உலகச் செய்திகள்

.
சிரியாவில் கார் குண்டு தாக்குதல்: 50 பேர் பலி

'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு சிறை

குவாதமாலாவில் நிலநடுக்கம்: 49 பேர் பலி

சோமாலியாவில் முதற் தடவையாக பெண் வெளிநாட்டமைச்சர் நியமனம்

சிரியாவில் கார் குண்டு தாக்குதல்: 50 பேர் பலி

இத்தாக்குதலில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்த போதிலும் 50 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள இராணுவ இலக்கொன்றின் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் தலைநகர் டமஸ்கசில் அரசின் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள மேற்குப்பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு கார்குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து அரசாங்கப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு எல்லையில் உள்ள ஹரிம் நகரில் விமானப்படை தாக்குதலில் 20 புரட்சிப்படையினர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்நாட்டில் உள்நாட்டுப்போர் திவீரமடைந்துள்ள நிலையில், அங்கு இருதரப்புகளும் தாக்குதல்களை அதிகரித்துள்ளன.

நன்றி வீரகேசரி  


'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு சிறை
By General
2012-11-08
'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படத்தை தயாரித்தவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க நிறுவனமொன்றால் கடந்த செப்டம்பர் மாதம் தயாரித்து வெளியிட்ட 'இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' என்ற திரைப்படத்தில், நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பதட்டம் ஏற்பட்டது. லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ரொக்கெட் தாக்குதலில், அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர்.


இவ்வாறு உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட காரணமாக இருந்த குறும்படத்தை தயாரித்த மார்க் பஸ்ஸல்லி யூசெப் (வயது 55) கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் யூசெப் மறுத்தார். ஆனால், 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 5 ஆண்டுகள் வரை உரிய அனுமதி பெறாமல் கணனி மற்றும் இணையத்தை பயன்படுத்தக்கூடாது, கற்பனையான பெயர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஏற்கனவே 5 வாரமாக அமெரிக்க மத்திய சிறைச்சாலையில் இருக்கும் அவர் ஓராண்டு தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்க வேண்டும். அதன்பின்னர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 


குவாதமாலாவில் நிலநடுக்கம்: 49 பேர் பலி
By Kavinthan Shanmugarajah
2012-11-08

குவாதமாலா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 155 பேர் காயமடைந்துள்ளனர்.

இந் நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அங்கு ஜனாதிபதி ஒடோ பேரெஸ் மொலினாவில் அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குவாதமாலா மட்டுமன்றி மெக்சிகோ, மற்றும் எல் செல்வொடர் நாட்டின் சில பகுதிகளிலும் இப் பூமிஅதிர்ச்சி உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி வீரகேசரி 

சோமாலியாவில் முதற் தடவையாக பெண் வெளிநாட்டமைச்சர் நியமனம்

மொகதிசு: சோமாலியாவில் புதிய பிரதமர் அப்டி பரா ஷிர்டோ முதல் தடவையாக பெண் ஒருவரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்துள்ளார். அமைச்சரவையில் இணைக்கப்பட்ட 10 அமைச்சர்களில் பாஸியா யூசப் ஹஜி அடனும் ஒருவராவார்.
குறிப்பாக நாட்டுக்கும் சோமாலிய பெண்களுக்கும் இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகுமென வெளியுறவுத்துறை அமைச்சர் யூசுப் ஹஜி தனது நியமனம் தொடர்பாக விபரிக்கையிலே தெரிவித்துள்ளார்.
ஆயினும், பாராளுமன்றத்தின் ஊடாக இவருடைய தெரிவின் போது பிரதமர் ஷிர்டோன் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தாரென பி.பி.சி செய்தி சேவை தெரிவித்தது.   நன்றி தினக்குரல்


No comments: