சுதந்திரம் - செ.பாஸ்கரன்

.
மனிதர்கள் எல்லோருமே எதிர்பார்ப்பது இதைத்தான். வடிவத்தில் தேவையில் மாறுபாடு இருந்தாலும் முடிவு ஒன்றுதான் அதுதான் சுதந்திரம். பத்திரிகைச் சுதந்திரம்  பத்திரிகைச் சுதந்திரம் என்று அடிக்கடி பேசக்கேட்டிருக்கிறோம். அது இல்லாத நாட்டில் நியாயமான ஆட்சி இல்லை என்பதுதான் கருத்தாக இருக்கமுடியும். நமக்கு சுதந்திரம் இல்லை என்று எழுதக்கூட முடியாத காலம் இடம் என்பன இருந்ததென்பதும் மறுக்கப்படமுடியாத கசப்பான உண்மைதான்.

நான் இங்கு கூறவருவது தமிழ்முரசுஒஸ்ரேலிய வாசகர்களுக்கு கொடுத்திருந்த கருத்துப்பதியும் சுதந்திரமும் அது பின் தடுக்கப்பட்டதைப்பற்றியும்தான்.  ஒரு கட்டுரை பற்றியோ அல்லது நிகழ்வு பற்றியோ  எழுதப்படும்போது அதற்கான கருத்துக்கள் பதியும் உரிமையை முழுதாக வாசகர்களுக்கு வழங்கியிருந்தது தமிழ்முரசுஒஸ்ரேலியா. ஆனால் தனிப்பட்ட குரோதம் போட்டி மனப்பான்மை போன்றவற்றால் நாகரிகம் அற்ற முறையிலும் ஒரு நபரை தூற்றியும் கருத்துப்பதிவுகளை சிலர் முன்வைத்த காரணத்தால் வாசகர்களுக்கான அந்த சுதந்திரம் வேதனையோடு நிறுத்தப்பட்டது. கருத்துக்கள் கட்டுரையின் அல்லது நிகழ்வின் கருத்திற்கு வித்தியாசமான கருத்துக்கள் இருந்தால் அதை தெளிவாக முன்வைப்பதுதான் நாகரிமான நாம் வாழும் நாட்டின் பண்பாடு. இதை விடுத்து மறைந்திருந்து கொண்டு அநாகரிகமாக எழுதுவது நல்ல கருத்தைப் பதியும் வாசகர்களின் சுதந்திரத்தையும் தட்டிப்பறிக்கும் செயலாகும்.


தனிமனிதனுடைய சுதந்திரத்தைப்பற்றிக் கூறும்போது இப்படிக் குறிப்பிடலாம் அதாவது நீங்கள் உங்கள் கையை எப்படி வேண்டுமானாலும் எங்குவேண்டுமானாலும் வீசுங்கள் அதற்கு உங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் அதே கை இன்னோருவர்மீது படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இன்னொருவர்மீது பட்டுவிட்டால் அது சுதந்திரம் அல்ல இன்னொருவரை தாக்கிய குற்றச்செயல். இதுதான் சுதந்திரத்தின் எல்லை. இந்த எல்லையை ஒருசிலர் மீறியதால் பல நல்ல பதிவாளர்களின் பதிவுகள் பதியமுடியாது போய்விட்டது.
அன்பான வாசகர்களே மீண்டும் அந்த சுதந்திரம் உங்களுக்கு இந்த வாரம்முதல் தரப்படுகின்றது. தயவுசெய்து எழுதும் முன்பு ஒருகணம் யோசியுங்கள் நீங்கள் நல்லவற்றைத்தான் செய்கின்றீர்களா என்று. அப்படி உங்கள் மனச்சாட்சி ஏற்றுக்கொண்டால் மட்டும் பதிவிடுங்கள். மற்றவருடைய சுதந்திரத்தை பறிக்கின்ற பாதகசெயலை நீங்கள் செய்யாதவர்களாயிருங்கள் என்று அன்போடு கேட்டுக்கொண்டு கருத்துப்பதியும் உரிமையை தருகின்றோம். பண்பாக ஆரோக்கிமான கருத்தை பதியுங்கள்.

7 comments:

Ramesh said...

அடேயப்பா இந்திய விடுதலைக்குகூட இந்தளவு போராட்டம் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். மறுபடியும் சுதந்திரம் தந்த தமிழ்முரசிற்கு நன்றி . நீங்கள் கேட்டதுபோல் கருத்தாலேயே பேசுவேன் என்று " நான் கூறுவதெல்லாம் உண்மை உண்மைக்கு புறம்பாக எதையும் பேசமாட்டேன் என்று இத்தால் கூறிக்கொள்கிறேன்" அப்பப்ப எதாவது எழுதினா கண்டுகொள்ள கூடாது . ஈ ஈ ஈ ....... ஆசிரியர்களுக்கு நன்றி.

K.Sukanthi said...

"சுதந்திரம்" இது குறைந்தாலும் துன்பம் கூடினாலும் துன்பம். கருத்துக்கள் பதிய விட்டதற்கு நன்றி.

சுகந்தி

யசோதா.பத்மநாதன் said...

வாசகர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கின்ற அதே வேளை சரியான கருத்துக்களை நாகரிகமான வகையில் வெளியிடுகின்ற தார்மீகக் கடப்பாடும் வெகுஜன ஊடகம் ஒன்றை நிர்வகிக்கும் உயர் பீடத்துக்கு உண்டு. இவை இரண்டும் மோதிக்கொள்கின்ற இடம் மிகத் தர்மசங்கடமானது.

அதற்கு ஆசிரியருக்கு ஒரு வசதி இருக்கிறது. பத்திரிகை அமைப்பிற்குச் சென்று ஒரு சிறு திருத்தத்தை நீங்கள் செய்து கொள்ள வேண்டும்.அது பின்னூட்டக் கருத்துக்களைக் கட்டுப்படுத்துகின்ற வசதியை பெற்றுத் தரும். நீங்கள் சைன் இன் செய்தவுடன் அளிக்கப்பட்ட கருத்துக்கள் நேரடியாக உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும்.

விரும்பினால் நீங்கள் அவற்றை வெளியிடலாம். உங்களுக்கு அக்கருத்து பற்றி சிந்திக்க - ஆசிரிய பீடத்தோடு விவாதித்துப் பின் வெளியிட அவகாசமும் இருக்கும். பத்திரிகை வாசகர் கருத்துக்களால் மாசுபட வாய்ப்பில்லை.
அது வாசகர் கருத்துக்களை கட்டுப்படுத்துகின்ற (இல்லாமல் செய்வதல்ல அதிகாரத்தை ஆசிரிய பீடத்துக்கு வழங்குவதால் பத்திரிகை தன் தர்மக் கோட்பாட்டின் படி ஒழுக வழிசெய்கிறது.

kirrukan.... said...

டமிழ்முரசு வாசகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முக்கிய காரணம் இவ்வளவு காலமும் வாசகர்கள் வரவில்லை என்பதாலா? அல்லது உண்மையிலயே கருத்து சுதந்திரத்தை மதித்தா?

எது எப்படியோ எழுதுவதற்க்கு தடை நீக்கியமைக்கு நன்றிகள்....தடை நீக்கல் சுதந்திரம் அல்ல ...நாளைக்கு நீங்கள் மீண்டும் தடை விதிக்க கூடும் அதிகாரம் உங்கள் கையில்தானே...

சுதந்திரம் நீங்கள் கொடுத்து நாங்கள் பெறுவதில்லை .அதுவும் எழுத்துலகில்...

Paskaran said...

"சுதந்திரம் நீங்கள் கொடுத்து நாங்கள் பெறுவதில்லை .அதுவும் எழுத்துலகில்..."

என்ன செய்வது இருப்பதை சரியாக பாவித்தால் ஏனிந்த கஷ்டம்

நன்றி கிறுக்கன்

paskaran said...


நன்றி மணிமேகலா

எங்கள் வாசகர்களில் வைத்த நம்பிக்கை வீண்போகாது என நம்புகிறோம்

paskaran said...


நன்றி ரமேஷ் நன்றி சுகந்தி உங்கள் வரவிற்கும் பதிவிற்கும்