.

சந்திரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் காலமானார்


சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் எனும் பெருமைக்குரிய அமெரிக்காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் காலமானார்.
அவரது 82 வயதில் நேற்று (சனிக்கிழமை) இரவு  மரணமடைந்துள்ளார். இம்மாதம் தொடக்கத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.




1969ம் ஆண்டு ஜூலை 20ம் திகதி சந்திரனில் தரையிறங்கிய அபொலோ 11 செய்மதியின் கமாண்டராக செயற்பட்டு சந்திரன் தரையில் முதல் காலடி எடுத்து வைத்தவர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங். 'இது ஒரு மனிதனின் மிகச்சிறிய காற்தடம். ஆனால், மனித வர்க்கத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்' என அந்த அனுபவத்தை  வர்ணித்தார். உலகெங்கும் 500 மில்லியன் பேர் தொலைக்காட்சியில் அந்நிகழ்வை பார்வையிட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிக உயரிய சிவிலியன் விருதான காங்கிரஸின் தங்க பதக்கத்தை பரிசாக வென்றார். ஆர்ம்ஸ்ட்ரோங்கும் அவரது சக விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் அல்ட்ரினும் சுமார் மூன்று மணிநேரம் சந்திரனில் நடந்து, மாதிரி உருவங்களை சேகரித்தல், சில படிவ ஆராய்ச்சிகள் செய்தல் என்பவற்றுடன் தம்மை புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

1971ம் ஆண்டு தனது இறுதி விண்வெளி பயணத்தை மேற்கொண்டிருந்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் பின்னர் நாசாவிலிருந்து விலகி விண்வெளி ஆராய்ச்சியல் பேராசிரியராக தனது பணியை தொடர்ந்தார்.

1930ம் ஆண்டு பிறந்த நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் ஒஹியோவில் வளர்ந்தார். தனது ஆறாவது வயதில் தந்தியுடன் முதல் வான் வெளி பயணத்தை மேற்கொண்டார். 1950 ம் ஆண்டு கொரியாவுடனான யுத்தத்தின் போது அமெரிக்க கடற்படை ஜெட் வீரராக கடமை புரிந்தார். 1962ம் ஆண்டு நாசாவுடன் இணைந்தார்.

தான் மிகப்பெரிய சாதனையாளன், விண்வெளி வீரன் எனும் பந்தாவுடன் ஊடகங்களுக்கு தேவையற்ற விளம்பரங்களை கொடுக்க கூடாது என்பதில் மிக கவனமாக இருந்த ஆர்ம்ஸ்ட்ரோங் பொது நிகழ்வுகளில் பங்கேற்றது கூட மிக குறைவு.

ஆர்ம்ஸ்ட்ரோங் எங்கு மரணமடைந்தார் எனும் தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. ஆர்ம்ஸ்ட்ரோங் உயிருடன் இருந்திருந்தால், சந்திரனில் காலடி எடுத்த வைத்த நிகழ்வின் 50 வருட பூர்த்தியை 2019 இல் சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Nantri: 4tamilmedia.com

No comments: