வணிக சஞ்சிகைகளில் தொழில்நுட்பத் தமிழ் - யசோ பத்மநாதன்



.
நேற்றைக்கு வேலைக்குப் போகும் அவசரத்தில் கையில் அகப்பட்ட ஒரு சஞ்சிகையைத் தூக்கி பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன்.வாராந்த ‘குங்குமம்’ சஞ்சிகை. ஏதோ ஒரு பண்டமாற்றடிப்படையில் வீடு வந்து சேர்ந்திருக்கின்றது.

புரட்டிய போது தமிழ் எவ்வளவு அவசர அவசரமாகப் பயனிக்கின்றது என்று தெரிந்தது. நாவல்கள், நெடுங்கதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள் எல்லாம் சுருங்கி ஒரு பக்கக் கதைகளாகவும், துணுக்குகளாகவும்  twitter, Facebook முகப்புப் பக்க வரிகளாகவும் மாறிப்போனதைக் காண முடிந்தது.

ஒரு சிறுவரியில் நச்சென்று சொல்லி விட்டுப் போவதை போகிற போக்கில் பார்த்து விட்டுப் போகும் அவசரம்!

தமிழில் அது மெல்லச் சுவறுகிறது.

காலமாற்றம் ஒன்று கண்ணில் தெரிகிறது.

தமிழும் இலக்கியமும் கூட இடம்மாறி அவசர அவசரமாக ஓடுவதாகத் தோன்றுகிறது. எண்ணிம யுகத்துக்குள் புத்தாடை புனைந்தவாறு புதுத் தமிழ் நிற்கிறது. தொழில்நுட்பம் எழுத்தாளர்களை வாசகர்களாகவும் வாசகர்களை எழுத்தாளர்களாகவும் இடம்மாற்றிப் போட்டிருப்பதால் இணைய வெளி எங்கும்; மக்கள் கூடும் சமூக வலைத்தளங்கள்  எங்கும்; சிறுகதைகளுக்கான கருக்கள் மலிந்து கிடக்கின்றன. ஒரு நையாண்டியோடு நகைச்சுவையோடு இரண்டு வரியில் தமிழ் இப்போதெல்லாம் அதைச் சொல்லிப் போகிறது.

கலைப்படுத்தல், இலக்கியமயப்படுத்தல், அழகுபடுத்தல் எல்லாம் வேண்டாத ஒன்றாய் ’சிம்பிளாய் ரெண்டு வரி’ என்ற அளவில் குறுகிப் போயிற்று.

“வீரம் அன்று; விதி அன்று; மெய்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக் கென்னுடல்
பாரம் அன்று: பகை அன்று - பண்பொழிந்து,
ஈரம் இன்றி, இது என் செய்தவாறு நீ?”


என்று வாலி இராமனைப் பார்த்துக் கேட்குமிடத்தை வாலிவதைப் படலத்தில் பார்த்து, படித்து,ஆசிரியரிடம் கேள்வி கேட்டு,கேட்டு, ரசித்து,வியந்து, பாடி,பாடமாக்கி,புளோகாங்கிதமடைந்த காலங்கள் எல்லாம் போயே போயிற்று.

இப்போதெல்லாம்

பேதைப் பெண்ணே,
நட்ட மரத்துக்கு நீரூற்ற மறந்து விட்டு
பட்ட மரத்துக்கு ஏனடி
பம்செட் வைக்கிறாய்?

என கேலி செய்யும் காலமாய் ஆயிற்று காலம்! :-)

இலக்கியத்தனம் அதன் சுவையுணர்ச்சி ரசனை அதை ஆழ்ந்து அனுபவிக்கும் தன்மை குறிப்பிட்ட ஒருசாராருக்கென ஒதுங்கிப் போகிறதோ? சுருங்கிப் போகிறதோ? கால வெள்ளம் தகவல் குப்பைகளை வாழ்வாதாரமாக்குகிறதோ? யாருக்கும் நின்று கேட்க பொறுமையும் அவகாசமும் இல்லாமல் மாய மானைத் தேடி தமிழும் ஓடுகிறது.

அவற்றை வணிகப்பத்திரிகைகளும் சிறப்பாகப் புரிந்து கொண்டிருக்கின்றன.

நான் பார்த்த சஞ்சிகையில் கிடைத்த தகவல்கள் சுவாரிஷமாகவும் இருந்தன. கொஞ்சம் ஆழமாய் இவற்றைப் பார்த்தோமானால் இவைகளுக்குள் எல்லாம் சிறுகதைகளுக்கான கருக்கள் / விதைகள் ஒழிந்திருப்பதையும் கண்டு கொள்வீர்கள்.

சில :

1. ஒரு அஞ்சு வருஷம் கஸ்டப்பட்டா அரசியல் வாதியாயிடலாம்.ஆனா, அதுக்கப்புறம் வாழ்க்கை முழுக்கக் கஸ்டப்பட்டாலும் மனுஷன் ஆக முடியாது.

2.’கொலையும் செய்வாள் பத்தினி’
என் மனைவி சமைக்க ஆரம்பிச்ச பின்னால தான் இதுக்கு அர்த்தம் புரிஞ்சுது.

3.கடவுளுக்கு நம்மப் பிடிக்கல்லனா டாக்டர்கிட்ட அனுப்புறாரு. டாக்டருக்கு நம்மப் பிடிக்கல்லனா கடவுள்கிட்ட அனுப்புறாரு.

4.பொங்கல் சாப்பிட்டும் தூக்கம் வரல்லன்னா உலகில் வேறெந்த மருந்தும் உங்கள தூங்க வைக்காது.

5.சூதும் வாதும் தூங்கி வழிகிறது அரசாங்கத்திடம். கேட்டால் அதெல்லாம் ’அரசியல் சானக்கியம்’ என சமாதானம் சொல்லப்படுகிறது.

6.வாழ்க்கைய உருப்படியா வாழணும்மா ‘வாழ்க்கை ஒரு... ‘என்று ஆரம்பிக்கிற எந்த தத்துவத்தையும் கண்டுபிடிச்சிடக்கூடாதுப்பா.

7.இப்பல்லாம் நேரத்துக்கு ஒழுங்கா கரண்ட் போக மாட்டேங்குது.

8.தோழா... தோழா... தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்....
அப்பத் தான் உன் பொக்கட்டுல என்ன வச்சிருக்கான்னு எட்டிப் பாக்கலாம்.

9. எவ்வளவு புன்னகைக்க வேண்டும் என்பதை அனுதினமும் கற்றுக் கொடுக்கிறது நகர வாழ்க்கை.

10. எனக்கு விருப்பமில்லா விடயங்களில் இருந்து என்னைக் காப்பாற்றி விடுகிறது மறதி.

11.பெண்கள் கண்களால் பார்ப்பதை இவன் தன் இஸ்டப்படி மொழிபெயர்த்துக் கொள்கிறான்.

12.சில நிமிடங்களில் வெளிப்படுத்திய காதலை, வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து நிரூபிக்க வேண்டி இருக்கிறது.

13.அடேங்கப்பா என அசத்திய ஒரு விஷயம் ‘அட, போங்கப்பா, எனச் சலிக்கவும் வைப்பதுண்டு.

14.’பாலூட்டி வளர்த்த கிளி’ பாடலக் கேட்டிட்டு கிளி பால் குடிக்குமா என்று கேட்டால் முறைக்கிறாங்க.

15.வீட்டருகே செல்லும் காரை குரைத்துக் கொண்டே துரத்திச் சென்று விட்டு, தனக்குப் பயந்து கார் ஓடிவிட்டதென கர்வத்தோடு வரும் நாயைக் கொஞ்சத் தோன்றுகிறது.

16. டம்ளருக்குள் அடிக்கும் புயல் தேனீரை ஆற்றவே பயன் படுகிறது.

17.சிறுவீடு
ஒரு தோட்டம்
சில பூக்கள்
நிலா
நீ
வா காதலிக்கலாம்.

18.பறவைகளின் வாழ்வில் பரிநாம வளர்ச்சி என்பது கிளைகளில் இருந்து வயர்களுக்குத் தாவியதே.

19.சக மனிதர்களாகப் பார்க்காமல் பிற மதத்தினராகப் பார்க்கும் மதங்கள் உண்மையில் இறைவனையும் தலைகுனிய வைக்கின்றன

20.ஆண்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் நிம்மதியா இருக்கணும்.பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாம நிம்மதியா இருக்கணும்.

சின்னஞ்சின்னனாய் பூக்கும் சிறு சிறு கவிதைகள் (நன்றி: ஆ.வி.)
1.
.தாத்தா பார்த்த ஆறு
அப்பா பார்த்த நீர்
நான் பார்த்த மணல்
மகன் பார்க்க எது?

-ராஜா. சந்திர சேகர் -

2.
ஃபேஸ்புக்கில் கிரிக்கெட்டர்களை
விமர்சித்தேன்
ஆர்க்குட்டில் அரசியல் பேசினேன்
புளொக்கில் திரையுலகை பின்னி எடுத்தேன்.
ஸாரி... அப்பா
உங்களிடம் அடுத்த வாரம் பேசுகிறேன்

- சந்திரா.சிவபாலன்.-

3.
முட்டக் குடித்து
தன்னிலை மறந்து தூங்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதாக
சொன்னவனிடம்
ஒரே ஒரு காரணம் மட்டும்
சொல்லும் படி கேட்டாள் அவள்
அவனும் சொன்னான்.
‘இதெல்லாம் ஒரு காரணமா?’
என்றவளையும் சேர்த்து
இப்போது இவனிடம்
ஆயிரத்தியொரு காரணங்கள் இருந்தன.

- பா. ராஜாராம்.-

4.

நாங்கள் கூட பாபர் மசூதிகள் தான்
இடிப்பதற்கு எத்தனையோ பேர்
கட்டத் தான்
யாருமில்லை.

(யாரோ)

5.

என் சட்டையில்
எத்தனை ஓட்டைகள்
எதிர் வீட்டு ஜன்னலில்
எத்தனை சட்டைகள்?

(யாரோ)


Nantri : Jaso அக்ஷ்ய பாத்ரம்

No comments: