இலங்கைச் செய்திகள்

.
புத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை
1984ஆம் ஆண்டிற்குப்பின் இலங்கை-சியோலிற்கு இடையில் விமான சேவை
நாட்டை வந்தடைந்தனர் 30 புகலிடக்கோரிக்கையாளர்கள்
ஆலயக் காணியை ஊடறுத்து பலாத்காரமாக வீட்டுக்குப் பாதை அமைத்த காவல்துறை அதிகாரி

வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 27 பேர் பலி: அமைச்சர் சந்திரசிறி கஜதீர

புத்தர் சிலை அமைப்பதற்கு காணி அளவீடு செய்து வழங்குமாறு கோரிக்கை

 
மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய சூழலில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தனியார் காணியில் அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்கான ஏனைய கட்டுமானப்பணிகள் பலரது எதிர்ப்பினால் தடைப்பட்டது.

இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தில் இருந்து காணியை அளவீடு செய்து புத்தர் சிலை அமைப்பதற்கான வழிவகைகளை செய்யுமாறு கோறி மன்னார் பிரதேச செயலாளருக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மதம் பௌத்த மதம் என்பதினால் அவற்றை அமைப்பதற்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது எனவும், நடு நிலமையாக அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி







 1984ஆம் ஆண்டிற்குப்பின் இலங்கை-சியோலிற்கு இடையில் விமான சேவை
By V.Priyatharshan
2012-11-06
இலங்கைக்கும் தென் கொரியாவின் தலைநகர் சியோலுக்குமிடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தென் கொரியாவின் தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பிற்கும் தென் கொரியத் தலைநகர் சியோலுக்குமிடையிலான நேரடி விமான சேவையை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படும். கடந்த 28வருடங்களுக்கு முன் கொழும்பிற்கும் சியோலிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இடம்பெற்றது. எனினும் சில காரணங்களினால் 1984ஆம் ஆண்டுடன் இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டது.
எனினும் தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான உறவு சிறந்த முறையில் காணப்படுவதால், அடுத்த மாதத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி, தகவல் தொழிநுட்பம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற துறைகளுக்கு இலங்கைக்கு தென் கொரியா தொடர்ந்து உதவுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி 



நாட்டை வந்தடைந்தனர் 30 புகலிடக்கோரிக்கையாளர்கள்
By Kapila
2012-11-07
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று பகல் 12 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாகச் சென்ற 30 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

விசேட விமானம் ஒன்றின் மூலம் வந்த இவர்களுக்கு பாதுகாப்பிற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து  பாதுகாப்புத் தரப்பினர் வந்ததாகவும் தெரிவித்தார்.

இவர்கள் மாத்தறை, தங்காலை மற்றும் தெய்வேந்திரமுனை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.     நன்றி வீரகேசரி  




 ஆலயக் காணியை ஊடறுத்து பலாத்காரமாக வீட்டுக்குப் பாதை அமைத்த காவல்துறை அதிகாரி
By General
2012-11-07
பலாங்கொடை ஒழுகங்தொட்ட அல்பா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயக் காணியில் பலாத்காரமாக பாதை அமைத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளருமாகிய அ.அரவிந்த குமார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசர தொலைநகல் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அல்பா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள காணிக்குப் பின்புறமாக பலாங்கொடை காவல் நிலையத்தின் ஓர் அங்கமாக பம்ஹின்ன பொலிஸ் சோதனை நிலையத்தின் பொறுப்பதிகாரிக்குச் சொந்தமான காணி அமைந்துள்ளது.

இக்காணியில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டுமாயின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய காணியை சுற்றியுள்ள பாதை வழியாகவே பயணிக்க வேண்டும்.

இதனைத் தவிர்த்து நேர் வழியாக தன் வீட்டை அடைவதற்காக ஆலய காணியின் ஊடாக பாதையொன்றை அமைத்து அதனை பாவித்து வருகின்றனர்.

ஆலய பரிபாலன சபையினர் இப்பாதையை பாவிக்க வேண்டாம் எனப் பலமுறை எடுத்துக் கூறியும் அதற்கு செவிசாய்க்காமல் ஆலயத்தினூடாகவே தனது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார். இக்காவல்துறை அதிகாரி ஆலய பரிபாலன சபையினரை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இவ்விடயம் தொடர்பில் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.          நன்றி வீரகேசரி





  வெலிக்கடை சிறைச்சாலை மோதலில் 27 பேர் பலி: அமைச்சர் சந்திரசிறி கஜதீர
By Kavinthan Shanmugarajah
2012-11-10
வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.     நன்றி வீரகேசரி





-
வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்குப் பின்னர் நிலைமை இன்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வெலிக்கடையில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையில் தேடுதல் நடவடிக்கை தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
  (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

No comments: