வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் -வித்யாசாகர்

.
சி ஒரு பெருங்கொடுமை. பசியொரு உயிரோடு கொல்லும் மரணத்திற்குச் சமம். ஜீவராசிகள் வாழ்வதன் காரணத்தை உடல்மையமாக சோதித்துப் பார்த்தால் கடைசியில் வயிற்றிற்காக மட்டுமே வாழ்வதாக ஒரு பதில்கூட கிடைப்பதுண்டு. மரணத்தின் வேர் எதுவென்று காட்ட ஒரு சொட்டுத் தண்ணீராலோ அல்லது ஒரு பிடி உணவாலோகூட முடிந்துவிடுகிறது. பசியின் கொடுமையால் மட்டுமே மிருகங்கள் மிருகத்தைக் கொல்கிறது. மனிதனும் தனது அறிவுத் தந்திரத்தால் மனிதனையே கொல்கிறான். பசி மனிதனை பகுத்தாராய விடுவதில்லை. வயிறு இழுத்துப் பிடித்துக்கொள்ளுமந்த வேதனையிலிருந்து தனை விடுவித்துக்கொள்ள கொலை கொள்ளை வழிப்பறி என எல்லாமே மனிதனுக்கு ஆயுதமாகிவிடுகிறது. பசியொன்றே மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் ஒருசேரக் கொடுத்த கடவுள்..
அப்படிப்பட்ட பசியை இன்று நாம் எப்படி மனிதத் தன்மையற்ற இடத்தில் வைத்திருக்கிறோம்? இருப்பவர் தின்பதும் இல்லாதவர் பட்டினியால் சாவதும் முறையென்று வகுக்க எப்படி நம் மனங்களில் ஈரம் வற்றிப்போனது? தர்மம் பற்றி சிந்திக்கத்தெரிந்த மனிதன் தண்டனை’ பாகுபாடு’ சுயனலமென உயிர் கொன்றுக் குவிக்க பசியை ஆயுதமாக்கிக் கொண்டது எத்தனைப் பெரிய குற்றம்?

தெருவில் ஒரு குழந்தை பசியென்று கையேந்தி நிற்பதைக் கண்டும் அதைக் கடந்துப்போகும் கல்மனதுசமூகத்தை உருவாக்கிய நாமொரு பழி சாட்டப்பட்ட மூதாதயராக நாளைக்கு நம் குழந்தைகளுக்கு விளங்கிடமாட்டோமா? நல்லதனைத்தையும் நாம் செய்தோம் நாம் செய்தோமென்று மார்தட்டிக் கொள்ளமுடிகிற நாம் நடக்கும் குற்றங்களுக்கும் காரணமென்று ஏற்று நமை; நம் சுற்றத்தை; நம் சமூகத்தை ஏன் நல்வழிபடுத்தக் கூடாது?
ஏன் செய்யலாமே என்று நெஞ்சு நிமிர்த்துவோர் வாருங்கள் முதலில் பட்டினியை ஒழித்துவிடுங்கள். பசியோடு பிறந்தவர்கள் நாம் பசியை ஒழிக்க முடியாது ஆனால் பட்டினி என்பதை ஏற்படுத்தியவர்கள் நாம்தானே அதை ஒழித்துவிடுவோம். உலகில் எண்ணற்ற இடங்களில் பசியால் மனித இனம் மடிகிறதாம். பசி தாளாமல் குழந்தைகள் கொள்ளையடிக்கிறதாம். பசியைப் போக்கிக்கொள்ள மனிதர்கள் விபச்சாரத்தை கைகொள்கின்றனராம். கேட்கக் கேட்க அசிங்கப்படவேண்டிய சமுதாயப் பொறுப்பில்லாத் தன்மை’ நாம் மீதமாக வைத்துச்செல்லும் ஒவ்வொருப் பருக்கை சோற்றிலும், கூடுதலாக உடுத்திக்கொள்ளும் ஒவ்வொரு ஆடையிலும், ஆடம்பரமாக அமைத்துக்கொண்ட நம் தெளிவில்லா கௌரவத்திலுமிருக்கிறது என்பதை உணர்ந்தால் நாளைக்கேனும் பசியால் துன்புற்று மடியும் நான்கு உயிர்களை ஒரு மனிதர் வீதம் காப்பாற்றி விடலாம்.
பசியால் ஒரு மனிதன் இறக்கிறான் எனில் அது உயிரோடிருக்கும் கோடானக் கோடி மக்களின் இறக்கமற்றத் தன்மையின் கொடூர சாட்சியன்றி வேறில்லை. நம் மனம் இறுகிப் போனதன் வெளிவடிவம் மட்டுமே இன்றையப் பசி. சுயநல கொப்புளங்கள் பெருகி தன் வயிற்றுக்கு மட்டும் சோறு பதுக்கி வைத்துக்கொண்டதன் விளைவு பசி. ஒரு குழந்தை தாய்ப் பாலிற்கு கதறியழும் அதே கொடுமைதான் ஒவ்வொரு மனிதரின் பசிக்குள்ளும் புதைந்துக்கொண்டு தெருத் தெருவாய் சோறு தேடியலைய வைக்கிறது.
ஆக; பசிக்கு ஒரு குவளை தேனீர் தர மனம் வைத்திராத இந்த நம் சமூகம்தான் பிறரின் வலிப் பற்றி மறக்கவும் வழிசெய்துவிடுகிறது. எதிரேயிருக்கும் ஒரு மிருகத்தை மற்றொரு மிருகம் அடித்து கண் நோண்டி காதுமடலறுத்து வயிறுகிழித்து ரத்தம் ருசிக்கும் கொடூரப் பசி தனக்கு வருகையில் மட்டுமே அது கொலையில் அடங்கிடாத இயற்கையின் கொடூர உணர்வென்று மனிதனுக்குப் புரிகிறது.
ஆனால் பாருங்கள் இன்றும் பசிதான் மனிதனை இயக்குகிறது. பசி இல்லயேல் மனிதன் என்றோ நின்ற இடத்திலேயே உயிர்விடத் துணிந்திருப்பான். அதை தவிர்த்து பசி மட்டுமே சோறென்றும் துணியென்றும் மானமென்றும் கெளரவமென்றும் அழகென்றும் ஆசையென்றும் ஆடம்பரமென்றும் நம் பயணத்தை மரணம் வந்து கொல்லும்வரை நமை மரணம் தேடி ஓடவைத்துவிட்ட சூழ்சுமம் என்பதை ஏற்கத்தான் வேண்டியிருக்கிறது. நடந்துச் சென்ற மனிதன் இன்று பறக்கவும் முடிவதற்குக் காரணம் முதலில் நம்மை ஓருருண்டைச் சோற்றிற்கென உந்தி ஒரு அடி எடுத்துவைக்கச் செய்த பசி மட்டுமாகத் தானேயிருக்கும்..
எனில் அது எல்லோருக்கும் பொது இல்லையா? எனக்கு வலிப்பது போலவே பசிக்கும் வயிறு பிறருக்கும் வலிக்குமில்லையா? எனக்கு வேண்டும் போலவே பிறருக்கும் ஒரு குவளை கஞ்சியேனும் வேண்டும்தானே? பிறகு பசிப்போரைப் பற்றிய அக்கறை துளியும் இல்லாமை எத்தனைப் பெரிய தவறு ? சோறு வேண்டும் சரி, ஆடை வேண்டும் சரி, வீடு வேண்டும் சரி, வண்டியும் வேண்டும் சரி, அந்தஸ்தும் வேண்டும் எல்லோரும் மதிக்கவேண்டும் எல்லாம் சரி சரி; அதேநேரம் இதலாம் கடந்து வீட்டில் முடங்கும் பணம் காட்டில் எரியும் பிணத்தின் பசிக்குக் காரணம் ஆகுமெனில் அது நமது மன்னிக்கவேண்டாதப் பெருங்குற்றமில்லையா?
இரண்டு தட்டில் சோறுண்பவர் ஒரு தட்டுச் சோற்றையெடுத்து யாருக்கேனும் தரவேண்டிய காலம்கூட மலைதாண்டிவிட்டது. என்றாலும் வயிறு புடைக்க உன்ன முடிந்தோர் கொஞ்சம் இல்லாதோர் பற்றியும் கவலைப் படுங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையேனும் பசிப்போர் தேடி பட்டினியொழிக்க நம்மால் இயன்றதைச் செய்ய ஒவ்வொரு சிந்திக்கத் தெரிந்த மனிதரும் தயாராகிக் கொள்ளுங்கள். ‘ஏமாற்றி ஒருவன் வாங்கித் தின்கிறான் எனில் தின்னட்டும் விடு, நீ ஏமாற்றாதே’ என்றெண்ணி தன்னை மட்டுமே சரிசெய்துக்கொள்ள ஒவ்வொரு மனிதரும் முனைவோம். கையேந்தி நிற்பவர் ஏமாற்றுகிறார் என்று எண்ணி எதையும் கொடுக்காமலே கொண்டுபோய் எத்தனைப் பெரிய வீட்டைக் கட்டி எதில் நாம் உடம்படக்கி புழுக்காமல் வாழ்ந்துவிடுவோம்?
ஒரு வேளைச் சோறு தானே போகட்டுமே, நான் இரண்டுவேளை உண்டுவிட்டால் அவன் ஒரு வேளைச் சோறேனும் உண்டால்தானே நாம் வாழுமிந்த நிலம் சமதர்மத்தோடு சுற்றத் துவங்கும். நாம் சாப்பிடும் பிரியாணியை விட இல்லாதோர்க்கு கொடுக்க இருக்கும் பழஞ்சோறு கிடைக்காதுகிடைத்தப் பொக்கிஷம் தானே? எனவே கண் திறந்துள்ளவர்கள் சற்று மனதையும் திறந்து வையுங்கள். பசிப்போர் பாவம் அவரை எங்கு கண்டாலும் மனித ஈரத்தை மட்டும் மனதில் கொண்டு உணவு வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் ஒரு நாள் உணவை விட அவருக்கு தொடர்ந்து உண்பதற்கான வழியை ஏற்படுத்துங்கள். ஆயிரம் ரூபாய் வைத்துள்ளவர்கள் பத்து ரூபாய் வீதம் கொடுக்கையில் நஷ்டமாகிவிடமாட்டோம், ஆனால் ஆயிரம் பேர் அங்ஙனம் கொடுக்க முன்வருகையில் நூறு ஏழைக்கு உண்ணச் சோறு கிடைக்கும்..
எனவே இருப்பதை பகிர்ந்துண்ணுவோம். எல்லோரும் இனிமையோடு வாழ்வோம். இந்த வாழ்க்கை உயிர்கள் அனைத்திற்கும் வரமாகவே அமையட்டும்...