்கின்றேன். ஆனால் அவை எவற்றிலும் இல்லாத தனித்துவத்தையும் ஆழமான தேடலையும் ராமகிருஷ்ணனின் குறிப்பிட்ட இலக்கியப்பேருரைகளில் அவதானித்தேன். உலக இலக்கியம் பற்றிய தீவிர தேடலும் பயிற்சியும் உள்ள ஒருவரினால்தான் அது சாத்தியம்.இன்று கவிதை உலகில் பெரிதும் பேசப்படும் ஹைக்கூ கவிதைகளின் முன்னோடிகள் ஜென்கதை சொல்லிகளிடமிருந்து கிடைத்திருக்கிறது. அகவிழிப்பை ஏற்படுத்தும் பாஷோவின் ஜென்கவிதைகள் பற்றிய இலக்கியப்பேருரையில்தான் இந்த அங்கத்தில் இடம்பெற்ற அந்த தேநீர் தயாரிப்பவனையும் மல்யுத்த வீரனையும் கண்டேன்.
ஜென் கவிதைகள் தொடர்பான தனது தேடலை தொடக்கிவைத்தவரும் தீவிரப்படுத்தியவரும் தனது இனிய நண்பர் கவிஞர் தேவதச்சன்தான் என்ற தவலையும் சொல்கிறார். தமிழில் முதல் முதல் ஹைக்கூ கவிதைகளின் மேன்மைபற்றி சுதேசமித்திரனில் பாரதியார் எழுதியிருக்கும் செய்தியையும் குறிப்பிடுகிறார். அத்துடன் தான் ஓரு கவிஞன் இல்லை என்பதையும் வெளிப்படுத்தும் ராமகிருஷ்ணனின் வசனத்தில் வெளியான பல படங்களில் கவித்துவம் இருந்ததை அவதானித்திருக்கிறேன்.
ஒரு ஆற்றல்மிக்க இலக்கியவாதியின் திரைப்பட வசனங்கள் வழக்கத்தை விட வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆல்பம், பாபா, பாப்கார்ன், சண்டக்கோழி, பீமா, உன்னாலே... உன்னாலே... ஆஸ்தி, தாம் தூம், மோதிவிளையாடு, சிக்குபுக்கு, அவன் இவன், யுவன் யுவதி, பேசு என்பன ராமகிருஷ்ணன் வசனம் எழுதிய திரைப்படங்கள். கர்ணமோட்சம் என்ற தேசிய விருதுபெற்ற குறும்படத்திற்கும் இவர்தான் வசனம். பாபா திரைப்படம் சூப்பர்ஸ்டாருடையது. அதனால் அவரும் இவருக்கு நண்பர். ராமகிருஷ்ணனுக்கு கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல்விருது கிடைத்தபோது அதற்கான பாராட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது. அதில் ரஜினியும் நண்பர் என்ற முறையில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைக்கூட சகித்துக்கொள்ள முடியாத சிலர் எள்ளிநகையாடினார்கள்.ஒரு திரைப்பட நடிகர் ஒரு இலக்கியவாதியின் நண்பராக இருக்க தகுதியற்றவரா? நாம் எந்த உலகத்தில் இருக்கிறோம். ராமகிருஷ்ணன் அதற்காக அலட்டிக்கொள்வதில்லை. நிறைகுடங்கள் தழும்பாது.
அவரின் எனது இந்தியா என்ற விகடன் பிரசுர நூல் வெளியாகியிருந்தது. அதனை எனக்குக் காண்பித்தார். ஒரு தேசாந்தரியின் பார்வையில் எனது இந்தியாவை பதிவுசெய்திருக்கிறார். விகடனில் அவர் எழுதிய தொடர் எனது இந்தியா. பல அபூர்வமான படங்கள் இடம்பெற்ற நூல். மகாத்மா காந்தி சுடப்பட்டு நிலத்தில் விழுந்திருக்கும் படமும் அதிலிருக்கிறது.

 ராமகிருஷ்ணனின் காதல் மனைவி சந்திரபிரபா சிறந்த வாசகி. வரம்தான். இரண்டு ஆண்பிள்ளைகளின் தந்தை. இலக்கியமே அவரது மூச்சு. பயணங்கள் அவரது இயக்கம். தாகூர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். அவரது படைப்புகளை ஆய்வுசெய்த சிலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். M Phil பட்டத்திற்காகவும் சிலர் ஆய்வுசெய்துள்ளனர். அவருடனான அன்றைய சந்திப்பு பயனுடையது. கைபற்றிக்குலுக்கி மீண்டும் சந்திப்போம் என்று பரஸ்பரம் சொல்லிக்கொண்டோம்.