வெற்றிக் களிப்பில் ஒபாமா

08/11/2012
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் சிகாகோ நகரில் ஒபாமா உரை நிகழ்த்தினார்.


-




-
-
-
-
-
-
நன்றி வீரகேசரி 


 
வெள்ளை மாளிகை இருப்பை தக்கவைத்துக்கொண்ட ஒபாமா!
By Kavinthan Shanmugarajah
2012-11-07


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிட்ரொம்னியை தோற்கடித்து பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

தனக்கு எதிராக அமைந்த இறுதி நேர கருத்துக் கணிப்பு முடிவுகளையும் மீறி மீண்டும் வெற்றிபெற்று அடுத்த நான்கு வருடங்களுக்கு தனது வெள்ளை மாளிகை இருப்பை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

மிகவும் நெருங்கியதாக அதாவது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அமையுமென எதிர்பார்க்கப்பட்ட இத்தேர்தலில் ஒபாமா பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளார்.

குறிப்பாக ' Swing States' எனப்படும் இரு கட்சிகளுக்கும் சம அளவு வாக்களர்களைக் கொண்டதும் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டதாகக் கருதப்படும் 9 மாநிலங்களில் 7 ஐக் கைப்பற்றிக்கொண்டுள்ளார் ஒபாமா.

ஒஹியோ, ஐயோவா, விஸ்கொன்ஸின், வேர்ஜினியா, நெவடா, கொலோராடோ, நியூ ஹம்ஸ்ஷையர் என 7 மாநிலங்களும் ஒபாமாவின் வெற்றியை உறுதி செய்தன.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ரொம்னியால் சுவிங் மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

(ப்ளோரிடா மாநிலத்தின் முடிவு இதுவரை வெளியாகவில்லை)

இதுமட்டுமன்றி ரொம்னியின் சொந்த மாகாணமும் அவர் 2003 முதல் 2007 வரை கவர்னராகவும் இருந்த மசாசூசெட்டை ஒபாமா வெற்றிகொண்டமை சிறப்பம்சமாகும்.

இதுதவிர டெமொக்கிரடிக் கட்சியின் கோட்டைகளான கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் மிச்சிகன், பென்சில்வேனியாவிலும் ஒபாமா எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று வெற்றிபெற்றார்.



வாக்காளர் குழு உறுப்பினர்களின் (Electoral College) 538 வாக்குகளில் குறைந்தபட்சம் 270 வாக்குகளை பெறுபவர்கள் வெற்றி என்ற நிலையிருக்க ஒபாமா 303 மற்றும் ரொம்னி 206 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

சுமார் 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அளித்த வாக்குகளில் ஒபாமா 55,250,609 வாக்குகளையும் ரொம்னி 54,096,988 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஒபாமாவின் வெற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் பெற்றத்தைப்போன்று இம்முறையும் ஒபாமா பெண்களின் வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிக் வாக்களர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இதேவேளை சில மாநிலங்களில் தேர்தல் குளறுபடிகள் தொடர்பான முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

குறிப்பாக பென்சில்வேனியாவில் சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் இயந்திரங்கள் தொழிநுட்பக் கோளாறு காரணமாக இயங்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலுக்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன்னரே ஒபாமா தனது வாக்குகளை பதிவு செய்தமையானது அவரது ஆதரவாளர்களையும் அவ்வாறு செய்யவைக்கும் ஒரு பிரசார உத்தியாகவும் நோக்கப்படுகின்றது.

அமெரிக்க வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாதவகையில் சுமார் 30 மில்லியன் அமெரிக்கர்கள் தேர்தல் தினத்திற்கு முன்னரே தமது வாக்குகளை அளித்தனர்.

இதேவேளை அமெரிக்க வரலாற்றில் அதிக பணம் செலவாகிய தேர்தலாகவும் இது அமைந்துள்ளது. பிரசார நடவடிக்கைகளுக்கு மாத்திரம் சுமார் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது
.
உலகத் தலைவர்கள் பலரும் ஒபாமாவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒபாமாவும் தனது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை "நல்லவைகள் இனிமேல் தான் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.       நன்றி வீரகேசரி 



  தோல்வியை ஏற்றுக்கொண்டார் ரொம்னி!
By Kavinthan Shanmugarajah
2012-11-07
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட மிட் ரொம்னி தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளின் படி ஒபாமா வெற்றி பெற்றமையை அடுத்து ரொம்னி பொஸ்டனில் தனது தோல்வி தொடர்பில் சிறிய உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது அவர், ஒபாமாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஜனாதிபதி அமெரிக்காவை வெற்றிகரமாக வழிநடத்துவார் எனவும் அதற்காக தான் கடவுளை பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் மக்கள் அனைவரும் கட்சி பேதத்தால் பிளவுபடாமல் அனைவரும் அமெரிக்கர் என்ற வகையில் ஒன்றாக செயற்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது தனக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும் ரொம்னி மறக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

No comments: