இலங்கைச் செய்திகள்

.

புலிகளுக்கு சொந்தமான 1.2 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துகள் பறிமுதல்

13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்வதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் நிச்சயம் பெறப்படும் : கெஹலிய

இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றது: எரிக் சொல்ஹெய்ம்

13ஐ திருத்த தேவையில்லை: இந்திய எம்.பி.க்கள்

யாழ். வீட்டுத்திட்டம்; இந்திய எம்.பி.க்கள் குழு பார்வை

முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையங்களாக இலங்கையில் மத்ரஸாக்கள் : பொதுபல சேனா

காணி, பொலிஸ் அதிகாரங்களையே ஒழிக்க வேண்டும் : குணதாச அமரசேகர

======================================================================

புலிகளுக்கு சொந்தமான 1.2 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான சொத்துகள் பறிமுதல்


03/06/2013 இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமாயிருந்த 1பில்லியன் ரூபாவுக்கு கூடுதலான பெறுமதியுடைய சொத்துகள் பற்றிய விபரம் பயங்கர வாத புலனாய்வுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விசாரனைகளின் போது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அவை இந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பயங்கரவாத புலனாய்வுத் திணைக்கள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் 1.2 பில்லியன் ரூபாவுக்குக் கூடுதலான பெறுமதியுடைய இத்தகைய சொத்துகளில் காணி, தொடர்மாடி மனைகள், அழுத்தகங்கள் (அச்சு இயந்திர சாலைகள்) வீடுகள், இயந்திரத் தொகுதிகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் மீன் பிடி இழுவைப் படகுகள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன எனவும் அவை பகிரங்க ஏலத்தில் விற்கப்பட்டு அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் திறைசேரிக்கு மாற்றப்படும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கள், கறுப்புப்பண செலாவணியாக்கல் ஆகியவை தொடர்பான சட்ட ஏற்பாடுகளின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


குறித்த அதிகாரியின் கூற்றின் பிரகாரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளில் ஒரு சில சொத்துகள் வெளியிடங்களில் அமைந்துள்ள அதேவேளையில் பெரும்பாலானவை கொழும்பிலேயே அமைந்துள்ளன. வெளிநாட்டு வங்கிக்கணக்கொன்றின் மூலம் 55 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலான தொகையையும் உள்ளூர் வங்கியொன்றின் மூலம் 30மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையும் இந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில்; தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் ஏனைய பல நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருந்தோர் குறித்து தாங்கள் கண்காணித்து வருவதாகவும் ஏனைய வங்கிக் கணக்குகளையும் விரைவில் கைப்பற்றவுள்ளோம். 1 பில்லியன் ரூபாவுக்கு கூடுதலான பெறுமதியான சொத்துகளையும் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் வைப்பில் இட்டிருந்த மேலும் பல கணக்கு விபரங்களை கண்டறியும் பொருட்டு பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களம் வெளிநாட்டு புலனாய்வு முகவர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றதெனவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டிருந்த செயற்கையான முறையில் செய்யப்பட்ட தொடர்பாடல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சமீபமாகவுள்ள காணியொன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ள பிரதான சொத்துகளில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விமான நிலையம் மீது தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்கும் முகமாகவே இந்தக் காணியை வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளில் வெள்ளவத்தையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயரில் வாங்கப்பட்டிருந்த 3 மாடிக் கட்டடம் ஒன்றும் கொட்டாஞ்சேனையிலுள்ள ஜம்பட்டா வீதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் நீலநாதன் அச்சகமும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி    









13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்வதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் நிச்சயம் பெறப்படும் : கெஹலிய

04/06/2013 இலங்கையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவருதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் நிச்சயம் பெற்றுக்கொள்ளப்படும். ஆனால், 13ஆவது திருத்தச்சட்டம் என்பது இலங்கை அரசியலமைப்பின் ஒரு பகுதியென்பதால் அதனை நிராகரிக்க முடியாது என்று ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். உறுதியான திகதியை விரைவில் அரசாங்கம் அறிவிக்கும். அதேபோன்று வட மாகாண சபை தேர்தல் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் மேலோங்கியுள்ள கருத்துகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்ந்தும் கூறுகையில்;,

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு எதிர்ப்புக் கருத்துகள் தெரிவிக்கப்படுவதுடன் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அரசாங்கம் அவதானத்துடனேயே நோக்குகின்றது. எவ்வாறாயினும் நாட்டின் மூலச் சட்டத்தின் பிரகாரம் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதி. இதனை நிராகரிக்கவோ, புறந்தள்ளவோ முடியாது. ஆனால், 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் தீர்மானங்களை மேற்கொண்டால் அதற்கு இந்தியாவின் ஆலோசனையை பெற்றுக் கொள்வோம்.

ஆனால், தற்போதைக்கு அவ்வாறானதொரு தேவை ஏற்பட வில்லை. அதேபோன்று வட மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும். அரசாங்கத்திற்குள் உள்ள பல அரசியல் கட்சிகளும் வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யவேண்டுமென்றெல்லாம் கருத்துகளை வெளியிடுகின்றன. ஆனால், அரசாங்கம் உடனடியாக அவ்வாறானதொரு நிலைப்பாட்டிற்கு செல்ல முடியாது என்றார்.
நன்றி வீரகேசரி   





இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றது: எரிக் சொல்ஹெய்ம்

04/06/2013 இலங்கை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தற்போது சமாதானத் தூதுவர் பதவி வகிக்காத போதிலும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்த போது தமிழ் புலம்பெயர் மக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான செய்திகளை வாசிப்பதாகவும், மக்களை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   
நன்றி வீரகேசரி













13ஐ திருத்த தேவையில்லை: இந்திய எம்.பி.க்கள்

Indian mps-107/06/2013 இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை அரசியலமைப்பில், 13ஆவது திருத்தம் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அதில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எவ்விதமான தேவையும் இல்லை என்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் வடமாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசாங்கம் நடத்தியே ஆக வேண்டும் என்றும் அக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர். அத்துடன், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களையும் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் சிவில் சமூகத்தினரைச் நேற்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்ட இந்திய குழுவினர், அதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அக்குழுவினர், 'இந்திய மீனவர்களால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக' உறுதியளித்தனர்.

இந்த மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு அரசாங்கத்துடன் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் இந்திய எம்.பி.க்கள் குழுவினர் மேலும் அங்கு குறிப்பிட்டனர்.

இதேவேளை, இந்த சந்திப்பின் போது, வடக்கில் இடம்பெறும் காணி விவகாரங்கள், போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குதல், யாழ்ப்பாணம் அதியுயர் பாதுகாப்பு வலயக் காணிகள் சுவீகரிக்கப்படுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இந்திய எம்.பி.க்கள் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலை அடுத்து, மேற்படி குழுவினர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை சந்தித்து, இந்திய அரசாங்கத்தின் உதவியில் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது திருத்தத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கு அரசாங்கமும் அதன் பங்காளி கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆகிய தீவிர செயற்பாடுகளில் குதித்துள்ள நிலையிலேயே இந்திய எம்.பிக்கள் குழு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  நன்றி தேனீ



யாழ். வீட்டுத்திட்டம்; இந்திய எம்.பி.க்கள் குழு பார்வை

Indian MPs06/06/2013 யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினனர், இன்று புதன்கிழமை மாலை யாழ் அரியாலைப் பகுதிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய வீட்டுத் திட்டத்தையும் பார்வையிட்டனர். இன்று மாலை 3.30 மணிக்கு குறித்த பகுதிக்குச் சென்ற இந்த குழுவினருக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தினூடாகப் பயன்பெற்ற பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். அத்துடன், குறித்த பகுதியில் 420ற்கும் மேற்பட்ட மக்கள் வாழந்து வரும் நிலையில் 50 பேருக்கு மாத்திரமே இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவர்களுக்கும் இந்த திட்டத்தினூடாக பயன்பெற வாய்ப்பளிக்குமாறும் அம்மக்கள் கேட்டுக்கொண்டனர். இதனை கருத்திக்கொண்ட இந்திய தூதுக்குழுவினர், 'யாழில் உள்ள இந்திய துணைத் தூதரம் ஊடாக இந்திய வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தனர்.நன்றி தேனீ 





முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையங்களாக இலங்கையில் மத்ரஸாக்கள் : பொதுபல சேனா

06/06/2013 முஸ்லிம் அடிப்படைவாதத்தின் கேந்திர நிலையமாக இலங்கையில் திகழும் மத்ரஸாக்களை தேசிய கல்விக் கொள்கைகளின் கீழ் கொண்டுவர வேண்டும். பாகிஸ்தானிலே தடை செய்யப்பட்ட மத்ரஸாக்களை முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத சக்திகள் இலங்கையில் விஸ்தரிக்கின்றமை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயமாகும் என்று பொது பலசேனா எச்சரித்துள்ளது.

உலமா சபையின் உண்மையான அடிப்படைவாத கொள்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தற்போது சூறா சபை ஊடாக முஸ்லிம் அடிப்படைவாத சக்திகள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இச் சூறா சபைக்கு கட்டாரில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தீவிரமானவரான பூசுப் அல்- கர்லான் நிதி மற்றும் ஆலோசனைகளை வழங்க உள்ளார். இவரை இலங்கையிலிருந்து குறிப்பிட்ட சிலர் அண்மையில் போய் சந்தித்தும் உள்ளனர்.

இவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுபலசேனா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது பலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறுகையில்,

முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை பொது பலசேனா முன்னெடுத்து வருகின்றது. இதன் பிரகாரம் கடந்த காலங்களில் ஹலால் ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் முழு அளவில் ஹலால் நாட்டில் இருக்காது. உலமா சபையின் உண்மையான நிலையினை முஸ்லிம் சாதாரண மக்கள் புரிந்துகொண்டு விட்டனர். இவர்கள் அப்பாவி முஸ்லிம் பெண்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து வெறும் அடிமைகளாக்கும் நிலையே காணப்படுகின்றது.

தற்போது உலமா சபையின் தோலைப் போர்த்திக்கொண்டு சூறா சபை செயற்பட ஆரம்பித்துள்ளது. மத்ரஸாக்களில் சிறுவயது முதலே அடிப்படைவாத சிந்தனைகளை முஸ்லிம் குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து மோசமான பயங்க்ரவாதிகளாக்கும் செயற்பாடே மத்ரஸாக்களில் நடைபெறுகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். ?? சட்டம் என்பது ரிசானாவின் கழுத்தை வெட்டிக் கொன்றதை நியாயப்படுத்திய தொன்றாகும். இதனை காட்டுமிராண்டிகளே அனுமதிப்பார்கள். இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு அச்சட்டம் செல்லாது எனக் கூறினார்.
                  நன்றி வீரகேசரி



காணி, பொலிஸ் அதிகாரங்களையே ஒழிக்க வேண்டும் : குணதாச அமரசேகர

06/06/2013    13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழிக்காது வேறு திருத்தங்களை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
சௌசிறிபாயவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழிக்காது அரசாங்கம் வடக்குத் தேர்தலை நடத்துமானால் அது பிரிவினைவாதிகளின் ஈழக் கனவை நனவாக்கும்.
அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தில் தேவையில்லாத திருத்தங்களை ஏற்படுத்தி நாட்டை பிளவுபடுத்த சந்தர்ப்பம் வழங்கக் கூடாது.
எனவே ஜனாதிபதி உடனடியாக 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு வடக்குத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.            நன்றி வீரகேசரி