இலங்கைச் செய்திகள்

.
கைதுசெய்த மாணவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை

காணாமல்போன உறவுகளைக் கண்டறியக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

நீதியரசர் மீதான குற்றப்பிரேரணைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்

ராஜபக்ஸ ஆட்சிக்கு எதிரான ஒரு எதிர்ப்புச் சின்னமாக ஷிராணி பண்டாரநாயக்க மாறிவருகிறார்.
   தாரிஷா பஸ்ரியன்ஸ்

பிரதம நீதியரசருக்கு ஆதரவாக வடக்கு சட்டத்தரணிகள் போராட்டம்

கண்டியில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு பேரணி

பிரதம நீதியரசருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்

இராணுவம் குறித்து கூட்டமைப்பின் நிலை!
என் சத்தியமூர்த்தி

அமைச்சர் கெஹலியவை படுகொலை செய்யத் திட்டமிட்ட பெண்ணுக்கு 20 வருட சிறைத்தண்டனை

வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு கைதுசெய்த மாணவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரி இன்று காலை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாரப்பாட்டம் மாணவர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் கைது, மாணவர்களின் விடுதலை மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 நன்றி வீரகேசரி
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை
By M.D.Lucias
2012-12-10

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மருத்துவ பீட மாணவர்கள் 5 பேரும், விஞ்ஞான பீட மாணவர் ஒருவரும், முகாமைத்துவ மாணவர் ஒருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை தற்போது அழைத்துவர சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.     நன்றி வீரகேசரி காணாமல்போன உறவுகளைக் கண்டறியக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

By Lambert
2012-12-10

மன்னார் மாவட்டத்தில் காணமல்போன மற்றும் கடத்தப்பட்ட உறவுகள் கண்டறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் காணமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சமாசம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டப் பேரணி இன்று காலை 10 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலய மண்டபத்தில் விசேட கூட்டத்துடன் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஸார் பகுதியைச் சென்றடைந்தது. பினனர்; மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கும் முகமாக மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, காணமல்போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை விடுதலை செய்யும் படி கோசங்களை எழுப்பியதோடு பல வித வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பல ஆண்டுகளாக கைது செய்யப்பட்ட, இனம் தெரியாதோர் என்ற போர்வையில் கடத்தப்பட்ட தமது உறவுகளின் இருப்பிடம் இதுவரை அறியப்பட முடியாமல் உள்ளதுடன் அவர்கள் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது கூட இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

எனினும் இதுவரை இவர்கள் மீள விடுவிக்கப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை. இவர்களை விடுவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும் அவர்களில் குற்றம் இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தும்படியும் கோரி உலக மனித உரிமைகள் தினமான இன்று குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

இவ்வார்ப்பாட்டப் பேரணியில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை, உபதலைவர் அந்தோனி சகாயம், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சுனேஸ் சோசை, தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் அமைப்பாளர் கோமகுமார, பௌத்த குருமார்கள், அருட்தந்தையர்கள,; மன்னார் நகரசபை தலைவர், உறுப்பினர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.


நன்றி வீரகேசரி 


நீதியரசர் மீதான குற்றப்பிரேரணைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
By M.D.Lucias
2012-12-10Pics by: Sujeewakumar
பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணையை விலக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இன்று பிற்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிவில் அமைப்பு மற்றும் எதிரணிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்று வட்டத்தில் இடம்பெற்றதோடு நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

நன்றி வீரகேசரி


தென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது "பிக்குகள் தலைமையில் வந்த கும்பல் தாக்குதல்
இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால் ஞாயிறன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதெனக் குற்றம்சாட்டபடுகிறது.காலை வேளையில் தேவாலயத்தில் பூசை நடந்துகொண்டிருந்த நேரத்தில் பௌத்த பிக்குகள் சுமார் 80 பேர் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தும் தேவாலயத்துக்குள் இருந்த கண்ணாடிகளையும் பிற பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர் என்று பெயர் வெளியிட விரும்பாத தேவாலய பிரதிநிதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது பெயர் இங்கு வெளியிடப்படவில்லை. தாக்குதலின்போது தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 6 லட்சம் அளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 11 வருடங்களாக இத்தேவாலயம் வீரகட்டிய பகுதியில் இருந்துவருகிறது என்றாலும் பௌத்த பிக்குகளின் அனுமதி பெற்றே அது செயலாற்ற முடியும் என்பதுபோன்ற அழுத்தங்களை அது சமீபகாலமாக எதிர்கொண்டு வருகிறது என்று அந்த தேவாலயத்தின் பிரதிநிதி குறிப்பிட்டார்.இந்த பின்னணியில் ஞாயிறு காலை நடந்த தாக்குதலைப் பொலிசார் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றாலும் சேதங்கள் மேலும் அதிகமாகாமல் பொலிசார் கட்டுப்படுத்தினர் என்று அவர் கூறினார்.சம்பவ நேரத்தில் பொலிசாரும், இராணுவத்தினரும் இருந்தனர் என்றபடியால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேவாலய நிர்வாகம் தற்சமயம் இத்தாக்குதல் சம்பந்தமாக எவ்வித சட்ட நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்  - பி.பி.சி  நன்றி தேனீ 

ராஜபக்ஸ ஆட்சிக்கு எதிரான ஒரு எதிர்ப்புச் சின்னமாக ஷிராணி பண்டாரநாயக்க மாறிவருகிறார். (1)
   தாரிஷா பஸ்ரியன்ஸ்
“ஜனநாயகம் ஒரு எதிர்க்கட்சியை கோருகிறது” - பென் மான்ஸ்கி அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் அரசியல் ஆர்வலர்.
shirani.1பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா நவம்பர் 23ல் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னால் தனது தோற்றத்தை வெளிப்படுத்திய முதலாவது நிகழ்வு மூலம்,ஆளும் நிருவாகத்தினருக்கு தோல்வி எதுவும் ஏற்படவில்லை. முதலாவது சுற்றிலேயே தன்னை தெளிவான ஒரு வெற்றியாளராக காட்டிக்கொண்டு மற்றும் பொதுசன அனுதாபத்தை வெகுவாகத் தூண்டியதன் மூலம், அந்தப் பெண்மணி அதிகார சக்திகளின் கடும் வெறுப்புக்கு ஆளாகிவிட்டார்.
ஆகவே நாட்டின் அதி சிரேஷ்ட நீதிபதி பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அழைப்பாணைக்கு பதிலளிக்கவேண்டிய இரண்டாவது சுற்றுக்கான நேரம் வந்தபோது தேவையான ஏற்பாடுகள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு உரிய இடங்களில் வைக்கப்பட்டன. டிசம்பர் 4,செவ்வாய் அன்று மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் நன்கு உணரக்கூடியனவாக இருந்தன. தலைநகர் கொழும்பு முழுவதும் ஒரு சுவரொட்டிப் பிரச்சாரம் மக்களின் கவனத்துக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நன்கு வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளில் “வெட்கம் அம்மணி” என்கிற வாசகங்களும் மற்றும் நீதியின் தராசு ஒன்றின் ஒரு தட்டில் ஸ்ரீலங்காவின் படத்தையும் மறுதட்டில் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் படமும் சித்தரிக்கப் பட்டிருந்தன. ஒரு முச்சக்கரவண்டிகளின் அணிவகுப்பு ஒன்று அதே சுவரொட்டிப் பதாகையை தங்கள் வாகனத்தின் கூரைமேல் காட்சிக்கு வைத்தவாறு அலரி மாளிகையை நோக்கி அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன, அவர்களில் பலர் வீதியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினரிடத்தில் தங்கள் ஊர்வலம் அடுத்ததாகச் செல்லவேண்டிய இடத்துக்கான வீதியை ஒழுங்குபடுத்தித் தருமாறு கேட்பதற்காக தங்கள் வாகனங்களை நிறுத்தினார்கள். கறுப்புக் கோட்டுகள் பிரதம நீதியரசருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க முற்றுகையிட்டு குவிந்தபோதும்கூட, அரசு தனது பரபரப்பான சொந்த பிரச்சாரம் மூலம் அதை இழிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தது.  கோல்டன் கீ விவகாரமும் அதில் கலந்திருந்தது
நவம்பர் 13ல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்; ராஜபக்ஸ, கோல்டன் கீ வைப்பாளர்களின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்றத்தில் வைத்து நேருக்கு நேர், ஒரு கூட்டம் நடத்தினார். வேறு மூத்த நிருவாக உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருந்த அந்தக் கூட்டத்தில் அமைச்சர் ராஜபக்ஸ ஏப்ரல் 2013க்குள் வைப்பாளர்கள் அனைவருக்கும் முழு தொகையையும் வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனால் அதற்காக ஒரு நிபந்தனை இணைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தை பற்றிய சில அறிக்கைகள் வெளிப்படுத்துவது, உச்ச நீதிமன்றத்தின் முன்புள்ள கோல்டன் கீ வழக்கு சம்பந்தமாக பிரதம நீதியரசர் காட்டிய ஆர்வம் காரணமாக எழுந்த மோதல் பற்றி வைப்பாளர்கள் சாட்சியம் அளிக்கவேண்டியதன் அவசியமும்  அந்த நிபந்தனைகளில் உட்பட்டிருந்தன என்று.
கோல்டன் கீ வைப்பாளர்கள் பல வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தங்கள் வைப்பு பற்றிய நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். சந்தேகமில்லாமல் அதை தீர்த்து வைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி, மிகவும் மதிப்பு வாய்ந்தது அதனால் பிரதியுபகாரமாக கேட்பதை மறுப்பது மிகவும் கடினமானது. கொழும்பில் தங்கள் பங்குக்குரிய தேங்காய்களை உடைத்து , பிரதம நீதியரசர் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கைகளை எழுப்பி, பிரதம நீதியரசர் எதிர்ப்பு இயக்கத்தின் முதற்கட்ட எதிர்ப்பாளர்களாக, இந்த வைப்பாளர்கள் எப்படி மாறினார்கள் என்பதற்கான காரணம் இதுதான்.
எனவே பொழுது விடிந்தபோது புதுக்கடை உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே,அவர்களிடம் வழங்கப்பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளுடன் பேருந்துகள் நிறைந்து ஆட்கள் வந்திறங்கியதையிட்டு தாங்கள் ஆச்சரியமடையவில்லை என்று, வழக்கறிஞர்களும் ஆhவலர்களும் சொன்னார்கள். பிரதம நீதியரசர் அவர்களைக் கடந்து செல்லும்போது அவரைநோக்கி கூச்சல் போடும்படி அவர்களிடம் சொல்லப்பட்டிருந்ததாக நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த சில மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தார்கள். இதில் ஏற்பட்ட குழப்பம் என்னவென்றால் மிகச் சிலரால் மட்டுமே அவரை அடையாளம காணமுடியும். உண்மையில் பிரதம நீதியரசருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த அநேகருக்கு தாங்கள் ஏன் நீதிமன்ற வளாகத்தின் முன்னே நிற்கிறோம் என்கிற விபரமே தெரியாது, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் தன்மை ஊகங்களை வளர்;க்கவே பயன்பட்டது. இது இந்த வருடம் மார்ச் மாதமளவில் ஐநா மனித உரிமைகள் சபையில் (யு.என்.எச.ஆர்.சி) அமெரிக்கா தலைமையிலான தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான ஆர்ப்பாட்டத்தை நினைவுபடுத்துகிறது, தொலைவிலுள்ள மாகாணங்களிலிருந்து நூற்றுக்காணக்கான ஊர்காவல் படையினரை கொழும்புக்கு வரவழைத்து, பம்பலப்பிட்டியிலுள்ள சிவில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன் ஒன்றுகூடச்செய்து, ஸ்ரீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் கொழும்பிலுள்ள பல்வேறு தூதரகங்களுக்கு முன்பாக அணிவகுத்து வரச்செய்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதைப் போலவே இதுவும் இருந்தது.
கருத்து விளக்க செய்முறை
பிரதம நீதியரசரை வெளியேற்ற மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு எதிர்கட்சியினரின் அணிதிரட்டல்; பற்றாக்குறை ஏற்படுத்திய வெற்றிடம் காரணமாக இந்த செயற்பாட்டில் நீதியானதும் மற்றும் தவறானதுமான ஒரு கருத்து விளக்கத்துக்கான இடைவெளி உருவானது. மற்றும் நீதித்துறையினுள் அரசாங்கத்தின் அத்துமீறலை நிறுத்துவதற்கான போராட்டத்தில் நல்லெண்ணத்துடன் கூடிய  எதிர்க்கட்சியினரின் குரல் ஒலிக்காத காரணத்தால் சகோதர சட்டவாளர்கள், மதத் தலைவர்கள், மற்றும் குடியியல் அமைப்புகள் அதற்காக கைகொடுக்க முன்வந்தன.
கடந்த செவ்வாயன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா பாராளுமன்றத்துக்கு செல்வதற்குச் சற்று முன்னதாக,உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக பெருந்திரளாக குவிக்கப் பட்டிருந்த காவ்துறையினருக்கு சில வழக்கறிஞர்கள் திறமையான முறையில் சட்டத்தை கையாளும் முறையை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் ஊடகவியலாளர்கள் நுழைவதை தடை செய்யும் விதமாக காவல்துறை மறைமுகமாக அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. அநேக வழக்கறிஞர்கள் வாசல்வரை அணிவகுத்துச் சென்று காவல்துறை அதிகாரிகளிடம் நீதிமன்றம் மக்களுக்கு சொந்தமானதே தவிர காவல்துறையினருக்கு அல்ல என்று உறுதியான குரலில் தெரிவித்தார்கள். “மக்கள் இங்கு வருவதை தடைசெய்ய காவல்துறைக்கு அதிகாரமில்லை” என்று அவர்கள் தெரிவித்ததோடு ஊடகவியலாளர்களை உச்ச நீதிமன்ற வளாகத்துக்குள் உடன் அழைத்து வந்தார்கள். ஆரம்பத்தில் காவல்துறையினர் அரசாங்கத்தின் தலையீட்டுக்கு எதிரான குற்றச்சாட்டை தலைமையேற்று நடத்தும் புத்தபிக்குவான வண. மடுல்வௌ சோபித வின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைவதை தடை செய்ய முயற்சித்தார்கள், ஆனால் வழக்கறிஞர்களின் தலையிட்டதும் அதைக் கைவிட்டார்கள்.
புத்த பிக்குகள் செத் பிரித் இசைக்க, நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான மக்கள் கூட்டம் கூடி  நிற்க, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா உச்ச நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார். ஒருவேளை பிரதம நீதியரசருக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மோசமாக நடக்கலாம் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்து, பிரதம நீதியரசரும் அவருடன் உடன் செல்லும் சட்ட ஆலோசகர் கந்தையா நீலகண்டன் மற்றும் சட்டத்தரணி சாலிய பெரோரா ஆகியோர் நீதிமன்ற வளாகத்தை விட்டு மாற்று வழியால் வெளியேறினார்கள். பாராளுமன்றத்துக்கு முன்பாக மட்டுமே பிரதம நீதியரசருக்கு எதிரான ஆhப்பாட்டக்காரர்கள் ஜயந்திபுர சந்தியிலிருந்து வீதி நெடுக வரிசையாக அணிவகுத்து நின்றார்கள், மற்றும்; தான் நினைத்தபடி நடக்கும்  அரசாங்கத்தின் தளபதி, மேர்வின் சில்வா, சரியாக எங்கு ஒன்றுகூட வேண்டும் மற்றும் “பாராளுமன்றம்தான் உயர்வானது” என கூச்சலிடும்படி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கட்டளை வழங்கியபடி கர்வத்துடன் நடந்து செல்வதை, புகைப்படக் கருவிகள் படம் பிடித்துக்கொண்டிருந்தன. சுவராஸ்யமாக  சில்வா அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் , பிரதம நீதியரசர் குற்றவாளி, மற்றும் அவர் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பாராளுமன்றத்தின் முன்னால் குழுமியிருந்த அந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டத்தில் நின்ற பொதுசன ஐக்கிய முன்னணி; கூட்டணியின் கொழும்பு மாநகரசபை அங்கத்தவர் ஒருவர், முச்சக்கர வண்டிச் சாரதிகளிடம் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினால் அவர்களுக்கு  இலவசமாக டாக்ஸி மீட்டர்கள் வழங்குவதாக வாக்களித்துள்ளதாக எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் தெரிவித்தார்கள்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை எதிர்கொள்ள பாராளுமன்றத்திற்கு பிரதம நீதியரசர் பயணம் செய்யும்போது தினசரி இம்மாதிரியான எதிர்மறையான விளம்பரங்களை அவர் பெற்றுக் கொள்வதை நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க வைப்பதற்கு உண்மையில் அரசாங்கத்துக்கு விருப்பமில்லை. அதனால் எவ்வளவு விரைவாக குற்றவியல் விசாரணைகளை நடத்தி முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக நடத்தி முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பிரதம நீதியரசரை,பாராளுமன்றத்துக்கு வரவழைக்கும் ஒவ்வொரு கணமும், ஷிராணி பண்டாரநாயக்கா மீதான பொதுமக்களின் அனுதாப அலை அதிகரிக்கும் என்றும், மற்றும் ஒரு நீதிபதி என்பதைக் காட்டிலும் அரச நிர்வாகத்தின் கொடுமைக்கு ஆளாகும் ஒருவரைப்போலவே அவர் நோக்கப்படுவார் என்று ஆட்சியினர் அச்சம் கொள்கிறார்கள்.
இந்த பெரிய படக் காட்சியில், பிரதம நீதியரசருக்கு எதிராக அரசாங்கம் நடத்தும் யுத்தம், நாட்டில் இறுதியாக மீந்திருக்கும் கடைசி சுதந்திர உறுப்பின் மீதும் பலமான தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும், அவற்றின் உள்ளடக்க மறைப்புகளுக்கு அப்பால், ஷிராணி பண்டாரநாயக்காவும், நீதிமன்றங்களை பாதுகாப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களும் அவருக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள் என்கிற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. கடந்த செவ்வாயன்று புதுக்கடையில்,ஐதேக மாகாணசபை உறுப்பினரும் ஒரு சட்டத்தரணியுமான சிறிநாத் பெரேரா இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தவேண்டிய தலைவர்கள் அனைவரும் இந்த விடயத்தில் பின் நிற்கிறார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்ப்பின் அடையாளம்
“இன்று நிறைவேற்று அதிகாரம், அதனால் எடுக்கப்படும் தனிப்பட்ட நோக்கமுள்ள முடிவுகளை தடைசெய்யும,; அதிகாரம் வாய்ந்த ஒரே ஒரு நிறுவனமாக உள்ள சட்ட மன்றங்களை கட்டுப்படுத்த முயல்வதை நாம் தெளிவாகக் காண்கிறோம், மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய ஒரே அமைப்பு நீதித்துறை ஆகும். நாங்கள் அனைவரும் வகுப்பு, சாதி, இனம், தொழில், கல்விமான்கள் என்கிற பேதமின்றி நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நீதித்துறையின் முதகெலும்பை உடைத்து சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முயலும் இந்த முயற்சியை பின்னுக்குத் தள்ளவேண்டும்” உச்ச நீதிமன்றின் குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் பெரேரா இவ்விதம் தெரிவித்தார்.
உண்மையில் இதுதான் அரசாங்கத்தின் கடைசி விருப்பமும் கூட - அதாவது ஆட்சிக்கு மாறாக எதிர்ப்பு தெரிவித்ததின் ஒரு அடையாளச் சின்னமாக ஷிராணி பண்டாரநாயக்கா மாறவேண்டும் என்பது - மற்றும் நல்லதோ கெட்டதோ  இப்போது அதுதான் சரியாக நடந்து வருகிறது. பண்டாரநாயக்கா இப்போது நாட்டிலுள்ள சக்திவாய்ந்த சட்டத்துறை சகோதரர்களின் முழு ஆதரவையும் பெற்றுள்ளார், இந்த செயல்முறைகளுக்கு எதிராக வழக்குகள் வந்து குவிந்துள்ளன மற்றும் பொதுவாக அது அழுத்தங்களை மேற்கொள்வதால் அது ஒரு பதட்டமான வேகத்தில் நகருகிறது.
இந்தக் காரணத்தால்தான் சில அரசாங்க உள்நபர்கள் இந்த நடவடிக்கை மிக விரைவாக இந்த சனிக்கிழமைக்குள் (8 ந் திகதி),  வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்போது முடிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்கள். பாராளுமன்ற தெரிவுக்குழு மரதன் ஓட்டம்போல இடைவிடாது நடைபெறுகிறது,கடந்த செவ்வாயன்று அதன் அமர்வு காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை, இடையில் ஒரு 90 நிமிட இடைவேளை மட்டும் வழங்கப்பட்டு நாள் முழுவதும் நடைபெற்றது, நேற்றும் குழு மீண்டும் முதல் தடவையாக பிரதம நீதியரசரின் பிரசன்னம் இன்றி கூடியது. இன்று குழுவின் முன் பி.ப 2.30 மணிக்கு சமூகமளிக்கும்படி பிரதம நீதியரசருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் குழு அதற்கு முன்னரே கூடவுள்ளது.
எனினும் இந்த அதிவேக ஆர்முடுகலைத் தவிர, பிரதம நீதியரசரின் இரண்டு சட்டத்தரணிகள் மற்றும் குழவிலுள்ள எதிர்கட்சியை சேர்ந்த அங்கத்தவர்கள் ஆகியோர்கள், பாராளுமன்றத்தால் இந்த விசாரணைக்கென எதுவித செயல்முறைகளும் வகுக்கப்படவில்லை மற்றும் ஷிராணி பண்டாரநாயக்கா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் குற்றவியல் பிரேரணையுடன் தொடர்புள்ள எதுவிதமான ஆவண ஆதாரங்களும் இதுவரை சமர்ப்பிக்கப் படவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளனர்.ராஜபக்ஸ ஆட்சிக்கு எதிரான ஒரு எதிர்ப்புச் சின்னமாக ஷிராணி பண்டாரநாயக்க மாறிவருகிறார். (2)
-   தாரிஷா பஸ்ரியன்ஸ்
விடுகதை
shirani-4பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை சமர்ப்பித்ததும், அவர்மீது செலுத்தப்படும் அழுத்தம்  அவரது அலுவலகத்தை விட்டு அவரை வெளியேற்ற நிர்ப்பந்தப்படுத்தும், அதன்காரணமாக நிறைவேற்றுனரின் தெரிவான ஒருவரை நியமிக்க வழி பிறக்கும் என்பதில் அரசாங்கம் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தது. மாறாக இந்த குற்றவியல் பிரேரணைக்கு எதிராக போராடுவது என்று அவர் எடுத்த முடிவு, ஆட்சியாளர்களுக்கு அவிழ்க்க முடியாத ஒரு பெரிய விடுகதைபோல அமைந்துவிட்டது, அதன்விளைவாக குற்றப் பத்திரிகை பாராளுமன்ற தெரிவுக்குழு என்று பல புதிர்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாகி விட்டது.
நிலையியற் கட்டளை 78 - ஏ யின் பிரகாரம் பாராளுமன்ற தெரிவுக்குழு, பிரதம நீதியரசர்  குற்றவாளி என்று கண்டால் குழுவின் அறிக்கை ஒரு பகிரங்க ஆவணமாக மாறும். இந்த குற்றவியல் சரித்திரம் உள்நாடு மற்றும் வெளிநாடு ஆகிய இரண்டினது கவனத்தையும் திரட்டியுள்ளதால், முறையான நடவடிக்கைகள் பின்பற்றப் பட்டுள்ளனவா, மற்றும் பிரதம நீதியரசரிடம் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட்டதா என்று தீர்மானிக்க விரும்பும் ,பல்வேறு சமூக அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அங்கங்கள் என்பனவற்றை அந்த அறிக்கை சம்மதிக்க வைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படியான ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் உண்மையில் கண்டனங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் மற்றும்;, விசேடமாக ஏற்கனவே ஒருதலைப்பட்சமான  வெளிச்சம் இருப்பதாக புலப்படுவதால் முற்றிலும் பக்கச் சார்பற்றதாகவும் இருக்கவேண்டும், ஏனெனில் குழுவின் கலவை மற்றும் அதில் உள்ள அங்கத்தவர்கள் கிட்டத்தட்ட நிறைவேற்றுனரின் முழுதான சமர்ப்பிப்பாக உள்ளனர்.
இந்தப் பின்னணியில், செவ்வாயன்று நடைபெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வில் பிரதம நீதியரசரின் சட்டப் பிரதிநிதியான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டீ சில்வா ஒரு பகிரங்க விசாரணையை நடத்தும்படி கோரிக்கை விடுத்தார். குழுவிலிருந்த எதிர்கட்சி அங்கத்தவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள், ஆனால் பெரும்பான்மையாக உள்ள அரசாங்கத்தின் குழு உறுப்பினர்கள் அசைந்து கொடுக்கவில்லை. அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. பண்டாரநாயக்காவின் சட்டத்தரணிகளால் மேலும் ஒரு கோரிக்கையாக  அமர்வுகளை அவதானிப்பதற்காக பொதுநலவாய அவதானி அல்லது உள்நாட்டு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டு,அ துவும் நிராகரிக்கப்பட்டது. அப்போது சட்டத்தரணிகள், குழுவிலுள்ள இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவரால் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்கிற பிரச்சினையை எழுப்பி பக்கச்சார்பான கண்ணோட்டத்தில் தமது கட்சிக்காரரின் நலன்களுக்கு எதிர்ப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டனர். குழுவானது வேண்டுமென்றே இந்த விடயத்தில் இன்று தீர்ப்பு கூறுவதாகத் தெரிவித்துள்ளதாக பினான்சியல் டைம்ஸ் அறிகிறது.
முட்டுக்கட்டை
அதற்கிடையில் குற்றவியல் விசாரணைகள் முறைப்படி ஆரம்பித்தது முதல் பல வாரங்களாக தவிர்க்க முடியாததாக இருந்த  அரசியலமைப்பு முட்டுக்கட்டைகளுக்கு கடந்த வாரம் பாராளுமன்றத்தில்  ஆப்பு வைக்கப்பட்டது, குற்றவியல் நடவடிக்கை மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் சட்டத் தகைமை ஆகியனவற்றுக்கு எதிராக அநேக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கத்தவர்களுக்கு பதிலளிக்குமாறு,உச்ச  நீதிமன்றப் பதிவாளரினால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதைக் குறித்து, அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா சிறப்பு உரிமை மீறல் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். குழுவின் 11 அங்கத்தவர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதால் டிசம்பர் 14ந் திகதி அவர்கள் நீதிமன்றில் சமூகமளிக்கும்படி  கேட்கப்பட்டுள்ளார்கள், எனத் தெரிவிக்கப்பட்டது. டீ சில்வாவின் கேள்விகளைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் ஒரு பெருமையான தருணம் உறுதிப்படுத்தப்பட்டது, அது இயல்பாகவே நாட்டின் நீதித்துறையின் தலைவரை நீக்குவதுடன் தொடர்பு கொண்டதாக இருக்கவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா பாராளுமன்றம் நீதித்துறையை விட உயர்வானது என்பதை உறுதிப்படுத்துவதற்காக சற்றுத் தாமதமாக எழுந்து நின்று அதுபற்றிய தனது கருத்துக்களைத் தெரிவித்தார். “இந்த விடயத்தில் அனுரா பண்டாரநாயக்காவின் தீர்ப்பை பின்பற்றுங்கள்” என்று சபாநாயகர் சாமல் ராஜபக்ஸவிடம், 2001ல் சபாநாயகராயிருந்த அனுரா பண்டாரநாயக்கா தெரிவித்த வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையான பாராளுமன்றம் அதி உயர்வானது நீதிசசேவையின் கட்டளைகளுக்கு அது கீழ்படியத் தேவையில்லை என்பதைக் குறிப்பிட்டு அதைப் பின்பற்றும்படி மன்றாடினார். ஜோசப் மைக்கல் பெரேரா உள்ளிட்ட ஏனைய பல மூத்த ஐதேக அங்கத்தவர்களும் இதே உணர்வை பிரதிபலித்தார்கள். மகிழ்ச்சியடைந்த ஆளும் தரப்பு, எதிர்க்கட்சியின் உணர்வுகளுக்கு முழு ஆதரவு வழங்கினார்;கள், தியவன்ன ஆற்றங்கரையில் சட்டவாளர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் ஒரு அப+ர்வமான காட்சியாக அது இடம்பெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மிகச்சில குரல்களில் ஒன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவரும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனுடையது, பாராளுமன்ற அங்கத்தவர்களும் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டவாகள், அது எல்லாவற்றிலும் உயர்வானது என்று அவர் கூறினார். அவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன  ஆகியோர் 13வது திருத்தம் சம்பந்தமாக ஒரு ஆணையை பெறுவதற்காக சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றம் சென்ற சம்பவத்தை அங்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தார். ஜேவிபி இந்த விடயத்தில் ஒரு கடும் மௌனத்தைக் கடைப்பிடித்தது, அது ஏன் என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜேவிபி அறிவித்தலுக்கு பதிலளிக்குமா?
டிசம்பர் 14ந்திகதி நீதிமன்ற அழைப்பாணைக்கு கட்சி பதிலளிக்கும் சாத்தியம் உள்ளது, என்று ஜேவிபியின்  உள்ளக நபர்கள் தெரிவித்தார்கள். உண்மையில் ரி.என்.ஏ கூட இதே கருத்தை வெளியிட்டது,அதன் பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கத்தவரும் கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் பதில் சொல்ல வேண்டுமா என அது சிந்தனை செய்து வருகிறது. பாராளுமன்ற அங்கத்தவர்கள் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜராகவேண்டுமென்கிற தேவையில்லை, ஆனால் அவர்களது சமர்ப்பிப்புகளை கையளிக்க ஒரு பிரதிநிதியை அனுப்ப முடியும்.
அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அரசாங்கத்துக்கு தனது பரிபூரண ஆதரவை வழங்கிய எதிர்கட்சித் தலைவரது நடவடிக்கை, அவரது கட்சியிலுள்ள அவரது உற்ற விசுவாசிகளுக்கு கூட அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எழுப்பப்பட்ட சிறப்புரிமை விடயத்தில் சபாநாயகர் தான் வழங்கிய தீர்ப்பில் பாராளுமன்றத்தின் உயர்நிலையை உறுதிப்படுத்தியதுடன் தனது முடிவுகளை கேள்வி கேட்பதற்கோ அல்லது பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கோ நீதி மன்றங்களுக்கு உரிமை கிடையாது எனத் தெரிவித்தார். சுவராஸ்யமாக தனது தீர்ப்பில் சபாநாயகர் ராஜபக்ஸ நடைமுறை பிரச்சினைகள் பற்றி தனது உள்ளீடுகளையும் மற்றும் விளக்கங்களையும்  அள்ளி வழங்கியதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
வியாழனன்று பாராளுமன்றத்தின் அமர்வுகள் நிறைவடைந்ததும் விக்கிரமசிங்காவின் விசுவாசிகளில் அநேகர் அவநம்பிக்கையின் நியாயமான அறிகுறிகளை வெளிப்படுத்தினார்கள். இந்த விடயத்தில் ஐதேக தலைவர் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து, இது அரசாங்கத்தின் திறமையான நிகழ்ச்சி என்று அதை அனுமதித்திருக்கலாம் என்று சிலர் அபிப்ராயம் வெளியிட்டதை கேட்க முடிந்தது.ஆனால் இந்த நாட்களில் ஸ்ரீலங்காவாசிகள் நிச்சயமாக சுவராஸ்யமான முறையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ரணில் பந்து விளையாடுகிறார்
சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் தான் பெற்ற மிகப் பெரிய வெற்றிகாரணமாக புத்துணர்ச்சி பெற்றிருக்கும் விக்கிரமசிங்கா மக்களின் ஆதரவை பெறும் வழியில் நிச்சயமாக செல்லவில்லை. இந்த குற்றவியல் நடவடிக்கையின் ஆரம்பம் முதலே விக்கிரமசிங்கா தன்னை பந்தயத்தில் பலம் அறியப்படாத மிகவும் முக்கியமான கருங் குதிரையை போலவே சித்தரித்து வந்துள்ளார், அவரது கரங்களுக்குள் மறைந்திருக்கும் அவருக்குத்; தெரிந்த பாராளுமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் அட்டவணைகளை புரட்டியெடுக்கப் போகிறார் என அவரது விசுவாசிகள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான அவரது நேரம் வந்தபோது, அவர் கட்சியின் மூத்த அங்கத்தவர்களான ஜோண் அமரதுங்க மற்றும் லக்ஷ்மன் கிரியல்ல ஆகியோரையே தெரிவு செய்தார். இருவரும் கட்சியின் மூத்த அங்கத்தவர்கள,; அத்தோடு இருவருமே சட்டத்தரணிகள், ஆனால் குழுவில் உள்ள அரசாங்கத்தின் பெரும்பான்மையான ஏழு அங்கத்தவர்களிடம் இருந்து கிளம்பும் தாக்குதலை சமாளிக்ககூடிய அறிவாற்றல் இருவருக்குமே கிடையாது.
பாராளுமன்றத்தின் மேலாதிக்கம் பற்றிய அவரது வலியுறுத்தலைப் பshirani-6ற்றி விக்கிரமசிங்கவின் விமர்சகர்கள் தெரிவிப்பது, நாட்டிலுள்ள சுதந்திர அமைப்புகளை கீழ்படுத்தும் வழியினை அதிகரித்துவரும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு உதவி செய்வதைக் காட்டிலும் அதை அவர் தனக்குள்ளேயே வைத்திருந்திருக்கலாம் என்று. ஐதேக தலைமையின் எதிர்ப்பாளர்கள் இந்த விவகாரங்களின் நிலையைக் கண்டு கொதித்துக் குமுறுகிறார்கள், கட்சியின் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது அல்லது தலைவரின் வெறுப்புக்கு ஆளாகவேண்டி உள்ளது என்பதால் விரக்கதி அடைந்துள்ளார்கள், அதிலும் விசேடமாக கட்சி மாநாட்டின் பின் தற்பொழுது அவர் அனுபவித்து வரும் அளவுக்கதிகமான அதிகாரங்கள் வேறு உள்ளன. உண்மையில் விக்கிரமசிங்காவின் பிரச்ச்pனைகளுக்கான காரணம், அவர் ஆளும் அரசாங்கத்திலுள்ளவர்களை விட தனது கட்சியிலுள்ள எதிர்ப்பாளர்கள் மீதே அதிக கோபம் கொண்டுள்ளார், மற்றும் இதை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவர் அரசாங்கத்தின் உதவியை பயன்படுத்தி தனது கட்சியுள் இருக்கும் மறுசீரமைப்பு இயக்கத்தை நிலையற்றதாக்கவும் அவர் தயாராக உள்ளார்.
சனிக்கிழமை (1ந்திகதி) நடைபெற்ற கட்சி மாநாட்டில் பாரிய காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பிரசன்னம் இருந்தது, முக்கியமாக தெரியப்படுத்துவது என்னவென்றால், அதிகார நிலையில் உள்ள யாரோ ஒருவர் விக்கிரமசிங்காவின் தலைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மிகவும் விரும்புகிறார் என்பதை தவிர வேறில்லை. உண்மையில் ஜனாதிபதி ராஜபக்ஸ அவரது வெற்றியையிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஒரு புத்தக வெளியீட்டின்போது, ஐதேகவின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவதற்காக கட்சிக்குள் இருக்கும் சீர்திருத்தவாதிகளுக்கு புத்திமதி கூறுவதைப்போல  “உன்னுடைய தருணம் நிச்சயம் வரும்” என்று சில வார்த்தைகளையும் உதிர்த்துள்ளார்.
பிரதம நீதியரசர் இயக்கம் சார்பான விடயத்தில் விக்கிரமசிங்கா காண்பிக்கும் விரோதம் சகல பகுதிகளிலிருந்தும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. சமீபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் சட்டமா அதிபருமான சிப்ளி அசீஸ் விக்கிரமசிங்காவை சந்தித்தபோது குற்றவியல் நடவடிக்கை மூலமாக அரசாங்கம் நீதித்துறையினை நசுக்க எடுக்கும் முயற்சிகளை தடைசெய்ய ஐதேக எதுவுமே செய்யவில்லை என்றே தோன்றுகிறது என முறையிட்டுள்ளார்.
அரசியல் அவதானிகள் தெரிவிப்பது விக்கிரமசிங்காவிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால்  ஒரு தனிமனிதன் என்ற வகையில் தனக்கு சாதகமான மூலோபாயங்களை செயல்படுத்துபவர் போலவே அவர் தோற்றமளிப்பார்,ஆனால் அது பெரும்பான்மையான மக்களின் பார்வையில் ஒரு திறமையான எதிர்கட்சித் தலைவர் என்று தோன்றுவதில்லை. தவிரவும் குறைபாடுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கைகளில், குழுவில் இடம்பெற்றுள்ள அவரது சொந்த வேட்பாளர்களே, பாராளுமன்ற நடவடிக்கைகளின் குருவை போன்றவரே இந்த நடவடிக்கைகளின் உள்ளார்ந்த பிரச்சினைகள் பற்றி இன்னமும் ஒரு முணுமுணுப்பைக்கூட வெளியிடவில்லை என்று விக்கிரமசிங்காவைப்பற்றி புகார் தெரிவிக்கின்றனர். அவர் அப்படிச் செய்வதற்குத்தான் முயற்சிக்கிறாரா, ஐதேக அந்த நடவடிக்கையில் வெறுமே சமாளிக்கும் விதத்தில் ஈடுபட்டிருப்பதற்குப் பதிலாக, சட்டபூர்வமாக குற்றவியல் நடவடிக்கைகளை கையாண்டிருந்தால் அதிக நற்பெயர் கிட்டியிருக்கும்.
நடைமுறையின் ஒரு பகுதி
இப்போது ஒரு மாதத்துக்கு மேலாகிறது, பிரதம நீதியரசரை அகற்றுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நகர்வுகளுக்கு எதிராக எழுச்சி பெறுவதற்கு விக்கிரமசிங்கா தயக்கம் காட்டுகிறார் என்பதை அநேகர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள், ஏனெனில் ஷிராணி பண்டாரநாயக்கா மீதான குற்றப்பிரேரணை மூலமாக ஆட்சியானது சரிந்து சட்டபூர்வ தன்மையை இழப்பதை அனுமதிப்பது என்பது அவரது விருப்பம். ஆனால் வெறுமே அமர்ந்திருப்பது என்பது பேச்சுவழக்கில் சொல்வதைப் போல ‘எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிரு‘ என்பதைப்போலிருக்கும், சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளில் வெளிப்படையாக ஒருவர் ஒதுங்கிக் கொள்ளவோ மற்றும் தலையிடாமலோ இருத்தலாகாது. உலகெங்கும் உள்ள நீதிபதிகள், சட்டத்தரணிகள், மற்றும் அவதானிகள் ஆகியோர்கள்  ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக ஆட்சியாளர்கள் நடத்தும் சூனிய வேட்டை இது என சொல்கிறார்கள், ஓரளவு மறைமுகமான வழியில் ஆட்சியாளர்களுக்கு இதற்கு உதவுவதன் மூலம் தன்னையும் தனது கட்சியின் விரிவாக்கத்தையும் விக்கிரமசிங்கா இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக ஆக்கிவிட்டார்.
எதிர்கட்சியின் பங்களிப்பு, உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்பனபற்றி லண்டனில் உள்ள மலபரோ ஹவுசில் உள்ள பொதுநலவாய செயலகம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்றச் சங்கம் என்பனவற்றால் 1998ல் உருவாக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
“எதிர்கட்சியால் எதையும் அரசாங்கத்தை போல மாத்திரம் எடுத்துக் கொள்ள இயலாது, ஆனால் அப்படி பார்க்கலாம். அது வெற்றி கொள்வதற்கு மக்களின் நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும், ஆகவே பொறுப்பு, மரியாதை, மற்றும் ஐக்கியம் என்கிற கண்ணோட்டத்தில் அது பார்க்கவேண்டும், மற்றும் அதன் கொள்கைகள் மக்களின் நாளாந்த வாழ்க்கையுடன் தொடர்புள்ளபடி அமையவேண்டும். தனித்தனியான தலைவர்களை மாத்திரம் அல்லாது ஒரு குழுவை முனனேற்றுவதற்காக அது பாராளுமன்றத்தை திறமையாக பயன்படுத்த வேண்டும், அதன் ஒட்டுமொத்த அணுகுமுறையை தொடர்ந்து மறுசீரமைப்பதோடு புதிய கொள்கைகளை வகுக்கும் புதிய நிறுவனங்களோடு திறமையாக இடையீடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்”
பொதுநலவாய பாராளுமன்ற நடைமுறைகளைப் பற்றி அதன் தலைவரிடம் வெளிப்படையான அறிவு இருந்தபோதிலும், விக்கிரமசிங்கா தலைமையிலான ஐதேக, இதில் கூறப்பட்ட பகுதிகளை  வெறுமே பார்க்கத் தவறிவிடுகிறது. பொதுமக்களுக்கு இனிமேலும் ஐதேக மீது நம்பிக்கை ஏற்படப்போவதில்லை, அதனால் அது  சுற்றி ஓடுவதற்கு மாற்று வழி தேடுகிறது. இது எதையாவது பற்றிப்பிடித்துவிட நினைக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் அனுபவமற்ற தன்மையை போல உள்ளது, நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டக் களத்தில் முன்னிற்பதற்காக,பொன்சேகா செவ்வாயன்று புதுக்கடையில் ஒரு காட்சி கொடுத்தார், அந்த நேரத்தில் அனைவரது கண்களும் அந்த சிவந்த கூரையுள்ள கட்டிடத்தின் மேல் பார்வையை செலுத்திக் கொண்டிருந்த வேளையில், அவரது பிரசன்னத்தை மிகவும் சாதுர்யமான ஒரு நகர்வு என்று மாத்திரம் குறிப்பிடலாம்.
ஷிராணி பண்டாரநாயக்கா மூலமாக மற்றொரு தற்காலிக வீராங்கனை உருவாகாமல் ஐதேக எச்சரிக்கையாக இருப்பதற்கு மிகவும் சிறிதளவு காரணங்களே உள்ளன., உண்மையில் அவருக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை எதிர்க்கும் போராட்டத்தில் தொடர்பு கொள்ளாமல் எதிர்கட்சி; வெற்றிடம் ஒன்றை ஏற்படுத்துமானால், அதுதான் சரியாக அவரை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு, எதிர்ப்பு சின்னமாகவும் மற்றும் ஒரு கதாநாயகியாகவும் மாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தப்போகிறது.
(நன்றி: டெய்லி பினான்சியல் டைம்ஸ்)
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார் 

நன்றி தேனீ


பிரதம நீதியரசருக்கு ஆதரவாக வடக்கு சட்டத்தரணிகள் போராட்டம்
By General
2012-12-12

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பகல் யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

வடமாகாண சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் தமது வாய்களை கறுப்பு பட்டியினால் மூடிக்கட்டிக்கொண்டு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 நன்றி வீரகேசரி கண்டியில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு பேரணி
By Hafeez
2012-12-12


பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி சட்டத் தரணிகள் சங்கம் இன்று காலை கண்டி வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்பாக ஒன்றினனந்து எதிர்பு பேரணியில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக இன்று நீதிமன்ற பணிகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன. இதனால் நீதிமன்றத்திற்கு வருகைதந்திருந்த பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொண்டனர்.
சுமார் 500 சட்டத்தரணிகள் சுலோகங்களை ஏந்தி தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.

நன்றி வீரகேசரி  பிரதம நீதியரசருக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்
By M.D.Lucias
2012-12-12


பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முற்பகல் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
Pics by: j.Sujeewakumar


இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் கலந்து கொண்டு சுலோகங்களை ஏந்தி தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.
இதன் காரணமாக இன்று நீதிமன்ற பணிகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன. இதனால் நீதி மன்றத்திற்கு வருகைத்தந்திருந்த பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொண்டனர்.


 நன்றி வீரகேசரி

இராணுவம் குறித்து கூட்டமைப்பின் நிலை!
என் சத்தியமூர்த்தி


வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில், பிற பகுதிகளிலேயே இனப்போர் கோர தாண்டவம் ஆடியது. அவர்களில் பலருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே உறவினர்கள் இல்லை, அங்கிருந்து அனுப்பப்படும் பணமும் இல்லை. சட்டபூர்வமாகவோ வேறுவழிகளிலோ அந்த நாடுகளை சென்றடைந்தால், அவர்களை வரவேற்று இடமளிப்போரும் இல்லை, சிறைப்பட்டால் சீண்டுவாரும் இல்லை. அவர்களுக்கு இலங்கையே சர்வமயம். ஆனால், தமிழர் அரசியலில் அவர்களது குரல் இன்னமும் ஒலிப்பதும் இல்லை. ஆனால் அனைத்து பாதிப்புகளையும் அவர்களே சந்தித்து வருகிறார்கள். உரிமை குறித்து கடந்த தசாம்சங்களில் குரல் எழுப்பி வரும் தமிழ் சமூகம் இவர்களது நிலைமை குறித்து இன்றளவும் கவலைபட்டதாகவும் தெரியவில்லை. 

வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும் என்பது தனது கோரிக்கை அல்ல என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இனப்போருக்கு பின்னர், மீள்கட்டமைப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதும் கூட தவிர்க்க முடியாத கட்டாயம். மாறாக, அங்கு இராணுவத்தினர் மக்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடு செய்வதே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

பிரச்சினைகள் பலவாக இருந்தாலும் அதன் முடிவுகள் என்னவோ ஓரே கருத்தை மட்டுமே வலியுறுத்துவதாக அமைந்து விட்டது துர்பாக்கியமே. அல்லது, தமிழர், சிங்களவர் என்ற இரு தரப்பினரிடையேயும் இருக்கும் பிரச்சினைகள் என்று இல்லாத பிரச்சினைகளையும் தூண்டிவிட்டு அதில் அரசியல் குளிர்காய விரும்புவோர் இருப்பதும் ஒரு காரணமே. இந்த பின்னணியில், கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனின் நாடாளுமன்ற பேச்சு வரவேற்கத்தக்கது. முக்கியமாக, வடக்கிலோ, கிழக்கிலோ பேசியிருப்பதை விட, சிங்கள அரசியல் தலைமைகளையும் மக்களையும் இந்த பேச்சு சென்றடையும் வாய்ப்பு அதிகம்.

வடக்கில் இராணுவம் இருப்பதை தடைசெய்ய முடியாது என்ற கருத்தை தெரிவித்திருக்கும் அதேசமயம், சுமார் ஒன்றரை இலட்சம் வீரர்கள் அங்கு தொடர்ந்து தளம் இட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வகையிலும் சம்மந்தன் பேசியிருக்கிறார். உலகெங்கும் பிரச்சினை நிறைந்திருந்த பகுதிகளில் இராணுவம் ஏதோ ஒருவகையில் நிலைகொள்ள வேண்டியுள்ள நிர்ப்பந்தத்தை அந்தந்த நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இது குறித்த தங்களது முடிவுகளையும் நியாயப்படுத்தி வந்துள்ளன. ஏதோ ஒரு காரணத்திற்காக இது குறித்த சர்வதேச சமூகத்தின் அறிவுறுத்தல்களையும் ஆதங்கத்தையும் இலங்கை அரசு பொறுமையாக கேட்டுக்கொண்டிருப்பதால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது என்று தமிழ் சமூகம் முடிவுகட்டி விடக்கூடாது. மாறாக, பிற நாடுகளின் உள்நாட்டு நிலைப்பாடுகள் குறித்து சரித்திரபூர்வமாக இலங்கை அரசு பட்டியலிட தொடங்கினால் அந்த நாடுகள் அதில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ, தங்களது எதிர்ப்பின் வலிமையை குறைத்துக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். பின்னர் இது குறித்தும் தமிழ் சமூகம் சர்வதேசத்தை குறை கூறிக் கொண்டு இருக்கலாம்.

மாறாக, பிரச்சினைகளை உணர்ச்சி பூர்வமாகவும், எதிரியை விளம்பர போரில் வெற்றிகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் அணுகாமல், அனைத்து சாராருக்கும் அதன் முடிவில் பங்களிப்பும் பயனும் இருக்க வேண்டும் என்றும் உணர்ந்து செயல்பட வேண்டும். இதனை செய்ய விடுதலை புலிகள் தலைமை தவறியதாலே, தமிழ் சமூகத்தின் அவலம் தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 'அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி' என்ற திரைப்பட வசனம் ஒரு சாராருக்கு வேண்டுமானால் பொருந்தலாம். அதுவே ஒரு சமூகத்தின் சாபக்கேடாக மாறிவிடக்கூடாது.

உண்மை என்னவோ, இனப்போர் அரங்கேறிய தமிழர் பகுதிகளில் மட்டும் இன்னமும் அன்றாட வாழ்க்கையில் சகஜநிலை திரும்பவில்லை. இழந்துபோன வாழ்க்கை அவர்களில் பலருக்கும் இல்லாமலே காலம் கடந்து விடலாம். எஞ்சிய சிலருக்கோ, இழந்ததை திரும்பிப்பெற தசாம்சங்கள் கூட ஆகலாம். தங்களை சுற்றி இராணுவம் எப்போதும் இருக்கிறது என்ற எண்ணம் போர் குறித்த எண்ண அலைகளை உசுப்பி விடுகிறதோ இல்லையோ, நிச்சயமாக வாழ்கையில் சகஜநிலை திரும்பி வருகிறது என்ற எண்ணத்தையும் பின்னோக்கி தள்ளிவிடும் என்பதே உண்மை.

அதே சமயம், இனப்போருக்கும் அதன் அவலங்களுக்கும் இலங்கை அரசும், சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளும் மட்டுமே காரணம் என்ற அடிப்படையில் மட்டுமே தமிழ் தலைமைகள் செயல்பட முடியாது, செயல்படக்கூடாது. தாங்களும் இலங்கையின் பிரஜைகள் என்ற எண்ணம் இருந்தால், அதோடு கூடி உரிமைகளுள் மட்டுமல்ல, கடமைகளும் உண்டு என்ற எண்ணம் உருவாக வேண்டும். அத்தகைய எண்ணம் உருவாகி உள்ளது என்று அரசிற்கும் இராணுவத்திற்கும் நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே கூட்டமைப்பு கூறும் இராணுவத்தை பின்வாங்குவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்பதே உண்மை.

சம்பந்தன், தனது நாடாளுமன்ற உரையில் விடுதலை புலிகள் இயக்கம் தமிழ் சமூகத்தையும் தான் உட்பட்ட மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களை குறிவைத்தது குறித்தும் பேசி இருக்கிறார். இதுவே, அரசு கூறும் கருத்து. ஆனால், அதற்காக அவர் தலைமையிலான கூட்டமைப்பு இன்னமும் விடுதலை புலிகளின் எடுபிடிகளாகவே செயல்படுகின்றனர் என்று பொத்தாம் பொதுவாக அரசு தரப்பினரில் சிலர் கூறிவருவதில் எந்தவித நியாயமும் இல்லை. அவர்களில் சிலர் கூட்டமைப்பு குறித்து விஷ(ம) பிரசாரம் செய்து வருகின்றனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அதேநிலை, தமிழ் சமூகத்திலும் தொடர்கிறது. அரசும் இராணுவமும் செய்யும் எந்தவித புனரமைப்பு பணிகளும் எங்கே அவற்றால் பயனடையும் மக்களை அரசிற்கு ஆதரவாக திருப்பி விட்டுவிடுமோ என்ற கவலையும் அவர்களிடையே உள்ளது என்பதும் உண்மை.

அரசு தரப்பினர் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லையென்றாலும், விடுதலை புலிகள் விடயத்தில் சம்மந்தனும் கூட்டமைப்பும் தெளிவான கருத்துக்களையே முன்வைத்து வந்துள்ளனர். அதே சமயம், அரசு குறித்தும் இராணுவம் குறித்தும் தமிழ் சமூகத்திற்கு நம்பிக்கை வரும் அளவிற்கேனும் அரசும் செயல்பட வேண்டும். அது இனப்போரின் கடைசி காலகட்டம் குறித்த சர்வதேசத்தின் கவலைகள் குறித்துமட்டுமல்ல. அதன் தொடக்கமான 1983ஆம் ஆண்டு படுகொலைக்கு இன்றளவும் எந்த ஒரு அரசும் தமிழ் சமூகத்திடமும் நாட்டு மக்களிடையேயும் வருத்தம் தெரிவிக்கவில்லை. அதனையும் இந்த அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

இனப்போரின் கடைசி அடிச்சுவடுகள் ஏதோ ஒரு காரணத்திற்காக யாழ்பாணம் உட்பட்ட நகர பகுதிகளில் இருந்து தள்ளியே இருந்தது. அதிக அளவில் மக்கள் வசிக்கும் நகர பகுதிளில் போர் மீண்டும் தொடங்கினால் அதனால் இதைவிட அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படலாம் என்று விடுதலை புலிகள் தலைமை மட்டுமல்ல, இராணுவ தலைமையும் கருதியிருக்கலாம். எது எப்படியோ, கடந்த 1996ஆம் ஆண்டிற்கு பின்னரே யாழ்ப்பாணமும் சுற்றுவட்டாரமும் போர் கொடூரத்தை அளவுடனே சந்திக்க வேண்டியிருந்தது.

வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில், பிற பகுதிகளிலேயே இனப்போர் கோர தாண்டவம் ஆடியது. அவர்களில் பலருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே உறவினர்கள் இல்லை, அங்கிருந்து அனுப்பப்படும் பணமும் இல்லை. சட்டபூர்வமாகவோ வேறுவழிகளிலோ அந்த நாடுகளை சென்றடைந்தால், அவர்களை வரவேற்று இடமளிப்போரும் இல்லை, சிறைப்பட்டால் சீண்டுவாரும் இல்லை. அவர்களுக்கு இலங்கையே சர்வமயம். ஆனால், தமிழர் அரசியலில் அவர்களது குரல் இன்னமும் ஒலிப்பதும் இல்லை. ஆனால் அனைத்து பாதிப்புகளையும் அவர்களே சந்தித்து வருகிறார்கள். உரிமை குறித்து கடந்த தசாம்சங்களில் குரல் எழுப்பி வரும் தமிழ் சமூகம் இவர்களது நிலைமை குறித்து இன்றளவும் கவலைபட்டதாகவும் தெரியவில்லை.

இது தானா சமூகம்? இது தானா அரசியல்?
நன்றி: தமிழ்மிரர்  நன்றி தேனீ 


அமைச்சர் கெஹலியவை படுகொலை செய்யத் திட்டமிட்ட பெண்ணுக்கு 20 வருட சிறைத்தண்டனை
By General
2012-12-13

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்த தமிழ் பெண்ணொருவருக்கு 20 வருடகால சிறைத்தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசலிங்கம் தாமரைவதனி என்ற பெண் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை கேகாலை பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒன்றில் இருந்து அமைச்சரை கொல்வதற்கு திட்டம் வகுத்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு குற்றத்தடுப்புப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு விசாரணைகள் இடம்பெற்று கேகாலை நீதிமன்றுக்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்தே குறித்தப் பெண்ணுக்கு 20 வருடசிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.     
நன்றி வீரகேசரி
வவுனியா சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல்: முஸ்லிம்களின் காணியெனவும் தெரிவிப்பு
 
By General
2012-12-16

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாளம்பைக்குளத்தில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அறிவித்தலில் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி கிராம சேவகர் என தெரிவிக்கப்படும் வை.நாயர் என்பவரின் றப்பர் முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது.
சோபாய புளியங்குள தமிழ் மக்கள் அறிய வேண்டியது முஸ்லிம் மக்களின் (சாம்பைக் குளம்) காணிகளில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன் வெளியேற வேண்டுமென கிராம சேவையாளர் ஊடாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
வெளியேறாத பட்சத்தில் வன்முறையாக வெளியேற்றப்படுவீர்கள் என தெரிவிக்கின்றே. இப்படிக்கு இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன்.
இவ்வாறு அந்த அறிவித்தலில் காணப்படுகின்றது.   இதேவேளை இவ்விடயம் குறித்து நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படுமென வன்னி மாவட்ட எம்.பி. அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.      
நன்றி வீரகேசரி


No comments: