உலக சினிமா : Khamosh Pani

.

சாதத் ஹசன் மாண்டோவின் சிறுகதை அடிப்படையாக கொண்ட குறும்படங்களின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், "காமோஷ் பாணி" படம் என்னை மேலும் பாதித்தது. குழந்தைகள் பிறப்பது பெற்றோர்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடு பிறக்கும் போது பல மக்கள் மனதில் வேதனைகளையும், வலியையும் கொடுத்து தான் பிறக்கிறது. அப்படி வலிகளும், வேதனையோடு மட்டுமல்லாமல் கலவரத்தில் பிறந்த தேசம் இந்தியா - பாகிஸ்தான். அதன் பின்னனியில் கதைக்களம் இல்லை என்றாலும், அதன் வேதனையில் உருவாக பெண்ணின் கதை தான் "காமோஷ் பாணி".


1979ல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் சர்கி கிராமத்தின் நடக்கும் கதை. அம்மா ஆயிஷாவின் அன்பு, புல்லாங்குழல் இசை, சுபைதா என்ற பெண்ணின் காதல், நண்பர்கள் என்று எல்லோரைப் போலவே சந்தோஷமான இளைஞனாக இருக்கிறான் சலீம். ஆனால், அவனது அம்மா ஆயிஷாவுக்கு கிணற்றை நோக்கி நினைவுகள் செல்லும். அமைதியான கிணற்று நீர் இரண்டு நாடு பிரிந்ததற்கு சாட்சியாக இருக்கிறது.

சலீம் தனது நண்பனின் தூண்டுதலால் அரசியல் ஆர்வம் கொண்டு, அரசியல் கூட்டத்திற்கு செல்கிறான். அப்போது, அவனது நண்பன் காதல் நம் கலாச்சாரத்திற்கு எதிரானது, அவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள் என்கிறான். அரசியல் ஆர்வம் சலீம்மை அம்மாவிடம் பொய் சொல்ல வைக்கிறது. காதலி சுபைதாவை உதாசினப்படுத்த வைக்கிறது.



இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கையில் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள புனித தளங்களுக்கு வரலாம் என்று கையெழுத்திடுகிறார்கள். இதனால், இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஒரு சீக்கிய குழுக்கள் வருகிறது. சர்கி கிராமத்தில் தனது சகோதரியை தேடி வருகிறார் ஒரு சீக்கியர். அவர் ஆயிஷாவை பார்த்து தனது சகோதரி ‘வீரோ’ என்கிறார். அந்த சமயத்தில் சலீம் வர, வந்த சீக்கியரிடம் ‘இங்கு இஸ்லாம் குடும்பம் மட்டுமே வசிக்கிறது’ என்று சொல்லி கதவை முடுகிறாள். அவளது சீக்கிய சகோதரன் தனது தந்தை சாக கிடப்பதாக சொல்லியும், அவள் மௌனமாக வீட்டுக்குள் செல்கிறாள்.

கண்ணீர் நிரம்ப தனது சீக்கிய ஆடை எடுக்க, மௌனமான கிணற்றை நோக்கி நினைவுகள் செல்கிறது. இந்திய – பாகிஸ்தான் பிரிவினை போது பாகிஸ்தான் கலவரக்காரர்களிடம் தப்பிக்க, தங்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள பல பெண்கள் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார்கள். வீரோவின் தந்தையே அவளை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்ள சொல்ல, உயிருக்கு பயந்து அங்கு இருந்து தப்பி ஓடுகிறாள். ஆனால், பாகிஸ்தான் கலவரக்காரர்களால் கற்பழிக்கப்பட்டு, சிறைக்கைதியைப் போல் அடைக்கப்படுகிறாள். பிறகு, ஒருவன் தன் தவறுக்கு மனம் வருந்தி அவளை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறான். கற்பழிக்கப்பட்டு இஸ்லாமியல்லாத பெண்ணாக இருப்பதைவிட, அவனை ஏற்றுக் கொண்டு திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். ‘வீரோ’ என்ற பெயரை ‘ஆயிஷா’ என்று மாற்றிக் கொண்டு புது வாழ்க்கை தொடங்குகிறாள்.

தனது அம்மா சீக்கியர் என்று தெரிந்தும் தனது மதவாதத்தில் இருந்து மாறாமல் இருக்கிறான் சலீம். அதுமட்டுமில்லாமல் பிராத்தனைக்கு வந்த சீக்கியர்களை விரட்டி அடிக்கும் கூட்டத்தில் செல்கிறான்.

இந்த உண்மை தனது சகாக்களிடம் சொல்கிறான் சலீம். அவன் நண்பர்கள் அவன் தந்தை ‘பாகிஸ்தானி’ என்பதால் அவனை தவறாக நினைக்கவில்லை. ஆனால், அவன் அம்மா முழுமையாக இஸ்லாமியத்தை ஏற்றுக் கொண்டைதை அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். இதை சலீம் ஆயிஷாவிடம் சொல்லியும் அவள் மறுக்கிறாள். தன் மகன் மதவாதத்தால் அவளை உதாசினப்படுத்துகிறாள். அவளை சுற்றி இருக்கும் தோழிகளும், நண்பர்களும் உதாசினப்படுத்துகிறார்கள். ஆயிஷாவுக்கு சலீமின் முன்னாள் காதலி சுபைதா மட்டும் ஆதரவாக இருக்கிறாள். ஆயிஷாவால் இஸ்லாத்தை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாமல் வாழ்ந்ததை தனது சகோதரனிடம் சொல்லி அழுதுகிறாள்.

மகனின் புரக்கனிப்பும், சகோதரனுடன் செல்ல முடியாமல் தவிக்கும் ஆயிஷா, பிரிவினையின் போது அஞ்சி ஓடிய கிணற்றில் தற்கொலை செய்துக் கொள்கிறாள். அவனது மகன் சலீம் அவளது பொருட்களை ஆற்றில் போட்டு, செயின்னை மட்டும் தன் முன்னாள் காதலி சுபைதாவுக்கு கொடுத்துவிட்டு செல்கிறான். “வீரோ இறக்க, ஆயிஷாவின் பிணம் மட்டும் இங்கு இருக்கிறது” என்ற சுபைதா குரலில் படம் 2002ல் நகர்கிறது. திருமணமாகாத சுபைதா நடைபாதையில் செல்லும் போது சலீமின் அரசியல் பேச்சை தொலைக்காட்சியில் பார்த்து புன்னகைத்தப்படி செல்கிறாள்.

ஒரு தாயின் மறு ஜென்மம் ஒரு குழந்தையின் பிறப்பில் உருவாகிறது. ஆனால், நாடுகள் பிறப்பதில் மட்டும் ஏன் மனித உயிர்கள், உணர்வுகள் மேல் நடக்கிறது ? பிரிந்து வந்த பிறகு இரண்டு நாடுகளும் நண்பர்களாக இருக்க வேண்டாம், குறைந்த பட்சம் அடுத்தவர்கள் சுதந்திரத்தில் தலையீடாமல் இருந்தாலாவது பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டிருக்கும். தங்கள் நாட்டின் வளர்ச்சியை விட சகோதர நாட்டில் வீழ்ச்சியை பார்க்கும் அரசியலை யாரால் உருவானது ? எப்படி மாற்றப் போகிறோம் ?

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையை வரலாறு புத்தகங்கள் நினைவு படுத்தினாலும், அதன் வலி, வேதனையை இது போன்ற படைப்புகள் தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

Nantri :guhankattura