ஜெயமோகனின் தேசப்பற்று! அவமானப்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்.

.
இவர்களுக்கு உண்மையாகவே வாசகர்களிடம் இருந்து கடிதம் வருகிறதா, இல்லை இவர்களே வாசகர் பெயர்களில் தமக்குத் தாமே கடிதம் எழுதுக் கொள்கிறார்களா தெரியவில்லை! காரணம் இந்த கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தற்புகழ்ச்சி  ரொம்ப ஜாஸ்தி தான்!

வழமை போலவே, சில நாட்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது பக்கத்திலே வாசகர் கடிதங்கள் சிலவற்றை பிரசுரித்து அதற்க்கு பதிலளித்திருந்தார். அதாவது, குறித்த வாசகர்கள் இலங்கைக்கு சென்ற இந்திய "அமைதிப்படையில்" பணியாற்றியவர்கள் என்றும், தாம் பணியாற்றிய காலத்தில் தம் சக வீரர்கள் மிக இதய சுத்தியுடன் நடந்து கொண்டதாகவும், ஈழத்திலே தமிழர் வாழ் பிரதேசங்களிலே பாலாறும் தேனாறும் ஓட பெரும் பிராயத்தனம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்க்கு மேலாக மனிதாபிமான நடவடிக்கை என்று வேறு அதை அவர்கள் விழித்திருந்தார்கள்!
மாறாக இந்திய அமைதிப்படை ஈழத்திலே கொலைகளும் கற்ப்பழிப்புக்களும் செய்ததாக கூறப்படுவது வெறும் அவதூறு, அது அரசியல் பிரச்சாரம் மட்டுமே என்று கூற, அதை ஆமோதிப்பது கணக்காய் ஜெயமோகன் அவர்களும் தனது கருத்துக்களை கூறி, தன் காது, கண், மூக்கு வழியாக வழியும் தேசப்பற்றை நிரூபிக்க முயன்றிருந்தார்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நிகழ்ந்த அநியாயங்களை வெறும் அவதூறுகள் என கூறி நாலு பேர் நியாயப்படுத்த, அதற்க்கு தாளம் தப்பாமல் ஜெயமோகனும் பக்கவாத்தியம் வாசிக்கிறார்!

இந்திய அமைதிப்படையின் கொடூரமான அக்கிரமங்ககள் அரங்கேறிய  மண்ணிலே, அந்த சம்பவங்களை அனுபவித்து வாழ்ந்த  மக்கள் மத்தியிலே வாழ்ந்த எமக்கு இது எவ்வளவு பெரிய அராஜகமாக, இருட்டடிப்பான செயலாக  தோன்றும்!


ஒட்டுமொத்த ஈழமுமே அனுபத்த வலிகளும், வேதனைகளும் ஜெயமோகனின் தேசப் பற்றை விட சிறிதாகிப் போகலாம்! அந்த சமகாலத்திலே (22/10/1987) இந்திய இராணுவம் யாழ் போதனா வைத்தியசாலையில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கசாப்பு கடைக்காக வைத்திருந்த ஆடுமாடுகளாக தெரிந்திருக்கலாம்! கொக்குவில் பிரம்படி என்னும் இடத்தில் டாங்கிகள் ஏற்றி உடல் நசுக்கி கொல்லப்பட்டவர்களும், கொக்குவில் இந்துக்கல்லூரி, வல்வை, வரணி, அளவெட்டி இந்து ஆச்சிரமம் போன்ற இடங்களில் கொத்துக்கொத்தாக "அமைதிப்படையால்" கொலைசெய்யப்பட்ட மனிதர்களை ஜெயமோகன்  வெறும் பூச்சி புளுக்ககளாக உணர்ந்திருக்கலாம்! ஆனால்  காலம் வரலாற்றை சரியாகவே பதிந்து செல்கிறது/செல்லும். மாறாக ஜெயமோகன் போன்ற தனி மனிதர்கள் தங்கள் பற்று, வெறுப்புக்கள் மூலம் அவற்றை திசை திருப்பிவிட முடியாது என்பதை ஜெயமோகனும்  நன்றாகவே அறிந்தவர்..!

அத்துடன்  இறுதியாக ஒன்று குறிப்பிட்டு இருந்தார் "இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்." இங்கே இந்தியா தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழ தமிழர்களிடம் இருந்தது; அது அரசியல் மட்டத்திலான அழுத்தங்களை கொடுத்து போரை நிறுத்தக்கூடிய எதிர்பார்ப்பே ஒழிய, இராணுவ ரீதியான தலையீடாக இருந்திருக்கவில்லை. அப்பிடி இருந்தால் அது தம் தலையில் தாமே கொள்ளிக்கட்டையை வைப்பதற்கு ஒப்பானது என்பதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு மறதி வியாதி பிடித்தவர்கள் ஈழ தமிழர்கள் இல்லை!

மாறாக இந்திய அரசு இலங்கைக்கு இராணுவத்தை அனுப்ப எண்ணி(!) அதே ஜெயமோகன் சொல்லும் "வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்" தான் தடுத்தது என்பது "வரலாற்றின் கசப்பான  அனுபவம்" ஆக இருக்கலாம்!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் போதும் சரி, அதற்க்கு முன்னைய தமிழர்கள் மீதான சிங்கள அரசின் வன்முறைகளின் போதும் சரி, ஏன், சமீபத்திய ஜெனீவா வாக்கெடுப்புவரை கூட வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் கருதி இலங்கை அரசை தம் தலையிலே தூக்கி வைத்திருந்து கொண்டாடிய  இலங்கை வாழ் முஸ்லீம்கள், தம்புள்ளையில் தம் பள்ளிவாசலை அரச அங்கீகாரத்துடன் இடிக்க முனைந்தார்கள் என்பதற்காக அதே இலங்கை அரசின் மீது 'ஒரே இரவில்' பேரினவாதிகள் என்ற முத்திரை குத்தினார்களோ, அதே போல தான் ஜெயமோகன் போன்ற வகையறாக்களுக்கும்... "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும்"

ஜெயமோகன் அவர்களே இதுவும் ஒரு விபச்சாரம் தான் 'எழுத்துக்களால் உண்மைகளைக் கற்பழிக்கும் விபச்சாரம்!'
nantri  http://www.nekalvukal.com

No comments: