அன்புடையீர் வணக்கம்
சிட்னியில் உலகத் தமிழ் மாநாடு – தமிழர் மண்டபம், 21 Rose Crescent, Regents Park
பார் புகழ் தமிழகத்தின், உலகத் தமிழ் சங்கமும், ஆர்வமோடு தமிழ் வளர்க்கும் சிட்னியின் தமிழ் இலக்கியக் கலை மன்றமும் இணைந்து 2013ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதியும் , செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதியும் , செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியும் - உலகத் தமிழ் மாநாடு ஒன்றை சிட்னி Regents Park தமிழ் மணக்கும் தமிழர் மண்டபத்தில் நடத்தவுள்ளது.
உலகத் தமிழர்களை ஒன்று படுத்தி, உலகப் பொதுமறையை மேன்மைப் படுத்தி, உலகோர்க்குத் தமிழ் இலக்கிய நயம் கூற, நமது இளைய தலைமுறைக்கு தமிழின் மகிமையை எடுத்துரைக்க உன்னத மாநாடொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
எந்நாட்டார்க்கும், எம்மொழியார்க்கும், எவ்வினத்தார்க்கும், எம்மதத்தார்க்கும் பயன்படும் வகையில், வாழ்க்கை நெறிமுறைகளை, நீதிக்கருத்துகளை எடுத்துரைத்த வள்ளுவப் பெருந்தகைக்கு, திருவள்ளுவருக்கு 7அடி உயரமுள்ள சிலை ஒன்றும் அமைக்க உள்ளது.
மாநாட்டில், கருத்தரங்கம் அறிவுக்கு விருந்தளிக்கும் ஆய்வு அரங்கம், இசையரங்கம், செவிக்கு விருந்தளிக்கும் நடன அரங்கம் கண்ணிற்கும் காதிற்கும் விருந்தளிக்கும் பட்டி மன்றம் தமிழர்களைத் தட்டி எழுப்பும், கவியரங்கம் நயங்கள்; பலவற்றைக் கொட்டி முழக்கும்.
தமிழருக்காக தமிழர் கூடி இருக்கும் இம் மாநாட்டில் 40ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சான்றோர்களும், ஆன்றோர்களும், பேராசிரியப் பெருமக்களும், கவிஞர்களும், பலதுறை வித்தகர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டு மாநாட்டைச் சிறப்பிக்க உள்ளனர்.
தமிழின் சிறப்பை, தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழர்களின் பெருமைதரும் தமிழர்களின் சிறப்பை, தமிழர்களின் பண்பாட்டைப் பறை சாற்றும் அளவில் பொருட்காட்சி ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டில் தமிழ் நெஞ்சம் கொண்ட அனைவரும், தமிழர் என்ற அடையாளத்துடன், பெருமிதத்துடன் கலந்து கொள்ளலாம். அறிவுசார் ஆலோசனைகள் கூறலாம்.
அனைவரும் வருக1 தமிழமுதம் பெறுக!!
உங்களது ஆலோசனைகளை எழுதி P O Box 96, Regents Park
NSW2143 என்ற விலாசத்திற்கு அனுப்பிவைக்கவும். மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.