இறுதிப் போட்டியிலும் இலங்கைக்கு தோல்வி: 3-0 என தொடரை கைப்பற்றியது ஆஸி.

By M.D.Lucias
2013-01-06


அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இதனால் அவுஸ்திரேலிய அணி 3-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளில் பங்கேற்கின்றது.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியிருந்தது அவுஸ்திரேலிய அணி. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னியில் இடம்பெற்றது.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய இலங்கை அணி வேகமாக ஓட்டங்களை பெற்ற அதேவேளை
அதேவேகத்தில் விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி 87.4 பந்துகளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களை முதல் இன்னிங்சிற்காக பெற்றது.

ஆரம்ப வீரராக களமிறங்கிய கருணாரத்ன 5 ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டில்சான் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து மஹேல களமிறங்கி சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரைச் சதத்தை கடந்து 72 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டமிழக்க மறுமுனையில் இருந்த லஹிரு திரிமனே 91 ஓட்டங்களை பெற்று சதத்தை தவற விட்டார்.

ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஜக்சன் பிரட் நான்கு விக்கெட்டுகளையும் மிட்சல் ஸ்ரெக் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 432 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டபோது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதில் மெத்தியூவ் வேட் அதிகூடுதலாக 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் 3ஆவது நாளான நேற்று 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிநாள் முடிவில் 225 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இலங்கை அணி சார்பாக ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய கருணாரட்ண மற்றும் டில்சான் ஜோடி 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதலாவது விக்கெட்டாக டில்சான் 5 ஓட்டங்களுடன் வெளியேறினா. இதனையடுத்து 2ஆவது விக்கெட்டுக்காக கருணாரட்ணவுடன் இணைந்து கொண்டார் மஹேல ஜயவர்த்தன. இந்த ஜோடி சிறப்பான இணைப்பாட்டத்தின் மூலம் 108 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த கருணாரட்ண 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஒரு முனையில் போராடிக்கொண்டிருந்த அணியின் தலைவர் மஹேலவும் 60 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

சிறப்பாக பந்து வீசிய அவுஸ்திரேலிய அணியின் மிட்சல் ஜோன்சன் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

3ஆவது நாளான நேற்று ஆட்டநேர முடிவின் போது டினேஸ் சந்திமால் 22 ஓட்டங்களுடனும் ரங்கண ஹேரத் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிளக்கமாமல் தொடர்ந்து இன்றை ஆட்டத்தை தொடர்ந்த போதும் சந்திமால் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் அரங்கு திரும்பினர். இதனால் இலங்கை அணி 278 ஓட்டங்களை பெறுவதற்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 141 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 42.5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் கவன் 36, பிலிப் 34, கிளார்க் 29 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் ரங்கண ஹேரத் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக பிரட் தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாக மைக்கல் கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை இத்தொடரின் பின்னர் சகல போட்டிகளிலும் இருந்து மைக்கல் ஹசி ஓய்வு பெற்றார்.

நன்றி வீரகேசரி

No comments: