ஞானா: அப்பா….அப்பா….செல்வத்தை சீதேவி எண்டும், வறுமையை மூதேவி எண்டும் ஏன் சொல்லிறவை அப்பா?
அப்பா: இது தெரியாதே ஞானா. செல்வமும் வறுமையும் மனிதவாழ்க்கையிலை மாறிமாறி வரும். செல்வம் வந்து சேர்ந்த காலத்திலை மகிழ்ச்சியாய,; சுகசீவியமாய், வாழ்க்கை கழியும். வறுமை வந்தால் மனக்கிலேசமும், துன்பமும் உண்டாகும். இந்த இரண்டு சூழ்நிலையையும் கற்பனையாய் சீதேவி, மூதேவி எண்டு இரண்டு பெண்களாய் வர்ணனை செய்திருக்கினம்.
ஞானா: உந்தக் கற்பனைக்கும் பெண்தான் கிடைச்சாள். இல்லையா அப்பா?
அப்பா: பிள்ளை ஞானா, உதொண்டும் பெண்களைக் கொச்சைப் படுத்த ஏற்பட்ட மரபல்ல எண்டுதான் நான் நினைக்கிறன். நீ கேள்விப்பட இல்லையே “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பொண்ணாலே” எண்ட பழமொழியை.
ஞானா: கேள்விப்பட்டிருக்கிறன் அப்பா. அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?
அப்பா: இப்ப பார் ஞானா, செல்வம் வந்து வாழ்க்கைக்கு ஆக்கம் தரும். வறுமை வந்து அழிவைத் தரும். அதை நினைச்சு வறுமையையும் செல்வத்தையும் இரண்டு பெண்களாய் வாணிச்சிருக்கலாம் தானே.
சுந்தரி: (வந்து) உதார் உந்த இரண்டு பெண்டுகள் அப்பா?
அப்பா: இனம் இனத்தைக் காக்குமாம், வேலி பயிரைக் காக்குமாம். வாரும் சுந்தரி பெம்பிளையள் எண்டு கேட்டவுடனை ஓடிவாறீர். நாங்கள் சீதேவியையும் மூதேவியையும் பற்றித்தான் கதைச் சனாங்கள்.
சுந்தரி: சீதேவியும மூதேவியும் அக்காவும் தங்கையும் எண்டுது தெரியாதே ஞானா?
ஞானா: தெரியும் அம்மா. ஆனால் திருவள்ளுவர் இந்தச் சீதேவி மூதேவியைப் பற்றிச் சொல்லி இருக்கிறாரோ எண்டுதான் நினைகிறன்?
சுந்தரி: எனக்கெண்டால் தெரியேல்லை ஞானா. அதுபோக வள்ளுவர் உப்பிடிக் கீழ்த்தரமான கற்பனை செய்திருப்பார் எண்டு நான் நினைக்கேல்லை.
அப்பா: சுந்தரி, உதொண்டும் கீழ்த்தரமான கற்பனை இல்லை.
ஞானா: அப்பிடி எண்டால் அப்பா திருவள்ளுவர் மூதேவி சீதேவியைப் பற்றிக் குறளிலை சொல்லி இருக்கிறாரே?
அப்பா: ஞானா….சொல்லியிருக்கிறார். ஆனால் வேறை சொற்களைப் பாவிச்சிருக்கிறார்.
ஞானா: எந்தக் குறளிலை எண்டு சொல்லுங்கோ அப்பா.
அப்பா: திருக்குறளிலை 17 வது அதிகாரம் அழுக்காறாமை. அழுக்காறாமை எண்டால் உன்குத் தெரியும்தானே. அதாவது பிறருடைய நல்வாழ்வைக் கண்டு மனதில் பொறாமை கொள்ளாமல் இருப்பது. இந்த அதிகாரத்திலை 167 வது குறளிலை சொல்லியிருக்கிறார்.
ஞானா: இஞ்சை இருக்கப்பா புத்தகம் …..எங்கை பாப்பம் 167 வது குறள்.
“அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவை தவ்வையைக் காட்டி விடும்.”
பொருளைப் பாப்பம்……பொறாமை உள்ளவனைப் பற்றி மணம் கோணி, சீதேவியானவள், தான் விலகிக் கொண்டு தன்னுடைய அக்காளாகிய மூதேவியைக் காட்டி விடுவாள்.
சுந்தரி: அப்பா, அவ்வித்து எண்டால், வெறுத்து, மனம் கோணி எண்டது கருத்து. பொறாமை உள்ள ஆக்களை வெறுத்துச் செல்லவம் சேராது விலகி, வறுமையைத் தந்துவிடும். ஆனபடியாலை பொறாமை கொள்ளளாதையுங்கோ எண்டு வள்ளுவர் எச்சரிக்கிறார். என்ன?
அப்பா: சரியாய்ச் சென்னீர் சுந்தரி.
ஞானா: எட அநியாயமே! உந்த அதிகாரம் முந்தி நான் படிச்சனான். ஆனால் உந்தக் குறளின்ரை பொருளை மறந்துபோனன் அப்பா.
அப்பா: குறளை மறந்தாலும், அதிலை உள்ள பொருளை மறக்கக்கூடாது ஞானா.
ஞானா: உந்த அதிகாரத்திலை அப்பா திருவள்ளுவர் சில ஏறுமாறான கருத்துகளைச் சொல்லியிருக் கிறார் எண்டது எனக்கு இப்ப ஞாபகம் வருகுதப்பா.
சுந்தரி: என்ன ஞானா? பழையபடி குறம்பு விடப் போறியே?
ஞானா: இல்லை அம்மா….உந்த அழுக்காறாமை எண்ட அதிகாரத்திலை எனக்கு ஒரு சந்தேகம். அதாவது எல்லாக்குறளிலையும் பொறாமை கூடாது, பொறாமை உங்களை வறியவராக்கி விடும், மனத்திலை பொறாமைக்கு இடந்தராதையுங்கோ எண்டு வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் நல்ல செல்வந்தராய் இருக்கிறவை பொறாமை இல்லாமலா இருக்கிறார்கள்? அவையள்தான் ஆளுக்காள் போட்டி, பொறாமையிலை ஈடுபடுகினம். செல்வமும் அவயளிட்டைத்தான் நிறைஞ் சிருக்கு.
சுந்தரி: நீ சொல்லிறது உண்மைதான் ஞானா. அதுபோலை வறுமையிலை இருக்கிறவை பொறாமை இல்லாமல் இருந்தாலும் அவையின்ரை வறுமை தீர்ந்த பாடில்லாமல் இருக்கே. எனக்கும் உதிலை கொஞ்சம் சங்கடமாய்த்தான் இருக்கு. நீங்கள் என்ன சொல்லிறியள் அப்பா?
அப்பா: நான் என்னத்தைச் சொல்லிறது சுந்தரி? வள்ளுவப் பெருந்தகையே சொல்லியிருக்கிறாரே. உந்த அதிகாரத்திலை உள்ள கடைசிக் குறளிலை. 170 வது குறள்.
“அழுக்கற் அகன்றாரு மில்லை அஃதிலார் பெருக்கத்திற் தீர்ந்தாரு மில்.”
அதாவது பொறாமமையினால் செல்வம் அதிகப்பட்டவரும் இல்லை, அது இல்லாமையினால் செல்வம் இழந்து விட்டவர்களும் இல்லை. அப்பிடி எண்டால் என்ன கருத்து? பொறாமைக் குணத்தாலை ஓரு நன்மையும் இல்லை. கேடுதான் உண்டாகும் எண்டதுதானே கருத்து.
ஞானா: நான் ஒண்டு சொல்லட்டே அப்பா உந்தச் சீதேவி, மூதேவி எண்ட கதையை விட்டிட்டுச் சுருங்கச் சொன்னால், பொறாமை கெட்ட குணம், தீமையையும், அங்கலாய்ப்பையும், வேறும் பல கேடுகளையும் உண்டுபண்ணும். ஆகையினாலே பொறாமை கொள்ளக் கூடாது.
அப்பா: உண்ரை விருப்பம் போலை எடுத்துக்கொள் ஞானா. திருவள்ளுவர் சிந்தனைக்கு ஒருபோதும் தடை பேடயில்லை. அவருடைய காலத்திலை இருந்த வழக்குகளை, விளக்கத்துக்காகச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்.
(இசை)
No comments:
Post a Comment