என்னைக் கவர்ந்த ஜேசுதாஸ் அவர்களின் கானமழை - செ.பாஸ்கரன்

.


சென்ற ஞாயிற்றுக்கிழமை 19.08.2012 விடிந்தும் விடியாததுமான காலைப்பொழுதில் மனம் லேசாகி மகிழ்கிறது. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலின் வருடல்போல்  அந்தநினைவு வந்து புகுந்துகொள்கிறது. ஆம் இன்றைய மாலைப்பொழுதில் இந்திய இசை உலகில் அற்புதங்களை புரிந்துகொண்டு வாழ்ந்துவரும் கே ஜே யேசுதாஸ் அவர்களின் இசை இரவு ஒஸ்ரேலியாவின் சிட்னியில் Opera House இல் இடம்பெற இருக்கிறது.இதுதான் மனம் குதூகலிப்பதன் காரணம்.5 மணிக்கு ஆரம்பம் என்று அறிவித்துள்ளார்கள் இந்த நிகழ்வை நடாத்துகின்ற சிம்பொனி என்ரரைனேர்ஸ். தரமான நிகழ்ச்சிகளை அழகாக நடாத்தும் வழமை கொண்டவர்கள் இவர்கள் அதனால் சரியான நேரத்திற்கு சென்றுவிடவேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ள 3.30 மணிக்கே புறப்பட்டுவிட்டோம். 5 மணிக்கு சற்றுமுன்னதாக மண்டபத்துள் நுழைந்தும் ஆயிற்று.

5.15 மணிக்கு மாயி என்ற சிறு பெண்பிள்ளை இசைக்கருவிகளின் சங்கமத்தோடு மேடையில் தோன்றி வணக்கம்கூறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருந்த வெண்கலக்குரலோன் அப்துல் கமீத் அவர்களை அழைக்கிறாள். அதே வெண்கலக்குரலோடு அன்றுபார்த்த அதே தோற்றத்தோடு வருகிறார் அரங்கம் அதிர்கின்றது கரகோசத்தில். கே ஜே யேசுதாஜ் அவர்களின் 50வது ஆண்டுவிழா கதிர் சிற்றம்பலத்தின் முயற்சியினால் சிம்பொனி அமைப்பால் முதல்முதல் ஒஸ்ரேலியாவிலே கொண்டாடப்படுகிறது எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் சொந்தமான யேசுதாஸ் அவர்கள் இன்றும் மதம் கடந்து பாடுகின்றார் என்றுகூற


வெள்ளை உடையோடு சபையை வணங்கி மகாகணபதிம் என்று யேசுதாஸ் ஆரம்பிக்கவும் மீண்டும் அதிர்வலைகள்சபையை நிறைக்கிறது.  அப்துல் கமீத்  அவர்கள் பழைய நினைவுகளை வெளிக்கொண்டு வருகிறார். யாழ் முத்தவெளியில் யேசுதாஸ் முதல்முறையாக வந்து பாடியதும் ஒரு முருகன் பாடல்தான் முருகனைக்காணக்கண் ஆயிரம் வேண்டும் என்ற பாடல் அதை எழுதியவர் ஒரு முஸ்லிம் கவிஞர் பாடியவர் ஒரு கிறிஸ்தவர் மும்மதமும் கலந்திருந்தது என்றபோது மீண்டும் கரவொலி எழுந்தது. தொடர்ந்து யேசுதாஸ் அவர்களோடு சின்னக்குயில் சித்திரா, இளம்குயில் சுவேதா, வியே யேசுதாஸ் இணைந்து ஒன்றேகுலம் என்று பாடுவோம் என்று பாடியது மனதை உருக்கியது. தொடர்ந்து அம்மா என்றழைக்காத என்ற பாடலை யேசுதாஸ் அவர்கள் பாடியபோது சற்று வித்தியாசம் தெரிந்தது அதனால் மனதில் ஒரு குறுகுறுப்பு இனிவரும் பாடல்கள் எப்படி அமையப்போகின்றதோ என்று. ஆனால் அவர் அடுத்துப்பாடிய செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்  சபையை தென்றலாய் வந்து ஆடவைத்துவிட்டது. இந்தப்பாடலுக்கு 5 வயலின்  இசைக்கலைஞர்கள் செய்த சித்து விளையாட்டை மறக்கவேமுடியாது என்றுவிடலாம்.அற்புதமான இடைநிரவல்களாக இருந்தது.

சித்திரா கண்ணாளனே என்ற காதலன் திரைப்படப்பாடலை பாடியபோது இன்னும் அதே சித்திராவாகவே தெரிந்தது. அறிவிப்பாளர் அப்துல் கமீத் அவர்கள் சின்னக்குயில் சித்ரா 6 தேசிய விருதுகள் பெற்றும் இன்னும் சின்னக்குயிலாகவே இருக்கின்றார் என்றபோது மீண்டும் அரங்கம் அதிர கரகோசம் எழுந்தது. அடுத்து இடம் பெற்ற ஓசைனவா என்ற மலையாளப் பாடல் மலையாள மணம் கமள ஒலித்தது. மலையாள இசைக்கே உரிய புல்லாங்குழல் இசையை மீட்டி நிகில் என்ற இளைஞன் மெல்சிலிர்க்க வைத்துவிட்டான்.


இப்படி பாடல்கள் ஒலித்துக்கொண்டே சென்றது.  அப்துல் கமீட் ரத்தினச்சுருக்கமாகவும் கருத்தாளமாகவும் அறிவித்தலை செய்தது பல அறிவிப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.
2007 ஆண்டில் கேரள மானில சிறந்தபாடகர் என்ற விருதை பெற்ற விஜே ஜேசுதாஸ் சபையை உற்சாகமூட்டும் வகையில் தாவணிபோட்ட தீபாவளி என்ற பாடலை பாடியதோடு சபையோரையும் பாடவைத்து சிறப்பித்தார்.
அடுத்து வந்த சுவேதா மோகன் காற்றின் மொழியே என்ற பாடலை பாடியபோது தென்றல் காற்று புகுந்துகொண்டு தழுவியதுபோலிருந்தது.  அப்பப்பா அந்த சின்னப்பொண்ணுக்கு என்ன குரல்வளம்.


பாடல்கள் இப்படி இனிமையாக போய்கொண்டிருந்தபோது தெலுங்குப்பாடல் பாடக்கோரி சபையில்இருந்து யாரோ ஒருவர் போட்ட சத்தத்தில் சபைசற்று குழம்பியது ஜேசுதாசும் சற்று  குழம்பித்தான் விட்டார் அடுத்துவந்த அறிவிப்பாளர் அப்துல் கமீட் கூறினார் ஒரு குடம்பாலுக்கு ஒருதுளி விசம்ஜேசுதாஸ் அனிச்சம் பூப்போன்றவர் அவரை வாடிவிடப் பண்ணிவிடாதீர்கள் என்று கூறியது பொருத்தமாக இருந்தது.
தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மனிதர் இந்தவயதிலும் அற்புதமாக பாடிக்கொண்டிருந்தார். உறுமி என்ற திரைப்படத்தில் ஜேசுதாஸ் அவர்களுடன் பாடக்கிடைத்தது தன்பாக்கியம் என்று கூறிய சுவேதா அவருடன் சேர்ந்து அலைகடல் என்றபாடலை பாடினார்.


அடுத்து சித்ரா பாடியபாடல் பாட்டறியேன் படிப்பறியேன் இந்தப்பாடலின்போது வயலின் இசைக்கலைஞரும் மிருதங்கக் கலைஞரும் அசத்தியே விட்டார்கள் அப்படியொரு வாசிப்பு.தொடர்ந்து சித்ராவும் விஜேயும் அஞ்சலி அஞ்சலி என்ற பாடலை பாடியபோது  நிகில் புல்லாங்குழலையும் சக்சா போனையும் மாற்றி மாற்றி வாசித்து அசத்தியேவிட்டார் அற்புதமான ஒரு கலைஞர் சபையோரின் பலத்த கைதட்டலைப் பெற்றுக்கொண்டார்.
மீண்டும் சின்னசின்னனாய் சிலவரிகளையும் இறுதியில் மலையாளப்பாடல் ஒன்றையும் பாடி சபையை ஆடவைத்தார் விஜே.
தொடர்ந்து  ஜேசுதாஸ் அவர்களை கௌரவித்து பொன்னாடைபோர்த்தினார் டாக்டர் செந்தில்குமரன் அவர்கள். இசைரசிகனான செந்தில்குமரன்  அவர்களைக் கொண்டு கௌரவித்தது பொருத்தமானதாகவே காணப்பட்டது.
தொடர்ந்து பலபாடல்கள், சித்திரா மீண்டும் வந்து  ஒவ்வொரு பூக்களுமே  என்றபாடலைபாட அறிவிப்பாளர் கூறினார் பா.விஜேயினால் எழுதப்பட்ட இந்தப்பாடலுக்கு சித்ராவிற்கு விருது கிடைத்ததோடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்று.
இந்நிகழ்வில்  இந்தியாவில் இருந்து வருகைதந்த கலைஞர்களோடு உள்ளுர் கலைஞர்களான ஜனகன் சுதந்திரராஜ், கோபிதாஸ், ஜோசேப், அஸ்வின் என்று அனுபவம்வாய்ந்த கலைஞர்களும் சேர்ந்து நிகழ்வை சிறப்பாக்கியது பாராட்டப்பட வேண்டியது.இடைவேளை இல்லாமலேயே தொடரும் என விஜே அறிவித்துவிட்டு பாடல்களைத் தொடர்ந்தார்.கதம்பம் என்ற பெயரிலே நான்கு பாடகர்களும் கதிரையில் அமர்ந்திருந்து மாறிமாறிப்பாடியது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. மலையாளப் பாடலில் ஜேசு ஆரம்பிக்க சித்திரா தொடர சுவேதா நேற்று இல்லாத மாற்றம் உன்னிடம் என்று பாட,  இப்படியே  ஒரு வித்தியாசமான கதம்பத்தை செய்தார்கள்.

பாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது இடையிடையே தென்னிந்திய பாடகர்கள் நடிகர்கள் இசைஅமைப்பாளர்கள் என்று சிலரின் வீடீயோ வாழ்த்துச் செய்திகள் காட்டப்பட்டது.குறிப்பாக கமலஹாசன் பாலசுப்பிரமணியம் சுசீலா இசைஅமைப்பாளர் தேவா போன்றோரின் செய்திகள் அடங்கியது.அற்புதமான ஒரு நிகழ்வை வழமைபோல் சிறப்பாக தந்த கதிர் சிற்றம்பலம் அவர்களுக்கும் சிம்பொனி என்ரரைனேசினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.அதேவேளை நீண்ட நேர இந்த இசைநிகழ்ச்சிக்கு ஒரு இடைவேளை கொடுத்திருக்கவேண்டும். நான் முன்பே குறிப்பிட்டதுபோல் 3.30 மணிக்கே பலர் வீட்டிலிருந்து பயணம்செய்து வந்திருந்தார்கள் தண்ணி சாப்பாடு எதுவும் இல்லாது 10 மணிவரை இருப்பது என்பது மிகவும் சங்கடமாக இருந்தது. சிறப்புற செய்திருந்த இந்த நிகழ்வில் ஒரு 20 நிமிட இடைவேளையாவது கொடுத்திருந்தால் கடைசிப் பகுதியையும் உற்சாகமாக இருந்து ரசித்திருக்கலாம்.
இனிமையான ஒரு நிகழ்வை கண்டுகளித்த திருப்தியோடு சிம்பொனியின் அடுத்தநிகழ்வை எதிர்பார்த்து திரும்பினேன் மனம் செந்தாழம் பூவில் வந்தாடிய அந்த தென்றலை தழுவிக்கொண்டிருந்தது.No comments: