இந்திய ரா வும் கமலின் ர்ரா நாடகமும்
இந்திய விடுதலைக்குப் பின் நேருவின் காலத்தில் சீனா இந்திய எல்லையைத் தாக்கிய போது இந்தியா அந்தப் போரை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை.
இந்தியாவின் அந்த இக்கட்டான நிலைதான் இந்திய உளவுத்துறை அமைவதற்கான ஓர் உடனடி அவசியத்தை ஏற்படுத்தியது எனலாம்.
(Research & Analysis Wing (RAW)) ரா என்ற இந்திய உளவுத்துறை ஆரம்பிக்கும்போது 250 பேருடன் அமெரிக்க டாலர் 400,000 மூலதனத்துடன்
ஆரம்பிக்கப்பட்டது. இன்று 8 முதல் 10 ஆயிரம் பேர் ராவில் இருப்பதாக
சொல்கிறார்கள். ரா வின் வேலைகளுக்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகை
அமெரிக்க டாலர் 145 மில்லியன்.
ரா அதிகாரிகள் முழுமையாக பயிற்சி பெற்றது இஸ்ரேலிடம்.
ரா அமைப்பில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
(counter intelligence team - X and counter intelligence team J)
CIT - X பிரிவு பாகிஸ்தான் முதலான அண்டைநாடுகளின் ஒவ்வொரு
அசைவுகளையும் கவனிக்கும். CIT J என்ற பிரிவு காலிஸ்தான் போன்ற
உள்நாட்டு பிரிவினை சக்திகளைக் கவனிக்கும். இந்த இரண்டு பிரிவுகளும்
சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் தீவிரவாத சக்திகளை வளர்ப்பதாக பாகிஸ்தானின் இராணுவப்பிரிவு நிபுணர் எழுத்தாளர் ஆயிஷா
சித்திக்குவ ( Newsline)சொல்கிறார். ப்ஃரண்ட்லைன் எடிட்டர் பிரவீன் சுவாமி
'பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர் பகுதிகளில் வீரியம்
குறைந்த வெடிகுண்டுகள் அவ்வப்போது வெடிக்கத்தான் செய்கின்றன"
என்று ஆயிஷா சொல்வதை உறுதி செய்கிறார்.
பொருளாதரத்தில் பாகிஸ்தானை முழுவதுமாக
சார்ந்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு
இந்தியா இதுவரை அளித்திருக்கும் நன்கொடை ரசீதுகளின் பட்டியல்
ஒவ்வொரு இந்தியனும் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.
இந்திய இராணுவத்தின் சாலை போக்குவரத்து துறை ஆப்கானிஸ்தானுக்கு
சாலை வசதிகளைச் செய்து கொடுத்தது முதல் பாரதப்பிரதமர்
மன்மோகன்சிங் ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்யும் போது
நன்கொடை பட்டியலின் தொகை மே 2011ல் அமெரிக்கா டாலர்
2 பில்லியனைத் தாண்டிவிட்டது. இந்த தொகையைக் கொண்டு
மும்பை மாநகரைக் குடிசைகளே இல்லாத பெருநகரமாக்கி இருக்க முடியும்,
ஏன் ஒட்டுமொத்த இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில்
அத்தியாசவிசயமான தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க முடியும்.
இத்துடன் மின்சாரம், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்று
கொடுப்பதுடன் ஆப்கானிஸ்தான் மாணவனுக்கு உயர்கல்விக்கான
ஊக்கத்தொகையை இந்தியா கொடுப்பதும் ஆச்சரியமளிக்கிறது.
ஆனால் இந்த அபரிதமான உதவிகளை மனித நேய அடிப்படையிலோ
அல்லது அண்டைநாட்டுடன் நல்லுறவு கொள்ளும் நோக்கத்திலோ
இந்தியா கொடுக்கவில்லை. இந்தியாவின் ரா , ஆப்கானிஸ்தானை
தன் ரகசிய உளவு வேலைகளுக்கான தளமாகவும் இந்தியாவை
எப்போதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், சீன நாடுகளை
உன்னிப்பாக கவனிக்கவும் அந்நாடுகளில் உள்நாட்டு கலவரத்தை
ஏற்படுத்தவும் வசதியான ஒரு களமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் சி. ஐ. ஏ, இங்கிலாந்தின் எம் 16 உளவுத்துறைகளைப் போல
இந்திய உளவுத்துறை நேரடியாக இராணுவத்துறையின் கட்டுப்பாட்டுக்குள்
இல்லை. ரா இந்திய பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டின் இயங்குகிறது.
பஞ்சாபில் நடந்த காலிஸ்தான் கிளர்ச்சிகளுக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பின்புலமாக செயல்பட்டது பாகிஸ்தான்.
பணமும் ஆயுதப்பயிற்சியும் கொடுத்தது. இந்தியா, காஷ்மீர்,
பாகிஸ்தான் எல்லைப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
பாகிஸ்தானின் இதே வழிமுறையை இந்தியாவும் பாகிஸ்தானின்
பலுசிஸ்தான் கலவரங்களிலும் கடைப்பிடித்தது. ஜோர்டானின் இளவரசர்
ஹசன் பின் டலால் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பெண்ணைத் திருமணம்
செய்தப் பின் அவர் முன்னிலையில்
"இந்தியா பாகிஸ்தானில் பிரச்சனை உண்டாக்குவதை நிறுத்த வேண்டுமானால்
பாகிஸ்தான் இந்தியாவின் பஞ்சாப் பிரச்சனையில் தலையிடக்கூடாது '
என்ற ரகசிய உடன்படிக்கையானது.
சோவியத் ஒன்றியத்தின் இராணுவப்பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்தப்போது அமெரிக்காவின் உளவுத்துறையான சி. ஐ. ஏ சோவியத்திற்கு எதிராக
போராட ஆப்கானிஸ்தான் புரட்சிக்காரர்களுக்கு பல்வேறு வகையில்
உதவியது. ஆனால் நேரடியாக அமெரிக்கா இதில் தலையிடவில்லை.
பாகிஸ்தான் தான் இதில் ஏஜண்டாக செயல்பட்டது. குறைந்தது 3 பில்லியன்
அமெரிக்கடாலர் ஆப்கானிஸ்தானுக்கு வாரி வழங்கியது. ஐ எஸ் ஐ
இந்த செயல்பாட்டை operation cyclone என்றழைத்தது.
பாகிஸ்தானுக்கு இந்த ஏஜண்ட் வேலைகள் தவிர நேரடியான பல்வேறு உதவிகளையும் அமெரிக்க உளவுத்துறை இன்றுவரை செய்து கொண்டுதான்
இருக்கிறது. முன்னாள் ரா அதிகாரி பி. இராமன் 2007ல் வெளியிட்ட அவருடைய புத்தகம் " the kaoboys of R & AW ' வில் சில செய்திகளை
உறுதி செய்திருக்கிறார். " அ,மெரிக்க உளவுத்துறை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ எஸ் ஐக்கு தீவிரவாத தாக்குதல்கள் குறித்த
பயிற்சிகளைக் கொடுக்கும். அதே சமயத்தில் இந்திய ரா வுக்கும்
தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் சில நுட்பங்களை
அறிந்து கொள்ளும் பயிற்சியை அளிக்கும்: என்கிறார்.
9/11 ல் அமெரிக்கா சந்தித்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்,
ஒசமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்டபின்
அமெரிக்க பாகிஸ்தான் உறவு பாதிக்கப்பட்டிருக்கிறதா ?
இக்கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமெரிக்காவும் பாகிஸ்தானும்
அப்படியெல்லாம் பாதிக்கப்படவில்லை என்று சொல்கின்றன.
ஆனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலகில் தீவிரவாதத்திற்கு
எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் கை கோத்து நிற்பதாகவும்
ஒரு பிம்பத்தை அமெரிக்க அதிபரும் இந்தியப் பிரதமரும்
அடிக்கடி தொலைக்காட்சிகளில் சொல்லிக்கொள்கிறார்கள்!
இந்தப் பிம்பத்தைக் கட்டமைப்பதில் இரு அரசுகளுக்கும் பல்வேறு ஆதாயங்கள் இருக்கின்றன. உலக நாடுகளின் சட்டாம்பிள்ளையாக , போலீஸ்காரனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்கா தான் மூன்றாம் நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிட்டு அமைதி குலைத்து தன் அபரிதமான ஆயுத உற்பத்திக்கான சந்தைகளை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறது.
அகண்ட பாரதக் கனவுகள் ஒருபக்கம், இந்தியா வல்லரசாகும் கனவுகள்
ஒருபக்கம் என்று கனவுகளில் மிதக்கும் இந்திய அரசோ 9/11க்குப் பின்
இச்சூழலைச் சாதகமாக்கிக்கொள்ள துடிக்கிறது.
இந்த ரா வின் செயல்பாடுகளைத் தான் நடிகர் கமலஹாசன் தன் கைகளில்
எடுத்துக் கொண்டு வழக்கம்போல கந்தலாக்கி இருக்கிறார்.
ஆனால் இந்தக் கந்தல் ஆடையில் எங்கே கிழிக்க வேண்டும், எவரைக்
கிழிக்க வேண்டும் , எப்படி கிழிக்க வேண்டும், எதை எல்லாம் ஒட்டுப்போட்டு
கிழிசல் மறைய தைக்க வேண்டும் என்பதில் கவனமாகத்தான் இருந்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக குற்றம்சாட்டப்பட்டுய்
தூக்கிலடப்பட்டப்பின் கமலும் கமலின் உதவியாளரும் பேசும் வசனம்
ரொம்பவும் விஷமமானது.
"நான் என் பெயரைத் தான் மாற்றிக்கொண்டிருக்கிறேன். என் தர்மத்தை (மதத்தை ) அல்ல" என்பார் அந்த உதவியாளர். இசுலாமியராக
வரும் கமல் அவன் தர்மப்படி அவன் நடக்கட்டும் என்று அவனை
டிஸ்மிஸ் செய்து அனுப்பிவிடுவார்.
கதையின் முடிவு "போராட்டம் தொடரும், நானோ உமரோ இருவரின் ஒருவர்
கொல்லப்படும் வரை தொடரும்" என்று முடிக்கிறார்.
விசுவநாதனாக இதைச் சொல்லியிருந்தால் அது இந்து தீவிரவாதம்.
அகமதுவாக இதைச் சொல்லியிருந்தால் அது இந்திய தீவிரவாதம்
இரண்டுமே ஆபத்தானது.
கமலுக்கு அல்ல, நமக்கு.
மத சாதி அடையாளங்களை மறந்து துறந்து தமிழனாக வாழ நினைக்கும்
ஒவ்வொருவருக்கும் .
No comments:
Post a Comment