அவுஸ்ரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள்


.                                                   செ.பாஸ்கரன்

படத்தில் உள்ளவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது

Clean Up Australia Day 2013 நாளான ஞாயிற்றுக்கிழமை     The Hills Holroyd Parramatta Migrant Resource Centre ,  Meet & Greet Tamil Volunteer Group  (சந்திப்போம் வாழ்த்துவோம்  தமிழ் தொண்டர் குழு ) மற்றும்  Settlement Services International ( SSI )ஆகியவை இணைந்து    Ryde பூங்கா   Ryde  இல் 11 மணியிலிருந்து 2 மணிவரை நகரை சுத்தமாக்கும் நிகழ்வை நடாத்தினார்கள். இதில் அண்மையில் ஒஸ்ரேலியாவிற்கு புலம் பெயர்ந்து வந்த இளைஞர்கள் பலர் பங்கேற்று     Clean Up Australia Day 2013 நாளில் தங்கள் பங்களிப்பையும் செலுத்தியிருந்தது பாராட்டும்படியாக இருந்தது. இந்த நிகழ்வில் ரைட் பூங்காவையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் துப்பரவு செய்ததுடன் அதில் பங்குபற்றிய இளைஞர்கள் இந்த நாட்டில் நடந்துகொள்ளவேண்டிய விதம்.இந்த நாட்டின் உதவி அமைப்புகளிடமிருந்து பெறக்கூடிய சலுகைகள் அவர்களுக்கான வாழ்வாதாரங்களைப் பெறக்கூடிய வழிமுறைகள் என்பன பற்றி பலர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள். நிகழ்வின் இறுதியில் சுவையான மதிய உணவும் குளிர்பானங்களும் பரிமாறப்பட்டதுடன்     தமிழ்தொண்டர் குழுவினர் தாங்கள் சேகரித்த காலணிகள் உடைகள் என்பவற்றை அண்மையில் இங்கு வந்த இளைஞர்களுக்கு வழங்கினார்கள்.






இலங்கையில் வாழமுடியாத காரணத்தாலும் உயிராபத்து காரணமாகவும் புலம் பெயர்ந்து வந்த இளைஞர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு சிலவாரங்களில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அகதிகளைப் பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும்  Settlement Services International    மற்றும்    Red Cross அமைப்பினரிடம் கையளிக்கப்படுகிறார்கள்.  இவர்களைப்பராமரிக்கும் அமைப்பில் ஒன்றான   Settlement Services International  ஞாயிற்றுக்கிழமை நடந்த Clean Up Australia Day 2013  நாளில் பங்குபற்றியிருந்தார்கள் அந்த அமைப்பின்    Humanitarian Program Manager   Mr.David Keegan  னும் அந்த அமைப்பைச் சேர்ந்த வேறு சிலரும் வருகைதந்திருந்தார்கள் இதில் தமிழ் அங்கத்தவர்களும் அடங்குகிறார்கள்.


இதேபோல்  Meet & Greet Tamil Volunteer Group இல் இருந்து  பலரும்  The Hills Holroyd Parramatta Migrant Resource Centre இல் இருந்து Conscila உட்பட சிலரும் வந்திருந்தார்கள் 



 இந்த வாரம் அவுஸ்ரேலிய ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் இலங்கை புலம்பெயர்ந்தோர் விடயம் இங்குள்ள தமிழர்கள் மத்தியில் கவலையையும் சங்கடமான் நிலைமையையும் கொடுத்துள்ளதாக பலர் கூறிக்கொள்வதை கேட்கக்கூடியதாக இருந்தது எனவே இந்த புலம்பெயர்ந்து வந்த இளைஞர்கள் பற்றி   Settlement Services International  அமைப்பின்   David Keegan   னுடன் உரையாடினேன் அவர் சில விடயங்களுக்கு விளக்கமளித்திருந்தார். 



குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் தங்களிடம் புலம் பெயர்ந்து வருபவர்கள் கையளிக்கப்பட்டு அவர்களது அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்காக குறிப்பிடப்படும் தொகைப் பணம் வழங்கப்படுகின்றது இதில் அவர்கள் புலம் பெயர்ந்து வந்தவர்களை ஆறு வாரங்களுக்கு பொருத்தமான தங்குமிடங்களைக் கண்டுபிடித்து அதில் அவர்களை இருக்கவைத்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை  ஒருதொகைப் பணம் கொடுக்கப்படுகின்றது. இப்பணம் எவ்வளவு என்பதை அவர் வெளியிட விரும்பவில்லையென்றாலும் அந்த தொகை Centrelink   வழங்கும் தொகையைவிட சற்றுக்குறைவானது என்று குறிப்பிட்டார். ஆறு வாரங்களுக்குப் பின்பு அவர்கள் தங்கள் இனம்சார் அமைப்புக்களின் உதவியோடு தங்களுக்கான இருப்பிடங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்வதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை அவர்களுக்கு பணக்கொடுப்பனவு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இது தொடற்சியாகக் கிடைக்கும். அவர்களுக்கு  PR கிடைக்கும் வரை அல்லது வேலை செய்யலாம் என்ற அனுமதி கிடைத்து அவர்கள் வேலை பெற்றுக் கொள்ளும் வரை இந்த உதவி வழங்கப்படும் என்று குறிப்பட்டார்.


அண்மையில்   Macquarie University இல் நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டபோது அங்கிருந்த இளைஞர்களை பராமரிப்பது Red Cross  என்றும் தாங்கள் இல்லை என்றும் கூறினார். அந்த நிகழ்வுபற்றி ஊடகங்கள் பிரச்சாரம் செய்யும் முறை நியாயமானதா என்று கேட்டபோது, நடந்த சம்பவம் கவலை அளிக்கக்கூடிய சம்பவம்தான் அதற்காக ஒட்டுமொத்தமாக தமிழ் புலம்பெயர்ந்தவர்களை குற்றம் கூறுவது சரியல்ல என்றும் ஒப்பிடுகையில் தமிழ்க்குழுவினர் அந்தளவு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அல்ல என்பதுதான் உண்மை என்றும் கூறினார். புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு  இங்குள்ள நடைமுறைகளைப்பற்றி எடுத்துரைப்பதும் அவர்களை இந்த நாட்டின் நடைமுறைகளோடு இணைப்பதுமான முக்கிய கடமை இங்குள்ள சமூக அமைப்புகளுக்கு இருக்கும் முக்கிய கடமையாகும் என்று குறிப்பிட்டார்.


ஏன் இவர்களுக்கு வேலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கி அவர்களை முயற்சிஉள்ளவர்களாக மாற்றாமல்  இப்படி பற்றாக் குறையுள்ள வாழ்க்கைமுறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்டபோது இதற்கு தன்னால் பதில் கூறமுடியாது என்றும், தங்கள் தொழில் அரசு தங்களிடம் ஒப்படைப்பவர்களை அந்த வரையறைக்குள் பார்ப்பது மட்டும்தான் என்று குறிப்பட்டார்  அவருக்கு நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டேன்.


அரசின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நேரடியாக இவர்களைப் பராமரிக்காமல் சில அமைப்புக்கள் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அதற்கான உத்தியோகத்தர்கள் பலர் வேலைக்கு அமர்த்தப் படுகின்றார்கள் அதற்கான நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது. இந்த அமைப்புக்கள் தமிழ்க் குழுக்களை மட்டுமல்ல ஏனைய இனக்குழுக்களையும் பராமரிக்கும் வேலையையும் செய்கின்றது. 
எமது தமிழ் சமூக அமைப்புக்கள் அரசுடன் பேசி புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு வேலைக்கான அனுமதிப்பத்திரம் கொடுப்பதை விரைவாக்கமுடியுமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்களா? ஏன்பது தெரியவில்லை. ( யாராவது இதுபற்றித் தெரிந்திருந்தால் தமிழ்முரசிற்கு அறியத்தரலாம்) 
 

தொடர்ந்து புலம் பெயர்ந்து வந்த இளைஞர்களோடு உரையாடியபோது பலர் பலவிதமான கருத்துக்களை கூறினார்கள். ஒருவர் கூறும்போது தான் 
திருமணமாகி மனைவியும் பிள்ளைகளும் ஊரில் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது. எனக்கு வேலை செய்வதற்கு அனுமதிப்பத்திரம் தந்தால் நான் உழைக்க தயாராக இருக்கிறேன் ..........................

( இதன் அடுத்தபகுதி அடுத்தவாரம் முரசில் வெளிவரும்)

குறிப்பு : அங்கு நடந்த நிகழ்சியில் நிற்கும்போது ஒரு துயரமான செய்தி கூறினார்கள் இங்கேவந்து அண்மையில் PR கிடைத்த மகேந்திரராஜா சுப்பிரமணியம் என்ற 47 வயதான தமிழர் கார் விபத்தில் நேற்றுக் காலமானார் என்றும் அவருடன் சென்ற அந்தனி,  விமலதாஸ் , துஸ்யந்தன் நகுலேஸ்வரன் என்ற நான்கு பேர் படு காயங்களுடன் உயிர்தப்பி உள்ளார்கள் என்ற செய்தி கிடைத்தது.



2 comments:

conscila jerome said...

On behalf of The Hills Holroyd Parramatta Migrant Resource centre I wish to thank Tamilmurasu Australia to publish this event(Clean up Australia Day)and to put an outstanding effort for the awarness of the "Meet & Greet" tamil volunteers' selfless support towards this new arrivals.
Also a big thanks for the Settlement Services international for the partnership and great support for this event.
WE NEED MORE TAMIL VOLUNTEERS TO LEND A HAND.
Call us on 0425233435 or 96879901 to join us.
Conscila Jerome

Kaanthan said...

.
காலன் இந்தப் பிள்ளைகளை துரத்திக் கொண்டே இருக்கிறான் யார் செய்த பாவமோ தெரியாது. இறந்தவருக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிவித்தால் மக்கள் உதவுவார்கள்.
இப்படியான விடயங்களை மேற்கொள்ளும் அமைப்புகளை பாராட்ட வேண்டும் இதனால் புதிதாக வருபவர்கள் இந்த நாட்டைபற்றி இலகுவாக அறிந்து கொள்ள முடியும். பாஸ்கரன் குறிப்பிட்டது போல் இங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அதன் சக்திக்கு ஏற்றவாறு அரசுடன் பேசி விசாவை பெற்றுக் கொடக்க முயலவேண்டும். விஜயரெத்தினம் அவர்கள் டொக்டர. மனமோகன் போன்றவர்களை அனுகி ஒன்று கூடி முயலவேண்டும்

இரா காந்தன்