விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகம்

((Whittlesea Tamil Association )
மெல்போர்ணில் வடபகுதியில் இயங்கும் ~~வானமுதம்" தமிழ் ஒலிபரப்புச் சேவையை நடாத்திவரும் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் 20.05.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.00மணக்குEpping Memorial Hall இல் அமைந்துள்ள Funtion room இல் நடைபெற்றது. கடந்த ஆண்டு தலைவராக இருந்த திரு.எட்வேட் மரியதாசன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. அவர் தனதுரையில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகள் செயற்பாடுகள் பற்றியும் ‘வானமுதம்’ ஒலிபரப்புச் சேவையின் வளர்ச்சி பற்றியும், ஒலிபரப்புச் சேவையை ஏற்படுத்தித் தந்த Plenty Valley FM  88.6 நிர்வாகத்திற்கும், அவுஸ்திரேலிய மாநிலங்கள், மற்றும் நியூசிலாந்து வாழ் தமிழ் இல்லங்களுக்கு சேவையைத் தனதூடாகக எடுத்துச் செல்லும் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு வானொலியான ~~இன்பத் தமிழ்" வானொலிக்கும் அதன் ஸ்தாபகர் திரு.பாலசிங்கம் பிரபாகரனுக்கும், சகல வானொலி நேயர்களுக்கும் நன்றி கூறினார்.
மேலும் தனதுரையில் கடந்த ஆண்டு பதவியிலிருந்து அயராது உழைத்த சகல நிர்வாக உறுப்பினர்களுக்கும், தமிழ்ச்சங்கம், வானொலிச் சேவை இரண்டும் உதயமாக வித்திட்டவர்களில் ஒருவரும், ஆரம்ப காலத்துச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி தற்போது சிட்னியில் வசித்துவரும் திரு.விக்டர் சென்ஜோர்ஜ் அவர்களுக்கும், ஆரம்பகால தலைவராக இருந்த பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவிற்கும், வானமுதம் ஒலிபரப்புச்சேவையின் சகல அறிவிப்பாளர்களுக்கும், தேர்தல் அதிகாரியாக செயற்படும் திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், சகல விற்றில்சீ தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சி நிரலின் படி சங்கத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் குறை நிறைகள் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து புதிய ஆண்டுக்குரிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்து வைத்தார். அடுத்த ஆண்டுக்குரிய புதிய நிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் திரு.வில்லியம் இராஜேந்திரம்.
உபதலைவர் திரு.நவரத்தினம் அல்லமதேவன்.
செயலாளர் திரு.தியாகராஜா சாம்பசிவம்.
பொருளாளர் கலாநிதி திருமதி.கௌசல்யா அன்ரனிப்பிள்ளை
சங்க உறுப்பினர்களாக
திருமதி.நீனா டேரியஸ்
திரு.எட்வேட் அருள்நேசதாசன்
பாடும்மீன் சு.ஸ்ரீசந்தராசா
திரு.எட்வேட் மரியதாசன்
திரு.ஜோசெவ் நிரோஷ்
திருமதி.நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன்
திரு.ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரஞ்சன் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.வில்லியம் இராஜேந்திரம் வானமுதம் வானொலிச் சேவை, விற்றில்சீ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிக் கூறியதுடன், யாவருக்கும் நன்றி தெரிவித்தார். மீண்டும் நடப்பாண்டுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.தியாகராஜா சாம்பசிவம் சங்கத்தினதும், வானொலியினதும் வளர்ச்சியில் தொடர்ந்து அரும்பாடுபட வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்ததோடு தன்னுடன் செயல்ப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். திரு.மனுவேற்பிள்ளை அன்ரன் நியுட்டன், திரு.ஜோசெவ் நிரோஷ், திரு.எட்வேட் அருள்நேசதாசன் ஆகியோர் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து அனைவருடைய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி தமது பங்களிப்பையும் நல்குவதாகக் கூறியிருந்தார்கள். அவுஸ்திரேலியாவில் அழகிய தமிழ் அமுது படைத்து, இனிய மணம் பரப்பும் வானமுதத்தின் சேவையைத் தொடர்ந்து வளர்க்கவும், பல்லினக் கலாச்சார மாநிலமான மெல்போர்ணில் தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கும் விற்றில்சீ தமிழ்ச் சங்கம் வளரவும்,  தொடர்ந்து அதன் பணி மூலம் அனைத்து மக்களும் பயன் பெறவும் வாழ்த்தினார்கள்.
இறுதியாகத் தமிழ்ச்சங்கத்தின் புதிய செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.தியாகராஜா சாம்பசிவம் நன்றியுரை கூறினார். ஆண்டுக் கூட்டத்தின் முடிவில் சிற்றுண்டிகள், தேநீர் வழங்கப்பட்டன.
அத்துடன் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினர் இத்தரணியில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களின் ஆதரவையும் நாடி  நிற்கின்றனர். விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தில் இணைய விரும்புபவர்கள் அதன் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.
ஆண்டுப் பொதுக்கூட்டம் இனிதே நிறைவேறியது. வாழ்க தமிழ்.
நவரத்தினம் அல்லமதேவன்

No comments: