மெல்பேணில் தொடங்கிவைக்கப்பட்ட தமிழர் இனவழிப்பு புகைப்படக் கண்காட்சி



அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் ஞாயிற்றுக்கிழமை (19-05-2013) அன்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் (Tamil refugee Council) சேர்ந்த Ron Guy தலைமையில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான எமது மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடக்கம் கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை அவுஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்ந்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.

முதலாவதாக தொடக்கவுரையை ஜனநாயகத் தொழிற்கட்சியைச் சேர்ந்த Steve campbell அவர்கள் நிகழ்த்தினார். “இப்படங்களைப் பார்க்கும்போது சிறிலங்காவில் இறுதிப் போர்க்காலத்தில் நடந்த கொடுமைகள் தெளிவாகத் தெரிகின்றன. மனிதர்கள் எவருக்குமே அதிர்ச்சியளிக்கக்கூடிய இச்சாட்சியங்களை இவ்வளவு நாளும் அறியாமல் இருந்திருக்கிறோம். இவை அவுஸ்திரேலிய மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இங்குக் கூடியிருக்கும் அனைவரும் உங்களது தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற  உறுப்பினர்களோடு ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இது தொடர்பாகக் கதையுங்கள். தொடர்ச்சியான அழுத்தங்கள் அவர்களைச் சரியான வழிக்குக் கொண்டுவரும். ஏனென்றால் இவ்வுண்மைகள் தெரியாமலேயே ஏராளமான அரசியல்வாதிகள் உள்ளனர்” எனத் தனதுரையில் தெரிவித்தார்.

அடுத்ததாக புகழ்பெற்ற வழக்குரைஞரும் தமிழர் உரிமைப்போராட்டம் மற்றும் மனிதவுரிமைகள் தொடர்பான தீவிர செயற்பாட்டாளருமான Robert Stary அவர்கள் உரையாற்றினார். அவர் தனதுரையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் எவ்வாறு தமிழினம் மீது பயங்கரவாதத்துக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மூவரைக் கைதுசெய்தது, அதன்மூலம் எவ்வித உதவிகளும் விடுதலைப் போராட்டத்துக்கோ தமிழ்மக்களின் மனிதநேயப் பணிக்கோ கிடைக்கவிடாமல் தடுப்பது, அவுஸ்திரேலியத் தமிழர்களை வெருட்டி வைப்பது, அதன்மூலம் ஏனைய நாடுகளும் இதைப் பின்பற்றி தமிழர் மீதான தமது அழுத்தங்களைப் பிரயோகித்து தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முடக்கும் வகையில் பணியாற்றியது என்பன குறித்துப் பேசினார்.

அவ்வழக்கு அரச தரப்பில் வெற்றிகொள்ளப்பட்டிருந்தால் மிகப்பெரும் சிக்கலை அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் தமிழினம் எதிர்கொண்டிருக்குமென்பதையும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அது மிகப்பெரும் வாய்ப்பாகப் போய்விடுமென்பதையும் சுட்டிக்காட்டினார். “தமிழினம் மீதான இன அழிப்புக் குற்றங்கள் ஒருநாள் உலகின் முன் நிரூபிக்கப்பட்டே தீரும்; தமிழர்கள் தமக்கான தன்னாட்சியை நிச்சயம் பெற்றே தீருவார்கள்; அதுவரை அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்று” கேட்டுக் கொண்டார்.

அடுத்தபடியாக, விக்ரோறிய மாநிலப் நாடாளுமன்ற உறுப்பினரான, தொழிற்கட்சியைச் சேர்ந்த Don Nadella உரையாற்றினார். தனதுரையில் இவ்வாறான கண்காட்சிகள் பலரின் கண்களைத் திறக்கும்; இதுவரை தமிழர் இனவழிப்பைப் பற்றி அறியாத பாமர மக்கள் இதன்மூலம் தெளிவு பெறுவர்; இது போன்ற கண்காட்சிகள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்; எனக் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக, தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்தவரும் பிரபல ஊடகவியலாளருமான Trevor Grant அவர்கள் உரையாற்றினார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் சாட்சியங்கள் சிலவற்றை வாசித்த அவர், இப்புகைப்படக் கண்காட்சியின் முக்கியத்துவம் பற்றியும் இவை போன்ற கண்காட்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்பதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கியதோடு இந்நிகழ்வை ஒழுங்கமைத்த அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மெல்பேர்ண் நகரின் முக்கியமான ஓரிடத்தில் நடைபெறும் இக்கண்காட்சி எதிர்வரும் மே மாதம் 30 ஆம் நாள்வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. அவ்வழியாற் செல்லும் பல்லின மக்களும் இக்கண்காட்சியைக் கண்டு தமிழர் இனவழிப்பைப் பற்றிய விளக்கங்களைப் பெற்றுச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இக்கண்காட்சி பற்றிய விபரங்களை மெல்பேர்ண் வாழ் தமிழர்கள் தமது பல்லின நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி கலந்துகொள்ள ஊக்கப்படுத்தும்படி கேட்கப்படுகின்றனர்.

கண்காட்சி நடைபெறுமிடம்:

Collingwood Gallery, 292 Smith Street, Collingwood, VIC

கண்காட்சி நடைபெறும் காலப்பகுதி

May 19 2013 - May 30 2013

மேலும், இக்கண்காட்சியில் பார்வையாளருக்கு விளக்கங்களை அளிக்க தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்படுவதால், இயலுமானவர்கள் முன்வந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோறியா செயற்பாட்டாளர்கள் உட னோ அல்லது தமிழ் ஏதிலிகள் கழகத்துடனோ தொடர்பு கொள்ளும்படி அன்பாக வேண்டப்படுகின்றீர்கள்.
மின்னஞ்சல் தொடர்புக்கு: tamilrefugeecouncil@gmail.com