.
சாட்சியங்களுடன் தொடரும்
வரலாறு
“நடந்தவைகளுக்கு
சாட்சிகள் இல்லையென்று நம்புவது மனதின் அறியாமை. எல்லாச்சம்பவங்களுக்கும் சாட்சி
இருக்கின்றன.” சமீபத்தில் நான் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் என்ற நாவலில்
மேற்படி வார்த்தைகளை ஒரு பாத்திரம் பேசுகிறது.
பயணியின் பார்வையில் 15ஆவது
அங்கத்தை எழுதும்பொழுது அந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. சம்பவங்கள்
காலப்போக்கில் நினைவிலிருந்து மறந்துபோகலாம். ஆனால் அந்தச்சம்பவங்களுடன் தொடர்புடைய
வேறு ஒருவருக்கோ அல்லது தெரிந்த ஒருவருக்கோ மறந்துவிட்டது என்ற முடிவுக்கு நாம்
வந்துவிடமுடியாது. இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்டவர்களது வாழ்வில் நடந்த
சம்பவங்கள் காலப்போக்கில் மறந்துபோகலாம்.
மனக்காயங்கள் காலத்தினால்
குணமாகலாம். ஆனால் சாட்சியங்கள் மரணிக்காது. ராமகிருஷ்ணனின் அந்தப்பாத்திரம்
பேசுவது போன்று சாட்சிகள் இல்லவே இல்லை என்று சாதிப்பது மனதின்
அறியாமைதான்.
வன்னி பெருநிலப்பரப்பில்
போரின் சாட்சியங்கள் தடயங்களாகவே இருக்கின்றன. போரிலே எதிரும் புதிருமாக இருந்த
இரண்டு பெரிய தலைவர்களின் படங்கள் ஓரிடத்தில் சாட்சியங்களாக இருக்கின்றன. அவர்கள்
வேறுயாருமல்ல… இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், விடுதலைப்புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனும்தான்.
பிரபாகரன் இலங்கையில்
எந்தவொரு சிங்களத்தலைவர்களையும் தனது வாழ்நாளில் சந்திக்கவில்லை. அவரது ஆலோசகர்
அன்ரன் பாலசிங்கம்தான் சந்தித்தார். ஆனால் பிரபாகரன் இந்தியாவில் ராஜீவ்
காந்தியையும் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரையும் வன்னிக்காட்டில் வை.கோ.வையும்
நெடுமாறனையும் சந்தித்தார்.
2005 இல் இலங்கையில் நடந்த
ஜனாதிபதித்தேர்தலில் மகிந்தர் வெற்றிபெறுவதற்கு பிரபாகரன்தான் காரணமாக இருந்தார்.
அதற்கு சாட்சியங்கள் பல இருக்கின்றன. வட,கிழக்கு தமிழ் மக்கள் அந்தத்தேர்தலில்
வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் கதை வேறுவிதமாக அமைந்திருக்கும். அனுமதி
வழங்குமாறு வேண்டுகோள் விடுத்து பல தடவைகள் கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனை
சந்திக்கச்சென்ற மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரன் ஏமாற்றத்துடன்தான்
திரும்பினார். பின்னர் அவர் மகிந்தரை ஆதரித்து அமைச்சரானது வேறுகதை.
2005 ஜனாதிபதித்தேர்தல்
நடந்தவேளையில் நான் இலங்கையில் நின்றேன். பல ஊடகவியலாளர்களின் கணிப்பையும்
அவதானித்தேன். வடக்கு மக்கள் அந்தத்தேர்தலில் வாக்களித்திருந்தால் நிச்சயம்
ரணில்விக்கிரமசிங்கா தெரிவாகியிருப்பார் என்ற கணிப்புதான் அப்பொழுது இருந்தது.
ஆனால் திடீரென நடந்த மாயவினோதங்கள் இலங்கையின் அரசியல் சரித்திரத்தில் திருப்பத்தை
ஏற்படுத்தின.
ஆனால் எல்லாவற்றுக்கும்
சாட்சியங்கள் இருக்கின்றன.
இந்தத்தடவை பயணத்தில்
கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு முதல் தடவையாகச்சென்றேன். அங்குதான் இரண்டு பெரிய
தலைவர்களினதும் படங்கள் அருகருகே சுவர்களில் காட்சிதருகின்றன. போராளிகளின்
வித்துடல்கள் புதைக்கப்பட்ட நிலங்களில் நினைவுத்தூபிகள்; அழிக்கப்பட்டன என்பது
கடந்துபோன செய்தி. புதைகுழிகள் தோண்டப்பட்டு எலும்புக்கூடுகள் சேகரிக்கப்படுவது
அண்மைக்கால செய்திகள்.
கியூபாவில்
சாந்தாகிளாராவுக்குச்சென்றால் ஏர்ணஸ்ட் சேகுவேராவினதும் அவரது தோழர்களினதும்
எலும்பு எச்சங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட கல்லறைகளையும் அவரது பாவனையிலிருந்த
பேனைகள், நூல்கள், துப்பாக்கிகள், உபகரணங்கள் அபூர்வமான ஒளிப்படங்கள்
முதலானவற்றையும் பார்க்கலாம்.
தென்னிலங்கையில் இரண்டு
தடவைகள் ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் மற்றும்
கதிர்காம அழகுராணி பிரேமாவதி மனம்பேரி உட்பட பல இளம் யுவதிகளையும்
காவுகொடுத்துவிட்டு இறுதியில் தானும் மடிந்துபோன ரோகணவிஜேவீராவின் மனைவியிடமோ
அல்லது இன்றைய ஜே.வி. பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவிடமோ கேட்டால் விஜேவீராவின்
நினைவைக்கூரும் அவரது உடை மற்றும் அவர் பாவித்த பேனைகள், கையெழுத்துபிரதிகள்
சிலவேளை கிடைக்கலாம்.
ஆனால் தமிழினத்தின்
சூரியதேவன் என வர்ணிக்கப்பட்டவரின் வன்னி இல்லங்கள் வெறிச்சோடிப்போயிருக்கிறது.
அங்கு வெளவால்களின் நெடிதான் மூக்கைப்பொத்தவைக்கின்றது. அவர் சம்பந்தப்பட்ட
எந்தவொரு தடயங்களும் அங்கே இல்லை. அவர் சிறந்த வாசகர்.
அந்த இல்லங்களில் அவர்
படித்த நூல்களோ வேறு பொருட்களோ இல்லை. படையினர் மேலிடத்து உத்தரவுக்கு அமைய
இல்லங்களை வெற்றிடமாக்கியுள்ளனர். வெறும் சுவர்களும் படிக்கட்டுகளும்தான்
எஞ்சியுள்ளன. பிரபாகரன், நேரம் கிடைக்கும்போது நூல்கள் படிப்பார். படங்களும்
பார்ப்பார். ஆனால் தென்னிந்திய திரைப்படங்களை வன்னி மக்கள் பார்க்கக்கூடாது என்ற
தடையுத்தரவு பிறப்பித்திருந்தார். அதனால் வன்னியில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும்
தமிழ்ப்படங்கள் திரையிடப்படவில்லை.
சொல்லப்பட்ட காரணம்
தென்னிந்திய படங்களைப்பார்த்து தமிழ் ஈழ மக்கள் பெரிய கலாசார சீரழிவுக்குத்
தள்ளப்பட்டுவிடுவார்களாம். ஆனால் புலிகளை தீவிரமாக ஆதரித்த புலம்பெயர் தமிழர்கள்,
வெளிநாடுகளில் தாராளமாக தமிழ்ப்படங்கள் பார்த்தார்கள். திரைப்பட
தயாரிப்பாளர்களுக்கு கோடிகோடியாக அள்ளிக்கொடுத்தார்கள்.
அதேசமயம் பிரபாகரன் தமது
பிரத்தியேகமான இரகசிய இல்லத்திலிருந்து நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தார். தன்னை
சந்திக்கவந்த இயக்குநர்கள் பாரதிராஜா, முள்ளும் மலரும் மகேந்திரன். தங்கர் பச்சான்
முதலானவர்களிடம் அரசியல் பேசாமல் தனியே சினிமா பற்றி மாத்திரம் பேசினார். அவருக்கு,
‘யார் யாருடன் என்ன பேசவேண்டும் என்று தெரியும்’ என்று தமிழகம் திரும்பிய பாரதிராஜா
ஒரு இதழுக்கு பேட்டிகொடுத்தார். “மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தில் பாரதிராஜா
அந்த வில்லன் வேடத்தில் நடித்திருக்கத்தேவையில்லை. அவர் தவிர்த்திருக்கலாம்” என்று
மகேந்திரனிடம் திரைப்படவிமர்சனமும் சொன்னவர் பிரபாகரன். மகேந்திரன்
புறப்படும்பொழுது பல திரைப்பட டி.வி.டி சிடிக்களை அன்பளிப்பாக கொடுத்தனுப்பியவர்.
ஆனால் வடக்கில் தமிழ் மக்கள் அவரது காலத்தில் தமிழ்த்; திரைப்படம் பார்ப்பதற்கு தடை
விதிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது யாழ்ப்பாணம் திரையரங்குகளில் தமிழ்ப்படம்
மட்டுமல்ல சிங்களப்படங்களும் திரையிடப்படுகின்றன. வன்னியில் மக்கள் தங்கள் வீட்டு
தொலைக்காட்சியில் தமிழ்ப்படங்கள் பார்க்கின்றனர்.
இது யாரால் நடந்த புண்ணியம்?
பிரபாகரனால்தான்.
வன்னியில் பிரபாகரனின்
தடயங்களை அழித்திருந்தாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் நடந்த
இரணை மடுக்குளத்தின் அருகே அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் பிரபாகரன், அவரது மனைவி
மதிவதனி, அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், புதுவை ரத்தினதுரை, தமிழ்ச்செல்வன்
ஆகியோரின் படங்கள் ஒரு புறத்தில்.
2002 இல் சமாதான காலம்
வந்தசமயத்தில், பேச்சுவார்த்தைக்காக சீபிளேனில் இரணைமடுக்குளத்தில் வந்திறங்கிய
அன்ரன் பாலசிங்கத்தை பிரபாகரன் கைகொடுத்து கரைக்கு அழைக்கிறார். அப்பொழுது
அங்கிருந்தவர்கள்தான் மேலே குறிப்பிடப்பட்டவர்கள்.
2010 இல் (போர் முடிவுற்ற
பின்னர் ) கிளிநொச்சி இராணுவமுகாமில் நடந்த ஒரு வைபவத்திற்கு ஜனாதிபதியும் அவரது
பரிவாரங்களும் வந்த சமயம் எடுத்த படங்கள் மறுபுறத்தில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு படங்களையும்
பார்த்தபோது அது அவரது காலம். இது இவரது காலம் என்று அருகில் நின்றவர்களிடம்
சொன்னேன். எப்படியோ எதிரும் புதிருமான இரண்டு தலைவர்கள் கிளிநொச்சி
இரணைமடுக்குளத்தில் படங்களாக காட்சி
தருகிறார்கள்.
அதனால்தான்
எல்லாச்சம்பவங்களுக்கும் சாட்சியங்கள் இருக்கின்றன என்று இந்தப்பத்தியின்
தொடக்கத்திலேயே குறிப்பிட்டேன்.
இரணைமடுக்குளம்
கண்ணைக்கவர்ந்தது. வன்னிநிலத்து விவசாயிகளை இரட்சிக்கும் தேவதை. வயல்நிலங்களுக்கு
நீர்ப்பாசனவசதியை தருவது. 1903-1920 காலப்பகுதியில் சுதந்திரத்திற்கு முன்னர்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம்.
இலங்கையின் முதலாவது
பிரதமராக பதவிக்கு வந்த டி.எஸ். சேனாநாயக்காவின் காலத்தில் 1954 ஆம் ஆண்டு
இரணைமடுக்குளம் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது விவசாய
காணி அமைச்சராக இருந்தவர் சேனாநாயக்காவின் புதல்வர் டட்லிசோனாநாயக்கா. பின்னாளில்
1965 இல் டட்லி பிரதமராக வந்தவேளையில் விவசாயத்தையும் பயிர்ச்செய்கையையும்
ஊக்குவிப்பதற்காக விவசாய மன்னர் விருதுகளை உருவாக்கினார்.
இப்படி விவசாயிகளுக்கு
பட்டமளித்து நெற்செய்கையை ஊக்குவித்த டட்லிசேனாநாயக்கா தனது வாழ்வில்
நெல்லரிசிச்சோறு சாப்பிடுவதில்லை என்றால் ஆச்சரியம். அதிசயம். ஆனால் அதுதான்
உண்மை.
இரணைமடுக்குளம் பற்றி
போருக்குப்பின்னர் சில செய்திகள் கசிந்தன. இந்தப்பிரதேசத்தில் ஒரு விமானநிலையம்
வரவிருப்பதாகவும் அதற்காக அந்தக்குளத்தின் நீர்மட்டம் குறைக்கப்படுவதாகவும் ஒரு
தகவல்.
வடக்கில் இருக்கும் விவசாய
நிலங்களுக்கு தேவைப்படும் நீரை இந்தக்குளத்திலிருந்து அனுப்புவதற்கு அரசு
விரும்பினாலும் அந்தப்பிரதேச விவசாயிகள் அதற்கு தமது எதிர்ப்பைத்தெரிவிக்கிறார்கள்
என்றும் ஒரு தகவல்.
தண்ணீரும் அரசியலான கதை
தமிழகத்தில் காவிரியால் நீடிக்கிறது. இலங்கையில்
நான்காம் கட்டப்போர் தொடங்கியதும் மாவிலாறு தண்ணீரிலிருந்துதான்.
இலங்கையில் இனப்பிரச்சினை
உக்கிரமடைந்து இனவிடுதலைப்போராட்டம் தொடங்கியதற்கு பல்கலைக்கழக பிரவேச கல்வியில்
அறிமுகமான தரப்படுத்தலும் ஒரு காரணம் என்பது ஆய்வாளர் கூற்று. அதேசமயம்,
பல்கலைக்கழகம் யாழ்ப்பாணத்திலா..? திருகோணமலையிலா..? என்ற போராட்டத்தில் தந்தை
செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சியும் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க்காங்கிரசும்
இழுபறிப்பட்டவேளையில் எவருக்குமே இல்லை என்று 1965 பதவிக்கு வந்த டட்லிசேனாநாயக்கா
கையை விரித்தார்.
திருகோணமலை தமிழரின்
தலைநகரம் அதனால் அங்குதான் பல்கலைக்கழகம் வேண்டும் என்றனர்
தமிழரசுக்கட்சியினர்.
ஏற்கனவே விஞ்ஞான கைத்தொழில்
அமைச்சராக பதவியில் அமர்ந்தவேளையில் கிழக்கில் வாழைச்சேனையில் காகித ஆலையையும்
வடக்கில் காங்கேசன்துறையில் சீமெந்து ஆலையையும் பரந்தனில் இரசாயணதொழிற்சாலையையும்
பெற்றுக்கொடுத்திருந்த ஜி.ஜி. பொன்னம்பலம் 1965 இல் யாழ்ப்பாணம் தொகுதியில்
தெரிவானதும் அங்கே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவிவிட்டால் ‘எல்லப்புகழும் இறைவனுக்கே’
என்பதுபோன்று இந்தப்புகழும் ஜி.ஜி. வசம்போய்விடும் என்பதானல் தமிழரசுக்கட்சி
யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் வருவதை அன்று தடுத்தது.
அத்துடன் நிற்கவில்லை. 1970
இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் கூட்டரசாங்கம் அமைந்தவேளையில்
யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வரா கல்லூரியையும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியையும்
பல்கலைக்கழக வளாகங்களாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்தபோதும் அமிர்தலிங்கம்
தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி அதற்கு எதிர்ப்பத்தெரிவித்தது.
கோவை மகேசன் சுதந்திரன்
இதழில் இதுதொடர்பாக தொடர்ந்து விஷம் கக்கினார். அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது
முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்த பேராசிரியர் கைலாசபதிக்கு யாழ். பல்கலைக்கழக
வளாகத்தலைவர் பதவிநியமனம் கிடைத்ததும் அவர்களுக்குப்பொறுக்கவில்லை.
கைலாசபதிக்கும் அவரது ஆசான்
பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்குமிடையே சிண்டுமுடியும் வேலைகளையும் கனகச்சிதமாக
மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் 1965இலேயே
பல்கலைக்கழகம் வந்திருக்கக்கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் தமிழ்த்தலைவர்களின்
ஈகோவினால் சாத்தியமாகவில்லை. 1970 இற்குப்பின்பும் அவர்கள் திருந்தவில்லை.
தமிழரசுக்கட்சியும் தமிழ்க்காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி
அமைத்தபின்பும் அவர்களின் ஈகோ அவர்களைவிட்டு அகலவில்லை.
ஆனால் அவர்கள்
யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக்கல்லூரி பல்கலைக்கழக வளாகமாக மாறுவதை எதிர்ப்பதாக
நொண்டிச்சாட்டு சொன்னார்கள்.
ஆனால் ஸ்ரீமாவோ
பண்டாரநாயக்கா, டட்லி சேனாநாயக்கா கைவிரித்ததுபோன்று தமிழ்த்தலைவர்களின் ஈகோவை
பொருட்படுத்தாமல் திட்டமிட்டவாறு அங்கு பல்கலைக்கழகத்தை நிறுவினார். அங்கு
கைலாசபதிக்குப்பின்னர் வித்தியானந்தன் உபவேந்தரானார். புலிகள் நீர்வேலியில் அமைத்த
பங்கர் மருத்துவமனையின் மாதிரியை வடிவமைத்தார் உபவேந்தர் பேராசிரியர் துரைராஜா.
இதே பல்கலைக்கழகத்தில்
படித்துக்கொண்டிருந்த மாணவி மதிவதனியைத்தான் பிரபாகரனும் ஒரு உண்ணாவிரத
நிகழ்விலிருந்து அழைத்துவந்து தனது துணைவியாக்கிக்கொண்டார். இங்கு கல்வி
கற்றுக்கொண்டிருந்த மாணவர்கள் விஜிதரன், விமலேஸ்வரன் ஆகியோர் புலிகளினால்
கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். மருத்துவபீட பேராசிரியை ரஜனி திராணகமவும்
அவர்களால் கொல்லப்பட்டார்.
யாழ் .பல்கலைக்கழகமும்
அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பொங்குதமிழும் எழுச்சிகொண்டது.
கிளிநொச்சியில்
நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகத்தை நேரில் பார்த்தபோது, இந்த பொல்லாத ஞாபக சக்தி
பழைய சம்பவங்களை - சாட்சியங்கள் நிரம்பிய காலகட்டங்களை நினைவுக்கு அழைத்துவந்தது.
பிரபாகரன் அந்த தமிழ்த்தலைவர்கள் போன்று சிந்திக்கவில்லை. தமிழர்களுக்கென்று தனியாக
பல்கலைக்கழகம் வேண்டும் என்றும் தமிழர்களின் வரலாறு சரியாக எழுதப்படவேண்டும்
என்றும் பாடசாலைகளில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகமாகவேண்டும் எனவும்
விரும்பினார்.
முன்னாள் பாராளுமன்ற ஆசன
தலைவர்கள் பல்கலைகழகத்திற்காக திருகோணமலை - யாழ்ப்பாணம் என்று குழாயடிச்சண்டை
நடத்திய வரலாறு அவருக்குத்தெரியும். அவர், வன்னிபெருநிலப்பரப்பில் கிளிநொச்சியில்
தமிழ்ப்பல்கலைக்கழகம் அமைக்க விரும்பினார். அதற்கான திட்டமும் வரையப்பட்டு
கட்டிடங்களும் எழும்பின.
ஆனால் விதி வேறுவிதமாக
விளையாடிவிட்டது. போர் தொடங்கியது. அவரது மனக்கண்ணிலும் கனவிலும் இருந்த
தமிழ்ப்பல்கலைக்கழகம் மறைந்தது. பாதியிலிருந்த அந்தப்பல்கலைகழக கட்டிட வேலைகள்
தற்N;பாதைய அரசினால் தொடரப்படுகிறது.
‘பிரபாகரன் ஆரம்பித்த வேலையை
நாம் ஏன் தொடரவேண்டும’; என்று ஈகோவாக சிந்திக்காமல் அரசு துரிதமாக பணிதொடருகிறது.
நாம் அந்த பல்கலைக்கழக பிரதேசத்தில் பல மணிநேரங்கள் செலவிட்டோம். கட்டிடத்துக்கு
தேiவான கற்கள் செங்கற்கல்கள் அல்ல. அந்த நிலத்திலேயே சீமெந்து மணல் கலந்த கலவையில்
அச்சில் வார்க்கப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன.
அந்தக்கட்டிடத்தை
நிர்மாணிக்கும் தொழிலாளர்கள் இரவில் அங்கேயே கொசுத்தொல்லையுடன் உறங்குகின்றனர்.
கிளிநொச்சியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடமும் பொறியியல் பீடமும்
உருவாகிக்கொண்டிருக்கிறது,
“தீர்க்கதரிசனம் (?) “ மிக்க
இன்றைய தமிழ்த்தலைவர்கள், கிளிநொச்சியில் ஸ்ரீதரனும் சந்திரகுமாரும் எம்.பி.க்களாக
இருப்பதனால்… அவர்களுக்கே அந்தப்புகழும் போய்விடக்கூடாது என்று நினைக்காமல்
இருந்தால் அதுவே தற்போதைக்கு மிகுந்த ஆறுதல்.
(பயணங்கள் தொடரும்)