அருணோதயா கல்லூரியின் இன்னிசை மாலை - செ.பாஸ்கரன்

.

01.06.2013 சனிக்கிழமை இரவு என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடகர் மதுபாலகிறிஸ்ணன் பாடுகின்றார் என்ற ஆர்வம் கொட்டும் மழையையும் குளிரையும்கூட பொருட்படுத்தாமல் சில்வவோட்டர் பகாய் சென்றருக்கு சென்று அமர்ந்து கொள்கிறேன். உள்நுளையும்போது வரிசையாக கோட்டும் சூட்டும் போட்டு அடையாள அட்டைகள் குத்தியிருந்த பலர் வரிசையாக நிற்கின்றார்கள். பழைய மாணவர்கள் போல் தெரிகிறது. மண்டபத்தில் இருந்தவர்களில் அரைவாசிக்குமேல் அந்தப்பாடசாலையில் கற்காதவர்கள்தான். மதுபாலகிறிஸ்ணனையும் சுப்ப சிங்கர்களான பிரியங்கா ஸ்ரீநிசா ஆகியோரின் பாடலைக் கேட்கும் ஆர்வத்தோடு வந்தவர்கள்தான்.


நிமல் தன் கணீரென்ற குரலில் ( இப்பிடி சில விசயங்கள சொல்லுவன் குறைநினைக்க கூடாது) வந்தவர்களுக்கு வணக்கம் கூறியபின் முன்னைநாள் ஆசிரியை திருமதி நடராஜா அவர்களை குத்துவிளக்கு ஏற்றுவதற்கு அழைத்தார் அதைத் தொடர்ந்து அதிபர் ஆசிரியர் என்று சில ரை அழைத்து மங்களவிளக்கு ஏற்றப்பட்டது.





தொடர்ந்து திருமதி கலா சந்திரமோகனின் மாணவிகள் கல்லூரி கீதம் பாடினார்கள். தொடர்ந்து முன்னாள் அதிபர் மகேந்திரராஜாவின் சுருக்கமான உரை இடம்பெற்றது. அடுத்து  நிமல் அவர்கள் சிவசுப்பிரமணியம் சுதர்சன் என்ற லண்டனில் இருந்து வந்திருந்த அறிவிப்பாளர் ஒருவரை அழைத்து ஒலிவாங்கியை கையளித்தார்.Free Bird  இசைக்குழு வாத்திய இசையை வழங்கி உற்சாகமூட்டினார்கள்.

மதுபாலகிறிஸ்ணன் தன் கணீரென்ற குரலால் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுகொண்டிருந்த நாராயணனை அற்புதமாக மண்டபத்தில் தவழவிட்டார். இந்தப்பாடலில் புல்லாங்குழல் இசை பலஇடங்களில் வருகின்றது ஆனால் மேடையில் புல்லாங்குழலுடன் யாரையும் காணவில்லை Keybord வாசித்த பாலாஜி அவர்கள் Keybord  டிலிருந்தே; புல்லாங்குழல் இசையை தந்து கைதட்டலைப் பெற்றுக்கொண்டார்.



அறிவிப்பாளர் பாடல் அரசன் TM சவுந்தரராஜன்  அவர்களின் மறைவிற்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தும்படி சபையோரை கோர சபையினர் எழுந்து நின்று அஞ்சலி செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அருணோதய கல்லூரி பழைய மாணவனும் இந்த இசை நிகழ்வை உலகெங்கும் ஒருங்கமைத்தவருமான திரு கஜன் அவர்கள் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாடலை பாடினார் அவர் நன்றாகவே  பாடினார் அதற்கு முதல் மதுபாலகிரிஷ்ணனின் குரலை கேட்டது இந்த பாடலையும் மதுவின் பாடலோடு ஒப்பிடவேண்டியதாக போனதை தவிர்க்கமுடியவில்லை.
மீண்டும் மது அம்மா என்றழைக்காத பாடலை பாடியது அற்புதமாக இருந்தது.


தொடர்ந்து சுப்பசிங்கர் பிரியங்கா நாளை இந்த வேளைதான் ஓடிவா நிலா என்று மிக உச்சச்தானியில்  ஆரம்பிக்க  மது இணைந்து கொண்டு பாடியது நன்றாக இருந்தது. அதனைத் தொடர்ந்து  சுப்பசிங்கரின் குட்டிப்பெண்ணான ஸ்ரீநிஷா KP சுந்தராம்பாளின் அவதாரமாக ( குரலில் மட்டும்தான்) வந்து பழம் நீயப்பா என்று ஆரம்பித்தபோது  சபையில் கரகோஷம் பலமாக இருந்தது. அறிவிப்பாளர் இந்த பாடலை அறிவிக்கும் போது  ரமனியம்பாள்  பாடிய பழம் நீயப்பா என்று தவறுதலாக அறிவித்திருந்ததை சிலர் கவனிக்கத் தவறவில்லை.



இப்படியே பாடல் நிகழ்வு எந்த தொய்வும் இல்லாது  போய்க்கொண்டிருக்க நேரமும் போய்க்கொண்டிருந்தது. மது அதிசயராகம் , மது பிரியங்காவுடன் கொஞ்சநேரம்  என்ற பாடல்களை பாட பின் கஜ ன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் என்று பிரியங்காவுடன் சேர்ந்து பாடியது நன்றாகவே இருந்தது. பின் மதுவின் கல்யாண தேன்நிலாவும்  டிங் டொங்  கோயில் மணியும்  மனதை கொள்ளை கொண்டுவிட்டது.
தொடர்ந்து கஜனும் ஸ்ரீ நிஷாவும் நீதானா  அந்த குயில் என்று பாடி அசத்தினார்கள்.


அதனைத்தொடர்ந்து இசைக்கலைஞர்கள் அறிமுகபடுத்தப்பட்டார்கள் . கீ போர்டு - பாலாஜி , இரண்டாம் கீ போர்டு - நல்லதம்பி ( இவர் பிரியங்காவின் தந்தை ) பேஸ் கிட்டார் - சிட்னி கானா , றம் -பிரதீஸ் , ஒக்டொபட்- சாரங்கன் ( இவர் ஸ்ரீ நிஷாவின் தந்தை ) ,மிருதங்கம் சிட்னி ரகுராம் , தபேலா - பாலக்காடு முரளி.  இவர்கள் அனைவரும் இணைந்திருந்தாலும் பார்வையாளர்களின் மனதில் இடம்  பிடித்தவர் பாலக்காட் முரளிதான்.மிக அற்புதமாக வாசித்தார் .


இந்த வேளையில் ஒரு குறையையும் சொல்ல வேண்டி உள்ளது இந்த
இசைக்குழு விற்கு    ஒரு நெறியாளர் இல்லாதது போல் தெரிந்தது எல்லோருமே கட்டளை இடுகின்றார்கள். ஒருவர் இதை கூட்டு என்று கை காட்டுவார் இன்னுமொருவர்  இன்னொன்றை கூட்டு என்று கை காட்டுவார் இப்படியே  பலதடவைகள் செய்துகொண்டிருந்தார்கள். மது ஒரு நல்ல அருமையான பாடகன் அவரிடம் கூறியும் ஒலியமைபாளர்களுக்கு சொல்லுவித்தார்கள். அருகில் இருந்த ஒரு பெண்மணி எல்லாம் நல்லத்தான் எங்களுக்கு வருகிறது ஏன் குழப்புறீங்கள் என்றார். இதை பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது .



மீண்டும் பாடல் தொடங்கும்போது மைனஸ் இசையில் பிரியங்கா சிங்கார வேலனே தேவா  என்ற பாடலை பாடியபோது எஸ் ஜானகி அவர்களே வந்து பாடியது போல்  இருந்தது . அற்புதமான குரல் அந்த குழந்தைக்கு.



தொடர்ந்து மதுபாலகிருஷ்ணன் அவரது பாடல்களில் பிரபலமான பாடலான பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்  என்ற பாடலை ஆரம்பித்தபோது சபையில் இருந்து பலத்த கரவொலி எழுந்தது.


இப்படியே எந்த தொய்வும் இல்லாமல் பாடல்கள் பாடப்பட்டுக்கொண்டே இருந்தது. செந்தூர பூவே , காற்றே எந்தன் கீதம் , பூவே செம்பூவே , என்றபாடல்கள். அதை தொடர்ந்து அறிவிப்பாளர் சுதர்சன் கூறினார் மது அவர்கள் கமலஹாசன் போல் பேசுவார் என்றதும் கமல் போலவே பேசிக்காட்டியதோடு சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற கமலின் பாடலை கமல் போன்றே பாடினார்.


கலைஞர்களுக்கு  கௌரவிப்பு  நடந்த பின்பு மீண்டும் பாடல்கள் தொடங்கியது இம்முறை நேயர்கள் விரும்பிக்கேட்ட பாடல்களை பாடினார்கள்.இதில் என்மேல் விழுந்த மழைத்துளியே , கண்ணே கலைமானே , தெய்வம் தந்த வீடு ,  பாடல்கள் பாடப்பட்டது. நானும் எனது நண்பர்களும் செம்மீன் பாடல் என்று கேட்டதும் மது தனக்கு வரிகள் சரியாக தெரியாது என்று கூற தபேலா வாசித்த பாலகாடு முரளி சொல்லிக்கொடுத்ததை கேட்டுவிட்டு  கடலின் அக்கரை போனோமே என்ற பாடலைப் பாடியதும்  கரவொலி சபையை அதிர வைத்தது .

கஜன் அவர்கள் ஹரி முரளி என்ற கர்நாடக உருப்படியை பாடும்பாடி கேட்க அது 10 நிமிடங்களுக்கு மேல்  எடுக்கும் அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் தருகிறேன் என்று கூறிவிட்டு ஒரு இசை மழையை பொழிந்துவிட்டார் மது அவர்கள்.


கடைசியாக பிரியங்கா , ஸ்ரீனிஷா  ஆகியோர் தாங்கள்  படத்திற்கு பாடிய குத்துப்பாடல்கள் இரண்டைப்பாடிய பின்னர் மதுவின் கடைசிப்பாடலாக தண்ணித்தொட்டி தேடிவந்த என்ற சிந்து பைரவி பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்து கொண்டார்கள்.

அருணோதயா கல்லூரியின் ஒரு சிறந்த இன்னிசை நிகழ்வு அன்று நிறைவுற்றது. வெளியில் வந்த ஒவ்வொருவரும் பேசிக்கொண்டது இவ்வளவு அருமையான ஒரு பாடகரான மது அவர்கள் மிக அடக்கமாக கேட்ட பாடல்களை எல்லாம் சிரித்தபடி பாடியதை பார்த்த போது  அவரில் இருந்த விருப்பும் மரியாதையும் இன்னும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பதுதான் .இப்படியான ஒரு சிறந்த பாடகரை  சிட்னிக்கு கொண்டுவந்ததற்கு அருணோதயா கல்லூரிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் .

இனிமையான நிகழ்வின் நினைவுகளோடு மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.