அடை மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
திருமலை துறைமுகத்தில் பாகிஸ்தான் யுத்தக் கப்பல்
கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட வினை
தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிக்குகளுக்கு யாழில் சான்றிதழ் வழங்கி வைப்பு
சட்டவிரோத காணி சுவீகரிப்பிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல்
மடு திருத்தலத்திற்கான புகையிரத சேவை ஆரம்பம்
தமிழினி அடுத்த மாதம் விடுதலை; வடமாகாண தேர்தலிலும் போட்டி?
=====================================================================
அடை மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
15/05/2013 வடக்கு கிழக்கில் கரையோரப்பகுதிகளை தாக்கியிருந்த மகாசென் சூறாவளியுடன் மலையகத்தில் அடைமழை காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஹட்டனில் வௌ்ளத்தில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 1115 குடும்பங்களைச்சேர்ந்த 4 ஆயிரத்து எண்ணூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் பொதுத்தலங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயாவைச்சேர்ந்த அம்ரித்தா (வயது 7), அவரது பாட்டியான சிவபாக்கியம் (வயது 65) லிந்துலை வலகாகொலனியைச்சேர்ந்த போல்ராஜ் ஷெரோ (வயது 4) ஆகியோரும் மாத்தறை மாவட்டத்தின் திகாகொட, பொலநறுவை திபுலகல மற்றும் கண்டி பஸ்பாகே பொரல ஆகிய பகுதியைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் என மொத்தமாக இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை டிக்கோயாவைச் சேர்ந்த கமலேஷ்வரி (வயது 42) என்ற பெண்மணி நீரில் மூழ்கி காணாமற் போயுள்ளார்.
இதில் போல்ராஜ் ஷெரோ என்ற சிறுமி மண்மேடு சரிந்து வீட்டின்மீது விழுந்ததையடுத்து வீட்டின் சுவர் உடைந்து வீழ்ந்ததில் புதையுண்டு இறந்துள்ளார்.
மேற்படி சிறுமியை பராமரித்து வந்த அவரது சித்தி நுவரெலியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி பிரதேசத்தின் நான்கு பேரும், கந்தவவெளியில் ஏழு பேரும், பூநரில் ஏழு பேருமான 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மன்னாரில் 41 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானையில் 286 பேரும், தெல்லிப்பளையில் 247 பேரும், ஊர்காவத்துறையில் 133 பேரும், சண்டிலிப்பாயில் 78 பேரும், வேலனை மற்றும் காரைநகர் ஆகியவற்றில் தலா மூன்று பேரும், கோப்பாயில் ஒருவர் என மொத்தமாக 951 வரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மன்முனைப்பற்றில் 15 பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தறை மாவட்டத்தில் ஐவரும், பதுளையில் 20 பேரும், நுவரெலியாவில் ஹம்பகமுவ பிரதேசத்தில் 428 பேரும், நுவரேலியாவில் 95 பேரும், கொத்மலையில் 80 பேருமாக அம்மாவட்டத்தில் 813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கண்டியில் 978 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 571 பேரும் மழை வௌ்ளம் மற்றும் சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியில்
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்த கடும்மழை அதனால் ஏற்பட்ட பெரு வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 299 குடும்பங்களைச்சேர்ந்த 1571 பேர் பாதிக்கப்பட்டு ஆறு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இப்பகுதியிலுள்ள அனைத்து தாழ்நிலப்பகுதியிலும் வெள்ளம் நிறைந்ததால் வீடுகள் வர்த்தக நிலையங்கள், பொதுத்தலங்கள், வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. ஓப்பநாயக்க பிரதேசத்தில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் மண்சரிவு அபாயத்தினால் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.. இரத்தினபுரியில் 121 குடும்பங்களைச்சேர்ந்த 755 பேரும், பெல்மதுளையில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 580 பேரும் எலபாத்தையில் 38 குடும்பங்களைச்சேர்ந்த 151 பேரும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான அவசர தேவைகளை இரத்தினபுரி இடர்முகாமைத்துவ செயலகம் கண்காணித்து வருகின்றது.
நாவலப்பிட்டியில்
நாவலப்பிட்டியில் மழை வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 250 பேர் சமகிகம மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளதால் மின்சார விநியோகமும், போக்குவரத்தும் நேற்றைய தினம் தடைப்பட்டிருந்தது.
அத்துடன் அனர்த்த நிலை காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் தடைப்பட்டிருந்தன. மாப்பாகந்த, கெந்தோபிட்டிய மற்றும் வெளிகம்பல ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் அப்பகுதிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றில் அல்லுண்டுள்ளன. அதுமாத்திரமன்றி கிரிவுட் தோட்டத்தில் அமைந்திருந்த தொரவாதெனிய பாலம் உடைந்து வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
டிக்கோயாவில்
நுவரெலியா மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக டிக்கோயாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டியும் பேத்தியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பெண்மணி வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் மூன்றாம் தரத்தில் கல்வி பயின்ற அம்ரித்தா என்ற சிறுமி தனது பெரிய தந்தையான பாடசாலைவிட்டு வீடு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே வீட்டுக்குள் வௌ்ளம் புகுந்தத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வீட்டின் கூரையை பிறித்து வீட்டிற்குள் இறங்கியே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் வீட்டிலிருந்த கமலேஷ்வரி என்ற பெண்மணி அடித்துச்செல்லப்பட்டுள்ளார். இவரைத்தேடும் பணி தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் நேற்று மாலை வரை அவர் தொடர்பிலான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
சிறுமி பலி
லிந்துலை பலகாகொலனியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சித்தியுடன் நித்திரையில் இருந்து நான்கு வயது சிறுமிமண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தயாயார் இல்லாத சிறுமியை பராமரித்து வந்த சித்தி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சிறுமியின் சடலம் நேற்று பிற்பகல் வரையில் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
698 குடும்பங்கள் பாதிப்பு
கொட்டகல, டிக்கோயா மற்றும் வட்டவளை ஆகிய மூன்று பிரதேசங்களில் 698 குடும்பங்களைச்சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்படி கொட்டகலையில் 150 குடும்பங்களும், டிரேட்டனில் 70 குடும்பங்களும், பெய்த்லியில் 6 குடும்பங்களும், பொரஸ்ரிக்கில் 9 குடும்பங்களும், யதன்சைட்டில்19 குடும்பங்களும் அந்தோனிமழையில் 13 குடும்பங்களும் கிறிஸ்பாமில் 24 குடும்பங்களும், சாமஸ்தோட்டத்தில் 47 குடும்பங்களும்,லொக்ஹில் தோட்டத்தில் 140 குடும்பங்களும், ஹரிஸ்டன் தோட்டத்தில் 180 குடும்பங்களும், டிக்கோயா நகரில் 132 குடும்பங்களும், போடைஸில் 54 குடும்பங்களும், நோர்வூட்டில் 74 குடும்பங்களும் தரவளையில் 10 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கண்டியில்
கண்டி மாவட்டத்தில் பூஜாபிட்டி பிரதேசத்தில் 3 குடும்பங்களைச்சேர்ந்த ஆறு பேரும் கங்கவட்டகொரலை தொழுவ ஆகிய பகுதிகளில் 4 குடும்பங்களைச்சேர்ந்த 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதிலும் அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கிராமசேவை உத்தியோகத்தர்கள் மட்டத்தில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
பாடசாலைகளுக்கு பூட்டு
மழைவௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருந்த 6 பாடசாலைகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அட்டன் கல்வி வலயத்தில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
அட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த பொகவந்தலாவை சென் மேரிஸ் த.ம.வி, ஹோலி ரோஷரி த.ம.வி, செம்பியன் த.ம.வி, நோர்வூட் த.ம.வி, புளியாவத்தை த.ம.வி, நியூட்டன் த.ம.வி ஆகிய பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் சனிக்கிழமைகளில் வகுப்புக்களை நடத்தி மாணவர்களின் விடுபட்ட கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்ததப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
திருமலை துறைமுகத்தில் பாகிஸ்தான் யுத்தக் கப்பல்
15/05/2013 பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான யுத்தக் கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.
இக்கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருக்கும்.
சகலவிதமான தாக்குதல்களையும் முறியடிக்கும் திறன் கொண்ட இக்கப்பல் 123 மீற்றர் நீளம் கொண்டது. 2010 ஆம் ஆண்டு சீனா சங்ஹாயில் வெள்ளோட்டம் விடப்பட்டது
நன்றி வீரகேசரி
கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட வினை
கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட வினை
15/05/2013 தங்காலை மரியா வத்தை தமிழ்கிராமத்திற்குள் நுழைந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் இங்குள்ள தமிழர்களின் உடைமைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தமிழ் பெண்ணுக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆணொருவருக்கும் இடையிலான கள்ளத்தொடர்பே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழர்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவரது வீட்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக 8 பேரை தங்காலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி
தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிக்குகளுக்கு யாழில் சான்றிதழ் வழங்கி வைப்பு