நடுவழியில் இன்ப அதிர்ச்சி -லெ.முருகபூபதி


.
1983 ஆம் ஆண்டு இலங்கைத்தமிழர்களுக்கு வேதனையும் சோதனையும் இழப்பும் விரக்தியும் நிரம்பிய காலம். இன்றும் அந்த ஆண்டின் அமளியும் அவலமும் நினைவுகூறப்படுகிறது.ஆண்டுதோறும் வெலிக்கடை தாக்குதல் சம்பவமும் படுகொலைகளும் தமிழ் ஊடகங்களில் படங்களுடன் ஜூலை மாதங்களில் நிச்சயம் வெளியாகிவிடும்.

அக்காலப்பகுதியில் பதவியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலிருந்த யூ.என்.பி. அரசின் ஆசீர்வாதத்துடன் அனைத்து பேரவலங்களும் தொடர்ந்தபோதிலும், சிங்களமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை திசைதிருப்பபுவதற்காக குறிப்பிட்ட இனக்கலவரத்தை தூண்டியவர்கள் இடதுசாரிகளே…என்று பச்சைப்பொய் பேசியவர்தான் அந்த தார்மீகத்(?)தலைவர். இந்திராகாந்தியினால் நரி என்று வர்ணிக்கப்பட்ட மனிதர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நவசமசமாஜக்கட்சி ஆகியனவற்றை தடைசெய்யும் உத்தரவையும் பிறப்பித்தார். மக்கள் விடுதலை முன்னணியினர் தலைமறைவானமையால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீடித்தது. இதர இரண்டு கட்சிகளின் தலைவர்கள் புலனாய்வுப்பிரிவினரின் தீவிர விசாரணைகளையடுத்து அந்தக்கட்சிகள் மீதான தடை தளர்த்தப்பட்டது.


வடக்கில் இயங்கிய விடுதலைப்புலிகள், புளட், டெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் முதலான இயக்கங்களுடன் தென்னிலங்கையில் சுயநிர்ணயம் பேசிய சிங்கள முற்போக்கு சக்திகள் இணைந்து மிகப்பெரிய கிளர்ச்சியை நடத்தப்போகிறார்கள் என்று அக்காலகட்டத்தில் புலனற்ற புலனாய்வுப்பிரிவினர் சிலர் பாதுகாப்பு அமைச்சிற்கு தவறான ஒரு தகவலை வழங்கியிருக்கிறார்கள்.
வடக்கில் ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களிடம் ஒற்றுமை இல்லாதபோது அவை எப்படி தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து போராடும்?
தென்னிலங்கையில் சிங்களம் நன்றாகப்பேசத்தெரிந்த முற்போக்கு தமிழர்கள் யார்?
அவர்களை தேடிக்கண்டுபிடித்துவிட்டால் அந்தக்கற்பனைக்கிளர்ச்சியை முறியடித்துவிடலாம் என்று ‘தெளிவற்ற’ புலனாய்வாளர்கள். எழுந்தமானமாகத் தீர்மானித்தனர்.


எனக்கு நன்குதெரிந்த ஒரு இலக்கியநண்பரை கைதுசெய்து ஒரு பொலிஸ்நிலையத்தில் மாற்றுடையும் தராமல் பல நாட்கள் தடுத்துவைத்து விசாரித்தனர். அவருக்கு மும்மொழியும் சரளமாகப்பேசத்தெரியும். அத்துடன் ஒரு இடதுசாரி இயக்கத்தில் அங்கம் வகித்தவர். அந்த இயக்கத்தின் உத்தியோகபூர்வ இதழில் அரசியல் ஆய்வுகள் எழுதியவர்.
அவரைப்போன்று மேலும் பலர் புலனாய்வுப்பிரிவினரின் தேடுதலில் கைதானார்கள். நானும் தேடப்படுவதாக ஊரில் செய்திகசிந்துவிட்டது. எனக்கு சிங்களமும் தெரியும் என்பதுதான் பிரதான காரணம் என்றும் ஒரு தகவல் காற்றோடு கலந்துவந்தது. 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார மேடைகளில் பேசியிருந்தேன். அத்துடன் 1971இல் நடந்த மக்கள் விடுதலை முன்னணியினரின் கிளர்ச்சியில் கைதாகி சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிங்கள அரசியல் கைதிகளின் விடுதலையை கோரும் இயக்கத்திலும் இணைந்திருந்தேன். 1981 இல் யாழ்.பொது நூலகம் இனவாதிகளினால் எரிக்கப்பட்டதைக்கண்டிக்கும் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நூல் சேகரிப்பு பணிகளிலும் முற்போக்கு சிங்கள இளைஞர்களுடன் ஈடுபட்டிருந்தேன்.
யாரோ எனது பெயரை புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்கியதையடுத்து, எங்கள் ஊர் பொலிஸ் நிலையம் என்னைத்தேடத்தொடங்கியது. ஆனால் எங்கள் ஊர் மக்கள் என்னை காட்டிக்கொடுக்கவில்லை. நான் குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்து சிறிதுகாலம் தலைமறைவாக இருந்தேன். சில மாதங்களில் ஊர் திரும்பினேன். மீண்டும் இரவு நேரங்களில் பொலிசார் தேடுகிறார்கள் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.
கொழும்பில் புலனாய்வுப்பிரிவில்  கைரேகை நிபுணராக பணியிலிருக்கும் ஒரு சிங்கள அன்பர் என்னுடன் படித்த நண்பரின் அக்காவை காதலித்து மணம் முடித்திருந்தார். அதனால் அவரும் எனது குடும்ப நண்பர். தமிழ்ப்பெண்ணை மணமுடித்தமையால் 83 கலவர காலத்தில் அவரும் அலுவலகத்தில் சில அதிகாரிகளிடம் அவமானப்பட்டிருக்கிறார்.
83 இல் தமிழர்களை இனவெறியர்கள் தேடித்தேடி தாக்கியபோது தனது மனைவி பிள்ளைகளை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்வதற்காக அவர் சிங்கள மேலதிகாரிகளிடம் லீவு அனுமதி கேட்டபோது “ தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்யும் முன்பு நன்றாக யோசித்திருக்கவேண்டும்” என்று சொல்லி ஏளனமாக சிரித்திருக்கிறார்கள்.
தமிழர்கள் என்றால் அவர்கள் புலிகள்தான் என்ற கற்பனையில் பாதுகாப்புத்துறை மிதந்த காலம் அது.
ஏன் என்னை தேடுகிறார்கள்? என்ற கேள்வியை நானே என்னை பலமுறை கேட்டுக்கொண்டேன். அதற்கான பதிலை தேடுபவர்களிடம்தானே கேட்டுப்பெறமுடியும்.
குறிப்பிட்ட குடும்ப நண்பரிடம் சென்றேன். எனக்கிருக்கும் பிரச்சினையை அவரிடம் சொன்னேன். அவருக்கு என்னை நன்றாகத்தெரியும். சிறிதுநேரம் ஆழ்ந்து யோசித்துவிட்டு, என்னை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பொலிஸ் நிலையம் வந்தார். வரும்வழியில் “ நீங்கள் சரணடையத்தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன். தொடர்ந்தும் தலைமறைவாகத்திரிந்தால் பிறகு என்னாலும் உங்களை காப்பாற்ற முடியாமல்போகலாம். நானே வந்து உங்களை பொலிஸ் நிலையத்தில் அறிமுகப்படுத்துகிறேன்.” என்று சொன்னார்.
எனது தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எங்கள் ஊர் பொலிஸ் நிலையத்தில் சார்ஜன்ட்டாக பணியிலிருந்தவர். என்னை விசாரிக்கப்போகின்றவருக்கு நிச்சயமாக அவரைத்தெரிந்திருக்காது.
“எனக்கு சிங்களம் பேசத்தெரியும் என்பது பிளஸ் பொயின்ரா? அல்லது மைனஸ் பொயின்ரா?” என்று அந்த கைரேகை நிபுணரிடம் கேட்டேன். அவர் சிரித்தார்.
“ உங்களுக்கு சிங்களம் பேசத்தெரியும் என்பதுதானே புலனாய்வுப்பிரிவினருக்கு பிரச்சினை” என்றார்.
அவர் சிரித்துக்கொண்டு அப்படிச்சொன்னது எனக்கு முரண்நகையாக இருந்தது. பொலிஸ்நிலையம் வந்ததும் அவர் உள்ளே சென்று பொறுப்பதிகாரியிடம் பேசிவிட்டு வந்தார்.

அந்த அறையிலிருந்துகொண்டே என்னை அழைத்து அறிமுகப்படுத்தினார். பொறுப்பதிகாரி எனது பெயரைக்கேட்டுவிட்டு, ஒரு பொலிஸ் சார்ஜன்டை அழைத்து என்னை விசாரித்து வாக்குமூலத்தை பதியும்படி சொன்னார்.
வாக்குமூலத்தின் பின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. அழைத்துவந்த கைரேகை நிபுணர் நண்பர் என்னருகே வந்து, பரிபாஷையில், ‘ஒன்றும் நடக்காது. வாக்கு மூலம் மட்டும்தான்.’ எனச்சொல்லிவிட்டு விடைபெற்றார்.
குறிப்பிட்ட சார்ஜன்ட் என்னை ஒரு அறைக்கு அழைத்துச்சென்று அமர்வதற்கு ஆசனம் தந்தார்.
விசாரணைப்படலம் தொடர்ந்தது.
எனது பூர்வீகம், படிப்பு, தொழில், பெற்றோர், உடன்பிறப்புகள். வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள், வெளியூர் சென்றால் தங்கும் உறவினர் வீட்டு முகவரிகள், அங்கம் வகிக்கும் அமைப்புகள்….முதலான தகவல்களை கேட்டு எழுதிக்கொண்டார். எனக்கு அவரைப்பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. அவர் நிதானமாக ஒரு பேரேட்டில் நான் சிங்களத்தில் சொன்னவற்றை எழுதிக்கொண்டிருந்தார். எந்தத்தடுமாற்றமும் இல்லாமல் நான் சரளமாக சிங்கள மொழியில் பேசியதனால் அவரால் இலகுவாக எழுத முடிந்தது.
திடீரென்று அவர் பேனையை வைத்துவிட்டு விரல்களை மடித்து சொடுக்குப்போட்டார். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தார். அந்த இடைவெளியில், “ இப்படி நன்றாக சிங்களம் பேசுகிறீரோ…உங்கள் குடும்பத்தில் கலப்புத்திருமணம் ஏதும் நடந்திருக்கிறதா?” எனக்கேட்டார்.
நான் இல்லை என்றேன். அதுவே உண்மை. அந்தக்கேள்வியையும் எனது பதிலையும் அவர் எழுத்தில் பதியவில்லை.
“ என்னை ஏன் தேடுகிறீர்கள்?” என்ற எனது கேள்விக்கு, அவர் பதில் சொல்லவில்லை. “உங்களை விசாரிக்கும்படி எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. விசாரித்துவிட்டு அறிக்கை அனுப்புவது மாத்திரமே எங்கள் கடமை. ஏன் தேடினார்கள் என்பது எமக்குத்தெரியாது. எங்கள் அறிக்கையைத்தொடர்ந்து என்ன நடக்கும் என்பதும் எமக்குத்தெரியாது,”
அதனைக்கேட்டதும் நான் சற்று உஷாரடைந்தேன். இனிக்கேட்கவுள்ள கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்லவேண்டும் என்று எனது உள்ளுணர்வு எனக்கு கட்டளை இட்டது.
அவர் அந்த பேரேட்டை நகர்த்திவிட்டு, ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்துகொண்டார். வாக்குமூலப்பதிவு முடிந்துவிட்டது என்று நான் ஆறுதலடைந்தபோது அவர் திடீரென்று கேட்டகேள்வி என்னை துணுக்குறச்செய்தது.
“ நீங்கள் தமிழர்தானே… அப்படியென்றால் நீங்களும் தனித்தமிழ்ஈழத்துக்கு ஆதரவுதானே?”
“ இல்லை. ஆதரவு இல்லை.”
“ நாங்கள் உங்களை தொடர்ந்து தடுத்துவைத்து விசாரிப்போம் என்பதனாலா ஆதரவு இல்லை என்று பொய் சொல்கிறீர்கள்?”
“ இல்லவே இல்லை… நான் என்றைக்கும் தமிழ்ஈழத்தை ஆதரித்தவன் இல்லை. அதற்கு பல ஆதாரங்களை என்னால் சொல்லமுடியும்” என்றேன்.
“ ஏன் ஆதரவு இல்லை?”
“ சற்று விரிவாக விளக்கவேண்டியிருக்கிறது. தமிழரை தமிழர் ஆண்டால் தமிழர் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று சொல்பவர்கள்தான் தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. சிங்கள மக்களை இந்நாடு சுதந்திரம் பெற்ற நாள்முதலாக சிங்களவர்கள்தானே ஆண்டுவருகிறார்கள். சிங்களவர்களின் அனைத்துப்பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதா? பாரதநாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனிநாடு வேண்டும் என்றுதானே ஜின்னா பாக்கிஸ்தான் பிரிவினை கேட்டுப்பெற்றார். அங்கே முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதா? ஏன் பங்களாதேஷ் உருவானது. ஏன் அங்கு இராணுவ ஆட்சி நடக்கிறது.?
எனது இந்தப்பதில் அந்த பொலிஸ்சார்ஜன்டை சற்று ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். அவர் சிரித்தார்.
அவரது அடுத்த கேள்வி:-
“ வடக்கில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போரட்டம் நியாயமானதா?”
“ ஆம்… நியாயமானது.” என்று சொன்னேன்.
மீண்டும் நிமிர்ந்தார். “ஏன்…?” முகம் சற்று இறுக்கமானது.

“ சேர்…எங்கள் நாட்டில் அரிசி, பாண், மா, எரிபொருள் முதலான அத்தியாவசியப்பொருட்கள் விலையேறும்போது எல்லோருக்கும் பொதுவாகவே ஏறுகிறது. ஆனால் பல்கலைக்கழக தரப்படுத்தல், அரச உத்தியோகம், பதவி உயர்வு முதலானவற்றில் பாரபட்சம். அதனால் பாதிக்கப்படும் இனம் தமிழ்பேசும் இனம். அந்தக்கோபம்தான் அவர்களை ஆயுதம் ஏந்தச்செய்தது.”
அவர் மௌனமாக என்னை ஏறிட்டுப்பார்த்தார். “ அதற்காக ஆயுதப்போராட்டம்தான் தீர்வா?”எனக்கேட்டார்.
1971 இல் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதை நினைவுபடுத்தினேன்.
“அது வேறு பிரச்சினை. முறியடிக்கப்பட்டது. அவர்களை அரசு பின்னர் மன்னித்து விடுவித்தது. அவர்கள் மீண்டும் தலைதூக்கி தற்பொழுது தலைமறைவாகியிருக்கிறார்கள்.” என்றார்.
“1971 இல் அரசு சிங்கள இளைஞர்களைத்தான் தேடி தேடி அழித்தது. ஆனால் தமிழ் இளைஞர்கள் போராடுகிறார்கள் என்பதற்காக தமிழர்கள்தானே கைதாகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். இரண்டு போராட்டங்களும் விளைவுகளும் வேறாக இருக்கிறது.”
“உங்கள் பதில்தான் என்ன?”
“ சேர்… மொழிதான் அடிப்படைக்காரணம். எனக்கு சிங்களம் சரளமாகப்பேசத்தெரிந்தமையால் உங்களால் இலகுவாக வாக்குமூலம் எடுக்கமுடிகிறது. தமிழ் தெரியாத உங்களைப்போன்றவர்கள் தமிழ்ப்பிரதேசங்களில் பணியாற்றினால் உங்களுக்கு சிரமம்தானே? நாம் சிங்களம் படித்தோம். தமிழ் அரச ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். என்னைப்போன்ற பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் சிங்கள இலக்கியங்களை தெரிந்துகொண்டோம். எனக்கு மார்டின் விக்கிரமசிங்கா. எதிரிவீர சரச்சந்திர, குணசேனவிதான, ஜயதிலக்க, மடவளை ரத்நாயக்க, ஜி.பி.சேனாநாயக்க, குணதாஸ அமரசேகர, கருணாசேன ஜயதிலக்க. முதலான பல சிங்கள இலக்கியவாதிகளின் படைப்புகள் பற்றித்தெரியும். இப்படி எத்தனை சிங்களவர்களுக்கு எங்கள் தமிழ் எழுத்தாளர்களைத்தெரியும்? சிங்கள மக்களுக்கு அதிகம் தெரிந்த தமிழ்ப்பெயர்கள் பிரபாகரன். அமிரதலிங்கம்;, தொண்டைமான் மாத்திரம்தான். அவர்கள் எழுத்தாளர்கள் அல்ல.”
“ அப்படியென்றால் நாம் சிங்களம் படித்தால் பிரச்சினை தீரும் என்று சொல்லவருகிறீர்களா?”
“ படித்தால் நல்லது. பல பிரச்சினைகளை தீர்க்கலாம். எனது அறிவுக்குப்பட்டதைச்சொல்கிறேன். கடந்த 1974 முதல் கம்பஹா பிரதேசத்தில் பல பௌத்த பிக்குகளும், சிங்கள ஆசிரியர்களும், மாணவர்கள் சிலரும் என்னிடம் தமிழ் கற்கிறார்கள். மருதானையில் அமைந்துள்ள விகாரையில் பல பிக்குகள் என்னிடம் தமிழ் கற்றுவருகிறார்கள். அரசாங்கப்பரீட்சையில் தோற்றி தமிழில் சித்திபெற்றுள்ளார்கள்.”
சுமார் மூன்று மணிநேரம் எனது சிங்களத்தைக்கேட்ட அவர், “ இனி நீங்கள் போகலாம். வெளியூர் செல்லும்போது மாத்திரம் இங்கு வந்து சொல்லவேண்டும்.”
“தினமும் கொழும்புக்கு வேலைக்குப்போகிறேன்.” என்றேன்.
“ வேலைக்குச்செல்லலாம். ஆனால் வெளியூர்பயணங்களைத்தான் சொல்லவேண்டும்” என்று சொல்லிவிட்டு என்னை அனுப்பிவிட்டார்.
………………………..
இந்த வாக்குமூலப்பதிவு நடந்தது 1983 இறுதியில். அதன்பிறகு, 1984 இல் தமிழகம் வந்தேன். 1985 இல் சோவியத் நாட்டுக்குச்சென்றேன். 1986 இல் வடமராட்சி தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க யாழ் சென்றேன். 1987 இல் அவுஸ்திரேலியா புறப்பட்டேன். ஆனால் அவருக்குச்சொல்லவில்லை. என்னை அவர்கள் அதன்பிறகு தேடவும்   இல்லை. அந்த பொறுப்பதிகாரியும் சார்ஜன்டும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பதும்   தெரியாது. அந்த வாக்குமூலம் பதியப்பட்ட பேரேடு எங்காவது தூசுபடிந்து கிடக்கலாம்.
…………………….
கடந்த 2012 டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி, எமது இலங்கை மாணவர் கல்வி நிதிய பராமரிப்பிலிருக்கும் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வுக்காக ஒரு வாகனத்தில் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தேன்.
புத்தளம் – அநுராதபுரம் வீதியில் அநுராதபுரத்திற்கு சமீபமாக ஒரு கிராமப்புறத்தில் எமது வாகனம் விரைந்துகொண்டிருக்கிறது. காலை 7 மணியிருக்கும். மழைபெய்கிறது. ஒரு சிறுவன் தெருவோரத்தில் நின்று எம்மைக்கடந்துசென்ற ஒரு பஸ்வண்டியை நிறுத்துகிறான். ஆனால் பஸ் நிற்கவில்லை. அந்தப்பிள்ளையை ஏற்றிக்கொண்டுபோவோம் என்று சாரதிக்குச்சொன்னேன்.
சாரதி வாகனத்தை நிறுத்தினார். பள்ளிச்சீருடையிலிருந்த அந்த சிங்கள மாணவனை ஏற்றிக்கொண்டோம். அவனது குடும்ப விபரம் கேட்டேன்.
அவனது தகப்பன் ஒரு விறகுவெட்டி. காட்டில் விறகுவெட்டிவந்து குடும்பத்தை கவனிக்கிறார். தாய் மத்தியகிழக்கில் பணிப்பெண் வேலை. தினமும் தனக்கு பதினைந்து ரூபா பஸ்ஸூக்கு செலவாகிறது என்றான்.
“பாடசாலை விடுமறைக்காலம் இன்னும் வரவில்லையா?” என்று கேட்டேன்.
“ 7 ஆம் திகதிதான் விடுமுறை. இன்றுதான் கடைசிப்பரீட்சை ” என்றான்.
“ என்ன பாடத்தில் பரீட்சை?” எனக்கேட்டேன்.
“தமிழ்”- என்றான்.

No comments: