ஆஸியை சுழலில் மிரட்டிய இந்திய அணி முதல் டெஸ்டில் அபார வெற்றி


26/02/2013

 இந்திய -அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.






இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. இதில் சென்னையில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.


இந்நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிம்மசொப்பனமாக திகழ முதல் இன்னிங்ஸ{க்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 380 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அணித் தலைவர் கிளார்க் 130 ஓட்டங்களையும் ஹென்ரிஹியூஸ் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணியை சுழலில் மிரட்டிய அஸ்வின் 103 ஓட்டங்கயைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதையடுத்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்பம் தடுமாற நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் கை கொடுத்தனர். இந்திய அணிக்கு சச்சின் 81, கோலி 107, தோனி 224 ஆகியோர் கை கொடுக்க இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 572 ஓட்டங்களைப்பெற்று 192 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

இதன்படி 192 ஓட்டங்கள் பின்னிலை பெற்ற அவுஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க மீண்டும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிம்மசொப்பனமாகவே திகழ நிலைதடுமாறியது.

இந்நிலையில் இந்தியச் சுழலில் சிக்கிய ஆஸி சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை மத்திரமே பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் அவ்வணி சார்பாக ஹென்ரிஹியூஸ் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஏனைய வீரர்கள் எவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை.

இந்திய அணி சார்பாக அஸ்வின் 5 விக்கெட்டுக்களையும் ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 50 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி இந்திய அணி 4 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கின்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவு செய்யப்பட்டார்.
தொடரின் இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.
நன்றி வீரகேசரி 

No comments: