"மயக்கமென்ன" எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை!!

.

ன் மூளைக்குள் முதன்முதலில் முளைத்த ஆசையின் சிறகு அதுதான் ‘சித்திரம்’ வரைவது. ஓவியம் தீட்டுவது. காட்சிகளில் பிடித்ததை அப்படியே வண்ணம் மாறாமல் பதிந்துக்கொள்வது. பொதுவாக, பிடித்ததை வரைந்து தன் மனதின் ஈர்ப்பினை பிற்கலத்திற்காய் பதிவுசெய்துக்கொள்வதும், புகைப்படமாக எடுப்பதும், அன்றைய நாட்களின் சாதனைகளாக விளங்கிய சமையமது. அதை அந்த புகைப்பட ஆசையை மணல் கொட்டிப் புதைத்துவிட்ட பல கற்பனை மற்றும் லட்சியக் கனவுகளுக்கு அடியிலிருந்துப் பிடுங்கியெடுத்து ஒரு திரைப்படத்திற்குள் திணித்துக் கொண்டது இந்த “மயக்கமென்ன” திரைப்படம்.
உண்மையில், இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கையில், தனுஷை நேரில் பார்த்து எனக்கு கொஞ்சம் நட்பு பகிர்ந்துக் கொள்ளவேண்டும் போலிருந்தது. மனசின் கோணங்கள் திரு. செல்வராகவனுக்கு வசியப் பட்டிருப்பதை தனுஷால் மட்டுமே உதிரநெருக்கத்தின் காரணமாக முழுமையாக உள்வாங்கிக் கொள்ளமுடிகிறது. மனதின் அசட்டுத்தனம், உணர்வுகள் இடரும் போக்கு, கண்களின் வழியே குருதி புகும் ஆசையின் கயமைத்தனம் போன்றவைகளை செல்வராகவனால் சொல்லப்படும் அளவிற்கு தனுஷால் மட்டுமே ஏற்று நடித்து அதில் வெல்லவும் முடிகிறது.


வாழ்வின் விகாரங்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றப் பொழுதுகள் ஏராளம். அப்போதெல்லாம் இழுத்துப் பிடிக்கப் பிடிக்க நழுவும் மனதை செல்வராகவனால் இத்தனை ரசனையோடும் அப்பட்டமாய்த் தெரியும் விகல்பங்களோடும் காட்ட எத்தனை வலிக்க வலிக்க இதயம் நொறுங்கி தெருவில் திரிந்தாரோ அந்நாட்களில்..
ஒரு இடத்தில் ஒரு வயது முதிர்ந்த பாட்டியை படமெடுத்து அவரின் கணவருக்குக் காட்டுகிறார் தனுஷ். அதைப் பார்த்துவிட்டு அந்த பாட்டியின் கணவர் எனக்கும் இப்புகைப்படங்களில் ஒவ்வொன்றினைத் தருவாயா என்று கேட்கிறார், ‘உண்மையிலேயே பெண்கள் அழகு; எல்லாப் பெண்களின் அழகும் மொத்த மனிதர்களின் அழகும் குணத்தாலேயே வெளிப்படுகிறது. மாறுபடுகிறது. அப்படிப்பட்ட பல மாறுபாடுகளுக்கிடையேத் தெரியும் தனதான ஒற்றை அழகை; தன் மனைவியின் அழகை விரும்பும் ஆண்களாகவே அதிக கணவர்களும் வாழ்கின்றனர்’ என்பதை வெளிப்படுத்தும் ஒரு இடமாக அந்த காட்சியின் ஆழத்தை கண்டு ரசித்தேன்.
புகைப்படம் எடுப்பது ஒரு சிறந்த கலை. பொய்சொல்லாத புகைப்படங்களில் வாழ்வியலை அகப்படுத்துவது ஒரு தனித் திறன். நகரும் பூமியின் சுழலுமழகில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் ஒவ்வொரு தருணமும் வர்ணம் பூசிக்கொள்ளும் ஜாலங்களை ஒரு கட்டத்திற்குள் இருத்தி காலத்திற்குமாய் பத்திரப்படுத்திக் கொள்ளுமந்த சாசுவதம் எல்லோருக்கும் வாய்க்கப்பட்டுவிடுவதோ கைக்ககப்படுவதோயில்லை.
நம்மூர் தெருக்களில் கிழிந்த கால்சட்டை அணிந்த பையன் காகிதத்தில் கப்பல் செய்து கையில் வைத்துக் கொண்டு கடலில் பயணிக்கும் கப்பலுக்கீடாக, அதைக் காணுமொரு தவமாக, கையில் காமிராவோடு உலகத் தெருக்களில் அலைந்து; வானுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட அத்தனை துடிப்புக்களையும், அசைவில்லாதவைகளின் அர்த்தத்தையும் அடையாளப் படுத்துமொரு கனவிற்கு கால்முளைத்த வித்தை இந்த புகைப்படக்கலையின் வழிவரும் வித்தை.
அப்படிப்பட்ட ஒரு கலையின் உயிர்ப்பான ஆளுமையை முழுதாக கையிலெடுத்து அதன் மொத்த அசைவிலும் தனது மனதை செலுத்தி பார்வைக்கெட்டிய தூரத்துவரையான காட்சிகளை அதில் புதைத்து அதன் போக்கிற்குட்பட்ட வாழ்க்கையினை ஒரு திரைப்படமாக்கியிருக்கிறார் திரு. செல்வராகவன் என்பது பாராட்டத் தக்கது. என்றாலும், அதற்கு சம பங்காக முழு உயிரூட்டி இருக்கின்றனர் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் என்று சொல்லி மேலும் ஒரு படி மேலேறி அவர்களையும் அதிகமாகவே மெச்சவேண்டும். அத்தகைய காட்சிப்பதிவும் இசையின் மேன்மையுமே இயக்குனர் சொல்ல வரும் வாழ்க்கையை இயல்பாக மனதிற்குள் புகுத்துகிறது.
பெண் என்பவளுக்கு கற்புண்டு என்பார்கள், அது போகட்டும், ஆண் பெண் இருவருக்குமே அந்த கற்பு வேண்டுமென்பது வேறு விசயம். அப்படி ஒரு ஆண் பெண் இருவருக்கிடையே இருக்கும் கற்பென்பது எத்தனைப் புனிதமோ அதைவிட பல மடங்கிற்கும் மேலாக பெரிது நட்பிற்கிடையான கற்பென்பது.
எனவே அதுபோன்றதொரு மாயையை, கண்ணுக்குப் புலனாகாத மனதிற்கு தென்பட்டதொரு வேலியை உணர்விற்குட்படுத்தி வாழ்ந்துவருவதான ஒரு காலகட்டத்தின் இடைபுகுந்து, இப்போதைய நடப்புக்களுக்கு ஏற்ப ‘உகந்ததெனும் உணர்வுகளுக்கு வெளியே நின்றுக்கொண்டு’ ஒருசில யதார்த்த நடப்புக்களை படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் திரு.செல்வராகவன்.
பொதுவில், ஒவ்வொரு இளைஞனுக்கும் உள்ளே ஒரு உணர்வுப்பிழம்பின் நெருப்பெரிந்துக்கொண்டிப்பது புரிந்துக்கொள்ளத் தக்க உண்மை. அந்த நெருப்பை உயிர்ப்பு குறையாமல் சுடர்விட்டெரியச் செய்கிறது அவனின் ஆசையும் முயற்சிகளும் என்பதையறிவோம். ஆனாலும் அந்த முயற்சி வீழ்கையில் பொசுக்கப்படும் ஆசைகளுக்கிடையே எரிந்து சாம்பலாக கருகுவதும் வலிக்க வலிக்கச் சுடுவதும் மனசொன்றே என்பதை அறிந்தவர் செல்வராகவனைப் போன்ற சில அரிய படைப்பாளிகளாகவே இருக்கின்றனர். அதை வெளிக்காட்டும் காட்சிதான் தனுஷ் எடுத்த புகைப்படங்கள் சரியில்லை என்று தூக்கி முகத்தில் எறியாமல் மேஜையில் வீசிவிட்டு போய் மாடுமேய்க்கப் போவென்று அவனை விரட்டும் காட்சியும். அதற்கு அங்கே கதாநாயகன் உருகும் காட்சியும், அதன்பின்னாக வரும் சோகமான கடற்கரையின் அலைகளின் சப்தமும், இடையே மழை பெய்யும் ஈரத்தினோடு எரியும் மனதின் வெம்மையும், அந்த வெம்மையின் தகிப்பை வெளிக்காட்டும் தனுஷின் நடிப்பும், அப்படியொரு பாத்திரத்திற்கு உடன்பட்ட கலன்களாக அமைந்த காதலும் நட்புமென கதைநீளும் இடங்களும் உண்மையில் மழைக்கால பசுமையின் ஈரம் போல மனதை மழையின்றி நனைக்கும் அழுத்தமான பதிவன்றி வேறில்லை..
இன்னொரு காட்சி, உயிர்சிலிர்க்குமொரு காட்சியது. ஒரு தொழில் எந்த புள்ளியில் கலையாகிறது, ஒரு தொழில் எந்த புள்ளியிலிருந்து நகர்ந்து அதற்கிடையே நம்மைப் புதைத்துக் கொள்கிறது, ஒரு கலை எப்படி நம் உயிர்கோர்க்கப்பட்ட முடுசுக்களை தனது இறுக்கப்பட்ட ஈர்ப்போடு உள்ளடக்கி ஒரு உத்தமத்தை எட்டுகிறது எனும் பல தளங்களைத் தொடும் ஒற்றைக் காட்சியது. அந்தளவிற்கு, அந்த தொழிலை நேசிக்கும் ஒருவனால் மட்டுமே அதை உலக அரங்கில் முன்வைத்து அதை வென்றவனாக தனை காட்டிக்கொள்ளவும் முடிகிறது’ எனும் சாதுர்ய சந்தர்ப்பத்தை அந்த காட்சி காட்டுகிறது. தனுஷ் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் வெறும் குப்பை’ கழிவிற்கு நிகர் என்று அவன் தனது முன்னுதாரணமாய் எண்ணி வாழும் அந்த வேர்ல்ட் லீப் புகைப்படக்காரரால் சொல்லப்பட்டுவிட, அதனால் மனமுடைந்த தனுஷ் மது அருந்திவிட்டு நாயகியின் அருகில் செல்லும் கட்டாயம் வர, மது அருந்துவதே பிடிக்காத அவள் அவனின் உணர்வினைப் புரிந்துக் கொண்டவளாய், அவன் தனது தொழில் மீதுக் கொண்டுள்ள காதலை முழுமையாக ஏற்றவளாய், அதனால் தோற்றதாக எண்ணி அவன் வெட்கி உருகி அழும் இடத்தில் வந்து அவனை கட்டியணைத்து அவனின் குணத்தை மெச்சி திறத்தை மீள்பதிவிடும் திரைக்கதை இசை ஒளிப்பதிவு எல்லாமே மனதைத் தொடுகிறது.
ஒரு ஆணிற்குப் பெண்ணும் பெண்ணிற்கு ஆணும் தரும் எல்லையில்லா அளவு காடு கனக்கும் பலமொன்று அந்த காட்சியில் வெகு நன்றாக இசையிநூடக இதயம் புகுகிறது. அங்கே நட்பின் கற்பு பிசகுமொரு விபத்தும் நிகழ்ந்து திரைப்படத்தை வேறு தளத்திற்கு மாற்றி’ இயக்குனர் தான் முடிக்க எண்ணிய கதையின் முடிவிற்கு ஏற்ப காட்சியை நகர்த்திக்கொள்வதாய் அமைகிறது.
உண்மையில் குரு துரோகம் கூட அத்தனை நஞ்சில்லை; அதைவிட ஒரு மாணவனுக்கு ஆசிரியர் செய்யும் மோசடி என்பது மிகக் கொடிது. அது சுடும் வெப்பத்தினால் வரும் வலி மிகப் பெரிது. கடவுளின் புகைப்படங்களைக் கூட நகர்த்திவிட்டு ஆசிரியரின் முகத்தை முன்னிறுத்திக் கொள்ளும் பாடத்தையே படித்த மாணவர்கள் நாமெல்லாம். நமக்கு ஆசிரியன் பெற்றோருக்கு அடுத்த கடவுள். கடவுளுக்கு முன்னிற்கும் சாமி. அந்த சாமியின் முகம் பேயாக மாறுமிடம் நம்பிய மாணவனையே ஒரு ஆசான் வஞ்சிக்குமிடம்’ என்று தனுஷ் அந்த வேர்ல்ட் லீப் புகைப்படக்காரன் தனுஷ் எடுத்ததொரு புகைப்படத்தைத் தான் எடுத்ததாகக் கூறி அதற்கான அத்தனை அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்கையில் அதைப் பார்த்துப் பார்த்து தனுஷ் தன் மனதால் கதற கதற விம்மும் அழையை கண்ணீரில்லா முகபாவங்களில் தனது கோப உணர்வுகளை வெளிக் காட்டும் நடிப்பு அத்தனையுமே உச்சத்திற்கும் ஒரு படி மேல் என்று தான் சொல்லவேண்டும்.
அதுபோல் ஒரு முரணான பாத்திரங்கள் அமைந்துள்ளதொரு கதையை இயக்குனர் தான் விரும்பிய படி இக்காலத்து நடப்புவிதிகளையொட்டி சரியாகவே கொண்டுவருகிறார். ஒரு பெண்ணை நண்பன் விரும்புகிறான். அவளிடம் கொஞ்ச நாளிற்கு என்னோடு இருந்து பார், பழகி பார், பிடித்தால் நாம் நம் வாழ்க்கையைத் தொடர்வோம், ஒருவேளைப் பிடிக்காவிட்டால் இருவரும் மனமொத்து பிரிந்துக் கொள்வோம் என்கிறான். அதற்கு சரியென்று உடன்பட்டு கதாநாயகியும் சம்மதிக்கிறாள். காட்சிகள் நகர்கிறது. நாட்கள் ஓட நண்பனின் ரசனையும் கதாநாயகியின் ரசனையும் இரு வேறு துருவங்களாக எதிர்கொண்டு நிற்கையில்; அவளுக்கு முழுதும் பிடித்தவனாக அம்மி மிதிக்காமலே இதயம் நுழைகிறான் ஜீனியஸ். அவள் அவனை உயிருக்கு உயிராக விரும்பத் தக்கவாறு கதையமைப்புகள் அமைகிறது. அவளை எவ்விதத்திலும் வெறுக்க முடியாதவனாய் தனது லட்சியப் பாதைக்கு பலம் சேர்ப்பவளாய் ஜீனியஸ் அவளை அணுகுகிறான். அவ்வாறு அணுகினாலும் இடைஇடையே மனதின் ஆழத்திலிருந்து எழும் மோகத்தை காதல்வயத்தை நட்புகடந்து அவ்வப்போது அவள் மீதுத் தொடுக்கிறான்.
என்றாலும் அதுபோன்ற தருணங்களில் நண்பனுக்கான பற்றுதலும் மேலிட, நண்பனின் ஆசையில் மண்ணிடும் பச்சைதுரோகம் மனதை வாட்டியெடுத்திட, அதிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள இயலாதவனாய் துடிக்கிறான் ஜீனியஸ். இருப்பினும் காட்சியின் அமைப்புகள் அத்தனையும் அவன் என்னதான் ஒதுங்கி ஒதுங்கிப் போக நினைத்தாலும் நட்பின் அத்தனை ஈடுபாடுகளும் அவர்களைச் சேர்த்துவைப்பதாகவே அமைந்துள்ளதை ஏற்க சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். எப்படியோ ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் எல்லோருக்கும் தெரியவந்து காற்றில் வெடித்த இளவம்பஞ்சு போலாகிவிட, அந்த நண்பனின் தந்தையினால் சரிதவறுகள் அலசப்பட்டு கடைசியில் கைகோர்கின்றன அந்த காதல் இதயங்கள். பின் வாழ்வின் சூழ்சுமங்களையும் அன்பினால் வென்றேவிடுகிறது என்பதே கதை.
நட்பின் பெருங்கடலில் தெரியும் நீண்ட வானத்தைப் போல மனசுகொண்ட அந்த நண்பன் அவன் மனதொத்த அவனின் அப்பா மற்றும் உடனுள்ள பிற நண்பர்கள் என அனைவரும் எப்போதும் போல அந்த காதல் பறவைகளோடு கைகோர்த்து வாழ்வின் ரகசியப் பள்ளத்திற்குள் குதித்து பின் மேலேறி கடைசியில் வான்தொடும் முயற்சிகளில் வாழ்தலைத் தொலைத்திடும் கதைப்போக்கினை ரசிக்கத் தக்கதாகவே அமைத்துள்ளார் இயக்குனர்.
அதுஒரு புறமிருக்க திரைப்படம் இடையே காதலிலிருந்து வழுவி இயக்குனர் சொல்லவந்ததன் அடுத்தடுத்த பக்கங்களில் திறந்துக்கொள்கிறது. ஒரு படைப்பினைத் திருடுவதென்பது அவரின் சுயத்தைத் திருடுவதற்கு ஒப்பாகும். அதன் வலி இறப்பினைக் காட்டிலும் பன்மடங்கு பொறுக்கத் தகாதகாகும். ஆனால் இன்றைய நாட்களில் அதன் அவலங்கள் தொடர்ந்து நடந்தேவிடுகிறது எனும் வேதனையின் மற்றொரு புள்ளியாக ஜீனியசின் புகைப்படத்தை வைத்து அந்த வேர்ல்ட் லீப் புகைப்படக்காரன் தான் எடுத்ததாக சொல்லி இந்தியாவின் பெரிய விருதினைப் பெறுகிறார். அதைப் பார்த்து சிந்தும் ஒரு சொட்டுக் கண்ணீரோடு ஜீனியசும் மாடியிலிருந்து விழுகிறான். மூளை கலங்குகிறது. போகும் உயிரைப் பிடித்து இழுத்துக் கொள்கிறாள் நாயகி.
சில வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்தலை வேறு பார்வையில் காட்டுகிறது திரைப்படம். அங்கிருந்து காணும் காட்சிகள் மனதைப் பித்தாக்குகிறது. அவன் பித்துப் பிடித்து அலையும் கசப்பான முகத்தினை அப்பட்டமாக படம் பிடித்துக் கொண்டிருக்கிறது திரைப்படம். அவள் மீட்ட அந்த உயிரின் புதிய பார்வையில் புதியதொரு வாழ்கையை அவனும் அவளும் வாழ்ந்து முடியுமிடத்தே கலையின் கண்ணியத்துவம் வென்று நிற்பதை, கசந்துபோன உணர்வுகளை இனிக்கும் உயிரூட்டி உயிர்ப்பிப்பதை மிக உற்சாகமாகக் காட்டுகிறது திரைப்படம். காணும் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் அப்படைப்பாளியின் நம்பிக்கையை மிக ஆழமாக பதிந்துத்தந்தே முடிகிறது.
யாரின் வெற்றியையும் யாரும் பதுக்கிட இயலாது. அவரவரின் உழைப்பு களம் கடந்தேனும் அவரையே வந்தடையும். வெற்றியின் இலக்காக அவரையே அது அடையாளப் படுத்தி உலகின் முன் கம்பீரமாக நிற்கவைக்கும். இடையே அனுபவிக்கும் அவுமானங்களும் தோல்வியும் வஞ்சகமும் கடைசியில் கல்லில் அடிபட்டுச சிதறும் தேங்காய்த் துண்டுகளாய் சிதறியே விடுகிறது. முடிவில் தெரிவது ஒரு நல்ல படைப்பாளியின் உலகம் மெச்சிய வெற்றி மட்டுமே எனும் நீதியைக் கொண்டிருக்கிறது கதை.
என்றாலும், ஒரு பெண் மனைவியாக சகித்துக் கொள்ளத்தக்க எல்லையை கோடுகளின் வரையறையின்றி வெகுவாக காயப்படுத்திக் காட்டுவது வலிக்கத் தான் செய்கிறது. என்னதான் செய்தாலும் அவன் புருஷன் அவள் மனைவி சகித்துத் தான் கொள்ளவேண்டும் எனும் அதே அடிமைப் போக்குத் தனத்தை மறைமுகமாய் இத்திரைப்படம் திணித்தாலும், அதற்குள்ளுமிருக்கும் தீரா காதலின் ருசி, அன்பினால் மனதிலூறும் அளவில்லா பெருந்தன்மையின் நீட்சி, ஒரு பெண்; தேவதைகளைக் கடந்து ‘தாயாக தன் மார்பில் உதைக்கும் பிள்ளையைப் போல் தனது கணவனைத் தாங்கிக்கொள்ளும் மண்ணின் புதையாத நம் மரபு’ என அனைத்தையுமே சகித்துக் கொள்ளும் மானப்பாங்கை மிக அழகாக தனது நடிப்பில் காட்டி நம்மையும் சம்மதிக்கவைத்துவிடும் நடிகைக்கு, இத்திரைப்பட கதாநாயகியின் கண் பேசும் திறமைக்கென்றே, ஒருமுறையேனும் வெள்ளித் திரைக்குச் சென்று இப்படத்தைக் காணலாம்..
காலங்காலமாக பெற்றோர் ஆசிரியர் உடன்பிறப்புக்கள் நண்பர்கள் உறவுகள் அக்கம்பக்கத்தினர் ஊர் உலகம் என’ நமக்கான பாடம் நம்மிடமிருந்தே துவங்கினாலும்; அதையும் வெள்ளிச் சுருளில் கண்டு கைதட்டி ரசித்து சிரித்து அழுது தனியே அமர்ந்து அசை போட்டு எட்டிய அறிவின் எல்லைவரை நமை ஆண்டுவரும் ஒரு கலையின் செதுக்கல்களாகவே திரைப்படங்கள் இருந்துவந்தாலும், ஒவ்வொரு படமும் யாரோ ஒரு சிலரின் வாழ்க்கையை உலகின் கண்களில் பதிவுசெய்தே நினைவிலிருந்து மறைகிறது. அந்த வரிசையில் இந்த ஜீனியசின் வாழ்க்கை நம் கண்முன் நாம் கண்டு வெகுண்ட, ரசித்த, கோபமுற்ற, கலங்கவைத்த, நட்பினை மீறி காதலைமட்டும் தனக்குத் தெரிந்த கண்ணியத்தோடு நட்பிடமிருந்து பிரித்துக்கொண்ட ஒரு இளைஞனின், ஒரு மகா கலைஞனின், ஆச்சர்யங்களை தன்னிச்சையாக உள்ளடக்கிவைத்திருக்கும் ஒரு சாதனையாளனின் வாழ்க்கையை சொல்லிடமுயன்ற திரைப்படமாகவே இப்படத்தை நான் காண்கிறேன்.
இத்தனை இருந்தும் இந்த படத்தின் மீது, அல்லது மொத்தத்தில் செல்வராகவனின் படைப்பின் மீது ஒருசாராருக்கான குற்றப் பார்வை உண்டாகிறதே அது ஏன்? ஒரு முகம் சுழிப்பு நேர்கிறதே ஏன்? அவர்கள் செல்வராகவனின் அத்தனை ரசனைகளுக்கும் உட்பட்ட எதிர்பார்ப்புள்ளவர்கள்தான் என்றாலும், நிர்வாணத்தை அப்பட்டமாய் காணும் ஏற்பில்லாதவர்கள் என்பதையும் ஏற்கவேண்டி இருக்கிறது.
காமம் கூட மூடி வைப்பதால் தான் பெருகிக் கிடக்கிறது. திறந்துக் கிடக்கும் உடம்பின் மேல் உணர்ச்சிவயப்படும்போதுதான் மின்சாரம் ரத்தநாளமெங்கும் பாய்கிறது. மூடிக் கிடக்கும் அழகில் மட்டுமே காமமும் காதலாய் பெருக்கெடுக்கிறது. உலகின் அத்தனை செயல்பாடுகளையும் அப்பட்டமாய்க் காட்டுவதன் விளைவாகவும் சில காட்சிகள் கசந்துக் கொள்கிறது. காரணம், ஒரு பொது வரம்பினை மீறுமிடம் அருவருப்பை ஏற்படுத்தி முக சுழிப்பினை உண்டாக்குவது இயல்பு. ஆனால் எது பொது வரம்பென்று கேள்வி வருமெனில்; அந்த வரம்பினைப் புரிதல் மட்டுமே படைப்பாளிகளின் வெற்றியை இலக்குப் பிரித்துக் காட்டுகிறது என்பதையும் இயக்குனர்களும் திரைக் கலைஞர்களும் நிச்சயம் புரிந்துக்கொள்ளவேண்டும்.
திரு. செல்வராகவனுக்கு அது புரியுமிடத்தில் அவரின் இன்னொரு முகமும் புதியதொரு பார்வையும் வேறொரு பெரிய சிறப்பு மிக்க படைப்பும் நமக்கான கலைப் பொக்கிஷமாக நமக்குக் கிடைக்க வாய்ப்புண்டு..

வித்யாசாகர்

No comments: