இலங்கைச் செய்திகள்


மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை: அமெரிக்கா

"புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே" :போஸ்டர் ஒட்டிய மூவர் கைது

சந்தேக நபர்களை விசாரிக்க படையினர் பாலியல் வன்முறை பிரயோகிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மீண்டும் கிறீஸ் மனிதர்கள்..!

2014 இல் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது: கெஹலிய

'ஹிஜாப் அணிய வேண்டாம்" : மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள்

சர்வதேச சமூகத்துக்குள்ள "பதிலளிக்கும் கடப்பாடு
மீது தாக்குதல்"
  
மெல்சிறிபுர நகரில் பதற்றம்

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம்25/02/2013
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரதோற்சவத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களையும் காணொளியினையும் இங்கு காணலாம்.
படம்- ஜே.சுஜீவகுமார்


நன்றி வீரகேசரிநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை: அமெரிக்கா


26/02/2013  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன், இலங்கையில் இனப் பிரச்சினைக்கான உரிய தீர்வினை இதுவரையில் அந்நாட்டு அரசு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்களுக்கான துணைச் செயலாளர் எஸ்தர் பிரிம்மர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரின் 2வது நாள் உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இம்முறையும் இலங்கைக்கு எதிராக புதியதொரு பிரேரணையை அமெரிக்கா முன்வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் இதன்போது அவர் கூறினார்.
நன்றி வீரகேசரி'புலிகளிடமிருந்து கைப்பற்றிய பணம், தங்கம், கப்பல்கள் எங்கே" : போஸ்டர் ஒட்டிய மூவர் கைது


27/02/2013    விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகைகள் மற்றும் கப்பல்கள் எங்கே" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேர் மோதர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'ஊழலுக்கு எதிரான குரல்" என்ற அமைப்பின் பெயரில் போஸ்டர்கள் ஒட்டிக்கொண்டிருந்த நடராஜா, லக்ஷ்மன் மற்றும் எசேல ஆகியோரே இவ்வாறு மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.


நன்றி வீரகேசரிசந்தேக நபர்களை விசாரிக்க படையினர் பாலியல் வன்முறை பிரயோகிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பகம்27/02/2013 தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும் ஏனைய பாலியல் வன்முறைகளையும் பிரயோகித்து வந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch) நேற்றுவெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் போது சிறையில் பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள் நிகழ்ந்து வந்தன எனவும், அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினாலும் போலீஸ் படையினாலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கண்டறிந்தது.

இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியியல் வன்முறை’” என்ற 144 பக்க அறிக்கையானது இலங்கை முழுவதிலுமுள்ள உத்தியோகபூர்வமான மற்றும் இரகசியமான தடுப்பு முகாம்களில் 2006-2012 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான 75 பேர்களின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விரிவான விபரங்களை தருகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஆவணப்படுத்திய விடயங்களில், பல நாட்களாக அடிக்கடி பல நபர்களினாலும், இராணுவத்தினாலும், போலீஸ் படையினாலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழ் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டிருப்பதாகப் பதிவாகியிருக்கின்றது.

“இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்” என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ப்ராட் அடம்ஸ் (Brad Adams) கூறினார். “இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள்
 அல்ல, தற்பொழுதும் அந்த அட்டூழியச் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவதோடு, புலிகள் தரப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் ஆணையும் பெண்ணையும் இது கடும் ஆபத்தில் தள்ளிவிடுவதாக அமைகின்றது”.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான அனேகமானோர் இலங்கைக்கு வெளியால் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு, தமக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை மருத்துவ மற்றும் சட்டமுறை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் பாலியியல் வன்முறைக்கு அப்பால் துன்புறுத்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு இலங்கையில் வெளிப்படையான ஒரு ஆய்வை நடாத்தவோ அல்லது இன்னும் சிறையிலிருக்கின்ற மக்களை நேர்காணவோ முடியாமல் போனதால், இத்தகைய சம்பவங்கள் அநேகமாக அரசியல் நிகழ்வுகளாக, சிறை நிகழும் பாலியல் வல்லுறவுகளின் மிகச்சிறிய ஒரு பகுதியை மாத்திரமே பிரதிபலிப்பதாக அமைகின்றன.

ஒரு தனியாள் இனம் தெரியாத நபர்களினால் வீட்டிலிருந்து கடத்தப்பட்டு, ஒரு தடுப்பு முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, புலிகள் செயற்பாடுகள் பற்றி தகாத முறையில் விசாரிக்கப்படுதல் என்கின்ற விதத்திலேயே அதிகமான சம்பவங்கள் தொடர்ந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. வெளிநாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த 23 வயதுடைய ஒரு நபர், தான் எந்த விதமான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாத நிலையில் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தில் தான் கையொப்பமிடும் வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். 32 வயதுடைய ஒரு பெண், சிவில் உடையில் வந்த இரண்டு ஆண்களினால் தான் கைதுசெய்யப்பட்டு, தனது ஆடைகள் களையப்பட்ட நிலையில் நிர்வானமாக தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறினார். “அனைத்தையும் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு அந்த நபர்கள் என்னிடம் கூறினார்கள்” என அந்தப் பெண் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் முறையிட்டார். “அவர்கள் என்னைக் கொலைசெய்து விடுவார்கள் என்று நினைத்ததால் நான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மறுத்தேன். நான் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டேன். இரண்டாவது நாள் ஒரு நபர் எனது அறைக்கு வந்து என்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். ஆகக்குறைந்தது மூன்று நாட்களாக நான் பலராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். எத்தனை தடவைகள் என்பது எனக்கு நினைவில்லை”.

பாலியியல் துஷ்பிரயோகமானது, சந்தேகிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் பரந்தளவில் பயன்படும் முக்கிய ஒரு அங்கமாக விளங்கியுள்ளது என்பது எதைச் சுட்டிக்காட்டுகின்றது எனில், ஆயுதப் போராட்டத்தின் போதும் அதே நேரம் எப்பொழுதும் ஆயுதப் படைகளினால் கைதுசெய்யப்படும் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கும் ஏனைய பாலியியல் வன்முறைக்கும் பலியாகுகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. புலிகள் செயற்பாடுகளில் ஈடுபாடு,மற்றும் துணைவர்களும் உறவினர்களும் அடங்கலாக ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘ஒப்புதல் வாக்குமூலங்களை’ பெறுவதற்கும் அதே நேரம் புலிகள் தரப்புடன் தொடர்புவைப்பதை அதைரியப்படுத்தும் வகையில் பரந்தளவில் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தைத் திணிப்பதற்கும் என்றே இந்தச் சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகின்றது.

தாம் அடிக்கப்பட்டதாகவும், தனது கைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும், பகுதியளவில் மூச்சுத்திணற வைக்கப்பட்டதாகவும், எரியும் சிகரெட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் விவரித்தனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் கதைத்தவர்களில் எவருமே தடுத்துவைக்கப்பட்ட நேரத்தில் சட்ட ஆலோசனையையோ, குடும்ப அங்கத்தவர்களையோ அல்லது மருத்துவர்களையோ நாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. துஷ்பிரயோகம் முற்றுப்பெறும் என எண்ணி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டாலும் பாலியல் வல்லுறவு அடங்கலாக சித்திரவதைகள் அடிக்கடி தொடர்ந்ததாகவே அநேகமானோர் கூறினர். நேர்காணப்பட்ட தனி நபர்கள் எவரும் முறையாக விடுவிக்கப்படவில்லை, ஆனால் மாறாக உறவினர் ஒருவர் உயர் அதிகாரிகளுக்கு இலஞ்சத்தை வழங்கிய பின்னர் ‘தப்பியோடுவதற்கு’ அனுமதிக்கப்பட்டனர்.

“இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்னால் மடக்கிப்பிடித்து [அதே வேளையில்] ஒரு மூன்றாவது அதிகாரி எனது ஆண்குறியைப் பிடித்து அதனுள் ஒரு உலோகக் கம்பியைத் திணித்தார்” என 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்கப் படைகளிடம் சரணடைந்த ஒருவர் கூறினார். “அவர்கள் எனது ஆண்குறியினுள் சிறிய உலோகக் குண்டுமணிகளைத் திணித்தனர். நாட்டை விட்டுத் தப்பி வந்த பின்னர் இந்தக் குண்டுமணிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது”. ஒரு மருத்துவ அறிக்கை இவரின் வாக்குமூலத்தை உறுதிசெய்கின்றது.

அவர்கள் செய்த குற்றத்தை தாம் வெளிப்படுத்தினால் பொதுவாக குற்றம் புரிந்தவர்களிடமிருந்து பதிலடி கிடைக்கும் என்றும் சமூகத்தில் இகழப்படுவோம் என்னும் பய உணர்வுமே தம்மீது நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகம் பற்றி தங்களை அமைதியாகவிருக்கச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கதைத்த பலவந்த பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் கூறினார்கள். பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி பயனுள்ள விதத்தில் அறிக்கையிடுவதையும் விசாரணை செய்வதையும் தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட நிறுவனசார் தடைகளும் பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றி அறிக்கையிடும் தயக்கத்திற்கு மூலகாரணமாக அமைந்தன.

“பாலியல் வல்லுறவு பலியானவர்களுக்கான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளையும் அரசாங்கம் முடக்கியது” என அடம்ஸ் கூறினார். “வடக்கில் அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகித் தப்பிப்பிழைத்தவர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்ற சேவைகளையும் இராணுவம் சூட்சுமமான முறையில் தடைசெய்துள்ளது”.

போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் அல்லது போர் முடிவுக்குப் பின்னர் சிறையில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள் தொடர்பில் ஆயுதப் படைகளில் எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதுடன் குற்றம் செய்தவர்கள் குற்றத்திற்கு தண்டனையின்றி சுதந்திரமாகவிருக்கின்றனர் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

தாங்கள் அரச பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என்பதை மறைப்பதற்கு இராணுவமும் போலீஸும் மிகக் குறைந்தளவு முயற்சியையே மேற்கொண்டனர் என நேர்காணப்பட்டவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்கள். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (C.I.D.)பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (T.I.D.) போன்ற விசேட பிரிவுகள் உள்ளிட்ட இராணுவத்தினர், இராணுவத் துப்பறியும் பிரிவினர் மற்றும் போலீஸ் முதலிய தரப்புகள் இவர்களில் அடங்குகின்றனர். இந்த அரச திணைக்களங்களின் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்தும் தகாத முறையில் விசாரணைகளை நடாத்தினர் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அறிக்கையிட்டனர். இவர்கள் துஷ்பிரயோகம் நிகழ்ந்த குறித்த முகாம்களையும் தடுப்பு ஸ்தலங்களையும் அடையாளம் காட்டினார்கள்.

பாலியல் வன்முறையைப் பிரயோகித்தல் என்பது ஒரு சாதாரண கீழ்மட்டத்து நிகழ்வாகவோ அல்லது அயோக்கியத்தனமான பாதுகாப்புப் படையினர் சிலரின் செயல்களாகவோ காணப்படவில்லை, ஆனால் மாறாக உயர் மட்ட அதிகாரிகளினால் அறிந்த அல்லது அறிந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டியதான பரந்தளவில் நிகழ்ந்த வழக்கமான ஒரு செயலாக காணப்பட்டுள்ளதையே இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் இலங்கையின் வட பிராந்திய யுத்தகளப் பகுதிகளில் மாத்திரமன்றி தலைநகரமான கொழும்பிலுள்ள இராணுவ முகாம்களிலும், போலீஸ் நிலையங்களிலும் அதே நேரம் யுத்த பிரதேசங்களுக்கு தூரத்திலுள்ள தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் ஏனைய இடங்களிலும் நிகழ்ந்தன. கொழும்பிலுள்ள C.I.D தலைமை அலுவலகத்தின் கெடுதிக்குப் பெயர்போன நான்காவது மாடியும் T.I.Dஆறாவது மாடியும் இவற்றில் அடங்கியிருந்தன.

ஆயுத மோதல்களின் ஒரு பாகமாகப் புரியப்பட்ட பாலியல் வல்லுறவு செயல்கள் மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் என்பன போர் குற்றங்களாகும். அத்தகைய வன்முறைகளைத் தடுப்பது மாத்திரமன்றி, துஷ்பிரயோகம் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்களை விசாரித்து அந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு கடப்பாடாகும். அத்தகைய துஷ்பிரயோகங்களை அறிந்திருந்த அல்லது அறிந்திருக்க வேண்டிய அதிகாரிகள்கூட நடவடிக்கையை எடுக்கத் தவறியிருந்தனர். இதனால், கட்டளையிடும் பொறுப்பு விடயம் என்ற ரீதியில் அவர்களும் குற்றம் புரிந்தவர்கள் ஆகுகின்றார்கள்.

யுத்தகாலத் துஷ்பிரயோகங்களுக்கான நியாயத்தையும் பொறுப்புக்கூறும் தன்மையையும் முன்வைப்பதற்கான 2012 மார்ச் மாதத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட தனது பொறுப்புக்களை இலங்கை அரசாங்கம் போதியளவில் பின்பற்றி நிறைவேற்றியதா என்பது பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை பெப்ரவரி மாதத்தில் விசாரணை செய்யும். ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை இந்த சபை பணிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

“பாதுகாப்புப் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் ‘பொய்’ அல்லது ‘புலிகள் சார்பான பிரச்சாரம்’ என எண்ணி அரசாங்கம் தனது படையினரை விடுவித்துள்ளமையே அரசாங்கத்தின் பதிலாகவிருக்கின்றது” என அடம்ஸ் கூறினார். “இந்தக் கொடூரமான குற்றங்களைப் பற்றி அரசாங்கத் தரப்பில் எவர்கள் அறிந்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கின்றமையானது ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்பதற்கு மேலும் சான்றாக அமைகின்றது”.

“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்”: இல் இருந்து பெறப்பட்டவை

தலைப்பெழுத்துக்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகவும் நபரின் உண்மையான பெயருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாததாகவும் இடப்பட்டுள்ளன.

ஜே எச் (JH) என்பவரின் சம்பவம்

ஜே எச் (JH) என்பவர் 23 வயதுடைய ஒரு தமிழர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நேரம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக கொழும்புக்குத் திரும்பினார். ஒரு மாதம் கழிந்த பின்னர், வேலை விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு வெள்ளை வேனில் வந்த பலர் அதிலிருந்து குதித்தார்கள். ஒரு விசாரணைக்கு தான் தேவைப்படுவதாகக் கூறி, அவர்கள் தனது கண்களைக் கட்டி, ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் பயணித்து, தெரியாத ஒரு இடத்திற்கு தன்னை எடுத்துச்சென்றதாக அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட [போது] நான் அங்கு ஏனைய நான்கு நபர்கள் இருந்த ஒரு அறையைக் கண்டேன். நான் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு புலிகள் தரப்புடன் எனக்கிருக்கும் தொடர்புகள் பற்றியும் அண்மையில் வெளிநாட்டிற்குசென்ற காரணம் பற்றியும் விசாரிக்கப்பட்டேன். அவர்கள் எனது ஆடைகளை உரிந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் மின்சாரக் கம்பிகளினால் அடிக்கப்பட்டு, எரியும் சிகரட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டு, பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு பொலித்தின் உறையைக் கொண்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டேன். பின்னர் அந்த இரவு, நான் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டேன். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். முதலாவது இரவு, ஒருவர் தனியாக வந்து என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் இரவுகளில், இரண்டு பேர் எனது அறைக்கு வந்தார்கள். அவர்கள் என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்திவிட்டு அவர்களுடன் வாய்வழிப் பாலியல் உறவுக்கும் என்னை வற்புறுத்தினார்கள். இந்தப் பாலியல் வல்லுறவுகளின் பின்னர் புலிகள் தரப்புடன் எனக்கு தொடர்புகளிருப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலத்தில் நான் கையொப்பமிட்டேன்.

ரீ ஜே (TJ ) என்பவரின் சம்பவம்

ரீ ஜே (TJ ) என்பவர் 19 வயதுடைய ஒருவர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் தனது கற்கைகளைப் பூர்த்திசெய்து விட்டு இலங்கைக்குத் திரும்பியவர். 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை நேரத்தில், ரீ ஜே (TJ ) வவுனியாவில் (Vavuniya) ஒரு நண்பரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிய நேரத்தில் அவருக்கு அருகில் ஒரு வெள்ளை வேனை நிறுத்தி சிவில் உடைகளை அணிந்திருந்த ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு நபர்கள் அதிலிருந்து குதித்தார்கள். அவர்கள் ரீ ஜே (TJ ) ஐ பலவந்தமாக இழுத்து வேனினுள் தள்ளி, அவரின் கண்களைக் கட்டி, தெரியாத ஒரு இடத்திற்கு அவரை கொண்டுசென்றார்கள் என அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட போது நான் ஒரு அறையில் இருப்பதைக் கண்டேன். அங்கு ஐந்து பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இராணுவ சீருடையில் காணப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் புலிகள் தரப்புடன் எனக்குள்ள அலுவல் பற்றி அவர்கள் என்னிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். வெளிநாட்டில் புலிகள் தரப்புடன் எனக்கிருக்கின்ற தொடர்புகள் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் பதிலளிக்கவில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். முதலில் அறையப்பட்டும் குத்தப்பட்டும் நான் தாக்கப்பட்டேன். அப்போது அவர்கள் என்னைக் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். எனக்கு தடிகளால் அடிக்கப்பட்டு, எரியும் சிக்கரெட்டுக்களால் சூடுவைக்கப்பட்டதுடன் எனது தலை ஒரு நீர் பீப்பாயினுள் அமிழ்த்தப்பட்டது. கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தில் உடைகள் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டேன்.

அடிகளும் துன்புறுத்தல்களும் அடுத்த நாளும் தொடர்ந்தன. காலையில் எனக்கு கொஞ்சம் தண்ணீர் மாத்திரம் கொடுக்கப்பட்டது. அடுத்த இரவு, எனக்கு உடைகள் கொடுக்கப்பட்டு ஒரு சிறிய இருள் நிறைந்த அறையில் அடைக்கப்பட்டேன். அந்த இரவில் எனது அறைக்குள் ஒரு நபர் நுழைந்தார். அறை இருளாகவிருந்ததால், அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் எனது தலையைப் பிடித்து சுவரில் பலமாக அடித்து, எனது முகத்தை சுவருக்கு எதிரே தள்ளி என்னைப் பலவந்தமாகக் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி சித்திரவதைப்படுத்தினார்.

ஜீ டி (GD) என்பவரின் சம்பவம்

ஜீ டி (GD) என்பவர் 31 வயதுடைய ஒரு தமிழ் பெண். இவர் கொழும்பின் ஒரு சுற்றுப்புறத்திலுள்ள தனது வீட்டிலிருந்த போது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிவில் உடைகளில் நான்கு பேர் வந்திறங்கினார்கள். அவர்கள் C.I.D.அதிகாரிகள் என அவர்களை அறிமுகப்படுத்தி தனது வீட்டிலிருந்த குடும்ப அங்கத்தவர்கள் அனைவரினதும் அடையாள அட்டைகளை சோதனையிட வேண்டும் என எங்களிடம் கேட்டார்கள் என ஜீ டி (GD) என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார். வெளிநாட்டிலிருந்த தனது கணவனின் அடையாள அட்டையைப் பறித்துவிட்டு அவர்கள் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாக அவர் கூறினார்:

கொழும்பிலுள்ள C.I.D. அலுவலகத்தின் நான்காவது மாடிக்கு நான் கொண்டுசெல்லப்பட்டு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். எந்தவிதமான உணவோ அல்லது தண்ணீரோ எனக்குக் கொடுக்கப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்து ஆயுதம் தாங்கிய ஒரு அதிகாரி அடங்கலாக அதிகாரிகள் என்னைப் புகைப்படம் எடுத்துவிட்டு, எனது விரல் அடையாளங்களையும் பெற்றுக்கொண்டு, ஒரு வெறும் தாளில் கையொப்பமிடுமாறு செய்தார்கள். எனது கணவரின் விபரங்கள் எல்லாம் அவர்களிடம் இருப்பதாகக் கூறி அவர் இருக்கின்ற இடத்தைச் சொல்லுமாறு என்னிடம் கேட்டவண்ணமிருந்தார்கள். எனது கணவன் வெளிநாட்டில் இருப்பதாக நான் அவர்களிடம் கூறிய போது, அவர் புலிகள் தரப்பின் ஆதரவாளர் எனத் தொடர்ந்தும் அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். பல பொருள்களைக் கொண்டு நான் அடிக்கப்பட்டேன். விசாரிக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஒரு எரியும் சிக்கரெட்டினால் சூடுவைக்கப்பட்டது. திரும்பத்திரும்ப நான் கன்னத்தில் அறையப்பட்டு, மணல் நிரப்பப்பட்ட ஒரு குழாயினால் அடிக்கப்பட்டேன். அடித்த போதெல்லாம் அவர்கள் எனது கணவரின் விபரங்களைக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்கள். ஒரு இரவு நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். சிவில் உடைகளில் எனது அறைக்கு இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இருவரும் எனது உடைகளைக் கிழித்து என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கதைத்தார்கள், அதனால் எனக்கு எதுவும் புரியவில்லை. இருளாக இருந்ததால் அவர்களின் முகங்களை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

டி எஸ் (DS) என்பவரின் சம்பவம்

டி எஸ் (DS) என்பவரின் தந்தைக்கு யாழ்ப்பாணத்தில் போட்டோ பிரதியெடுக்கும் (Photocopy) ஒரு கடை சொந்தமாகவிருந்தது. இவர் பிரச்சாரத் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை விநியோகிப்பதன் மூலம் புலிகள் தரப்புக்கு உதவினார். 2005 ஆம் ஆண்டில், DS என்பவர் 13 வயதாகவிருந்த போது புலிகள் தரப்பினால் பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டு 10 நாட்களாக அவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. அவர் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய பின்னர், புலிகள் தரப்பின் கலாச்சார விழாக்களில் பங்குபற்றியும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் புலிகள் தரப்பினருக்காக உழைத்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இவர் 17 வயதாகவிருந்த போது, பாடசாலை விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸும் இராணுவ அதிகாரிகளும் இணைந்த ஒரு குழுவினர் இவரைக் கைதுசெய்தனர். இவரின் கண்கள் கட்டப்பட்டு தெரியாத ஒரு தடுப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார் என DS என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

புலிகள் தரப்புடன் எனக்கிருக்கின்ற செயற்பாடுகள் அனைத்தையும் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். அந்தத் தரப்புக்கான எனது உழைப்புப் பற்றி எல்லா விடயங்களையும் அவர்களிடம் கூறினால், தன்னை வெளியில்செல்ல அனுமதிப்பதாக அவர்கள் கூறினார்கள். நான் எதையும் ஏற்க மறுத்தேன். அப்போது அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் சப்பாத்துக்களினால் மிதிக்கப்பட்டுக் குத்தப்பட்டேன். அப்போது எனது உடைகளை முழுமையாகக் கழற்றுமாறு அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டு எரியும் சிக்கரெட்டுக்களினால் எனக்கு சூடுவைக்கப்பட்டது. நான் மணல் நிரப்பப்பட்ட குழாய்களையும் முள்ளுக்கம்பிகளைக் கொண்டு தாக்கப்பட்டேன். அதிகாரிகள் எனது பாதங்களை தனியாக வைத்து மிதித்தும் பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு ப்ளாஸ்டிக் பையை எனது தலையில் பலமாக இட்டு என்னை மூச்சுத்திணறச் செய்யவும் முனைந்தனர்.

ஒரு அதிகாரி எனது முன்னிலையில் பாலியல் செயல்களைச் செய்தார். அப்போது என்னை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். அங்கு எந்தவித மலசலகூடமும் இருக்கவில்லை. ஒரு ப்ளாஸ்டிக் பையை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. என்னை விசாரித்த அதிகாரிகள் என்னை நித்திரைசெய்ய விடவில்லை. முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு அவர்கள் எனக்கு எந்தவிதமான உணவையும் தரவில்லை. அவர்கள் எனது கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு என்னைப் புகைப்படமெடுத்தார்கள். நான் இறுதியாக சிங்கள மொழியிலிருந்த ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமிட்டு அவர்கள் கூறிய எல்லவாற்றையும் ஒப்புக்கொண்டேன்.


நன்றி வீரகேசரி


மீண்டும் கிறீஸ் மனிதர்கள்..!
கிறீஸ் மனிதர்கள்!

இலங்கையை சில மாதங்களுக்கு முன்னர் பீதியில் உறையவைத்திருந்த மனிதப் பயங்கரம்.

இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்வம் ஒன்றையடுத்து அங்கு மர்ம நபர்கள் நடமாடுவதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தன. அதனையடுத்து அதே நிலை இலங்கையில் பல்வேறு பாகங்களுக்கும் பரவத் தொடங்கியது.

கிறீஸ் மனிதர்கள் பற்றி அறியாதவர்கள் இல்லை எனலாம்.

இது இவ்வாறிருக்க பேஸ்புக் வழியாக கிறீஸ் மனிதர்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கியிருப்பதுதான் புதுக் கதை.
ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்! சமூக வலைத்தளங்களில் இளையோரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது பேஸ்புக். பெரும்பாலான இளைஞர்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக இது மாறிவிட்டது. சுருக்கமாகச் சொல்வதானால் பேஸ்புக் இல்லை என்றால் அன்றைய நாளில் சுவாரஷ்யமே இல்லை என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சில விஷமிகள் ‘கிறீஸ் யகா’ (கிறீஸ் மனிதர்கள்) என்ற பெயரில் தமது விளையாட்டுக்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.

காமம் கலந்த வார்த்தைகளை மற்றொருவரின் தனிப்பட்ட கணக்குக்கு அனுப்புதல், நிர்வாண தோற்றமுடையோருடைய தோற்றங்களை உண்மை முகங்கொண்டோருக்குப் பொருத்தி புகைப்படமாக வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முறையற்ற செயற்பாடுகளில் இந்த கிறீஸ் மனிதர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

“எனக்கு இப்படிச் செய்வார்கள் என நான் நினைக்கவேயில்லை. யார் என்று தெரிந்தால் கொலை செய்யக் கூடத் தயங்கமாட்டேன்” எனக் கூறுகிறாள் கொழும்பில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் கற்கும் ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இந்தப் பெண்ணுக்கு கிறீஸ் மனிதன் கொடுத்த தொந்தரவை விரிவாக எழுதிவிட முடியாது.

ஆறு மாத காலங்களுக்கு முன்பு கிறீஸ் யகா என்ற பெயரில் நட்பு விண்ணப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.

தனது நண்பர் கூட்டங்களில் யாராவதுதான் இந்தப் பெயரில் விளையாட்டுக்காக இப்படிச் செய்திருக்கிறார்கள் என் நினைத்து அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறாள் ஆஷா.

யார் நீங்கள்? எங்கு இருக்கிறீர்கள்? விபரம் சொல்லுங்கள்? என்று ஆஷா கேள்விகள் கேட்க, சின்னச் சின்ன குறும்புத்தனமான பதில்களுடன் உறவு தொடர்ந்திருக்கிறது.

தனிப்பட்ட மெசேஜ்களைத் தவிர வேறு எந்தவிதமான நடவடிக்கைகளையும் பேஸ்புக்கில் இவர்கள் மேற்கொண்டதில்லை.
இப்படியிருக்கையில் இம்மாத முதல் வாரத்தில் ஒருநாள் இரவுதான் பிரச்சினைக்குரிய அந்த உரையாடல் ஆரம்பமானது.

‘ஹாய் ஆஷா உங்களுக்கு செக்ஸில் ஆர்வம் இல்லையா?’இது அந்த மர்ம கிறீஸ் மனிதரிடமிருந்து கிடைத்த முதல் மெசேஜ்.
இதற்குப் பதில் அனுப்ப விரும்பாத ஆஷா தொடர்பை துண்டித்துக்கொள்வதாகக் தெரிவித்துள்ளார்.

‘கொஞ்சம் பொறு, படம் ஒன்றை அனுப்புகிறேன். பார்த்துவிட்டு முடிவை சொல்’- என அந்த நபரிடமிருந்து மீண்டும் மெசேஜ் வந்த மறு நிமிடம் பார்க்கவே சகிக்க முடியாத அந்தப் படம் ஆஷாவுக்குக் கிடைத்தது.

ஆம்! பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில சஞ்சிகையொன்றுக்கு நடிகையொருவர் கொடுத்த நிர்வாண போஸ் ஒன்றின் தலைப் பகுதியை மாற்றி ஆஷாவின் படம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

கொஞ்சம் கூட எண்ணியிராத கனத்தில் வானமே இடிந்துவிழுந்தாற்போல இருந்தது ஆஷாவுக்கு!

இந்தப் பிரச்சினை ஆஷாவுக்கு முதல் தடவையாக ஏற்பட்ட போதிலும் இளவயதுப் பெண்கள் பலர் கிறீஸ் மனிதர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஷாவைப் போன்று துணிந்து முறைப்பாடு செய்ய முன்வராதவர்கள் பலர் இருக்கிறார்கள்.
கிறீஸ் மனிதன் என்ற பெயரில் பல்வேறு பேஸ்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயரில் உருவாக்கப்பட்ட கணக்குகள் நிச்சயமாக நல்ல நோக்கத்துக்காக இல்லை என்பதை அவ்வந்த கணக்குகளுக்குச் சொந்தமான படங்களே வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.

நாம் மேற்சொன்னது ஒரு சம்பவம்தான். இன்னும் பல சம்பவங்கள் இருக்கின்றன.

அநேகமானோருக்கு கிறீஸ் மனிதர்களிடமிருந்து கடுமையான தொனியில் எச்சரிக்கை மடல்கள் கிடைத்திருக்கின்றன.

இரவில் நடமாட வேண்டாம், நான் பின்தொடர்வேன், மரணம் வெகுதூரத்தில் இல்லை, நான் மீண்டும் பிறப்பெடுத்துள்ளேன் போன்ற வசனங்கள் அடங்கியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கணனி அவசர உதவி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா வீரகேசரி இணையத்தளத்துக்கு தகவல் தருகையில்,
கிறீஸ் மனிதன் என்ற பிரச்சினை நம் நாட்டில் இருந்த காலகட்டங்களில் இவ்வாறான கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு இணையவழிகளில் பெரும் பிரச்சினையாய் இருந்தது. எனினும் நாம் அவ்வாறான பல கணக்குகளை நீக்கினோம். இப்போது மீண்டும் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பாதிக்கப்படும் பலர் முறைப்பாடு செய்யத் தயங்குகிறார்கள் என்பதுதான்.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை நாம் வெளியிடுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் முறையிட விரும்புவதில்லை. அதேபோன்று வெளிநபர்களுக்கும் சொல்வற்கு கூச்சப்படுகிறார்கள்.

இதனால் இவ்வாறான விஷமிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துச் செல்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு அறியத்தந்தால் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உரிய ஆலோசனைகள் வழங்கவும் தயாராக இருக்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் கிறீஸ் மனிதர்கள் குறித்து நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் இவ்வாறு முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து அதன் நிர்வாகத்துக்கு அறிவிப்பதன் ஊடாக பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.

ஆனால் அவ்வாறு அறிவிப்பதில் தமது விபரங்கள் வெளியிடப்படுமோ எனப் பலர் அஞ்சுகின்றனர். இந்த அச்ச உணர்வைத் தவிர்த்து குற்றச் செயல்கள் புரிவோர் தொடர்பாக உடனடியாக அறிவிப்பதே சாலச் சிறந்ததாகும்.

-ஆர்.நிர்ஷன்

நன்றி வீரகேசரி
2014 இல் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது: கெஹலிய


28/02/2013             2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படமாட்டாதென என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை 2013ஆம் ஆண்டில் மத்திய, வட மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்            நன்றி வீரகேசரி
.
'ஹிஜாப் அணிய வேண்டாம்" : மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மீது தாக்குதல்


28/02/2013        மாத்தறை திக்வல்லை பகுதியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் மாணவிகள் மாத்தறையில் வைத்து இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

திக்வல்லையில் இருந்து மாத்தறைக்கு மாலைவகுப்புக்கு மூன்று முஸ்லிம் மாணவிகளும் தனியாக சென்றுள்ளனர். வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் புகார் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

பயத்தினால் பொலிஸாருக்கு அறியப்படுத்தாது வீடு திரும்பியுள்ளனர். பிறகு பெற்றோருடன் வந்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பொலிஸார் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வினவிய போது அப்படி எதுவும் நடக்கவில்லையென சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தோர் கூறியுள்ளனர்
.
நன்றி வீரகேசரியுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி, யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 1/2  இலட்சம் மக்கள் தமது வீடுகள், சொத்துகள், உடைமைகளை இழந்து இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் ஜீவனோபாயத்திற்கான  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் இருக்கும் நிலைமை தொடரும் அதேவேளை, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு வவுனியா மாவட்டத்தில் காணிகளை வழங்குவதற்கான பதிவு நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டுள்ளதாகவும்  அதனைத் தடுத்து நிறுத்துமாறும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.

சிவசக்தி ஆனந்தன் அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கையை விடுத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. காணி வழங்கல் அதிகாரம் இராணுவத்திற்கு இல்லாத நிலையில் வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதால் சிவில் அதிகாரிகள் தமது கடமையைச் செய்யாது ஒதுங்கியிருப்பதாகவும் இந்நிலையில் வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று அரசாங்கம் கூறுவது வெறும் கேலிக்கூத்து என்பதும் மக்களினால்  தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட இந்தப் பிரதிநிதியின் குற்றச்சாட்டு.

அதேசமயம், ஜெனீவாவில் தற்போது இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் நேற்று முன்தினம் உரையாற்றிய இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய தென்னிலங்கையைச் சேர்ந்த  மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான அமைச்சர் மகிந்த சமரசிங்க சிவில்  நிர்வாகத்தில் இராணுவம் ஈடுபடுவதற்கான எந்த வழிமுறையும் இல்லையென்று நான் மீள அழுத்திக் கூறுகிறேன்.

சிவில்  அதிகாரிகளே நிர்வாகத்தில் முழுப்பொறுப்பையும் கொண்டுள்ளனர்' என்று உறுதிபட உலக அரங்கில் கூறியிருக்கிறார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் காணிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண காணி ஆணைக்குழுவை அமைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருப்பதுடன் தேசிய பாதுகாப்பு நலன்களின் அடிப்படையிலேயே இராணுவ பிரசன்னத்தை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இப்போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்று எவருமே இல்லையென்பதும் முகாம்களும் இல்லை என்பதும் அமைச்சர் சர்வதேசத்திற்கு வழங்கியிருக்கும் பிரதிமை.
ஆனால், வடக்கில் மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம், மடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப் பிலவு, முள்ளிவாய்க்கால், திருமுறிகண்டி, யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு, திருகோணலை மாவட்டத்தில் சம்பூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த காணிகளில் மீளக்குடியேற முடியாமல் அகதி முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் துன்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பது அமைச்சர் ஜெனீவாவில் உரையாற்றிய தினத்தில் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கும் செய்தியாக அமைகிறது.

வட, கிழக்கின் இன்றைய  நிலைவரம் தொடர்பாக இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் முற்றிலும் எதிரெதிரான பிரதிமைகளை முன்வைத்திருக்கும் அதேதினத்தில் இந்தியப் பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் இலங்கை தொடர்பான கவனயீர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா,  தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருப்பது சகலருக்கும் தெரிந்த உண்மையென்றும் இராணுவமயமாக்கம் அதிகரித்திருப்பதும் சிங்களமயமாக்கமும் இன்றைய யதார்த்தம்  எனவும் தமிழ்மக்களின் சொத்துக்கள், காணிகள் முடக்கப்பட்டிருப்பதாகவும்  அடையாளங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் கவலையையும் விசனத்தையும் தெரிவித்திருப்பதையும் காணமுடிந்தது.

மக்களின், மக்களினால், மக்களுக்கான அரசாங்கம் என்பது ஜனநாயகத்திற்கான வரைவிலக்கணம், ஆனால், ஜனநாயகங்களின் வரலாற்றை நாம் ஆராய்ந்தால், பல்லின, பல்மத, பல்கலாசார, சமூகங்களைக்கொண்ட ஜனநாயக நாடுகள் என்று கூறப்படுபவற்றில் "பெரும்பான்மையினரின், பெரும்பான்மையினரால், பெரும்பான்மையினருக்கான அரசாங்கமே' என்று வரைவிலக்கணத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டியிருப்பதே யதார்த்தம். மனித உரிமைகள், சிவில் சுதந்திரங்கள், அரசியலமைப்பு ரீதியான ஆட்சி நிர்வாகம் என்பன மீறப்பட முடியாதவை என்பது சர்வதேச ரீதியான கோட்பாட்டு விதிகள். ஆனால்,

ஜனநாயக நாடுகள் என்று உரிமை கோரும் தேசங்கள் பலவற்றில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான நிறுவனமயப்படுத்தப்பட்ட பாரபட்சமே தொடர்வதை காண முடிகிறது. பெரும்பான்மையினரின் மேலாதிக்கத்திலிருந்து சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு "வெளிமட்டப் பாதுகாப்பு' தேவையானது என்று கனடிய அரசியல் தத்துவஞானியான வில்சிம்லிக்கா  குறிப்பிட்டிருந்தார். இலங்கை சிறுபான்மைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்துக்கு பாரிய கடப்பாடு உள்ளது.  எந்தெந்தத் தரப்பினர் எதனைக் கூறுகிறார்களோ அதனை ஆராய்ந்து புரிந்துணர்வுடன் உண்மையைக் கண்டறிந்து நடுநிலையுடன் செயற்படுவதே சர்வதேச சமூகத்துக்கு இப்போதுள்ள பதிலளிக்கும் கடப்பாடு.  நன்றி தினக்குரல் மெல்சிறிபுர நகரில் பதற்றம்

குருநாகல் மெல்சிறிபுர பள்ளியத்த விஹாரையில்  முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டமொன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மெல்சிறிபுர நகரில்   சனிக்கிழமை முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று கூட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதில் சுமார் 500 பேர் கலந்துகொள்ளவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

மெல்சிறிபுர நகரில் இது குறித்து விளம்பரப்  பதாகையொன்றும் கட்டப்பட்டுள்ளதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் தலையில் போட்டுள்ள தொப்பியை பலவந்தமாக கழட்டுகின்ற வகையில் சிறு சிறு சம்பவங்கள் சமீபத்தில் நடைபெற்றுள்ளன. இந்த நகரில் சிறு தொகையான முஸ்லிம் கடைகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை வாராந்த சந்தை நடைபெறும் போது நகருக்கு பெருந்தொகையான முஸ்லிம்கள் வருவது வழக்கம்.

இதனால் இந்தப் பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை காணப்படுகின்றது. இதேவேளை,  ஞாயிற்றுக்கிழமையும் குருநாகல் எத்துக்கல்புர விஹாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக குருநாகல் மாவட்ட ஸ்ரீ .சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களை விட குருநாகல் மாவட்டத்திலேயே முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றுவருவதையும் எத்துக்கல்புரவ விஹாரை எல்லைக்குள் பகிரங்கமாக இரு பதாகைகள் கட்டப்பட்டுள்ளதையும்   ஞாயிற்றுக்கிழமை குருநாகல்,

மெல்சிறிபுர  பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கூட்டம் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும்  குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு.க. அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.
நன்றி தினக்குரல்

No comments: