கொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான் - கரவைக்குரல்

.


ஈழத்து முற்றத்திலிருந்து மகிழ்ச்சியுடன் உல்லாசமாயிருக்கும் அனைத்துப்பதிவர்களுக்கும் வணக்கம்.
நானும் உங்களுடன் இணைந்துகொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.
ஆரம்பத்தில் என்ன பதிவிடுவது என்ற சின்ன எண்ணச்சிக்கலில் இருந்த எனக்கு இதன் ஆரம்பகர்த்தாவாகிய கானாவின் ஆமோதித்தலுடன் என் கரவைக்குரல் பதிவில் இட்ட பதிவை மீள்பதிவிடுகிறேன்,ஏனென்றால் இது எம் ஈழத்துடன் கொஞ்சம் தொடர்புபட்ட பதிவாகையாலும் ஈழத்துமுற்றத்தில் இருக்கும் எல்லா பதிவர்களும் பார்த்திருப்பார்களோ என்ற எண்ணத்தினாலும் இதை மீள்பதிவிடுகிறேன்,

"சீனப்பா சீனப்பா" என்று ஒருவர் இருந்தார் கரவெட்டி கோவிற்சந்தைக்கு கிட்டடியில்.இது ஏதோ அரசகதை சொல்ல தொடங்குவது போலல்லவா இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகனசேவை ஓடி பிரசித்தமான ஒருவர்.அவரைத்தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து சேவை செய்தவர்கள்
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்கள் கையில்தான் தட்டி வான் என்று சொல்லப்படும் ஒருவாகனத்தை நான் சிறுபராயம் முதலே கண்டவன். இப்போது ஒரு சில வாகனங்கள் கொடிகாமத்துக்க்கு ஓடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது ஈழத்திலிருந்து.


தட்டிவானில் நானும் பயணித்தவன் ஒரு சிலகாலங்கள் பாடசாலைக்கு.அதில் பின்னுக்கு உள்ள தட்டியில் நின்று செல்வதில் ஒரு அளவுகடந்த சந்தோசம். அதுவும் இன்னும் ஒருவிடயம் ஊர்களுக்கு இடையிடையே இந்த தட்டிவான் பயணிக்கும்போது சிறுபராயம் ஆகையால் சத்தம்போட்டு,கும்மாளம் அடித்து செல்வது வழமை.
வாகனத்துக்கு முன்னே ஆசிரியர் ஈஸ்வரநாதன் இருப்பார். அவர் கொஞ்சம் " என்ன..... சத்தம் ......." என்று கேட்க கொஞ்சம் குறையும். பின்னர் அதுவும் கொஞ்சம் மறந்து போக அது கூடும்.



ஒரு நாள் வழமை போலவே சத்தங்கள்போட்டவாறே ஊர்களுக்கு இடையிலே வாகனம் நகர்ந்து செல்கிறது. அணிஞ்சிலடி என்று சொல்லப்படும் ஒரு இடம், அங்கு கொஞ்சம் உள்ளுக்குள் தென்னைகள் அதிகம். அது அங்கிருந்தவகளுக்கு நன்றாகத்தெரியும். அதில் உள்ள தென்னைகளில் உள்ள தென்னோலைகளை ஒவ்வொன்றாக இழுத்து அதை முறிதெடுத்து கொடிகாமம் வீதிவழியே இழுத்துக்கொண்டவாறே ;சென்று அதை சாமியன் அரசடியில் விடுவதில் மிகப்பெரிய சந்தோசம் சிறுவர்களுக்கு. இதை முன்னால் இருந்த ஆசிரியர் அவதானித்தாலும் யார் இதை செய்கின்ற மகான் என்று அவருக்கு தெரியாது.கடைசியில் ஒரு நாள் முடிவெடுத்து எல்லொருக்கும் கொஞ்சம் பதம் பார்த்தார் ஆசிரியர் பக்கத்திலிருந்த பூவரசு மரத்தடியினால்.இதில் கோசலன் மற்றும் நான் எல்லோரும் அடிவாங்கியதாக நினைவு
இப்படி ஒருவித்தியாசமான சுகங்கள் இந்த வாகனத்தில்.
இப்படியான தட்டிவான்கள் இப்போதும் கொடிகாமத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடான காலத்தில் இந்த வாகனம் மிகப்பெரும் உதவியாக இருந்தது என்பது உண்மைதான்.இப்போது அந்த வாகனம் "அவ்வளவு சரியில்லை" என்றும் "நாகரிகம் இல்லை" என்றும் ஒதுக்கிவருவதும் சுட்டிக்காட்டபட வேண்டிய விடயம். அதை விட்டுவிட்டு இப்போது நாகரிகமான வாகனங்கள் தேடிவருவதும் அறிய முடிகிறது.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்களும் அதேபோல வடமராட்சி பிரதேசத்தில் இந்த வாகனம் ஓடுவது பற்றி சிலர் நையாண்டி பண்ணுவதும் காணமுடிந்தது.
இது நம்பாதைகள் பற்றி சிந்திக்காத,அறியாத நம்மவர்கள் உள்ளத்திலுருந்து வந்து அவர்கள் வாயினூடாக மட்டும் தான். ஆனால் கொடிகாமசந்தைக்கு இது தான் இருக்கின்ற வாகனங்களில் சிறப்பு.
இப்படியான வாகனம் போலவே ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயிலும் காணமுடிந்தது.
அதுவும் பாடசாலை சேவைக்கே முற்றுமுழுதாக பயன்படுத்திவரப்படிகிறது.முற்றிலும் சிறிய அளவிலான யன்னல்கள் சூழ்ந்திருக்க ஒருவழிப்படுத்தபட்ட பாதுகாப்பான கதவு,ஆனால் இங்கு தட்டி என்று சொல்லப்படும் பின்னுக்கு அமையும் பகுதி இல்லை.சிலவேளைகளில் தென்னோலை விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டாங்களோ தெரியாது.இங்கும் பிள்ளைகள் சந்தோசமாக செல்லும்போது இந்த பதிவு என்னை இடச்செய்திருக்கிறது.அதுமட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது சேவையில் இருக்கிறது என்று அறிய முடிகிறது.
மொத்தத்தில் தட்டி வான் என்பது யாழ்ப்பாணத்தில் அருகிவருகிறதோ என்று சிந்தித்த போது அது டுபாய் மற்றும் மற்றைய நாடுகளில் ஓடுவது அதன் இருப்பை தெளிவுபடுத்தியிருக்கிறது.,

Nantri :ஈழத்து முற்றம்

No comments: