உலகச் செய்திகள்


அன்னையர் தினத்தன்று கொடூரம்!

பாக். தேர்தல்: நவாஸ் ஷெரீப் வெற்றி!

நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை நிராகரித்த மன்மோகன் சிங்



==================================================================


அன்னையர் தினத்தன்று கொடூரம்!

13/05/2013 அமெரிக்காவின் நிவ் ஒர்லியன்ஸ் பகுதியில் அன்னையர் தினத்தையொட்டி நேற்று இடம்பெற்ற பாதயாத்திரையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 2 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் 3 பேர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.



குற்றவாளிகளை இணங்கான பொதுமக்கள் தம்மிடம் ஆதாரமெதுவும் இருக்கும் பட்சத்தில் தந்து உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 




பாக். தேர்தல்: நவாஸ் ஷெரீப் வெற்றி!

13/05/2013 பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து 3வது பிரதமராக பதவியேற்கவுள்ளார் ஷெரீப். அதேசமயம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான இம்ரான் கான் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.ஆனால் 2வது இடத்தைப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தனது கட்சி பெரும் வெற்றி பெற்றிருப்பதாக கட்சி ஆதரவாளர்களிடையே ஷெரீப் தெரிவித்துள்ளார். ஷெரீப் 3வது முறையாக பிரதமராகவுள்ளார்.

நேற்று முன் தினம் வன்முறைக்கு மத்தியில் பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்றது.வன்முறையில் சிக்கி மொத்தம் 17 பேர் பலியாயினர்.
எனினும் மக்கள் பயமின்றி வாக்களிக்க ஆர்வம் காட்டினர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதுவரை வந்த முடிவுகளின்படி ஷெரீப் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து ஷெரீப் கூறுகையில், முடிவுகள் வந்து கொண்டுள்ளன. நமது கட்சி இதுவரை தனிப் பெரும் கட்சியாக வென்றுள்ளது.
மேலும் பல முடிவுகள் வர வேண்டியுள்ளது. நமக்குக் கூட்டணிக் கட்சிகளின் தயவு தேவைப்படாத அளவுக்கு பலம் கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்றார் ஷெரீப்.
மொத்தம் உள்ள 272 எம்.பி. சீட்களில் ஷெரீப்கட்சி 119 இடங்களில் முன்னணியில் உள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு முஷாரப்பால் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டு பிரதமர் பதவியிலிருந்து துரத்தப்பட்டார் ஷெரீப். அதன் பிறகு பாகிஸ்தான் பல அசம்பாவிதங்களைச் சந்தித்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரதமர் பதவிக்கு ஷெரீப் வரவுள்ளார்.

இதற்கிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 2வது இடத்தைப் பெறுகிறது.
நகர்ப்புற இளைஞர்கள் அக்கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர். இம்ரான் கான் தேர்தலில் வெல்லாவிட்டாலும் கூட புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதுவரை பாகிஸ்தானைப் பொறுத்தவைர முஸ்லீம்லீக் அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சிதான் ஆட்சியில் இருந்து வரும், இல்லாவிட்டால் எதிர்க்கட்சியாக இருக்கும்.
ஆனால் அதை முதல் முறையாக உடைத்து உள்ளே புகுந்துள்ளார் இம்ரான் கான். பாகிஸ்தான் மக்கள் கட்சி தற்போது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி 



நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை நிராகரித்த மன்மோகன் சிங்

15/05/2013 பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஷ் ஷெரீப், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உங்களுடனும், உங்களது அரசுடனும் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். மேலும் நவாஸ்ஷெரீப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார், இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா வர பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளது குறித்து பா.ஜ.க, கேள்வி எழுப்பி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமரை இந்தியாவிற்கு அழைக்க மன்மோகன் சிங் மிகவும் அவசரப்படுவதாகவும், ஆனால் பாகிஸ்தானின் இந்தியா மீதான நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும், நற்பலன்கள் ஏற்படுமானால் அவரை அழைக்கலாம் எனவும் பா.ஜ., துணைத் தலைவர் பல்பீர் புன்ஞ் தெரிவித்துள்ளார்.
மேலும் நவாஸ் இன்னும் பதவியேற்பதற்கு முன் அவருக்கு இந்தியா வர அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனிடையே தனது பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கார்கில், மும்பை தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படும். பிரதமர் மன்மோகன் சிங், என்னுடைய பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என கூறினார்.
ஆனால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை நிராகரித்தார் மன்மோகன் சிங். முக்கிய விவகாரம் குறித்து ஆலோசிக்க இருப்பதால் மன்மோகன் சிங் பாகிஸ்தான் செல்லவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
.