.
சந்திப்பு: கார்த்தியாயினி
படைப்பாளியும் பத்திரிகையாளருமான முருகபூபதிக்கு அறிமுகம் அவசியமில்லை. நீண்டகாலமாக எழுத்துலகில் பயணித்துவரும் இவருக்கு சமூகப்பணியாளர் என்ற மற்றுமொரு முகமும் இருக்கிறது. சமீபத்தில் இலங்கைவந்திருந்தார். நேரடியாகவே அவரிடம் கேள்விகளை தொடுத்தோம்.
கேள்வி:
சிறுகதை, நாவல், கட்டுரை, பயணஇலக்கியம், சிறுவர் இலக்கியம், பத்திஎழுத்துக்கள் முதலான துறைகளில் எழுதிவருகிறீர்கள். இதழ்கள் மற்றும் இணையத்தளங்களிலும் உங்கள் ஆக்கங்கள் பதிவாகின்றன. சமகாலத்தில் உங்களது இலக்கிய முயற்சிகள் பற்றிச்சொல்லுங்கள்.
முருகபூபதி:
மீண்டும் எனது தாயகம் வந்துள்ளேன். நாட்கள் வேகமாக நகருகின்றன. ஒருமாதம் ஓடியவேகம் தெரியவில்லை. அவுஸ்திரேலியாவிலிருந்திருப்பின் இந்த ஒருமாதகாலத்துள் நிறைய எழுதியிருப்பேன். அங்கிருந்து நாம் இயக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பராமரிப்பிலிருக்கும் போரில் பாதிக்கப்பட்ட பிள்ளைளை (மாணவர்களை) நேரில் பார்ப்பதற்காக வந்த இடத்தில் பயணங்கள் அதிகம். வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, கிளி;நொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களை நேரில் சந்தித்தேன். விரைவில் கிழக்கு மாகாணம் செல்லவிருக்கின்றேன். அதனால் கிடைத்த நேர அவகாசத்தில் ஒருசில கட்டுரைகள்தான் இந்த ஒருமாத காலத்தில் எழுதமுடிந்தது.
எனினும் சமீபத்தில் மூன்று நூல்களை எழுதிமுடித்துள்ளேன். தமிழ்நாடு யுகமாயினி, அவுஸ்திரேலியா உதயம், இலங்கை தினக்குரல் ஆகிய இதழ்களில் முன்னர் எழுதிய சொல்லமறந்த கதைகள் தொடரை நிறைவுசெய்யாமல் தேனீ இணையத்தளத்திலும் அவுஸ்திரேலியா தமிழ்முரசு இணையத்தளத்திலும் எழுதி நிறைவுசெய்தேன். அவற்றுள் சிலவற்றை கனடா பதிவுகள் இணையத்தளமும் அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்தளமும் மறுபிரசுரம் செய்துள்ளன. எனது நண்பர் டொக்டர் நடேசன் தனது வலைப்பதிவிலும் இ.டம்பெறச்செய்தார். மேலும் சில இதழ்கள் அவற்றை மறுபிரசுரம் செய்திருக்கும் செய்தியும் சில நண்பர்கள் தங்கள் முகப்புத்தகத்தில் (Face Book) பதிவுசெய்திருக்கும் தகவலும் இங்கு வந்தபின்பே எனக்குத்தெரியும்.
நாம் கணினி யுகத்தில் வாழ்கின்றமையால் எழுதி அனுப்பி சில நிமிடங்களில் அவை தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் இடம்பெறும் அதிசயத்தை காண்கின்றேன்.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் என்ற தொடரை பாரிஸ் ஈழநாடு இதழில் எழுதியிருக்கிறேன். பின்னர் இத்தொடர் நூலாக வெளியானது. பன்னிரண்டு மறைந்த படைப்பாளிகளுடன் எனக்கிருந்த நட்பு, உறவுபற்றிய நினைவுக்கோலங்கள் அவை. அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. மேலும் 48 மறைந்த கலை, இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், சமூகப்பணியாளர்கள் பற்றிய நினைவுக்கட்டுரைகளை எழுதி முடித்து ஒரு தொகுப்பாக்கியிருக்கின்றேன். அதன் பெயர் காலமும் கணங்களும் தவிர ஒரு கட்டுரைத்தொகுதியும் அச்சுக்கு தயாராகியிருக்கிறது.
அண்மையில் வன்னியில் முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு உட்பட போரில் எமது மக்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று திரும்பினேன். சொல்ல மறந்த கதைகள் தொடர்போன்று சொல்லவேண்டிய கதைகள் என்ற தொடரையும் எழுதவிருக்கின்றேன்.
எனது இனிய நண்பர் திக்குவல்லை கமாலின் ஏற்பட்டில் ஒரு நிறுவனம் எனது சில கதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடவிருக்கிறது. சமகாலத்தில் இவைதான் எனது இலக்கியமுயற்சிகள்.
கேள்வி:
நீங்கள் அடிக்கடி இலங்கைவந்துசெல்லும் ஒரு படைப்பிலக்கியவாதி. அத்துடன் சமூகப்பணிகளிலும் ஈடுபடுபவர். அந்தவகையில் இம்முறை இலங்கை வந்த நோக்கம்?
முருகபூபதி:
1987 இல் அவுஸ்திரேலியா சென்றேன். புலம்பெயர்ந்து 25 வருடங்களாகிவிட்டன. எனினும் எனது வேர் தாயகத்திலும் வாழ்வு புகலிடத்திலும் படர்ந்திருக்கிறது. கடல்சூழ்ந்த கண்டம் கங்காருநாட்டின் பிரஜையாகியிருப்பதனால் எனது தாயகம் எனக்கு இரவல்தாய்நாடாகிவிட்டது. ஒரு மாத காலம்தான் எனக்கு இங்கிருப்பதற்கு விமானநிலையத்தில் அனுமதி தருகிறார்கள். ஆனால் எனக்கு இந்த முப்பது நாட்கள் போதாது. அதனால் குடிவரவுதிணைக்களம் சென்று மேலும் இரண்டு மாதங்கள் தங்கியிருப்பதற்கு பணம் செலுத்தி அனுமதிபெற்றுள்ளேன்.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது கல்வி நிதியத்தின் பணிகளுக்காகவே இம்முறை வந்தேன். கடந்த 2011 ஆம் ஆண்டு; நிதியத்தின் பணிகளுடன் நாம் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயற்பாடுகளுக்காகவும் வந்திருந்தேன். இம்முறை எனது பயணத்தில் இலக்கியப்பணிகள் இரண்டாம் பட்சமாகிவிட்டன. அதனால் இம்முறை எழுத்தாளர்களை சந்திப்பதை முடிந்தவரையில் தவிர்த்துவிட்டு போரில் பாதிக்கப்பட்ட எமது குழந்தைகளை சந்திக்கின்றேன். போர் நடந்த பிரதேசங்களில் சுமார் ஒரு இலட்சம் பெண்கள் தமது கணவன்மாரை பறிகொடுத்துள்ளனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் தந்தையை அல்லது தாயை அல்லது குடும்பத்தின் மூத்த உழைப்பாளியை இழந்துள்ளனர்.
நான் வீரகேசரியில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்;தில் போர்தொடர்பான செய்திகளை எழுதுவதற்கு நிருவாகத்தினால் பணிக்கப்பட்டிருந்தேன். அதனால் நான் பெற்ற அனுபவங்களை எனது சொல்லமறந்த கதைகள் தொடரில் பார்க்கலாம். நீடித்தபோரினால் முதலில் பாதிக்கப்படுவதும் இரண்டாவதாக பாதிக்கப்படுவதும் பெண்களும்ää குழந்தைகளும்தான் என்பது எனக்கு 1985-1987 காலப்பகுதியிலேயே தெரியும். இந்தப்போர் தமிழ் மக்களை எங்கே கொண்டு சென்று நிறுத்தும் என்பதும் தெரியும். அதனால்தான் அவுஸ்திரேலியா சென்றதும் எனது கவனத்தை பாதிக்கபட்ட குழந்தைகளின் கல்விசார்ந்த நலன்களை கவனிக்கும் தொண்டுநிறுவனத்தை ஸ்தாபிப்பதில் தீவிரமாகத்திருப்பினேன். அங்கு வாழும் இரக்கமுள்ள அன்பர்களுக்கு நானும் என்னுடன் இணைந்தவர்களும் விடுத்த உருக்கமான வேண்டுகோளினால் நல்ல பலனும் பயனும் கிட்டியது. 2009 ஆம் ஆண்டு போர்முடிவுக்கு வந்தபின்னர் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் புதிய ஆண்டின் தொடக்கத்தில் தைப்பொங்கல் காலத்திலும் எமது உதவிபெறும் மாணவசெல்வங்களுடன் பொழுதை செலவிடுகின்றேன். இந்தப்பயணத்தில் எமது நிதிய பிரதிநிதிகளும் இணைந்துகொள்கிறார்கள்.
நிதிக்கொடுப்பனவு நிகழ்வுடன் தகவல்அமர்வு, கலந்துரையாடல், மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றோம்.
படைப்பாளியும் பத்திரிகையாளரும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம்தான் நிற்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி கவிதைபாடுவதுடன் கதை எழுதுவதுடன், அறிக்கை தயாரிப்பதுடன் அவர்களின் பணி ஓய்ந்துவிடக்கூடாது. மேடைகளில் முள்ளிவாய்க்கால் பற்றி உரத்துப்பேசும் பல எழுத்தாளர்கள் அந்தப்பக்கம் செல்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும் ஏனோ தயங்குகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். எவரது அனுமதியும் பெற்று நான் இங்கு வரவில்லை. சாதாரண மனிதனாகத்தான் ஒவ்வொருதடவையும் வந்து திரும்புகின்றேன்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து உரையாடும் அதேசமயம்; காவல் கடமையிலிருக்கும் பொலிஸ் மற்றும் படையினருடனும் உரையாடுகின்றேன். எனக்கு சிங்களமும் சரளமாக பேசமுடியும் என்பதனால் இடைவெளி குறைவு. தொடர்பாடல் இறுக்கத்தை தளர்த்தும். யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பும் வழியில் நல்லூர் கந்தன் கோயிலுக்கும் சென்றேன். அங்கு வாயிலில் கடமையிலிருந்த இரத்தினபுரியைச்சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுடன் இன்முகத்துடன் உரையாடினேன். தங்கள் குடும்பத்தை தொலைதூரத்தில் விட்டுவிட்டு மாதவேதனத்துக்காக வரும் அவர்போன்ற பலருக்கு இந்த இனிய தொடர்பாடல் மனநிறைவைத்தரும் என்று நம்புகின்றேன்.
தெருவில் செல்லும்போது முன்பின்தெரியாதவராக இருந்தாலும் “ எப்படி இருக்கிறீர்கள்? நலமா?” என்று கேட்கும் நாகரீகத்தை புகலிட நாட்டில் கற்றுக்கொண்டேன்.
கேள்வி:
நீங்கள் சில இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து இயங்கியவர். கருத்தியலில் முரண்பாடுள்ளவர்களுடனும் நேசம் பாராட்டும் இயல்புள்ளவர் என அறிகிறோம். தற்போதுள்ள இலக்கிய அமைப்புகளுடன் தங்கள் உறவு எப்படி இருக்கிறது?
முருகபூபதி:
முன்னர் இலங்கையிலிருந்த காலத்தில் நீர்கொழும்பு இலக்கிய வட்டம் மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் நான் ஒரு தீவிர செயற்பாட்டாளன். ஆனால் இந்த இரண்டு அமைப்பும் தற்காலத்தில் இயங்குவதில்லை. இது எனக்கு மிகுந்த ஏமாற்றம்தான். அவுஸ்திரேலியா சென்றபின்னர் தமிழர் ஒன்றியம், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் முதலான அமைப்புகளை உருவாக்கினேன். இதில் தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலியா அமைப்பும் இயங்குநிலையிலிருக்கின்றன.
தமிழ் இலக்கிய கலைச்சஙகம் வருடந்தோறும் அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழாவை நடத்திவருகிறது. நடப்பாண்டில் பாடும்மீன் சு. சிறிகந்தராசா தலைவராகவும், கே.எஸ்.சுதாகரன் செயலாளராகவும் ஆனந்தகுமார் நிதிச்செயலாளராகவும் இயங்குகின்றனர். இவர்கள் மூவருமே படைப்பாளிகள்தான். அத்துடன் அருண்.விஜயராணி, கலைவளன் சிசு.நாகேந்திரன், ஆவூரான் சந்திரன். அல்லமதேவன், செல்வபாண்டியன், திருநந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி, கோகிலா மகேந்திரன், ஆழியாள் மதுபாஷினி உட்பட பலர் இந்த அமைப்பின் பணிகளில் இணைந்திருக்கினறனர். இவர்களும் படைப்பிலக்கிய மற்றும் வானொலி ஊடகத்துறையில் ஈடுபாடுள்ளவர்கள்.
அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டியங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தில் நானும் இலக்கிய நண்பர்கள் பேராசிரியர் அமீர் அலி, டொக்டர் நடேசன். கிருஷ்ணமூர்த்தி உட்பட வேறு சிலரும் இணைந்துள்ளோம். இவர்கள் கொழும்பில் நாம் மாநாடு நடத்தியபொழுது வந்து கலந்துகொண்டதுடன் மாநாட்டிற்கு ஆதரவும் வழங்கியவர்கள்.
இந்த ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாம் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் அங்கு வந்தபொழுது சந்திப்பு நடத்தினோம். பேராசிரியர் கா. சிவத்தம்பி மறைந்தபோது அஞ்சலிக்கூட்டமும் ஒழுங்குசெய்தோம்.
கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தை ஒரு அமைப்பாளராக இருந்தே அமைத்தேன். அதற்கான செயற்குழுவில் எனது பணி மாநாட்டின் அமைப்பாளருக்குரிய கடமைகளுடன் முடிவடைந்துவிட்டது. இம்மாநாடு தொடர்பாக எனது அனுபவங்களை ‘உள்ளும் புறமும்’ என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டேன். அதன் பிரதிகளை நானே விநியோகித்தேன்.
படைப்பிலக்கியவாதிகள் மண்டபம் திரளும் ரசிகர் மன்றத்தை உருவாக்கமாட்டார்கள். உரத்த சிந்தனைகொண்டவர்களைத்தான் வளர்ப்பார்கள்.
அண்மைக்காலமாக இலங்கையில் இயங்கும் இலக்கிய அமைப்புகள் குறித்து எனக்கு நிறைய ஏமாற்றங்கள். பொன்னாடையோ,பூமாலையோ, வெற்றுப்புகழாரங்களோ இல்லாத முழுமையான மாநாட்டையே நாம் நடத்திக்காண்பித்தோம். இதுபற்றி ஊடகங்களும் சிலாகித்து எழுதியிருந்தன. ஆனால், ஏமாற்றம் என்னவென்றால், அந்த அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டவர்களே பொன்னாடைகளுக்கும் பூமாலைகளுக்கும் வெற்றுப்புகழாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
எந்த ஒரு நூல்வெளியீட்டிலும் பொன்னாடைகளை பார்க்கமுடிகிறது. படைப்பாளிகள் மாப்பிள்ளை கோலத்தில் நிற்கின்றனர். ஏதிர்காலத்தில் இலக்கிய சங்கங்கள் மறைந்து பொன்னாடை போர்த்துவோர் சங்கங்கள் தோன்றும்.
பாரதி சொல்வார்: கவிதை எனக்குத்தொழில் என்று. படைப்பாளிக்கும் பத்திரிகையாளனுக்கும் எழுத்து ஒரு தொழில். மருத்துவம், கல்வி, சட்டம், கணக்கியல் முதலான துறைகளில் தொழில்புரிவோர் காலத்துக்குக்காலம் தமது துறைகள் தொடர்பான கருத்தரங்குகள். மாநாடுகள், பயிலரங்குகளில் கலந்துகொள்வார்கள். அங்கே புதிய புதிய விடயங்களை அறிந்து தமது துறையில் விசேட பயிற்சியும் பெறுவார்கள். அதனால் சமுதாயமும் பயனடைகிறது. அங்கு பொன்னாடை போர்த்தும் சடங்குகள் இல்லை.
ஆனால் படைப்பாளிகள் ஒரு சாதாரண நூல் வெளியீட்டிலும் வெற்றுப்புகழாரங்களையும் பொன்னாடை, பூமாலைகளையும்தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த இலட்சணத்தில் இலக்கியத்தின் தரம் உயரும் என்று எதிர்பார்க்க முடியாது. பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இலக்கியப்பிரதிகளை மேற்பார்வை செய்யும் பேராசிரியர்கள் குறித்தும் ஏமாற்றம்தான். அதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று படைப்பாளியும் பத்திரிகையாளனும் இயங்கவேண்டும். அமைப்புகளிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட புத்திக்கொள்முதல் இதுதான்.
கேள்வி:
முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதை அறிவோம். அதன் பிறகு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது தெரியவில்லை. அந்த மாநாட்டின் பிரதான அமைப்பாளர் நீங்கள் என்பதனால்தான் இந்தக்கேள்வியையும் உங்களிடம் கேட்கின்றோம்?
முருகபூபதி:
இந்தக்கேள்வியை கொழும்பில் இயங்கிய மாநாட்டுக்குழுவினரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். அந்த மாநாடு எத்தகைய இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் சவால்களைத்தாண்டியும் நடந்தது என்பதை விரிவாக உள்ளும் புறமும் நூலில் விபரித்திருக்கின்றேன். அந்த முதல் மாநாட்டிற்குப்பின்னர் கதவு திறந்தது. ஆதனால் மேலும் சில மாநாடுகள் நடந்தன. தமிழ்ச்சங்கம் நடத்தியது. தேசிய கலை இலக்கியப்பேரவையினர் நடத்தினர். விரைவில் ஐரோப்பாவில் தொடர்ச்சியாக இலக்கியச்சந்திப்பு நடத்தியவர்கள் இங்கும் அதனை நடத்தப்போகிறார்கள். கதவு திறக்கப்பட்டுள்ளது. தமிழ் பொதுச்சொத்து. எவர் வேண்டுமானாலும் தமிழுக்கு விழா நடத்தலாம். மாநாடு ஒழுங்கு செய்யலாம். ஆனால் எப்படிச்செய்கிறார்கள்? நடத்துகிறார்கள்? என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.
இலங்கையில் 2011 இல் நாம் நடத்தினோம். தொடர்ந்து இயங்குமாறும் சில யோசனைகளை வழங்கிவிட்டே சென்றேன். நான் தொடர்ந்தும் இங்கேயே தங்கியிருக்கமுடியாது என்பதை தங்களுக்கு முதலில் சொல்லியிருக்கிறேன். இயங்கவேண்டியவர்கள் இயங்கவேண்டும்.
அண்மையில் கிளிநொச்சிக்கு சென்றிருந்தபோது அங்குள்ள ஆசிரியர்கள், புத்திஜீவிகள், இலக்கியவாதிகளின் ஆதங்கங்களை பார்த்தேன். கொழும்பும் யாழ்ப்பாணமும் தங்கள் பகுதிகளை புறக்கணித்திருப்பதாக ஆதாரங்களுடன் விளக்கினார்கள்.
கிளிநொச்சியில் இரண்டாவது மாநாட்டை நடத்துவோமே… என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை இயங்குநிலையிலிருந்தே நிறைவேற்றவேண்டும். இல்லையேல் புதிய இயங்குசக்திகளை உருவாக்கவேண்டும். அவர்களின் ஆலோசனையை கவனத்தில் எடுத்திருக்கின்றேன்.
கேள்வி:
போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ்மக்கள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களின் செயற்பாடுகள் திருப்தி தருகின்றனவா?
முருகபூபதி:
சுமார் முப்பது ஆண்டுகாலம் இங்கே போர் நீடித்தமைக்கு பதவிக்கு வந்த அரசுகளோ அல்லது அவற்றை எதிர்த்துப்போராடிய இயக்கங்களோ மாத்திரம் காரணம் இல்லை. புலம்பெயர்ந்தவர்களும் இந்தப்போரை நீடிக்கச்செய்தவர்கள்தான். ஆனால் சமகாலத்தில் நிலை மாறிவிட்டது. ஒருகாலத்தில் ஆயுதங்களுக்கு நிதி கொடுத்தவர்கள், போர் முடிவுற்றதும் கல்வி, புனர்வாழ்வு, அபிவிருத்தி முதலான பணிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கின்றனர். இது காலத்தின் தேவை. புலம்பெயர்ந்து சென்ற பலர் தாயகம் திரும்பி பல்வேறு புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். ஆசிரமங்களை நடத்துகின்றனர். தற்கொலைகள், வன்முறைகளுக்கு எதிரான சிர்மிய முகாம்களை நடத்துகின்றனர் “தற்போது அபிவிருத்தி, தேசியம் என்ற இரண்டு சொற்களுக்கும் இடையில் எம்மவர்கள் மூச்சுத்திணறுகிறார்கள்” என்று கிளிநொச்சியில் நடந்த சந்திப்பில் ஒரு அன்பர் குறிப்பிட்டார். புகலிட நாடுகளிலும் இதுதான் நிலைமை. இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வருகைதரும் தமிழ் அரசியல்வாதிகள் தொடக்கம் நலன்பேண் அமைப்புகளின் பிரதிநிதிகள் வரையில் இந்த இரண்டு சொற்களையும் வைத்துக்கொண்டுதான் உரையாடுகிறார்கள்.
தமிழ்த்தேசியமும் காப்பாற்றப்படவேண்டும் தமிழ்ப்பிரதேசங்களில் அபிவிருத்தியும் நடக்கவேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. போர் நடந்த எந்தவொரு நாடும் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள்ää நெருக்கடிகள் எமக்கும் பொதுவானவைதான்.
புனர்வாழ்வுப்பணிகளுக்கு உதவும் அன்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புகலிடத்தில் எந்தவொரு நிதிதிரட்டும் கலைநிகழ்ச்சியும் ஈழத்தமிழர்களின் புனர்வாழ்வுக்காகத்தான் என்று விளம்பரப்படுத்தினால்தான் அதற்கு ஆதரவும் கிட்டும். அதனால் வாரவிடுமுறை நாடகள்தோறும் எங்காவது ஒரு மண்டபத்தில் ஒரு நிதி உதவி நிகழ்ச்சி நடந்துகொண்டுதானிருக்கிறது. அத்துடன் தமிழ் சமூக வானொலிகளும் ‘ரேடியோதோன்’என்ற நிகழ்ச்சிகளின் ஊடாக மக்களிடம் நிதிதிரட்டி அனுப்புகிறார்கள்.
கேள்வி:
நீங்கள் நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்ää முன்னாள் போராளி மாணவர்களுக்கும் உதவியதாக அறிகிறோம். அவர்களை தற்போது நேரடியாகச்சந்தித்திருந்தால் அவர்களின் மனவெளிப்பாடு எப்படி இருந்தது எனச்சொல்ல முடியுமா?
முருகபூபதி:
2012 ஜனவரியில் வெளியான மல்லிகை ஆண்டுமலரில் உங்களுடைய இந்தக்கேள்விக்கான பதிலை ஏற்கனவே ஒரு சிறுகதையாகவே எழுதியிருக்கின்றேன். எங்கோ… யாரோ…யாருக்காகவோ…என்பதுதான் கதையின் தலைப்பு. எவ்வளவுகாலத்திற்குத்தான் நாம் அவர்களை முன்னாள் போராளிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கப்போகிறோம். அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. அவர்களையும் வாழ்க்கை அழைக்கிறது. போர் முடிந்தபின்னர் வவுனியா தடுப்பு முகாமில் இருந்த அவர்களில் பலர் ஏற்கனவே கல்விப்பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பில் பயின்றுகொண்டிருந்தவர்கள். சந்தர்ப்பசூழ்நிலையினாலும் விருப்பமின்றியும் விருப்பத்தின்பேரிலும் போரில் இணைந்தவர்கள். இவர்களில் பலருக்கு பெற்றவர்கள் இருந்தார்கள். எமது கல்வி நிதியம் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ்க்குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. அதற்கென இருந்த நிதியை தந்தவர்கள் புகலிடத்தமிழ் அன்பர்கள். கல்வியை புத்தகப்பையை சுமக்கவேண்டிய பிள்ளைகள் கல்வியை நிறுத்திவிட்டு ஆயுதங்களை சுமந்தார்கள். தலைவர்களும் தளபதிகளும் களத்தில் இல்லை என்ற நிலை உருவானபோது அவர்களை நம்பி களத்திற்குவந்த இவர்கள் சரணடைந்தார்கள். தடுப்புமுகாமில் அடைபட்டார்கள். எங்கள் நிதியத்தின் பிரதிநிதி டொக்டர் நடேசன் அவர்கள் வவுனியா வந்து முகாம் பொறுப்பதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் மாணவர்கள் என்பதனால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கோரினார். பாடசாலை நிருவாகம் அனுமதிக்காது எனத்தெரிந்ததும் பிரத்தியேக வகுப்புகளை நடத்தி அம்மாணவர்களை பரீட்சைகளுக்கு தோற்றச்செய்வோம் என்று கேட்டுக்கொண்;டதும் அதற்கான அனுமதி கிடைத்தது. அவுஸ்திரேலியா வாழ் அன்பர்கள் இந்தத்திட்டத்தை வரவேற்றார்கள். விக்ரோரியா மாநில முன்னாள் ஆளுநரும் இந்தத்திட்டத்திற்கு உதவியளித்தார். பிரகதீஸ் சண்முராஜா என்ற உயர்வகுப்பு மாணவர் தனது மிருதங்க அரங்கேற்றத்தில் கிடைத்த நிதி அன்பளிப்புகளை இந்த புனர்வாழ்வு திட்டத்திற்கு வழங்கினார். சில தொண்டர் ஆசிரியர்கள் ஊடாக குறிப்பிட்ட மாணவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கி பரீட்சைகளில் தோற்றவைத்தோம். முகாம் அதிகாரியும் எமக்கு வழங்கிய உறுதிமொழியின்படி அவர்களை பம்பைமடுவில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். எங்கள் கடமை முடிந்துவிட்டது.
அதன்பிறகும், அவர்களை அழைத்து காட்சிப்பொருளாக்கி, எமது உதவி பெற்ற முன்னாள் போரளிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கவும் அவர்களின் ஒளிப்படங்களை ஊடக ங்களில் வெளியிடவும் நாம் தயாரில்லை.
அவர்களில் பெண்பிள்ளைகள் அநேகம். அவர்கள் எங்காவது தமது உயர்கல்வியை தொடராலாம். அல்லது வேலை வாய்ப்பு பெற்றிருக்கலாம். ஏன்…திருமணமும் முடித்திருக்கலாம். அவர்கள் சமூக நீரோட்டத்தில் கலந்துவிட்டவர்கள்.
ஆயுதங்களுடன் காடு,மேடு அலைந்த எங்கள்பெண்பிள்;ளைகளை, முன்னாள் போராளிகள் எனச்சொல்லி அடையாளமிடுவது எமது தமிழ் சமூகத்தைப்பொருத்தவரையில் ஆரோக்கியமான செயல் அல்ல.
கேள்வி:
புகலிடத்தில் எம்மவர் படைப்புகள் நூலுருவில் வெளியாவது குறைந்துவருவதை அவதானிக்கின்றோம். அதற்குக்காரணம் என்ன?
முருகபூபதி:
இணையத்தளங்கள், வலைப்பூக்கள், முகப்புத்தகங்கள்தான் அதற்குக்காரணம் என நினைக்கின்றேன். புகலிடத்தில் பெரும்பாலான படைப்பாளிகள் இவை மூன்றிலும் அல்லது ஏதாவதொன்றிலும் தினமும் நேரத்தை செலவிடுகிறார். ஆதனால் உடனுக்குடன் தான் எழுதுவதை உலகெங்கும் பரப்பிவிடுகிறார். எதிர்வினைகளையும் சம்பாதிக்கின்றார். பெரும்பாலான புகலிட வாசகர்கள் இணையத்திலேயே படித்துவிடுகிறார்கள். பத்;திரிகைகள், இதழ்களையும் உடனுக்குடன் இணையத்தில் பார்க்கிறார்கள். நூல்வெளியீட்டு நிகழ்வுகளில் புத்தகம் விற்றால் சரி. மற்றும்படி இலவசமாகத்தான் நூல்களை நகர்த்தவேண்டும்.
கேள்வி:
இந்த நேர்காணல் ஊடாக நீங்கள் என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?
முருகபூபதி:
மனிதாபிமானம், முற்போக்கு, தேசியம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் அதேசமயம் வாழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமும் நிற்க முயற்சிசெய்யுங்கள். தென்னிலங்கையிலிருக்கும் படைப்பாளிகள் போரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து குறைந்தபட்சம் ஆறுதலாவது சொல்லுங்கள். வரவிரும்புபவர்களை அழைத்துச்செல்லவும் நான் தயாராக இருக்கிறேன். 2009 மே மாதத்தின் பின்னர் இருந்து இந்த அழைப்பை விடுக்கின்றேன். மூன்றாவது தடவை இந்தப்பயணம் வந்தேன்.
---0---
No comments:
Post a Comment