எங்கள் துயரம் சிங்களவர்களுக்குத் தெரியாததா?‏ -தீபச்செல்வன்

.
நானும் எனது நண்பன் லியோவும் அண்மையில் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றோம். முள்ளிவாய்க்கால் ஊடகா பேருந்தில் பயணித்திருந்தபொழுதும் அன்றுதான் முள்ளிவாய்க்கால் தெருவில் நடந்தோம். கிளிநொச்சியிலிருந்து பேருந்தில் பயணம் செய்து புதுமாத்தளனில் இறங்கி அங்கு இராணுவம் கைப்பற்றியிருந்த விடுதலைப்புலிகளின் போர்த்தளவாடங்களைப் பார்த்தோம். சிங்களவர்கள் வந்து பார்த்துவிட்டு ஆச்சரியமடையும் அந்தப் போர்த்தளவாடக் கண்காட்சி பெரும் சுற்றுலாத்தளமாகிவிட்டது. அங்கு விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விதவிதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் போர் படகுகளையும் போர் விமானங்களையும் செய்யும் தொழில்நுட்பங்களைப் பரீட்சித்துப் பார்த்த தளவாடங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. புலிகள் இந்த ஆயுதங்களை எல்லாம் செய்தார்கள் என்றும் அந்த ஆயுதங்களை ஏந்திய புலிகளை அழித்தோம் என்றும் தங்கள் இராணுவத்தின் வீரத்தைக் கொண்டாடும் சிங்கள மக்கள், எதற்காக புலிப் பிள்ளைகள் இதனையெல்லாம் செய்தார்கள் என்று யோசிப்பார்களா?
கிளிநொச்சி நகரத்தில் வீழ்த்தப்பட்ட தண்ணீர்தாங்கி இப்பொழுது சிங்கள இராணுவத்தின் வெற்றிச் சின்னமாகிவிட்டது. அந்த இடத்தில் மூன்றாம் ஈழப்போரின் பொழுது இருந்த தண்ணீர்தாங்கியும் அழிந்துபோனது. பின்னர் சமாதான காலத்தில் தற்போது விழுதப்பட்ட தண்ணீர் புனரமைப்பு பணி நடந்த பொழுது ஒருநாள் வேலைக்குச் சென்றிருக்கிறேன். நான்காம் ஈழயுத்தத்தில் அந்த தண்ணீர்தாங்கியைப் புலிகள் வீழ்த்திவிட்டு கிளிநொச்சியை விட்டுப் பின்வாங்கினார்கள். ஒருமுறை கிளிநொச்சிக்கு வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே புலிகளால் வீழ்த்தப்பட்டதால் அந்த தண்ணீர்தாங்கியை வெற்றிச் சின்னமாகப் பாதுகாக்கும்படி தனது படைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். வீழ்த்தப்பட்ட தண்ணீர்தாங்கியைப் பற்றிய படைகளின் வீர வசனங்களுடன் புனித வேலியையும் சிங்கள இராணுவம் அமைத்தது.


அண்மையில் நான் படித்த பள்ளிக்கூடத்தின் பழமையான கட்டிடம் ஒன்றை அழித்தார்கள். கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே கிளிநொச்சிக்கு வந்த பொழுது அந்தக் கட்டிடத்தை மறைத்து பச்சை வலைகட்டினார்கள். கட்டிடத்தை அழித்துப் புதிய கட்டிடம் கட்டப் போகிறோம் என்றார்கள். திடீரென எங்கள் பள்ளியின் அந்தக் கட்டிடத்தை அழித்தபொழுது பள்ளிக்குள்ளிருந்து பல முகங்கள் வாடியபடி பார்த்தன. அந்தக் கட்டிடம் மூன்று ஈழ யுத்தங்களைச் சந்தித்த கட்டிடம். அதன் சுவர்களில் இருந்த பாரிய ஓட்டைகளை செல்கள் துளைத்திருக்கின்றன. யுத்த அழிவுகளிலும் அது கம்பீரத்தோடு நிமிர்ந்து நின்றது. அழிந்த அந்தக் கட்டிடத்திற்குள் படித்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு அது வெறும் கட்டிடம் அல்ல.
என்னைப் போன்ற பலருக்கு அந்தக் கட்டிடத்தை நினைவுச்சின்னமாக்கிப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. யுத்தம் தின்ற பள்ளிக்கூடம் என்று ஈழப் பத்திரிகை ஒன்றில் எழுதிய தொடரிலும் அதைக் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கட்டிடம் சிங்களப் பேரினவாத யுத்தம் தந்த அழிவின் சாட்சியாக நிற்கிறது என்று கருதி அந்தக் கட்டிடத்தை அழிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் வாழ்ந்த வீடுகளும் வாழ்ந்த கட்டிடங்களும் அழிக்கப்படுகின்றன. ஆனால் சிங்கள அரசின் யுத்த வெற்றிகளை நினைவு கூரும் இடங்களும் யுத்த வெற்றியைப் பொழுதுபோக்காக ருசிக்கப்பண்ணும் இடங்களும் நாங்கள் வாழ்வுக்குத் தவிக்கும் தேசத்தில் உருவாக்கப்படுகின்றன.
நம்மில் சிலர் சிங்களவர்களை இணைத்துக்கொண்டே போராட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் சிங்களவர்கள் நாளும் பொழுது வடக்கிற்கு வந்து செல்லுகிறார்கள். ஆனால் எந்த இணக்கமும் உருவாகவில்லை. சுற்றுலா வரும் சிங்களவர்கள் தமிழர்களைக் கைதிகளைப் போல பார்க்க, தமிழர்கள் சிங்களவர்களை எதிரிகள்போலப் பார்க்கிறார்கள். ஆனால் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை வென்ற பின்னர் தான் இன நல்லிணக்கத்தைக் கொண்டு வந்து விட்டதாகச் சொல்லுகிறார். எல்லோருடைய கண்களும் திறந்திருக்கும் நிலையில் எல்லாவற்றையும் எல்லோரும் பார்க்கும் நிலையில் மெய்யாகவே சிங்கள மக்கள் எங்கள் துயரங்களை அறியாதவர்களா என்ற கேள்வி எழுகிறது.
முறிகண்டி, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்தின் இடையில் பேருந்துகள் தரிக்கின்ற இடம். அங்கு ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. காலம் காலமாக அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தி பயணிகள் தேங்காய் உடைத்து பிள்ளையாரை வழிபடுவார்கள். அந்தக் கிராமத்தைக் கைப்பற்ற சிங்கள இராணுவம் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியது. மக்கள் நிலத்திற்காகப் போராடினார்கள். நீண்ட போராட்டத்தின் பின்னர் முகாம்களிலிருந்து மீள்குடியேற்ற கொண்டு வந்த மக்களை மீண்டும் நிலத்தைத் தருமாறு வற்புறுத்தி மிரட்டி மீண்டும் முகாமுக்கு அனுப்பியது இராணுவம். தொடர்ந்து மக்கள் போராடிய பொழுது இறுதியில் இறங்கி வந்தது இராணுவம். இந்தக் கதைகள் வன்னியை அதிரப்பண்ணுகின்றன. தமிழ் பத்திரிகைகளை மட்டுமன்றி சிங்களப் பத்திரிகைகளையும் அதிரப் பண்ணுகின்றன.
ஆனால் இவை ஏன் சிங்கள மக்களின் கண்களில் தெரியவில்லை. நிலத்திற்கும் வாழ்வுக்கும் போராடும் மக்களின் துயரம் ஏன் புரியவில்லை. எங்கள் கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகளின் முன்பு நிலப்பிரச்சினை வந்தது. கடுமையாகப் போராடிய பின்னர் நிலங்கள் மக்களுக்குக் கிடைத்தன. இப்பொழுது மீண்டும் சுமார் நாற்பது குடும்பங்களின் குடிநிலங்களைச் சூறையாடும் நடவடிக்கையில் ஈடுபட முனைந்தபொழுது இன்னுமா சூறையாட வருகிறார்கள்? இன்னுமா போராட வேண்டும் என்ற துயரக்கேள்விகள் எழுந்தன. நாங்கள் இப்படித்தான் தொடர்ச்சியாக துயரத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகிறோம். யுத்தத்தில் எல்லாம் அழிந்து இழந்து வாழ வேண்டும் என்று திரும்பியிருந்தோம். மிகவும் மோசமான ஒரு கூடாரத்திற்குள்ளும் வாழ முடியாத நிலம் தின்னும் சாபம் நம்மைச் சூழ்ந்திருக்கிறது.
முள்ளிவாய்க்காலின் தெருவில் நடந்து செல்ல வேண்டும் என்று நானும் லியோவும் திட்டமிட்டோம். புதுக்குடியிருப்பிலிருந்து வட்டுவாகல்வரை மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படாதிருந்தது. அந்த வீதிகளில் பேருந்துகளில் செல்ல மட்டுமே அனுமதியுண்டு. பேருந்துகளை விட்டு இறங்கிச் செல்ல இராணுவம் அனுமதி மறுத்திருந்தது. நாங்கள் போர்த்தளவாடக் கண்காட்சி நடந்த மாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்து செல்லத் தொடங்கினோம். இடையிடையே இராணுவத்தினர் காவலரண்களில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களைத் தடுத்து போக வேண்டாம் என்று சொன்னார்கள். மொழி தெரியாதவர்களாகவே, அவர்கள் சொல்வதைப் புரியாதவர்களாகவே நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம்.
நடந்து செல்லும் எங்களைத் தாண்டி சிங்கள சுற்றுலாப் பயணிகள் பலரின் வண்டிகள் சென்றன. அவர்கள் நாங்கள் கொஞ்ச தூரம் செல்லுமுன்பே அங்குமிங்குமாகச் சென்று கொண்டிருந்தார்கள். முள்ளிவாய்க்காலில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எல்லாம் அழிவின் காட்சிகள். அழிந்து உக்கிய இரும்புகளாகக் குவிக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தை மண்டபத்தில் இருப்புகளைக் கடத்துபவர்கள் முகாமிட்டுள்ளார்கள். அவர்களுக்கு இராணுவத்தினர் காவல் காக்கின்றார்கள். அழிந்த தமிழர் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தொடர்ந்தும் உள் பகுதிகளுக்கு இறங்க அனுமதிக்காத நிலையில் வழியில் நடந்து சென்று கொண்டிருந்தோம்.
கரையாம் முள்ளிவாய்க்காலில் சில மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு துண்டிக்கப்பட்ட வலயத்தைப்போல இருந்தது அந்தப் பகுதி. இராணுவத்தின் ஒரு கடையிருந்தது. அங்கு குளிர்பானங்களும் பிஸ்கட் பாக்கெட்டுக்களும் இருந்தன. முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த பொழுது பின்னேரமாக இருந்தது. எங்களைப் பார்த்த மக்கள் பேசுவதற்கே அஞ்சினார்கள். எங்கட ஊரில என்ன நடக்குது என்றே எங்களுக்குத் தெரியவில்லை என்றார்கள். எங்கள் முகத்தைப் பார்த்த அந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் கதிரையைப் போட்டு உட்கார்ந்திருக்கும் இராணுவத்தை முகத்தை திருப்பி சைகையால் காட்டினார்கள். எனக்கு அவர்களுடன் பேச முடியவில்லை. நாங்கள் பகலில் இங்கு வந்திருக்கிறோம். இரவில் முல்லைத்தீவில் சென்று தங்குகிறோம் என்பதை மட்டும் அந்த மக்கள் இறுதியாகச் சொன்னார்கள்.
2007ஆம் ஆண்டில் யுத்தம் தொடங்கிய ஆரம்பத்தில் யோர்தான் கப்பல் ஒன்று முல்லைத்தீவில் தரித்தது. அந்தக் கப்பல் இப்பொழுதும் காயங்களுடன் நிற்கிறது. அந்தக் கப்பலைப் பார்க்க நிறை நிறையாக சிங்கள மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுள் கலந்து நாங்களும் செல்ல முற்பட்டோம். எங்கள் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்துவிட்டு முதலில் உள்ளே அனுப்பிய இராணுவச்சிப்பாய் மீண்டும் அழைத்தான். நீங்கள் உள்ளே செல்ல முடியாது என்றான். ஏன் என்று கேட்டபொழுது நீங்கள் வாகனத்தில் வரவில்லை, நடந்து வந்தீர்கள் என்றான்.
ஒரு சிங்களச் சுற்றுலாப் பிரயாணியாக இருக்க வேண்டுமென்பதை அந்த சிப்பாய் இப்படித்தான் சொன்னான். இப்படித்தான் தமிழர்களையும் சிங்களவர்களையும் இராணுவத்தினர் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். இதுதான் தமிழர்கள் நிலத்தில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள இடம். இப்பொழுது முள்ளிவாய்க்கால் எப்படி இருக்கிறது என்பதைத் தமிழர்கள் யாரும் பார்க்க முடியாது. அது சிங்கள மக்கள் பார்க்கும் இடமாகவே இருக்கிறது. முள்ளிவாய்க்கால் பிரதான தெருவை அண்டிச் சில குடும்பங்களை, வீடுகளை வந்து பார்த்துவிட்டு பகலில் தங்கிச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறது இராணுவம். முள்ளிவாய்க்கால் அந்த ஊரின் மக்களே வாழ முடியாத நிலையில் இருக்கிறது. கெலும் நவரத்தினே, ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த மக்கள் போராட்ட இயக்கத்தினைச் சேர்ந்தவர். இதழியலாளர். ஜே.வி.பி. இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்று சொல்லியே மக்கள் போராட்ட இயக்கம் பிரிந்து வந்தது. கெலும் நவரத்தி னேவைக் கடந்த யூன் மாதம் கொழும்பில் சந்தித்தேன்.
எங்கள் தேசத்தில் நடக்கும் பிரச்சினைகளைக் குறித்து அவரிடம் பேசிய பொழுது எல்லாம் அரசாங்கத்தின் செயற்பாடு என்றும் ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சினையின் உக்கிரத்தை தனித்துவமாகப் புரியாமல் பேசும் அவரிடம் மீண்டும் மீண்டும் பேசிய பொழுது தோல்வியே ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கை என்ற முகமூடிக்குப் பின்னால் மிகவும் இறுக்கமான இனவாதத்தையே என்னால் உணர முடிந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே போன்ற சிங்கள இனவாதிகள் இந்த நாடு எல்லாருக்கும் சொந்தமானது என்று சொல்வதன் மூலம் எங்கள் போராட்டத்தையும் எங்கள் மீதான இனவழிப்பையும் மூடி மறைப்பதுபோல, உங்களைப் போன்றவர்கள் இடதுசாரிக் கொள்கை என்று இனப்பிரச்சினையை மூடி மறைக்கிறார்கள் என்று அவரிடம் சொன்னேன். இப்பொழுது நாங்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வதற்குப் போராடுவதைக் குறித்து அறியாததுபோலவே அவர் பேசினார்.
கெலும் நவரத்தினேவிடம் இறுதியாக ஒன்றைக் கேட்டேன். 2009ஆம் ஆண்டு மே வரை இலங்கையின் வடக்கில் ஒரு கொடும் யுத்தம் நடந்து லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கை ஜனாதிபதி ஈழமக்களை இனப்படுகொலை செய்தார் என்று உலகத்தின் பல்வேறு சமூகங்கள் பேசின. எனவே அப்படி யொரு இனப்படுகொலை நடந்ததை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அல்லது அது பற்றி மக்கள் போராட்ட இயக்கம் பரிசீலிக்கிறதா அல்லது ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? என்று கேட்டேன். ஒரு இனப்படுகொலை பற்றிய கேள்விக்கு ஒரு சிங்கள இடதுசாரி இளைஞனிடம் பதில் எதுவும் இருக்கவில்லை.
உண்மையில் எங்கள் துயரங்கள் சிங்களவர்களுக்குத் தெரியாததா?

No comments: