.
1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர்.
புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன்
கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின்
படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம்
பற்றிய தகவல்களை சொல்லுங்கள்?
மிகச் சிறிய வயதிலேயே
எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி்ட்டது. அரசியல்
முழக்கங்களை உருவாக்கி சுவர்களில் எழுத ஆரம்பித்து, அரசியல் துண்டறிக்கைகள், கவிதைகள்,
நாடகம் எனப் பரப்புரை எழுத்துகளை எழுதியவாறே நான் எழுத்துத் துறைக்குள் நுழைந்தேன்.
பரப்புரை எழுத்துகள் என்பதற்கு அப்பால் தீவிர இலக்கியம் நோக்கி நகருவதற்கு ஏதுவான
நிலைமைகள் அப்போது என் சூழலில் இருக்கவில்லை.
எனது இருபத்தைந்தாவது
வயதில் பாரிஸ் வந்தேன். இங்கே ‘புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் ’ என்ற சர்வதேச
ட்ரொட்ஸ்கிய அமைப்போடு தொடர்பு ஏற்பட்டது. அமைப்போடு இணைந்திருந்த அந்த நாட்களில்
செவ்வியல் இலக்கியங்களும் நவீன இலக்கியங்களும் எனக்குக் கட்சித் தோழர்கள் மூலமாக
அறிமுகமாயின. அந்த நாட்களில் நான் அரசியலில் மாத்திரமல்லாமல் கலை, இலக்கியத்திலும்
கட்சியால் பயிற்றுவிக்கப்பட்டேன். பீற்றர் ஸ்வாட்ஸ், நிக் பீம்ஸ், ஸ்டீவ், ஞானா
போன்ற மிகச் சிறந்த ஆளுமைகளிடம் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் எனக்கு வாய்ப்புக்
கிடைத்தது. கட்சித் தோழர்களுடனான விவாதங்கள், உரையாடல்கள் மூலம் நான் எனக்கான எழுத்தைக்
கண்டடைந்தேன்.
2. புலம் பெயர்ந்து சென்ற பின்னரே தாங்கள் எம்மவர் மத்தியிலும் ஏனையோர்
மத்தியிலும் (பிறமொழிகளில் தங்கள் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டதனால்) நன்கு அறிமுகமானவர்.
தங்கள் இலக்கியப்பிரதிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் பற்றியும் வெளியாகும் எதிர்வினைகளுக்கு
முகம்கொடுக்கும்போது தங்கள் உணர்வுகளை வீச்சான மொழிகளில் வெளிப்படுத்துகிறீர்கள். அதனால்
தங்களது உணர்வுகளின் பின்புலம் (அரசியல் ரீதியாகவும்) பற்றிச்சொல்ல முடியுமா?
தேசியம், இனம், சாதி,
மொழி போன்ற எந்த வடிவில் அதிகாரம் மக்கள்மீது செலுத்தப்பட்டாலும் சமரசமில்லாமல் அதை
எதிர்த்து நிற்க வேண்டும். இதுவே எழுத்தாளனுக்கான அடிப்படை அறம். நிறுவப்பட்டிருக்கும்
நீதி அமைப்பும், சட்டங்களும், தத்துவங்களும், தேசியம் குறித்த கற்பிதங்களும், பொதுப்
பண்பாடும் இச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இந்தத்
திணிப்புகள் தேசியத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் கலாசாரத்தின் பெயராலும் இனவுணர்வின்
பெயராலும் சமூகத்தின் பொதுப்புத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில்
இவை குறித்து கேள்வி எழுப்பவர்கள் மிகச் சிறுபான்மையினரே. எனவே கேள்வி எழுப்பும்
சிறுபான்மையினர் மீது பெரும்பான்மைப் பொதுப்புத்தியின் அதிருப்தி இருந்தேயாகும். அந்த
அதிருப்தி சப்பைக் குற்றச்சாட்டுகளாகவும் சிலவேளைகளில் அவதூறுகளாகவும் வெளிப்படும்.
கேள்வி எழுப்புவர்கள் மீது பொது அவமானமும் சமூகப் புறக்கணிப்பும் நிகழும்.இது
ஒரு கருத்துப் போராளி தனது எழுத்துக்காகக் கொடுத்தேயாக வேண்டிய விலை.
நாங்கள் எங்களுக்காக
மட்டுமல்லாமல் எங்கள்மீது நிராகரிப்புகளையும் அவதூறுகளையும் கொட்டுபவர்களுக்காகவும்
சேர்த்துத்தான் அதிகாரத்திடம் கேள்விகளை எழுப்புகிறோம் என்ற எங்களது உறுதியான
நம்பிக்கைதான் எங்களது துணிச்சலுக்கும் எங்களது வீச்சான கருத்துப் போருக்குமான அடிப்படை.
3. தமிழர்கள் யூத இனத்தவர்கள் போன்று தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்ளத்
தவறிவிட்டார்கள் என்று தமிழ் புத்திஜீவிகள் சொல்லிவருகின்றனர். இலங்கையில் தமிழர்களும்
சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ முடியாதா? இதுபற்றி
என்ன கருதுகிறீர்கள்?
சிங்களப் பெரும்பான்மை
இனத்துடன் ஏனைய சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்வதென்பது சிங்கள இனத்தவர்களின்
கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. சிங்கள மக்களுக்குள்ள அரசியல், பொருளியல், பண்பாட்டு
உரிமைகள் ஏனைய இனங்களிற்கும் நீதியுடன் பகிரப்பட்டால் மட்டுமே ஒற்றுமை சாத்தியாகும்.
சிறுபான்மை இனங்களின் தனித்துவமான மொழியும் பண்பாடும் பாரம்பரிய நிலமும் பெரும்பான்மை
இன அரசால் சிதைக்கப்படக் கூடாது.
இலங்கையின் ஆட்சியாளர்கள்
சிறுபான்மை இனங்களின் மீது இன வெறுப்பைக் கக்குவதை நிறுத்துவதே இனங்களிற்கிடையேயான
ஒற்றுமைக்கான முதல் நிபந்தனை.
தமிழர்களோ மற்றைய சிறுபான்மை இனங்களோ பெரும்பான்மை இனத்தின்மீது அரசியல் ஐயுறவு கொள்ளவும் பிரிந்து செல்வது குறித்து யோசிக்கவுமான காரணங்களை இலங்கை இனவாத அரசுகளே உருவாக்கின. அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியேதானுள்ளன.
தமிழர்களோ மற்றைய சிறுபான்மை இனங்களோ பெரும்பான்மை இனத்தின்மீது அரசியல் ஐயுறவு கொள்ளவும் பிரிந்து செல்வது குறித்து யோசிக்கவுமான காரணங்களை இலங்கை இனவாத அரசுகளே உருவாக்கின. அந்தக் காரணங்கள் இன்னும் அப்படியேதானுள்ளன.
இப்போது ‘இணக்க அரசியல்’
என்றொரு சொல்லாடல் சில தமிழ் அரசியற் தரப்புகளால் முன்வைக்ப்படுகிறது. அரசுடன் இணங்கி
மக்களிற்கான அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். அரசிடமிருந்து
அபிவிருத்தித் திட்டங்களையும் சமூகநல உதவிகளையும் பெறுவது மக்களது அடிப்படை உரிமை.
அதைச் செய்து கொடுக்க வேண்டியது அரசுடைய கடமை.
இந்த அபிவிருத்திட்டங்களிற்காக
அரசினுடைய இனவாதப் போக்கைக் கண்டுகொள்ளாமலிருப்பதும் அரசுடைய அராஜகங்களின் முன் வாய்
பொத்தி நிற்பதும் இன்னுமொரு படி கீழிறங்கி இலங்கை அரசுக்கு இடதுசாரிப் பாத்திரத்தையும்,
ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாராட்டுப் பத்திரத்தையும் இந்த இணக்க அரசியலாளர்கள் வழங்குவது
மக்களுக்குச் செய்யும் மோசமான துரோகமாகும்.இணங்கி வாழ்வதற்கும் அடிமைகளாக வாழ்வதற்கும்
நிறைய வேறுபாடுகளுள்ளன. கைளில் விலங்குடன் இன்னொருவருடன் கைகளைக் குலுக்கிக்கொள்ள
முடியாது.
4. இன்றைய அவலத்திற்கு அரசுகளும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களும்தான்
காரணம் எனில், ஒரு படைப்பாளி என்ற முறையில் அவலங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் விடுபடுவதற்கும்
மீண்டும் பேரவலங்கள் தோன்றாதிருப்பதற்கும் தங்களது கருத்துக்கள் என்ன?
இலங்கைத் தீவின் இன
முரண்களையும் இனங்களிற்கு இடையிலான பரஸ்பர சந்தேகங்களையும் அதிருப்திகளையும்
ஒருபோதும் ஆயுதத்தாலோ இராணுவ நடவடிக்கைகளாலோ போக்கிவிட முடியாது என்பதைப் போராடும்
சிறுபான்மை இனங்கள் மட்டுமல்லாமல் ஆளும் தரப்பும் பெரும்பான்மை இன மக்களும் விளங்கிக்கொள்வது
முக்கியமானது.
இலங்கையின் புவியியல், பொருளியல், பண்பாடு எனத் தீர்க்கமாகச் சிந்திக்கையில் இலங்கை வரலாற்றுரீதியாகவே இந்திய வல்லரசின் கீழேயே இருக்கிறது. இலங்கையின் இறையாண்மை சுயாதீனமானதல்ல. இந்த அரசியல் உண்மையை நாம் கசப்புடன் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
இலங்கையின் புவியியல், பொருளியல், பண்பாடு எனத் தீர்க்கமாகச் சிந்திக்கையில் இலங்கை வரலாற்றுரீதியாகவே இந்திய வல்லரசின் கீழேயே இருக்கிறது. இலங்கையின் இறையாண்மை சுயாதீனமானதல்ல. இந்த அரசியல் உண்மையை நாம் கசப்புடன் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
இலங்கையில் ஓர் அரசியல்
தீர்வு ஏற்பட வேண்டுமெனில் அதற்கு இந்திய அரசினது முழுமையான ஒப்புதல் கிடைத்தேயாக வேண்டும்.
இனப் பிரச்சினையில் சிங்களவர்களும் தமிழர்களும் இஸ்லாமியர்களும் மட்டுமல்லாமால் இந்திய
ஆட்சியாளர்களும் ஓர் அசைக்க முடியாத தரப்பே என்ற உண்மையை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கை - இந்திய உடன்படிக்கை முழுமையாக அமுல்படுத்தப்படுவதும் மாகாணசபைகளிற்கு காணி, காவற்துறை உள்ளிட்ட முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஓரளவுக்காவது அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதுமே இன முரண்களைக் களைவதற்கான சரியான தொடக்கமாக இருக்க முடியும்.
இலங்கை - இந்திய உடன்படிக்கை முழுமையாக அமுல்படுத்தப்படுவதும் மாகாணசபைகளிற்கு காணி, காவற்துறை உள்ளிட்ட முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஓரளவுக்காவது அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதுமே இன முரண்களைக் களைவதற்கான சரியான தொடக்கமாக இருக்க முடியும்.
மாறாக இலங்கை
அரசு வடக்குக் கிழக்கில் காணி பிடிப்பதாலும், போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது
கழிவு எண்ணையை ஊற்றுவதாலும், வெள்ளை வான் கடத்தலாலும், கட்டாயக் குடியேற்றங்களால் இனச்
சனத்தொகை வீதாசாரங்களை மாற்றியமைப்பதன் மூலமும் இனப் பிரச்சினையை முடித்துவிடலாம்
என நினைக்கிறது. இதுதான் இலங்கைத் தீவின் நிரந்தரப் பேரவலம்.
5.அண்மையக் காலங்களில் தமிழகத்திற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்கள்
மீது நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியில் தொழிற்படும் காரணங்கள் எவையாயிருக்கும்
எனக் கருதுகிறீர்கள்?
ஈழத் தமிழர்கள்மீது
உள்ள அக்கறையால்தான் இத்தகைய வன்முறைக்கான எத்தனிப்புகளோ வன்முறைகளோ நிகழ்கின்றன என்பதை
நான் முற்றாக நிராகரிக்கின்றேன். ஈழத் தமிழர்கள் மீது இந்த வன்முறையாளர்கள் உண்மையிலேயே
அக்கறை கொண்டவர்களாக இருந்திருப்பின் வன்னியில் மக்கள் புலிகளால் பணயக் கைதிகளாகப்
பிடித்து வைக்கப்பட்டிருந்த போதும், தப்பியோடிய மக்களைப் புலிகள் சுட்டுக்கொன்ற போதும்
இந்த வன்முறையாளர்கள் புலிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பார்கள். மாறாக இந்த
வன்முறையாளர்கள் இன்றுவரை புலிகளின் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வன்முறையாளர்களிடம்
இருப்பது வெறும் புலியாபிமானம் மட்டுமே. அதை ஈழத் தமிழர்கள் மீதான அக்கறையாக
விளங்கிக்கொள்ளத் தேவையில்லை.
தமிழகத்திலுள்ள இத்தகைய
வன்முறைக் குழுக்களிற்கு ஈழத்து அரசியலின் வரலாறோ, உள்ளார்ந்த பிரச்சினைப்பாடுகளோ தெரிவதில்லை.
தமிழர்களிற்கும் சிங்களவர்களிற்கும் கூட அவர்களுக்கு வேறுபாடு தெரியவில்லை.
இந்தக் குழுக்களுடைய
அரசியல் பண்பு என்னவென்பதை அறிய தமிழக அரசியலிலும் தமிழக மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளிலும்
இவர்கள் என்ன நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தாலே தெரியும்.
அப்பட்டமான வலதுசாரிகளாகவும் கலாசார அடிப்படைவாதிகளாகவுமே இவர்கள் அங்கு இயங்குகிறார்கள்.
இந்த வன்முறைகள் குறித்து தமிழகத்தின் சொற்ப மனிதவுரிமையாளர்கள் கவனமெடுத்திருப்பதும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதும் நம்மைச் சற்று நிம்மதியடைய வைத்தாலும் இந்த வன்முறையை ஆதரித்து பலர் எழுதுவதும் பெரும்பாலானோர் மவுனம் சாதிப்பதும் அச்சத்தையூட்டுகிறது.
இந்த வன்முறைகள் குறித்து தமிழகத்தின் சொற்ப மனிதவுரிமையாளர்கள் கவனமெடுத்திருப்பதும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதும் நம்மைச் சற்று நிம்மதியடைய வைத்தாலும் இந்த வன்முறையை ஆதரித்து பலர் எழுதுவதும் பெரும்பாலானோர் மவுனம் சாதிப்பதும் அச்சத்தையூட்டுகிறது.
6. போர்க்கால இலக்கியங்கள் எவ்வாறு அமையவேண்டும்? செய்திகளே வரலாறாகின்றன.
வரலாறுகளே இலக்கியப் புனைவுகளுக்கு ஆதாரமாகின்றன. என்பதனால்தான் இந்தக்கேள்வியையும்
தங்களிடம் கேட்கின்றோம்.
எந்தவகை இலக்கியமெனினும்
அது நடுவு நிலையோடு இருக்க வேண்டும். அரசியலில் நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும்
சாராது இருத்தலல்ல. எந்தச் சந்தர்ப்பத்திலும் உண்மையை மறைக்காது பேசுதலே அரசியல் நடுவுநிலைமை.
செய்திகளே வரலாறாகின்றன,
வரலாறே இலக்கியப் புனைவுகளிற்கு ஆதாரங்களாகின்றன என்ற உங்களது ‘பொயின்டை’ நான் விளங்கிக்கொள்கின்றேன்.
செய்திகளாயிருந்தாலும் வரலாறாயிருந்தாலும் அவை அவற்றைக் கட்டமைப்பவரின் பார்வைக் கோணத்திலிருந்தே
கட்டமைக்கப்படுகின்றன. ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு வரலாறுகள் சாத்தியமே.
எடுத்துக்காட்டாக
ஒரு வரலாற்று நிகழ்வுக்கு மூன்று விதமான வரலாறுகள் வெவ்வேறு பார்வைக் கோணம் கொண்ட மூன்று
தரப்புகளால் கட்டமைக்கப்படுகின்றன என வைத்துக்கொள்வோம். ஓர் இலக்கியவாதிக்கு இந்த
மூன்று வரலாற்றுக் கோணங்களுமே முக்கியமானவை. இந்த வரலாறுகளின் அடிப்படையில் இலக்கியவாதியால்
இன்னொரு வரலாறைக் கட்டமைக்க முடியும். அது நான்காவது வரலாற்றுக் கோணம். இலக்கியவாதியின்
தரப்பு அது. எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட வரலாற்றை அப்படியே பிரதியெடுப்பதல்ல இலக்கியம்.
வரலாற்றின் நுண் அலகுகளிற்குள் ஊடுருவி வரலாற்றை மறு ஆக்கம் செய்வதே படைப்பிலக்கியம்.
இலக்கியத்தை உபவரலாறு என்பார்கள்.
7. நீங்கள் சிறுகதை, நாவல், பத்தி எழுத்துகள்,விமர்சனங்கள் எழுதிவருபவர்.
‘செங்கடல் ‘என்ற திரைப்படத்தில் தங்களது ஈடுபாட்டினையடுத்து தங்களுக்கு திரைப்படத்துறையிலும்
ஈடுபாடு இருப்பதை அறிகின்றோம். இது குறித்து சொல்லுங்கள்.
சினிமாவுக்கும் இலக்கியவாதிகளிற்குமான
தொடர்பு புதுமைப்பித்தன் காலத்திலிருந்து இன்றைய எஸ். ராமகிருஷ்ணன் வரைக்கும் இருக்கிறது.
இலக்கியவாதிகள் சினிமாவில் பங்கெடுப்பது மூலம் தமிழ் சினிமா ஒருபடி தன்னும் முன்னேற
வேண்டும். ஆனால் சினிமாவுக்குள் நுழையும் இலக்கியவாதிகளும் வணிகச் சினிமா எனும் சகதிக்குள்
மூழ்கிவிடுவதே இங்கே நடக்கிறது. முப்பது வருடங்களாக இலக்கியம் எழுதிவரும் சாரு நிவேதிதா
ஒரு மகா கேவலமான திரைப்படத்தில் கண்ணிமைக்கும் நேரமே தோன்றி குத்துப் பாட்டிற்கு புட்டத்தை
நெளிக்கும் அவலம்தான் இங்கே நடக்கிறது. உலகச் சினிமாவைக் கரைத்துக் குடித்ததாகச் சொல்லும்
ஓர் எழுத்தாளன் இவ்வாறா சீரழிய வேண்டும் . எனக்கு அவ்வாறான ஆர்வங்கள் ஏதுமில்லை. தமிழ்ச்
சினிமா இன்டஸ்ரி என்பது வெறும் சந்தை. சந்தை விதிகளே அங்கே செல்லுபடியாகும்.
‘செங்கடல்’திரைப்படம்
சந்தைப்படுத்தும் நோக்கத்தை முதன்மைப்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட திரைப்படம். வணிக
நிறுவனங்களின் கட்டுகளிற்குள் நிற்காமல் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட சினிமா அது. அந்தத்
திரைப்படத்தின் கதை நேரடியாக அரசியலைப் பேசும் கதை. இராமேஸ்வரத்திலிருக்கும் ஈழத்து
அகதிகள் குறித்தும் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்தும் அந்தப்
படம் பேசியது. வணிக மதிப்புள்ள அல்லது தொழில்முறை நடிகர்களைக் கொண்டல்லாமல் அகதிகளையும்
மீனவர்களையும் நடிக்க வைத்து உருவாக்கப்பட்ட மக்கள் பங்கேற்புச் சினிமா ‘செங்கடல்’.
அதனால் தான் அத்திரைப்பட உருவாக்கத்தில் நான் பங்கெடுத்தேன்.
8. தங்களது அல்லைப்பிட்டி கிராமம் பற்றி சொல்லுங்கள்? எப்போது தாயகம் திரும்புவீர்கள்?
எனது கிராமம் யாழ்
நகரத்திலிருந்து மூன்றரைக் கிலோ மீற்றர்கள் தொலைவிலிருக்கிறது. மிகவும் பின்தங்கிய
தீவகக் கிராமம்.யுத்தத்தால் அல்லைப்பிட்டிக் கிராமம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மூன்று மிகப்பெரிய கூட்டுப் படுகொலைகளை எனது கிராமத்தில் இராணுவம் செய்திருக்கிறது.
இப்பொழுதும் எனது கிராமம் இராணுவத்தின் கைகளிலேயே இருக்கிறது.
தாயகம் திரும்ப வேண்டும்
என்ற ஆசை மனதிற்குள் கனன்றுகொண்டேயிருக்கிறது. எனினும் சிங்கள ஊடகவியலாளர்களே மகிந்த
ராஜபக்ச அரசுக்கு அஞ்சி வெளிநாடுகளிற்குத் தப்பி ஓடி வருகையில் நான் அங்கு செல்வது
எவ்வளவு சாத்தியம் என்ற கேள்வி எனக்குள் இருக்கின்றது. ஏனெனில் ஒரு சுற்றுலாப் பயணியாகாவோ
அல்லது வாய் பேசாப் பிராணியாகவோ இலங்கைக்கு வர எனக்கு விருப்பமில்லை. நான் அகதியாக
அய்ரோப்பாவுக்கு வருவதற்கு என்ன காரணங்களிருந்தனவோ அதே காரணங்கள் இப்போதும் நீடிக்கின்றன.
அரசின் இத்தனை ஒடுக்குமுறைகளிற்கும்
கண்காணிப்புகளுக்குள்ளும் இருந்துகொண்டு எந்த அரசியல் பின்பலமோ அமைப்புப் பலமோ
இல்லாமல் உண்மைகளை எழுதிவரும் தோழர்களை நான் மரியாதையுடன் வணங்குகிறேன்.
அவர்களை நான் தாயகத்தில் சந்திக்க வாய்ப்பிருப்பதைக் காட்டிலும் அவர்கள் என்னை அய்ரோப்பாவில்
சந்திப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் கருதுகிறேன்.
9. தங்களது கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றுபவர்களுக்கும் தங்கள் மீது
பொய் அவதூறு கற்பிப்பவர்களுக்கும் பதிலடிகொடுப்பதற்காக அதிக நேரம் செலவிடுவதாகவும்
அதற்காக உழைப்பதாகவும் வரும் விமர்சனங்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அத்தகையை விமர்சனங்களும்
இத்தகையை கேள்விகளும் எப்போதும் என்மீது வைக்கப்படுகின்றன. நானும் ஒரே பதிலையே திரும்பத்
திரும்பச் சொல்லி வருகிறேன். என்மீது வீசப்படும் குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும்
ஷோபாசக்தி என்ற தனிநபர் மீது வைக்கப்படுவதில்லை. அந்த அவதூறுகள் மூலம் எனது அரசியல்
நிலைப்பாடுகளையும் விமர்சனங்களையும் தாக்குவதும் திரிப்பதுமே அவதூறாளர்களது குறியாயிருக்கிறது.
அதை என்னால் அமைதியாக அனுமதிக்க முடியாது தானே.
10. உங்களது சில கருத்துக்களிலிருந்து நீங்கள் ஒரு ட்ரொஸ்கியவாதியாகவும்
இனம்காணப்படுகிறீர்கள். ட்ரொக்ஸி குறித்து பல வாதப்பிரதிவாதங்கள் அரசியல் சிந்தனையாளர்களிடமிருக்கின்றன.
உங்களில் ட்ரொக்ஸியின் சிந்தனைகள் எத்தகைய தாக்கத்தை உருவாக்கின? அவரை நீங்கள் கீர்த்திமிக்கவராக
கணிப்பதற்கு?
பொதுவுடமை இயக்க வரலாற்றில்
கார்ல் மார்க்ஸிற்கு அடுத்ததாக கலை இலக்கியத்தின் மீது அக்கறை செலுத்திய மிகப்பெரும்
ஆளுமை ட்ரொஸ்கியே. இலக்கியம் குறித்த அவரது சுதந்திரக் கோட்பாடுகள் எனக்கு இன்றும்
வழிகாட்டுவன.
பொதுவுடமைத் தத்துவத்தைப்
பொறுத்தவரை ட்ரொஸ்கியின் ‘நிரந்தரப் புரட்சி’ குறித்த கோட்பாடு மிக முக்கியமானது. இந்தளவுக்குத்தான்
இப்போது ட்ரொஸ்கியத்தின் மீது எனக்கு ஈடுபாடுண்டு. ட்ரொஸ்கியின் எழுத்துகளையும் கடந்து
வந்துதான் இன்றைய உலகமயமாதல் சூழலை அடித்தள மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக,
எமது சாதியச் சூழலில் அம்பேத்கரும் பெரியார் ஈவெராவுமே அடித்தள மக்களின் விடுதலைக்கான
முதன்மையான வழிகாட்டிகள் எனக் கருதுகின்றேன். நமது சமூகத்தின் ஒவ்வொரு தனிநபருக்குமான
முதன்மையான சமூக அடையாளம் வர்க்க அடையாளம் கிடையாது. அந்த அடையாளம் அவரது சாதியாகவேயிருக்கிறது.
எனவே சாதிய விடுதலை சாத்தியமில்லால் நமது சமூகத்தில் வேறெந்த விடுதலையும் சாத்தியமாகாது.
No comments:
Post a Comment