சொல்லமறந்த கதைகள் 07

.


காலிமுகம்
முருகபூபதி – அவுஸ்திரேலியா
Galle Face roadகொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை.
  1974 ஆம் ஆண்டு நானும்  சுமார் ஓராண்டுகாலம் இந்த காலிமுகத்திடலில் வெய்யிலில் குளித்து  முகத்தை கறுப்பாக்கியிருக்கின்றேன். காலிமுகத்தில் (GalleFace) முன்னைய பாராளுமன்றத்திற்கு முன்பாக செல்லும் காலி வீதியை அகலமாக்கும் வேலை அந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த எனக்கு அங்கே ஒரு சப்-ஓவர்ஸீயர் வேலை கிடைத்தது.
 வீதி நிர்மாணம் தொடர்பாக எந்த அடிப்படை பொறியியல் அறிவும் இல்லாதிருந்த எனக்கு Teritorial Civil Engineering Organization ( T.C.E.O ) என்ற நிறுவனத்தில்  எனது பெற்றோரின் குடும்ப நண்பர் ஒருவரின் தயவால் கிடைத்த வேலை அது.
 என்ன தகைமை?


 யாராவது ஒரு வீதி நிர்மாணப்பணியிலிருந்த பதிவுபெற்ற ஓவர்ஸீயரிடம் சிறிதுகாலம் துணை ஓவர்ஸீயராக வேலை பார்த்த அனுபவம் உள்ளது என்ற சான்றிதழ் கிடைத்தால் அந்த காலிமுகத்திடல் வீதி அகலமாக்கும் நிர்மாணப்பணியில் வேலை நிச்சயம் என்று சொல்லிவிட்டார் அந்தச் சிங்கள குடும்ப நண்பர்.
 நீர்கொழும்பில் மாமாவின் பலசரக்குக்கடையில் சில நாட்கள் அரிசி அளந்து பலசரக்குச் சாமான் கட்டியிருக்கிறேன். அங்கு வரும் வாடிக்கையாளர் ஓவர்ஸீயர் டொமினிக் எனக்கு நல்ல பழக்கம்.  ஒரு நாள் இரவு அவரது வீட்டுக்குச்சென்று நற்சான்றிதழ் கேட்டேன். அந்த மகாராசன் எந்தக்கேள்வியும் கேட்காமல் தந்தார். (அபூர்வமாக இப்படியும் அதிர்ஷ்டம் கிட்டுவதுண்டு)
 வேலையும் கிடைத்தது.
 என்ன வேலை?
 காலிமுகத்திடலின் அழகிய புற்தரையை கொத்தி மண்ணை அள்ளி ட்ரக்டர்களில் ஏற்றும், - புதிய வீதிக்கான கருங்கற்களை பதித்து தார் ஊற்றி மணல் வீசும் பல தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் (மேய்க்கும்) வேலை. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை, மதிய உணவு வேளை தவிர்ந்த நேரத்தில் வெய்யிலில் அந்தத்தொழிலாளர்களுடன் காயும் வாழ்க்கை.
 கடற்கரைக்காற்று வீசினாலும் அதிலும் அனல்தான் வீசும். தலைக்கு ஓலைத்தொப்பி. கண்ணுக்கு ஒரு கறுப்புக்கண்ணாடி.
 காலிமுகக்கடற்கரை காதலர்களை வா.. வா..என்று அழைக்கும் வசந்த உலகம்.. வந்து குவியும் காதலர்கள் சோடி சோடியாக குடைகளுக்குள் மறைந்துவிடும் காட்சி அதனைப்பார்க்கும் எனக்கும் எனது வயதையொத்த சிங்கள தொழிலாளர்களுக்கும் அந்த கொடிய வெய்யிலிலும் இதமான குளிர்ச்சிதான்..
 எனக்கு காதலி இல்லாத காலம் அது. வேகாத வெய்யிலில் காய்ந்து கறுத்துப்போன என்னை யார்தான் காதலிக்கப்போகிறார்கள் ? என்ற கவலையும் வந்த காலப்பகுதி.
 அந்த காலிமுகத்திடலில் புதிதாக அமைக்கப்பட்ட  வீதிக்கு இப்பொழுது 38 வயதாகிவிட்டது. அன்று குடைகளுக்குள் மறைந்திருந்து சல்லாபித்த காதல் மொழி பேசிய எத்தனை சோடிகள் நிரந்தரமாக இணைந்தன? மக்களையும் பேரன் பேத்திகளையும் கண்டன? எத்தனை பிரிந்தன? என்பது அந்த காலிமுகக்கடற்கரைக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது.
 ஆனால் இன்றும் அங்கே வர்ணக்குடைகளைக்காணலாம். சூரியனும்,Galleface-1கடலையும் குடைகளையும் சூடாக்கலாம். இலங்கை செல்லும்போது அந்த வீதியால் பயணிக்கும் தருணங்களில் இனம்புரியாத பரவசம் ஏற்படுவதுண்டு. நான் அமைத்த வீதியல்லவா? நான் வெய்யில்குளித்த திடல் அல்லவா? எத்தனை காட்சிகளை பார்த்திருப்பேன்.? ரசித்திருப்பேன்.
 வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பல சம்பவங்கள் நிகழ்ந்த பிரதேசம் அந்த காலிமுகத்திடல் இங்குதான் இந்துசமுத்திரத்தை பார்த்தவாறு முன்னைய பாராளுமன்றம் அமைந்திருக்கிறது. 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அந்தக்கட்டிடத்துக்கான வரைபடம் தயாராகி ஒன்பது ஆண்டு காலத்தில் (1930 இல்) அன்றைய கவர்னர் சேர். ஹேர்ட் ஸ்டான்லி என்பவரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான கட்டிடத்துக்குள்தான் முதலில் சட்ட சபையும் பின்னர் பாராளுமன்றமும் தேசிய அரசுப்பேரவையும்;  1982 வரையில் இயங்கியது.
 பல பிரதமர்களையும் பல எதிர்க்கட்சித்தலைவர்களையும் பல அரசாங்கங்களையும் கண்ட இந்த கட்டிடம் 1982 இன் பின்னர் ஜனாதிபதி செயலகமாகிவிட்டது.
 முன்னைய இராஜதானியான கோட்டேயில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் இப்பொழுது நாடாளுமன்றம் இயங்குகிறது. மக்கள் இடம்பெயர்ந்தது போன்று காலிமுகத்திலிருந்து கோட்டேக்கு இடம்பெயர்ந்துவிட்டது பாராளுமன்றம்.
 உலகின் முதலாவது பெண்பிரதமர் பதவியில் அமர்ந்த பழைய பாராளுமன்றம். அதன் முன்பாக அவரது கணவர் சிலையாக நின்றார். அதுவும் போதாது என்றோ என்னவோ அன்றைய சோவியத் அரசாங்கம் அந்தநாட்டின் புகழ்பெற்ற சிற்பியான லெவ்கேர்பில் என்பவர் மூலமாக வடிவமைத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் வெண்கலச்சிலையை அன்பளிப்பாக கொடுத்து கடலைப்பார்க்கும் விதமாக  வீதியோரத்தில் நிறுத்;தியிருக்கிறது.
 சீன அரசாங்கம் மற்றுமொரு இடத்தில் அந்த அமரரின் ஞாபகார்த்தமாக ஒரு பிரம்மாண்டமான சர்வதேச மகாநாட்டு மண்டபத்தையே நிர்மாணித்துக்கொடுத்திருக்கிறது.
 மூன்றாம் உலக நாடொன்றுக்கு சர்வதேச அரங்கில் வௌ;வேறு துருவங்களாக இருந்த இரண்டு வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டு கொடுத்த அன்பளிப்புகள்.
 அந்தச்சிலைகளும் எம்மைப்போன்று வெய்யிலில் காய்ந்தன.
காலை 7 மணிக்குப்பின்னர் பரபரப்பாகிவிடும் காலிமுகமும் பழைய வீதியும். நாம் புதிய வீதியை அமைத்துக்கொண்டிருப்போம்.
 தபால் தந்தி அமைச்சர் செல்லையா குமாரசூரியர் காலிமுக ஹோட்டலுக்கு முன்பாக அந்தக்காலை வேளையில் தமது காரில் வந்து இறங்குவார். கடற்கரையை அண்மித்த சிறு வீதியில் அவர் இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு நடந்து வருவார்.
 அவரது கார்ச்சாரதி காரை செலுத்திக்கொண்டு பாராளுமன்றத்துக்கு முன்பாக நிறுத்துவார். மெய்ப்பாதுகாவலர் எவரும் இன்றி சுதந்திரமாக – சுதந்திரக்காற்றை சுவாசித்துக்கொண்டு வேகமாக அமைச்சர் நடந்து வருவார்.
 எம்மைக் கடக்கும்போது சிறு புன்னகையுடன் Good Morning சொல்வார்.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் தவிர்ந்த எல்லா நாட்களிலும். அவரை நாம் அங்கே பார்க்கலாம். அவருக்கு நீரிழிவு – கொலஸ்ட்ரோல் இருந்ததா என்பது எமக்குத்தெரியாது. ஆனால் அவர் ஒழுங்காக தமது அமைச்சு அலுவலகத்திற்கு போகிறார் என்பது மாத்திரம் தெரியும்.
 பாராளுமன்றத்துக்கு சமீபமாகத்தான் அவரது அமைச்சு இருக்கிறது. பாராளுமன்றக்கட்டிடத்தில் பிரதமரின், நிதி அமைச்சரின் அலுவலகங்கள், நீர்ப்பாசன பெருந்தெருக்கள் அமைச்சு உட்பட சில அமைச்சு அலுவலகங்கள் இருந்தன. அதனால் தினமும் பல அமைச்சர்களை அந்த வீதியில் அவர்களது கார்கள் பவனிக்கும்பொழுது தரிசிக்கலாம்.
 பாராளுமன்றக் கூட்டத்தொடர் அல்லது பட்ஜட் விவாத நாட்களில் பிரதமர் அமைச்சர்களை மட்டுமல்ல பல எம்.பி. க்களையும் பார்க்க முடியும்.
 நிரந்தரமற்ற ஊழியர்களாக நியமிக்கப்பட்டு,  அவர்களுக்காக நாம் அமைத்துக்கொண்டிருக்கும் புதிய வீதியில் வரும் நாட்களில் அவர்கள் பவனி செல்வார்கள். நாம் இதனை நினைத்து பெருமூச்சு விடும்போது, ஒரு தொழிலாளி சொன்னார்:- “ அவர்களும் எங்களைப்போலத்தான். அவர்களது எம்.பி. பதவியும் நிரந்தரமில்லை. தேர்தல்கள் அவர்களது தலைவிதியை தீர்மானித்துவிடும்”
 அந்தத்தொழிலாளி சொன்னது போன்று, தமது பதவி நிரந்தரமற்றது என்று வாழ்ந்து காட்டிய ஒரு அரசியல்வாதியும் அந்த வீதியில் நடந்து திரிவதை பல முறை கண்டிருக்கின்றேன். அவருடன் உரையாடியுமிருக்கின்றேன்.
 அவர்தான் கலாநிதி டபிள்யூ தகநாயக்கா.
 காலித் தொகுதியின் எம்.பி. இலங்கையின் மூன்றாவது பாராளுமன்றத்தில் பிரதமராக பதவியில் அமர்ந்த பண்டாரநாயக்கா 1959 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் 1960 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போகும் வரையில் பிரதமராக இருந்த எளிமையான மனிதர். அதே சமயம் சர்ச்சைக்குமுரிய தdahanayakeர்மாவேசம் கொண்ட ஒரு கலகக்காரன்.
 அவர் எம்.பி.யாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில், விவாதம் சூடுபிடித்து வார்த்தைகள் முற்றியதனால் சபாநாயகரால் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டவர். பிறிதொரு சந்தர்ப்பத்தில் வெளியே துக்கிச்செல்லப்பட்டவர்.
 துணிவகைகளின் விலைவாசியேற்றத்தை கண்டித்து கோவணத்துடன் வந்து பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்ள முயன்றவர்.  அவர் கோவணத்துடன் வந்த காட்சி படமாக பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கிறது. சபாநாயகரின் உத்தரவுப்படி பொலிஸார் அன்று அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
 அவரது எளிமைக்கு மிகச்சிறந்த உதாரணம்: 1960 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின் போது அவர் பிரதமராக இருந்து தோற்றுப்போனார். பிரதமரது வாசஸ்தலமான அலரிமாளிகையிலிருந்து வானொலி கேட்டுக்கொண்டு தேர்தல் முடிவுகளை அறிந்த தகநாயக்கா, தாம் தேர்தலில் தோற்றுப்போனதை தெரிந்துகொண்டதும் தமது சிறிய சூட்கேஸினுள் தமது சில உடைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு அங்கிருந்த சேவகர்களிடம் தான் ஊருக்குப்புறப்படுவதாக சொல்லிவிட்டு காலி வீதிக்கு வந்து பஸ் ஏறி கொழும்பு புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்துக்கு காலி செல்லும் பஸ்ஸில் ஏறுவதற்காக வந்துவிட்டார்.
 தேர்தல் முடிவுகளின் பின்னர் கருத்துக்கேட்க பல பத்திரிகையாளர்களும் அலரிமாளிகைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது இந்த விந்தை மனிதர் விடைபெற்றுச் சென்ற தகவல் அறிந்து வாகனங்களை எடுத்துக்கொண்டு பஸ் நிலையம் வந்தார்கள். தகநாயக்கா ஒரு சாதாரண பிரயாணிபோன்று கியூவில் நின்றுகொண்டிருப்பதைக்கண்டு அதிர்ந்துபோனார்கள்.
(இப்படி இந்தக்காலத்தில் எங்காவது நடக்குமா?)
 “ என்ன சேர்.. இப்படி? நீங்கள் இன்னும் பிரதமர்தானே? முறைப்படி பதவியை விட்டு விலகலாமே? “- என்று கேட்டவர்களுக்கு.
 “ மக்கள் தீர்ப்புக்கொடுத்துவிட்டார்கள். சபாநாயகருக்கு முறைப்படி சொல்லிவிட்டுத்தான் ஊருக்குப்புறப்பட்டேன்” என்றார் வாழ்நாள்பூராவும் பெருந்தலைவர் காமராஜரைப்போன்று பிரம்மச்சாரியாகவும் எளிமையாகவும் வாழ்ந்து காட்டியவர் கலாநிதி தகநாயக்கா.
 அவர் கல்வி மந்திரியாக இருந்த காலத்தில் ஏழை மாணவர்களுக்காக பாடசாலைகளில் இலவசமாக பணிஸ் (பண்) வழங்கியவர். அதனால் மக்களால் பணிஸ் மாமா என்றும் புகழப்பட்டவர்.
 இந்தத்தகவல்கள் யாவற்றையும் பாடசாலையில் படிக்கும் காலத்தில் வீரகேசரி பத்திரிகை மூலம் நான் அறிந்து கொண்டவை.
 அந்த எளிமையான மனிதருடனும் வீதியோரத்தில் நின்று உரையாட சந்தர்ப்பம் கிட்டும் என்று நான் கனவிலும் நினைத்திருக்கமாட்டேன்.
 அன்று நண்பகல்பொழுது. சூரியன் உச்சி வானிலிருந்து சுட்டெரித்துக்கொண்டிருக்கிறான்.
காலிமுக வீதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்தில் குடை சகிதம் தகநாயக்கா பஸ்ஸ_க்காக காத்து நிற்கிறார். அச்சமயமும் அவர் காலித்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்.
 அவருக்காக அரசங்க எம்.பி.க்களுக்கான விருந்தினர் மாளிகை (சிரவஸ்தி) இருக்கிறது.அரசாங்கம் காரும் கொடுத்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் சாதாரண பிரஜையைப்போன்று வாழ்ந்தவர் அந்த முன்னாள் பிரதமர்.
 வீதி நிர்மாணத்திலிருக்கும் எனக்கோ எனது மேற்பார்வையின் கீழிருக்கும் வீதி நிர்மாண தொழிலாளர்களுக்கோ அந்த வேலை நிரந்தரமில்லை என்பதை முதலிலேயே சொல்லியிருக்கின்றேன். விரைவில் அந்த நிரந்தரமற்ற நிர்மாணப்பணி முடிந்துவிட்டால் நாம் நிரந்தரமாக வீட்டுக்கு செல்லவேண்டியதுதான்.      
 “தகநாயக்கா மஹத்தயா (ஐயா) நிற்கிறார். எங்களையெல்லாம் நிரந்தரமாக்கச்சொல்லி பாராளுமன்றத்தில் பேசச்சொல்லுங்க சேர்.” – என்று சக தொழிலாளர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.  நான் அவர் அருகில் சென்று கைகூப்பி வணங்கினேன். அவரும் குடையை பிடித்துக்கொண்டே கைகூப்பினார்.
 எமது நிலைமையைச்சொன்னேன்.
 அவர் சிரித்தார்.
“ என்னுடைய எம்.பி. பதவியும் நிரந்தரமில்லைத்தான். மைத்தரிபாலாதானே உங்கள் அமைச்சார். ஏதோ மக்கள் அரசாங்கம் நடப்பதாகத்தானே சொல்கிறார்கள். (அச்சமயம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமர். தகநாயக்கா சுயேச்சை எம்.பி.யாக எதிரணி வரிசையில்) மக்களை கவனிக்க வேண்டியதுதானே. எதற்கும் சொல்கிறேன்.”- என்றார்.
 அப்பொழுது பஸ் வந்துகொண்டிருந்தது.
“ புத்தே அற பஸ்ஸெக்க நவத்தன்ட  ( மகனே அந்த பஸ்ஸை நிறுத்தும்)”
அவர் குடையை மடித்துக்கொண்டார். பஸ் நின்றது. நடத்துனருக்கும் யார் நிற்பது என்பது தெரிந்துவிட்டது. மரியாதைக்காக பஸ்ஸை விட்டிறங்கி, அவர் ஏறுவதற்கு வழி விட்டார்.
“ புத்தே மங் கிஹில்லா என்னங் ( மகனே நான் சென்று வருகிறேன்)”
முன்னாள் பிரதமர் ஏறிய பஸ் புறப்பட்டது.
 நான் அந்த பஸ் சென்ற திசையையே பார்த்தவாறு சில கணங்கள் நிற்கின்றேன்.
சில கார்கள் தேசியக்கொடியுடன் அமைச்சரையோ எம்.பி.யையோ சுமந்துகொண்டு அந்த காலிமுக வீதியில் விரைந்துகொண்டிருக்கின்றன.
பிற்குறிப்பு:- தற்போதும் பல அரசியல் தலைவர்கள் மெய்ப்பாதுகாவலர் சகிதம் காலிமுகத்தில் நடக்கிறார்கள் என்று அறிகின்றேன். சமீபத்தில் இலங்கை அதிபரின் துணைவியார் அங்கு நடந்து பயிற்சி பெறும்போது ஒரு பிரஜை குறுக்கே வந்து அசௌகரியமாகிவிட்டதாம். அதற்காக அந்தப்பிரஜையை பொலிஸார் கைதுசெய்து விசாரித்தனர்.)

Nantri: Thenee 

No comments: