இலங்கைச் செய்திகள்

ஆஸிக்கு படகு மூலம் செல்ல முயன்ற 83 பேர் கைது

இலங்கையுடன் முறுகல் போன்று கட்டிக்கொள்ளும் இந்தியா

படைக்குறைப்பில் திருப்தியில்லை, மீள்குடியமர்வும் சரியாகச் செய்யவில்லை! அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் யாழ். ஆயர் தெரிவிப்பு.

புத்தர் சிலைக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டவர் மூவருக்கு விளக்கமறியல்

மு.கா. அதிருப்தி குழு உறுப்பினர்கள்இருவரின் கடைகள் தீ வைத்து ௭ரிப்பு

டில்ருக்சனின் படுகொலையைக் கண்டித்து பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்

பாலாவி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

கைதடி மத்திய மருந்தகத்தை அகற்றி வடமாகாண சபைத் தலைமையகம் அமைக்கத் திட்டம்?

 கல்வித்துறை நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்தி கொழும்பில் பேரணி

யாழ். வலிகாமத்தில்  திறக்கப்படவிருந்த புதிய பிரதேச சபைக் கட்டடத்தின் மீது கழிவு எண்ணெய் வீச்சு 

அளவுக்கு அதிகமான ராணுவ பிரசன்னமே, பிரிட்டனின் பயண எச்சரிக்கைக்கு அடிப்படை காரணம்

ஆஸிக்கு படகு மூலம் செல்ல முயன்ற 83 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 83 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு படகுகளில் பயணித்த மேற்படி நபர்களில் இரு பெண்கள் 4 சிறுவர்கள் அடங்கலாக 66 தமிழர்கள் 14 சிங்களவர்கள் 3 முஸ்லிம்கள் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கு புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.



இவ்வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடுகளுக்குச்செல்ல முயன்ற 1034 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி




 
இலங்கையுடன் முறுகல் போன்று கட்டிக்கொள்ளும் இந்தியா

இவ் விடயம் 21. 08. 2012, (செவ்வாய்), தமிழீழ நேரம் 11:36க்கு பதிவு செய்யப்பட்டது
Posted Imageசீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்படுகின்றமைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.


நன்றி - நெருடல்- யாழ்


படைக்குறைப்பில் திருப்தியில்லை, மீள்குடியமர்வும் சரியாகச் செய்யவில்லை! அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் யாழ். ஆயர் தெரிவிப்பு.

 Posted Image
மக்களது காணிகளில் முகாம்களை அமைப்பது தொடர்பிலும் எடுத்துக் கூறினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. இருப்பினும் அது கூறிய பரிந்துரைகளை நிறைவேற்றினாலேயே மக்களுக்கு உதவியாக இருக்கும்.
யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அது திருப்திகரமானதாக இல்லை என்று யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்துக்கு நேற்றைய தினம் வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாம்நிலை அதிகாரியான வில்லியம்ஸ் கைன் ஸ்ரைன், யாழ். ஆயரை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த யாழ். ஆயர்:
யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவிக்கின்றது. இது தொடர்பில் திருப்தி கொள்கின்றீர்களா என்று என்னிடம் கேட்டனர். இந்தப் படைக்குறைப்பு விடயத்தில் எனக்குத் திருப்தியில்லை என்று பதிலளித்தேன்.
மீள்குடியமர்வு நடவடிக்கைகளை அரசு சரியாகச் செய்யவில்லை. இவற்றில் நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன. மக்களுக்கு ஒழுங்கான முறையில் வீட்டுத் திட்டங்கள் சென்றடையவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் குறைவாகவே உள்ளன என்று அவர்களிடம் தெரிவித்தேன் என்றார் ஆயர்.
சந்திப்புத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணசபைத் தேர்தல் அரசினால் இதுவரையில் நடத்தப்படவில்லை. மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. தமிழ் மக்களின் தலைவர்களுடன் அரசியல் தீர்வு தொடர்பில் நடத்தப்பட்ட பேச்சு உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை.
அரசு மக்களுக்கான உதவிகளை செய்து வருவதாகவும், அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்ற போதும் அது மக்களைச் சரிவரச் சென்றடையவில்லை. இதனால் அவர்கள் அரசு மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர். அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர். அரசுக்கும் மக்களுக்கும் இடையில் வெளி காணப்படுவதற்கு இதுவே காரணம். மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இடைவெளி இருப்பதனால் தான் வடமாகாண தேர்தலைக் கூட ஒத்திவைக்கின்றேன் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசு மக்களுடன் இல்லை என்று தெரிந்துவிடும்.
இந்த விடயங்களை அமெரிக்கப் பிரதிநிதியிடம் எடுத்துக் கூறி இருக்கின்றேன் என்று தெரிவித்தார் ஆயர். இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய இரண்டாம் நிலைத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களை தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் மாலை 5 மணிக்கு சந்தித்துக் கலந்துரையாடினார்.
வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன், வலி.தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஷ், வலி.தென்.மேற்கு பிரதேச சபைத் தலைவர் அ.ஜெபநேசன், சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராஜா, வலி.மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி. நா.ஜங்கரன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
இதன் போது, "எங்களை நாங்களே நிர்வகிக்கும், வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சியுடன் கூடிய தீர்வே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி திட்டங்களுக்கு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழர்கள் புர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து இன்றும் நலன்புரி நிலையங்களிலேயே தங்கி வாழ்கின்றனர். இலங்கை அரசால் திட்டமிட்ட ரீதியில் சிங்கள குடியேற்றங்கள் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புனர்வாழ்வளிக்கபட்டு விடுதலை செய்யப்படுகின்ற போராளிகளுக்கு இன்னமும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன." என்று அமெரிக்கப் பிரதிநிதியிடம் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரிவித்தனர்.
http://www.seithy.co...&language=tamil   நன்றி  யாழ்


  புத்தர் சிலைக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டவர் மூவருக்கு விளக்கமறியல்
By M.D.Lucias
2012-08-22


புத்தர் சிலைக்கு முன்னால் நின்று அநாகரிக முறையில் புகைப்படங்களை எடுத்ததோடு புத்தர் சிலைக்கு முத்தங்கள் கொடுத்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் மூவருக்கு காலி நீதவான் நீதிமன்றம் தலா 1500 ரூபா அபராதமும், ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

மேற்படி நபர்கள் விகாரை ஒன்றுக்குச் சென்றிருந்தபோது புத்தர் சிலைக்கு முன்னால் நின்று பல்வேறு கோணங்களில் படங்கள் பிடித்துள்ளனர். பின்னர் ஸ்ரூடியோ ஒன்றுக்குப் புகைப்படங்களைக் கழுவச் சென்றிருந்தபோது குறித்த நபர்கள் புத்தர் சிலைக்கு முன்பாக நின்று அநாகரிகமாக புகைப்படங்கள் எடுத்திருந்தமை ஸ்ரூடியோ முகாமையாளருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஸ்ரூடியோ முகாமையாளர் காலி பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார். குறித்த இடத்துக்கு வந்த பொலிஸார் மூன்று வெளிநாட்டவர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெண்கள் இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 நன்றி வீரகேசரி


  மு.கா. அதிருப்தி குழு உறுப்பினர்கள்இருவரின் கடைகள் தீ வைத்து ௭ரிப்பு


23/08/2012
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் பிரதேச அதிருப்திக் குழு உறுப்பினர்கள் இருவரின் கடைகள் நேற்று அதிகாலை ‘‘தீ வைத்து ௭ரிக்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலை 2 மணியளவில் இக் கடைகள் ‘தீ வைத்து ௭ரிக்கப்பட்டிருக்க வேண்டும் ௭ன பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் ஏ.கே.௭ம். வீதியில் அமைந்துள்ள நகைக் கடை ஒன்றும் ரி.வி.பழுதுபார்க்கும் கடையொன்றுமே இவ்வாறு பெற்றோல் ஊற்றி ௭ரிக்கப்படடுள்ளது.

இதனால் இக் கடைகளில் இருந்த பொருட்கள் ௭ரிந்துள்ளதால் இக்கடை உரிமையாளர்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கட்சியின் தவிசாளராக இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அலிஸாகிர் மௌலானாவுக்கும் வெற்றிலைச் சின்னத்திற்கும் வாக்களிக்குமாறு கல்குடா தொகுதி மற்றும் காத்தான்குடி ஏறாவூர் போன்ற பிரதேச மக்களை கேட்டிருந்தார்.

தவிசாளர் பஷீர் சேகுதாவூதின் இந்த உரையை கண்டித்த கட்சியின் அதிருப்திக் குழுவினர் பஷீர் சேகுதாவூதின் கொடும்பாவி ஒன்றினையும் ௭ரித்தனர். இக்கொடும்பாவி ௭ரிக்கப்பட்ட இடத்தில் இருந்த அதிருப்தியாளர்களின் கடைகளே இவ்வாறு ௭ரிக்கப்பட்டுள்ள போதிலும் இது தேர்தல் வன்முறைச் சம்பவம் இல்லை ௭ன பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை தவிசாளர் பஷீர் சேகுதாவூதின் அந்த உரையைத் தொடர்ந்து கட்சி ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியும் கவலையும் ஏற்பட்டிருந்தது.
 நன்றி வீரகேசரி

  டில்ருக்சனின் படுகொலையைக் கண்டித்து பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்
By Priyarasa
2012-08-22

படையினராலும் சிறைக்காவலர்களினாலும் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட டில்ருக்சனின் படுகொலையைக் கண்டித்து வலி வடக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலி வடக்கு பிரதேச சபையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி செவ்வாய்க்கிழமை வலி வடக்குப் பிரதேச சபையின் இரண்டாம் ஆண்டுக்கான முதலாவது கூட்டம் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த வேளையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான ருக்சன் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்து மரணம் அடைந்தமையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை நிறைவேற்றியதுடன் அரசியல் கைதி ஒருவர் அநாகரிகமான முறையில் சிறைச்சாலையில் கொல்லப்பட்டமைக்கு ஐனாதிபதி மன்னிப்புக்கேட்கத் தேவையில்லையென பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் அண்மையில் கூறிய கருத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனை சபையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் இத்தகைய வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளவில்லையென மறுத்த போதிலும் ஊடகங்களில் வெளிவந்த தகவலைக் கூறியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் அமைதியான சம்பவமும் இடம்பெற்றது.
 நன்றி வீரகேசரி


 பாலாவி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

21/08/2012
இலங்கை விமானப்படைக்குரிய புத்தளம் பாலாவி விமான நிலையத்தினை உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் பொருட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பாலாவி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.


இதன்போது இந்த விமான நிலையத்தின் 1000 மீற்றர் கொண்ட விமான ஓடு பாதையினை 1500 மீற்றராக நீடிப்பதற்கும் இதில் சிறிய ரக விமானங்களை தரையிறக்குவதற்கு ஏதுவான வகையில் ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.


இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் கற்பிட்டி, வில்பத்து சரணாலயம் உட்பட உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையிலான பகுதிகளுக்கு இலகுவாகச் செல்லக்கூடிய வகையில் இந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் பாலாவி விமான நிலையம் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். நன்றி வீரகேசரி


 
கைதடி மத்திய மருந்தகத்தை அகற்றி வடமாகாண சபைத் தலைமையகம் அமைக்கத் திட்டம்?
 23/08/2012

kaithadi


 கைதடி மத்திய மருந்தகம் (ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம்) அமைந்துள்ள இடத்தில் வடமாகாண சபையின் தலைமையகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்தp பராமரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண சபையின் பிரதான செயலாளர் திருமதி ஆர். விஜயலட்சுமியிடம் எமது செய்திப்பிரிவு வினவியது. அதற்குப் பதிலளித்த அவர், 'இதைப் பற்றிக் கதைக்க வேண்டும் என்றால் நேரடியாக வந்து கதையுங்கள். ஏதாவது தகவல் தேவை என்றால் நேரில் வந்து சந்தியுங்கள். உங்களுக்கு யாராவது இங்கே இருப்பினம் தானே. நேர வந்து கதைக்கச் சொல்லுங்கள்" எனத் தெரிவித்தார்.
 ஏ 9 வீதியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு மையப்பகுதியில் இக்கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் அமைந்துள்ளது. சமூகத்தில் விசேட தேவையுடையவர்கள் நிறைந்து வாழும் இப்பிரதேசத்தில் இவ்வைத்தியசாலை (ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம்) அமைந்துள்ளமையால் அதன் அமைவிடமும், இருப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். 
இந்தப் பராமரிப்பு நிலையத்தின் சேவை கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள வயோதிபர்கள், நவீல்ட் விழிப்புலனற்றோர் பாடசாலையில் உள்ள விசேட தேவையுடையவர்கள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் காப்பகமான இரட்சண்யசேனை இல்லக் குழந்தைகள் என பரந்துள்ளது. 
மேலும் விழிப்புலனற்றோருக்கான தொழிற்பூங்கா, யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட விடுதி எனப் பலர் இப்பிரதேச மருத்துவமனையை நம்பி வாழ்கின்றனர். அத்துடன் வட மாகாண ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக ஆங்கில மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள், அங்கு அமைந்துள்ள ஒன்பது அமைச்சுக்களுக்குரிய அலுவலர்கள் மற்றும் இப்பிரதேச மக்கள் என வைத்தியசாலையின் தேவை அதிகரித்த நிலையில் உள்ளது. ஆகவே கைதடி வயோதிபர் இல்லத்துக்கு அருகில் உள்ள கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் தேவை மிகவும் இன்றியமையாதது.
கைதடி வயோதிபர் இல்லத்துக்கு நிரந்தரமான வைத்தியர் மற்றும் பயிற்றப்பட்ட தாதி இல்லாமையால் அங்குள்ளவர்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதுடன் இவ்வைத்தியசாலையில் நாளாந்தம் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வைத்தியசாலை குறிப்பிட்ட இடத்தில் 1952 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருவதுடன், தற்போது அங்கு டாக்டர் அருள்நேசன் கடமையாற்றி வருகிறார். 
 ஆகவே வடமாகாண சபை மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியவை இணைந்து வடமாகாண சபையின் தலைமையகத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கும் இவ்வைத்தியசாலை அமைந்துள்ள இடத்துக்கு மாற்றீடான இடத்தை வழங்கி அவ்வைத்தியசாலையைத் தரமுயர்த்துவதுடன், தொடர்ந்து இயங்கச் செய்ய வேண்டும் என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 நன்றி வீரகேசரி


  கல்வித்துறை நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்தி கொழும்பில் பேரணி
 23/08/2012

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வுகாண அரசாங்கத்தை வலியுறுத்தி கொழும்பு ஹைட்பார்க்கில் இன்று வியாழக்கிழமை பேரணி நடத்தப்பட்டது.

சோசலிஷ மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)
protest
protest
protest
protest

 நன்றி வீரகேசரி



யாழ். வலிகாமத்தில்  திறக்கப்படவிருந்த புதிய பிரதேச சபைக் கட்டடத்தின் மீது கழிவு எண்ணெய் வீச்சு
uduvilஇன்று (23/08/2012) காலை திறக்கப்படவிருந்த வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேசசபையின் புதியகட்டித்தின் மீது ஆயுதம் தாங்கியகுழுவினர் துப்பாக்கிமுனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு எண்ணெய் ஊற்றியுள்ளார்கள்.

அதிகாலை 2.00 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்தகும்பல் இந்த அநாகரிகச் செயலை அரங்கேற்றியுள்ளது.

அதிகாலைவேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப் பாயந்து காவலாளிகளைத் துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்னர்.

அவர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி கை, கால்கள் மற்றும் முகத்தையும் கட்டியதுடன் அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகள் அடையாளஅட்டைகளையும் பறித்தெடுத்டித்தனர்.

அத்துடன் காவலாளின் தலையில் கழிவு ஒயிலினை ஊற்றி அசிங்கப்படுத்தி, கடுமையாகதாக்கிவிட்டு புதிதாககட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்த பிரதேச சபை கட்டடத்திற்கும் கழிவு எண்ணெய்யை பரவலாக ஊற்றிவிட்டு அங்கிருந்து விசமிகள் தப்பிச்சென்றுள்ளார்கள்.

சம்பவத்தை நடத்திவிட்டு விசமிகள் கை கால்கள் கட்டப்பட்ட காவலாளிகளை கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ளபற்றைகளுக்குள் வீசிவிட்டுமாயமாகினர்.

பின்னர் காவலாளி ஒருவர் தனதுகட்டுக்களை அகற்றிபற்றைக்குள் இருந்து மீண்டநிலையில் மற்றைய காவலாளியையும் மீட்டுள்ளார்.

இருவரும் அயலவர் ஒருவரின் வீட்டிற்க்குச் சென்று அவர்களின் தொலைபேசி உதவியைப் பெற்று பிரதேசசபைத் தலைவருக்கு சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்குவந்த பிதேசசபைத் தலைவர் தி.பிரகாஷ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இதனைஅடுத்து சுன்னாகம் பொலிசார் காவலாளிகளை அழைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
Uduvil.1
அதேவேளை, குறிப்பிட்ட கட்டடத்தை உள்ளூர் ஆட்சி உதவி ஆணையாளரிடம் ஒப்படைக்குமாறு வடமாகாண ஆணையாளர் பணித்திருந்ததாகவும் இந்தநிலையில் கடந்த புதன் கிழமை கட்டடத்தைகையேற்பதற்கு உள்ளுராட்சி உதவிஆணையாளர் வந்தபோது, வலிதெற்கு பிரதேசசபைத்தலைவர் கட்டடம் தங்களிடமே ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தியதற்கமைய ஒப்பந்தகாரர்களால் செயலக்கட்டிடம் அவரிடமேகயளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே தவிசாளருக்கும் உள்ளுராட்சி உதவி ஆணையாளரருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாகவும் அதன் போது உள்ளுராட்சி உதவி ஆணையாளர், தமக்குஆளுனர் படைகளின் பாதுகாப்புவழங்கியுள்ளார்.

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் எனக்கூறிவலி. தெற்குபிரதேசசபை தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது.

இந்தநிலையிலேயே புதிதாக திறக்கப்படவிருந்த கட்டடத்திற்கு இனந்தெரியாத ஆயுத்தாரிகள் கழிவுஒயில் ஊற்றி அசிங்கப்படுத்தியுள்ளனர்.
நன்றி தேனீ



 
அளவுக்கு அதிகமான ராணுவ பிரசன்னமே, பிரிட்டனின் பயண எச்சரிக்கைக்கு அடிப்படை காரணம்   
- இதை ஜிஎல் பீரிஸ் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மனோ கணேசன்
வட மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக ராணுவத்தை  அரசாங்கம் குவித்து வைத்துள்ளது. புலிகள் மீண்டும் தலை எடுக்க போகிறார்கள் என்று சொல்லி, அதை தடுப்பதற்கே இந்த பாதுகாப்பு நடவடிக்கை என்று அரசாங்கம் இதை நியாயப்படுத்துகின்றது. பயங்கரவாதம் மீண்டும் தலை  தூக்கலாம் என்று அரசாங்கமே அதிகாரப்பூர்வமாக சொல்வதால்தான், இன்று பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் பல  நாடுகளும் இத்தகைய எச்சரிக்கையை விடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது. தேவைக்கு அதிகமான ராணுவத்தை அகற்றினால், இத்தகைய எச்சரிக்கைகள் தானாக அகலும். இந்நிலையில் ராணுவத்தை குவித்து வைத்துகொண்டு அதற்கு பயங்கரவாத காரணமும் சொல்லிக்கொண்டு இந்த பயண எச்சரிக்கையை  அகற்றுங்கள என்று வெளிவிவகார அமைச்சர், பிரிட்டனிடம் கோரிக்கை விடுப்பது நல்ல நகைச்சுவை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,அரசாங்கம் வட கிழக்கு தமிழ் பிரதேசங்களில் இராணுவத்தை குவித்து வைத்திருப்பதன் காரணம் எமக்கு தெரியும். சிவில் நடவடிக்கைகளில் தலையிட்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் தோல்வியடைந்த சமூகமாக வைத்திருப்பதற்கும், தமிழ் பிரதேசங்களில் நில அபகரிப்புகளை செய்யவும்,  தமிழர்களின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராக புலனாய்வு செய்வதற்கும் தான் அரசாங்கம் இராணுவத்தை அபரிதமாக வடக்கில் பயன்படுத்துகின்றது.
ஆனால் இந்த காரணங்களை வெளியில் சொல்ல முடியாது என்பதால், இதோ புலி வருகிறது, அதோ புலி வருகிறது என்று இவர்கள்  புலி பூச்சாண்டி காட்டுகிறார்கள். மேலும் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியிலும், புலி கோஷம் அரசுக்கு நன்கு பயன்படுகின்றது.
எனவே அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக இராணுவத்தை குவித்து வைத்துள்ளது. அதை மறைப்பதற்கு பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் நடவடிக்கை எடுக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லுகிறது. இதனால்தான் இன்று பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு கவனம், ஜாக்கிரதை  என்று எச்சரிக்கை விடுக்கின்றது. எனவே இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ், பயண எச்சரிக்கை பிழை என்றும் அதை அகற்றுங்கள் என்றும் பிரிட்டனிடம் சொல்வது நல்ல நகைச்சுவை.
அபரிதமான இராணுவ பிரசன்னம்  இருக்கும் நாடுகளுக்கு தமது பிரஜைகளை செல்ல  வேண்டாம்  என்று மேற்குலக  நாடுகள்  சொல்வது சரியானது. புலி பயங்கரவாதம் இருக்கின்றதோ, இல்லையோ, அரச பயங்கரவாதம் நிச்சயமாக இருக்கின்றது. மேலும் துப்பாக்கி  தவறுதலாக வெடித்தால்கூட அது பயணிகளுக்கு ஆபத்தானது. அதுமாத்திரம் அல்ல, சிலவேளைகளில், தமிழ் ஜனநாயக அரசியல் செயல்பாட்டாளர்கள் மீது நடத்தப்படும் கழிவு எண்ணெய் தாக்குதல்களில், பிரிட்டிஷ் பயணிகளும் பாதிக்கப்படலாம்.
எனவே அரசாங்கம், தனது அரசியல் தேவைகளுக்கு வடக்கில் நிறுத்தி வைத்திருக்கும் இராணுவத்தை அகற்றிவிட்டு, பயண எச்சரிக்கையை வாபஸ் வாங்கும்படி பிரிட்டனிடம் சொல்ல வேண்டும். இதை செய்யாமல் வெளிவகார அமைச்சர் கோமாளி அமைச்சராக கருத்து தெரிவிக்க கூடாது.   
நன்றி தேனீ

No comments: