உலகச் செய்திகள்

.
சூடானின் துறைமுகத்திற்கு மீண்டும் விரைந்த ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

மலாலாவை சந்தித்த சர்தாரி

ஜப்பானில் மேலுமொரு அணு மின் நிலையம் மூடப்படுகின்றது!

சூடானில் உளவுபார்த்த இஸ்ரேலிய கழுகு

மலாலா 'தேசத்தின் மகள்': பாக். பாராளுமன்றத்தில் தீர்மானம்

உக்ரைனில் கடும் பனியையே கரைய வைத்த நிர்வாணப் பெண்களின் போராட்டம்

அமெரிக்க ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு 27 பேர் பலி




சூடானின் துறைமுகத்திற்கு மீண்டும் விரைந்த ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு


செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சூடான் நாட்டின் போர்ட் சூடான் துறைமுகத்திற்கு ஈரான் நாட்டின் இரு ஏவுகணை மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் விரைந்துள்ளன.


கடந்த இருமாதங்களில் சூடான் நாட்டின் துறைமுகத்திற்கு ஈரானிய போர்க்கப்பல்கள் வந்துள்ளது இது இரண்டாவது முறையாகும்.
நேச நாடுகளுடனான கடற்பயிற்சியை மேற்கொள்ளும் நடவடிக்கையாக இந்த வருகை இருக்கிறது என்று ஈரான் கூறியுள்ளது. பிராந்திய மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என்று அது கூறியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் கப்பல்கள் அங்கு சென்றமைக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடத்தும் நோக்குடனேயே கப்பல்கள் அங்கு சென்றுள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரும் ஈரானின் போர்க்கப்பல்கள் சூடானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தன.
தனது ஆயுதத் தொழிற்சாலையொன்றின் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியதாக சூடான் குற்றஞ்சாட்டி சில நாட்களுக்குப் பின்னரே ஈரானிய கப்பல்கள் அங்கு சென்றிருந்தன.
எனவே இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்குடனேயே ஈரானிய கப்பல்கள் அங்கு சென்றிருந்ததாக அக்காலப்பகுதியில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஈரான் கப்பல்கள் தமது வழமையான விஜயத்தின் ஓர் அங்கமாகவே தமது துறைமுகத்திற்கு வருகை தந்ததாக சூடானின் வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.
இத்தொழிற்சாலையிலிருந்து ஈரான், சிரியா, மற்றும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, இஸ்லாமிக் ஜிஹாட் உட்பட போராளிக்குழுக்களுக்கு ஆயுதம் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.      நன்றி வீரகேசரி  







மலாலாவை சந்தித்த சர்தாரி

 
லண்டனில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் நாட்டு சிறுமியான மலாலாவை அந்நாட்டு பிரதமர் ஆசிப் அலி சர்தாரி சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
பாகிஸ்தான் பெண்களின் எதிர்ப்புத்திறனின் அடையாளமாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் போரின் சின்னமாகவும் மலாலா விளங்குகின்றார்.
அவரை கவனித்துக் கொள்வது பாகிஸ்தான் தேசிய பொறுப்பாகும். மலாலாவுக்கு வேண்டிய அனைத்தையும் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து செய்யும் என்று சர்தாரி தெரிவித்துள்ளார். சர்தாரியின் மகள் ஆசீபா சர்தாரி, மலாலாவுக்கு சால்வை பரிசளித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய மாணவி மலாலா தாலிபன்களால் சுடப்பட்டார்.
தலை மற்றும் முகத்தில் குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்த 14 வயது மாணவியான மலாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் பாகிஸ்தான் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக லண்டனில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி 




ஜப்பானில் மேலுமொரு அணு மின் நிலையம் மூடப்படுகின்றது!

By General
2012-12-11 10:59:24

ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி தாக்கியதன் விளைவாக புகுஷிமா அணுமின் நிலையம் கசிவு ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மற்ற அணுமின் உற்பத்தி நிலையங்களில் தீவிர ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திசுரூகா அணுமின் நிலையத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் ஆய்வு செய்த போது 2ஆவது ரியாக்டர் இருக்கும் இடம் பூமி அதிர்ச்சி ஏற்படும் இடம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 1,160 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அணுமின் நிலையம் நிரந்தரமாக மூடப்படும் எனத் தெரிகிறது.

ஆனால் இது குறித்து மேலும் ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என ஜப்பான் அணுமின் உற்பத்திக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது. இந்த 2ஆவது ரியாக்டர் கடந்த 1987இல் அமைக்கப்பட்டதாகும்.    
நன்றி வீரகேசரி  







சூடானில் உளவுபார்த்த இஸ்ரேலிய கழுகு

By Kavinthan Shanmugarajah
2012-12-11 11:02:21

சூடானில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கழுகொன்றை அந்நாட்டு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
குறித்த கழுகானது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்ததென சூடான் நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சூடானின் டாபூர் பிராந்தியத்தின் கிரிநெக் நகரில் வைத்தே இக் கழுகு பிடிபட்டுள்ளது.
கழுகின் காலில் சூரிய சக்தியின் மூலம் இயங்கும், ஜி.பி.எஸ் தொழிநுட்பம் கொண்டதும் செய்மதியின் ஊடாக படங்களை அனுப்பக்கூடியதுமான சிறிய சாதனமொன்றும் கட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அதன் காலில் "Israel Nature Service" and "Hebrew University, Jerusalem" என்று பொறிக்கப்பட்ட அட்டையொன்றினையும் கழுகின் காலில் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இக்குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் மறுத்துள்ளது. இக் கழுகானது நாளொன்றுக்கு சுமார் 375 மைல்கள் பயணிக்கக் கூடியது என்றும் இதன் இடப்பெயர்வு தொடர்பான ஆராய்சிக்கெனவே இதனை அனுப்பியதாக தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இதே போன்றதொரு கழுகு சவுதி அரேபியாவில் வைத்து பிடிபட்டது. அதுவும் உளவு பார்க்கும் முகமாக இஸ்ரேலினால் அனுப்பப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அதன்போது இஸ்ரேல் அக்குற்றச்சாட்டை தற்போது தெரிவித்துள்ள அதே காரணத்தைக் கூறி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி  







மலாலா 'தேசத்தின் மகள்': பாக். பாராளுமன்றத்தில் தீர்மானம்

By General
2012-12-11 17:07:14

தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான சிறுமி மலாலாவை 'தேசத்தின் மகளாக' பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலிபான்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலாலா.
தற்போது இங்கிலாந்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, இங்கிலாந்து சென்று அந்த சிறுமியை சந்தித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி. ரோபினா, மலாலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தார்.
மலாலாதான் உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துவதற்கான முன் மாதிரி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தத் தீர்மானம் ஒருமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.   நன்றி வீரகேசரி 



உக்ரைனில் கடும் பனியையே கரைய வைத்த நிர்வாணப் பெண்களின் போராட்டம்

By V.Priyatharshan
2012-12-13

உக்ரைன் நாட்டு பாராளுமன்றம் பெரும் அமளி துமளியை சந்தித்துள்ளது. கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே எம்.பிக்களுக்கிடையே கடும் அடிதடி மூண்டுள்ளது.
அதேபோல பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் நாடாளுமன்றத்திற்கு வெளியே நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பானது.

உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உடைகளைக் களைந்து நிர்வாணமாகி நடு வீதியில் நின்று கூச்சலிட்டுப் போராட்டம் நடத்திய காட்சி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பெண்கள் இப்படி மேலாடை துறந்து வீதியில் போராடிய அதே நேரத்தில் பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும், ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
உக்ரைன் நாட்டில் பெருகி வரும் ஊழல்களுக்கு எதிராக பெண்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். மேலும் செய்யாத குற்றச்சாட்டுக்களின் பெயரில் அந்த நாட்டு முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான யூலியா டைமோஷென்கோவை சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்தும் இந்த நிர்வாணப் போராட்டம் நடைபெற்றது.   நன்றி வீரகேசரி  


அமெரிக்க ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கிச் சூடு 27 பேர் பலி
 
By General
2012-12-15

அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வராத போதிலும் 27 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி கொல்லப்பட்டவர்களில் 20 பேர் குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் தெரிகின்றது.



நியூடவுண் எனும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பாடசாலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கல்விக்கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.   
நன்றி வீரகேசரி 

No comments: