தமிழ் சினிமாநீர்ப்பறவை

துப்பாக்கி, இரத்தமில்லாமல் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை காதலோடு இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
நீண்ட நாட்களுக்கு பின்பு தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கும் நந்திதாதாஸ், தன் கணவரின் வாழ்க்கையை ப்ளாஷ்பேக் மூலமாக தொடங்குகிறார்.
வீட்டிற்கு வரும் நந்திதாவின் மகன் வீடை விற்க அனுமதி கேட்க, இது என் கணவன் வாழ்ந்த வீடு என்றும் 25 வருடங்களுக்கு முன்பு கடலுக்கு சென்றவர் கண்டிப்பாக திரும்பி வருவார் என கூறுகிறார்.
அன்று இரவே தன் வீட்டு தோட்டத்தில் "சமாதியில் பாடும் பாடலை" நந்திதா பாட, இதைப்பார்த்த மகன் மறுநாள் காலை அந்த இடத்தை தோண்டுகிறார்.
அந்த இடத்தில் எலும்புக்கூடுகள் கிடைக்க இது, தனது தந்தை தான் என உறுதி செய்யும் மகன், தாய் நந்திதாவை பொலிஸில் காட்டிக்கொடுக்கின்றார்.
பொலிஸ் விசாரணையில் தன் கணவனை தானே கொலை செய்து வீட்டிற்கு பின்புறம் புதைத்ததாக கூறினாலும் ப்ளாஷ்பேக்கை சொல்லும் போது நீர்ப்பறவை பறக்க தொடங்குகிறது.
பெற்றோர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் நிலையில் கிளிநொச்சியிலிருந்து அகதியாக வந்த விஷ்ணு(அருளப்பசாமியை) "பூ"ராம்- சரண்யா பொன்வண்ணன் தம்பதியினர் தத்து வளர்க்கின்றனர்.
பெரும் குடிகாரனாக திரியும் விஷ்ணு, அப்பழக்கத்திற்கு அடிமையாகி கை, கால் நடுங்கும் நேரத்தில் ஊர் ஊராக கடன் வாங்கி குடிக்க ஆரம்பிக்கிறார்.
இந்த சமயத்திலேயே கிறிஸ்தவ ஊழிய பெண்ணாக வரும் சுனைனாவை (யஸ்தர்) சந்திக்கிறார்.
தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பணம் வாங்கிவிட்டு செல்லும் நாயகன் விஷ்ணு, அதையும் குடித்துவிடுகிறார்.
பின், விஷ்ணு குடிகாரன் என்கிற விடயம் அறிந்த சுனைனா விஷ்ணு தலை மேல் கை வைத்து ஆசிர்வாதம் செய்ய நாயகனுக்கு காதல் சிறகடிக்கிறது.
இருப்பினும் குடியை மறக்க முடியாமல் சிக்கித்தவிக்கும் நாயகனை பெற்றோர் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கின்றனர்.
அங்கிருந்து தப்பித்து வரும் விஷ்ணு, தேவாலய விழாவை முடித்துக்கொண்டு அனைவரும் உறங்கும் சமயம் சுனைனா பக்கத்தில் படுத்துத்தூங்க மறுநாள் காலை நாயகனுக்கு அடி உதை கிடைக்கிறது.
இந்த சம்பவத்தால் மிகவும் அசிங்கப்பட்ட விஷ்ணு, மீண்டும் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து குடியை மறக்கிறார்.
குடியை மறந்து விட்டு சொந்த ஊர் திரும்பும் விஷ்ணு சுனைனாவை காதலிக்க முற்படுகிறார்.
இந்த சமயத்தில் வேலையில்லாத வெட்டிப்பயலுக்கு என் மகளை எப்படி கொடுப்பது என்று? நாயகி அம்மா கேள்வி கேட்க வேலை தேடி அலைகிறார்.
மீனவ சமுதாயத்தில் பிறந்து வெளியில் தொழிலாளியாக வேலை செய்வதை விட "கடலில் நீ தான் முதலாளி" என்று சுனைனா சொல்லும் யோசனைகள் விஷ்ணுவிற்கு ஆறுதலாக அமைகின்றன.
ஆனால் ஊரில் ஒரு கும்பல், மீனவ ஜாதி அல்லாதவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதி கிடையாது என விஷ்ணுவை விரட்டியடிக்கின்றனர்.
இந்த பிரச்னை தேவாலய நீதிமன்றத்திற்கு செல்ல, அங்கு விஷ்ணுவுக்கே சாதகமான தீர்ப்பு கிடைக்கிறது.
இருப்பினும் எதிர் தரப்பினர், யாரும் வேலைக்கு சேர்க்கமாட்டோம் என தெரிவிக்க சொந்த படகு வாங்கி மீன் பிடிப்பேன் என சபதமிடுகிறார் நாயகன்.
இந்த படகை வாங்க உப்பளத்திற்கு போய் வேலை செய்யும் விஷ்ணுவிற்கு எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கிறது.
கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் சமுத்திர கனி, முன்பணம் பெற்றுக்கொண்டு தவணையில் படகொன்றை கட்டிக்கொடுக்கிறார்.
படகு தயாரானதும் சுனைனாவை திருமணம் செய்து கொள்ளும் நாயகன், தினமும் கடலுக்கு செல்கிறார்.
இந்த சமயத்தில் ஒரு நாள் கடலுக்கு சென்ற நாயகன், இரண்டு நாள்களாகியும் கரை திரும்பவில்லை.
குடும்பமே பதற்றத்தில் இருக்கும் அந்நேரம், மகனை தேடி தந்தை ராம் கடலுக்கு செல்கிறார்.
அங்கே இலங்கை கடற்படை விஷ்ணுவை துப்பாக்கி தோட்டாக்களால் துளைத்ததை கண்டு அதிர்ச்சியுடன் தனது மகனின் பிணத்தை கரைக்கு மீட்டு வருகிறார்.
வீட்டோடு இருந்த பையன் வீட்டிலேயே புதைத்து விடுவோம், பொலிசுக்கு தெரிந்தால் நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ உடம்பை போஸ்ட் மார்டம் பண்ணி நாசம் செய்து விடுவார்கள் என புலம்பும் சமயம் இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களை அழ வைக்கிறார்.
இந்த கதையை சுனைனா(சின்ன வயது) அதாவது நந்திதா தாஸ்(பெரிய வயது) பொலிசாரிடம் சொல்கிறார்.
இறுதியாக இவ்வழக்கு நீதிமன்ற வாசலை அணுகிய போது, இவ்வளவு நாளாக இதை ஏன் மறைத்தீர்கள் என? நீதிபதி கேள்வி கேட்க, சொன்னால் மட்டும் நியாயம் கிடைத்துவிடப் போகிறதா? என நந்திதா பதிலளிக்க இந்திய நீதித்துறையின் அவலம் வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது.
இலங்கை கடற்படை நடத்தும் துப்பாக்கிச்சூடு நாட்டில் மழை பெய்வது போல் ஆகிவிட்டது என்றும் மீனவர்களுக்கு சட்ட சபையில் இட ஒதுக்கீடு என அடிக்கடி பஞ்ச் வசனங்கள் பேசும் சமுத்திரகனிக்கு கைதட்டுக்கள் ஏராளம்.
தமிழ்வாத்தியாராக வரும் தம்பி ராமய்யா, சாரயம் விற்கும் வடிவுக்கரசி, ஒளிப்பதிவாளர் சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்நந்தனின் இசை என அனைத்தும் படத்துக்கு வலுசேர்ப்பதுடன் பார்வையாளர்களை படம் பார்க்க தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.
கதாநாயகன்: விஷ்ணு
கதாநாயகி: சுனைனா
இயக்குனர்: சீனுராமசாமி
ஒளிப்பதிவு: சுப்ரமணியன்
இசை ஏ.ஆர்.ரஹ்நந்தன்.
நன்றி விடுப்பு 

No comments: