தமிழ் சினிமா

MailPrint
டேவிட்
கோவா கடற்கரையில் வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின் காதல் கலாட்‌டாக்களும் மும்பையில் கிறிஸ்தவ பாதிரியார் நாசரின் மகனாக கிடாரிஸ்ட்டாக டேவிட் ‌எனும் ஜீவா பண்ணும் சேட்டைகளும், படும்வேதனைகளும் தான் "டேவிட்".
நுனி நாக்கு ஆங்கிலம், காரில் வந்து இறங்குகிற வசதி. நட்சத்திர பார் ஒன்றில் உட்கார வைத்து 'நாட்' சொல்லுகிற அளவுக்கு பைசா பலம். இவை மூன்றுக்கும் தகுதி இருந்தால் போதும்.
முழுக்கதையையும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்புகிற ஹீரோக்களுக்கு 'செய்வியா... செய்வியா...' என்று சட்டையை பிடித்து 'செய்வினை' வைக்கிறார்கள் இவர்கள்.
அஜீத்திற்கு ஒரு சக்ரி டோலட்டி என்றால், ஜீவா-விக்ரம் இருவருக்கும் ஒரு பிஜாய் நம்பியார்.
ஜீவாவுக்கும் விக்ரமுக்கும் ஒரே பெயர், டேவிட். இவர் கதை ஒரு பக்கம் ஒடுகிறது. அவர் கதை இன்னொரு பக்கம் ஓடுகிறது.
இரண்டு பேரையும் கிளைமாக்சில் சேர்ந்து உட்கார வைத்து ஒரு டயலாக்கை பேச விட்டால் அது எப்படி அய்யா புதுமையாகும்? இதுபோன்ற புதுமைகள் படம் முழுக்க விரவிக் கிடப்பதால் டேவிட், டேய் 'விட்' என்றும் அழைக்கப்படலாம்.
1999-ம் ஆண்டு மும்பையில் கித்தாரிஸ்டாக இருக்கும் ஜீவா, தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது வெளிநாடு டூர் சென்று தனது திறமையை நிரூபிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் சுற்றி வருகிறார்.
அவருடைய அன்பான அப்பாவாக நாசர். அவரது முழு நேர தொழில் ஏசுவின் நாமத்தை ஜபிப்பது. அப்படியே ஊரார்க்கும் போதித்து தன் மதத்தின் மீது நம்பிக்கையை விதைப்பது.
இவர் மற்றவர்களை மதம் மாற்றுகிறார் என்று குற்றம் சாட்டுகிற ஒரு இந்துத்வா கும்பல், இவரை போட்டு பேய் மிதி மிதிக்க, உதைத்தவர்களையும், உதைக்க ஏவியவர்களையும் தேடிப்போய்...., -மிதிக்கிறாரா ஜீவா? ம்க்கூம்... மிதிபட்டு அழுகிறார்.
>இன்னொரு பக்கம் விக்ரம். குவார்ட்டர் கோவிந்தன், பிராந்தி பீர்பால், விஸ்கி விஷ்ணுவாகி சதா நேரமும் குடியிலேயே மிதக்கிறார்.
நடு நடுவே போதை தெளியும்போதெல்லாம் அடுத்தவனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒருத்தியை கல்யாணம் கட்டிக் கொள்ள ரூட் போடுகிறார்.
விக்ரமின் வரலாற்றில் இப்படி ஒரு சொதப்பல் படம் வந்ததேயில்லை என்கிற அளவுக்கு மண்டை காய்ந்து போகிறது நமக்கு.
படம் தொடங்கி சிறிது நேரம் வரைக்கும், என் அக்கா அவன் கூட ஓடிட்டா. உன் பொண்டாட்டி யார் கூட ஓடுவா? தங்கச்சி ஓடிட்டாளா என்று வியத்தகு வசனங்கள் பேசி பெண்ணியத்தை பேய் இனமாக்கி ஊனப்படுத்துகிறார்கள்.
போதும் போதாமல் ஊனமுற்றவர்களையும் ஏகத்திற்கும் கிண்டலடிக்கிறார்கள்.
இஷா ஷெர்வானிதான் விக்ரமுக்கு ஜோடியாக போகிறார் என்று நம்ப வைக்கிறார் டைரக்டர்.
அட யாருக்காவது கட்டி வச்சு படத்தை முடிங்கப்பா என்று அந்த நம்பிக்கையையும் பொறுமையிழக்க வைக்கிறது இழுவை. நல்லவேளை. கோடையின் இதமாக இருக்கிறது இஷாவின் அழகு.
இப்படத்தில் தபுவும் இருக்கிறார். கடைசியில் தபுவை விக்ரம் கட்டிக் கொள்வதற்கு என்ன அர்த்தமோ? அவரது புருஷன் என்றொரு அட்டக்கத்தில், பிள்ளையை தூக்கிக் கொண்டு 'என்னமோ நடந்துட்டு போகட்டும்' என்ற முன்னாலே நடையை கட்டுகிறார்.
படத்தின் மிக அருமையான திருப்பம் இது. லாராதத்தாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அழகான அவரை ஒரு ஆன்ட்டியாக பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.
ஏழெட்டு பேர் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். அனிருத் இசையில் ஒரு பாடல் மட்டும் மனசை என்னவோ செய்கிறது.
இயக்குனர் பிஜாய் நம்பியார், இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது.
ஆனால், அதை நிறைவேற்ற சற்று தடுமாறியிருக்கிறார். இரண்டு வெவ்வேறான காலகட்டங்களில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களையும் கிளைமாக்ஸில் இணைத்து கதைக்கு ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்.
அந்த இடத்தில் மட்டும் இயக்குனர் பளிச்சிடுகிறார். மற்றபடி, திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்.
ஜீவாவின் கதாபாத்திரம் மும்பையில் வாழ்வதாக இருந்தாலும், அக்காவம், தம்பியும் சேர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகளை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.
படத்தோட பெரிய பலம் ரத்னவேலு, வினோத் ஆகியோரின் ஒளிப்பதிவுதான். இருவரும் இப்படத்திற்காக ரொம்பவும் உழைத்திருக்கிறார்கள்.
கோவாவின் அழகை, வேறொரு கோணத்தில் வித்தியாசமாக படம்பிடித்து காட்டியிருப்பது ரொம்பவும் அழகு.
நடிகர்: விக்ரம், ஜீவா
நடிகை : தபு, லாரா தத்தா
இயக்குனர் : பிஜாய் நம்பியார்
இசை : அனிருத், பிரசாந்த் பிள்ளை, ரெமோ பெர்னான்டஸ், மாடர்ன் மாபியா
ஓளிப்பதிவு : ரத்னவேலு, வினோத்


No comments: