‘மே 18’ அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ‘தேசிய நினைவேந்தல் நாள்’நிகழ்வுகள்

.

ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும் அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும் விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேண் நகரங்களில் நடைபெற்றுள்ளன.

சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமினப்படுகொலை நாள் தேசிய நினைவேந்தல் நாள்’நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் மே மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 தொடக்கம் மாலை 6.30 வரை மெல்பேர்ண் நகரின் மத்தியில் அமைந்துள்ள State Library முன்றலில் நடைபெற்ற நினைவேந்தல் நாள் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்ட இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களும், தமிழீழத்துக்கு ஆதரவான வேற்றின மக்களும் கலந்துகொண்டனர்.விக்ரோறியாவின் தமிழர் அமைப்புக்களின் ஆதரவுடன் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், பல சமூக செயற்பாட்டாளர்கள், சமூகத் தலைவர்கள் உட்டப பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமது உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பித்த இந்நிகழ்வின் முதலில் இசைக்கலைஞர் சின்மயனின் தமிழ் பாரம்பரிய தாள இசை இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் 2010ஆம் ஆண்டின் Australian of The Year விருதுபெற்ற பேராசிரியர் Patrick McGorry மற்றும் அவுஸ்திரேலியச் செனற் சபையின் உறுப்பினரான John Madigan ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். அவுஸ்திரேலியாவுக்கு புதிதாக வந்து புகலிடம் கோருவோருடனான தனது உறவைப்பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர் Patrick McGorry அவர்கள் தமிழ் மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார்

இந்நிகழ்வில் உரையாற்றிய செனற்றர் John Madigan சிறிலங்காவில் ஐநாவின் மேற்பார்வையுடனான ஒரு சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார். இந்த சிறப்புப் பேச்சாளர்களுடன் Ms Kath Morton (president of Ballart circle of Friends), Mr. Mick Armstrong (Socialist Alternative), ஏனைய அவுஸ்திரேலிய சமூக செயற்பாட்டாளர்கள் சூ போல்ற்றன், டனியல் ஒலே, லிஸ் வோல்ஷ் ஆகியோரும் உரையாற்றினர். ‘முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்’ என்ற பாட்டிற்கு இளைஞர் ஸ்ரீராம் சிறப்பாக பரதநாட்டியம் ஆடினார். இந்நிகழ்வின் உரைகளில் இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் உரையாற்றினார்
 
நினைவேந்தல் வணக்கப்பாடல்களின் பிண்ணனி இசையுடன் மக்கள் கைகளில் மெழுகுவர்தியை தாங்கியபடி தீப அஞ்சலி இடம்பெற்றதைத் தொடர்ந்து இறுதியில் நினைவு வணக்கத் தூபிக்கு முன் தீப அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வின் நெகிழவைக்கும் காட்சிகளை, மெல்பேண் ஊடகவியலாளர்களும், அந்த வழிகளில் பயணித்த பலரும் பதிவாக்கிக்கொண்டனர். இத்துடன் இந்த மனிதப் படுகொலைகளைப் பற்றியும், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வற்புறுத்தும் பதாதைகளும், படங்களும் அங்கு பல்லின மக்களின் கவனத்தினை ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததோடு, பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களும் அந்த வழியால் சென்ற பல்லின மக்களுக்கு தொண்டர்களினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஜனனி பாலா முதலில் உறுதியுரையை வாசிக்க, நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் மக்களும் வேற்றின மக்களும் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்தனர்.

----------------------------------------------------------

இதேவேளை சிட்னியில் மாலை ஏழு மணிக்கு சிட்னியில் சில்வர் வோட்டர், Derby Street இல் அமைந்துள்ள பகாய் சென்ரரில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் 3ம் ஆண்டின் நினைவு வணக்க நாள் நிகழ்வில் 600 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் விதையான உறவுகளுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

இந் நினைவு வணக்க நாள் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றல், அவுஸ்திரேலியாகொடி, தேசியக்கொடி ஏற்றலுடன் வருகை தந்த அணைத்து மக்களும் மலர்அஞ்சலி செலுத்தி இந்நிகழ்வு ஆரம்பமாகியது.

கிறின்ஸ் கட்சியை சேர்ந்த அவுஸ்திரேலியா பாராளமன்ற உறுப்பினரான Lee Rhiannon தமிழ் மக்களின் இன அழிப்பையும், சிறிலங்கா அரசின் போர்குற்றங்களைப் பற்றியும் உரையாற்றினார். 3 வருடங்களுக்கு முன் நடைபெற்ற இன அழிப்பையும், அதற்கு முன்பு எமது தமிழ்மக்கள் சுதந்திரமாக எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும், இப்போது அங்கு நடைபெறுகின்ற துன்பங்களையும், காணொளியை திரையில் காண்பிக்கப்பட்டது. பின்பு (korum theatre) அடக்கப்பட்டவர்களின் அரங்கம் அல்லது விவாத அரங்கம் நடைபெற்றது.

அனைத்து தமிழ்மக்களின் உறுதிஎடுத்தலுடன், மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப்போயுள்ள தாயக மக்களின் குரலாக, பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் பெருமளவில் திரண்டு வந்து, முள்ளிவாய்க்காலில் வித்தாகிப்போன எம்மக்களையும் எமது போராளிகளின் கனவை நனவாக்க அனைவரும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”என்ற உறுதியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இதேவேளை காலை 11.30 மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை தமிழ் இளையோர் அமைப்பினர் (மே-18 G for Genocide) சிறிலங்கா அரசு முன்று வருடங்களுக்கு முன் முள்ளிவாய்காளில் நாடாத்திய இன அழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை, விநியோகித்தும், மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் கொடுமைகளைச் சித்தரிக்கும் காட்சிகள், மற்றும் தகவல்களையும் அங்கு ஏனைய சமூகத்தைச் சேர்ந்த வேற்றின மக்களுடன் பகிர்ந்து கொண்டதோடு, 2000 இற்கும் மேற்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு கூறல் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கு வேற்றின மக்கள் ஆதரவை வழங்கியதுடன் சில கருத்துக்களை வழங்கினார்கள், “தமிழினமக்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் உயிரிழப்புக்கள் ஏற்படும் போது ஏன் மற்றைய நாடுகள் தமிழ் மக்களை பாதுகாக்கவில்லை என்றும் இதை தொடர்ந்து போராடினால் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற கூறினார்கள்”. 
 
2 comments:

Anonymous said...

மாபெரும் இனப் படுகொலை நினைவு நாள்
சிட்னி Bhai சென்டர் இல் மே 18 அன்று நடைபெற்றது. போரினால் தம் உயிரை இழந்த அப்பாவி மக்களை நினைவு கூற இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த எல்லாருக்கும் முதற் கண் நன்றி.
இந்த நிகழ்வில் நான் அவதானித்த சில விடயங்களை ஒரு தமிழன் என்ற ரீதியில் எனது ஆதங்கத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுகிறேன்
முதலில் நான் எந்த ஒரு அமைப்பையும் சார்ந்தவன் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
எனது கருத்து தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் .
7.15 pm அரங்கினுள் நுழைகிறேன். மக்கள் கூட்டமாக பொறுமையுடன் நின்று புஷ்பாஞ்சலி செலுத்தி தங்களது சோகத்தை பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
இதை தொடர்ந்து VIDEO காட்சியுடன் படுகொலை களம் திரையில் காட்டப்படுகிறது. இந்த வீடியோ அங்கே வந்திருந்த மக்கள் நூறு தடவைக்கு மேல் பார்த்திருப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இருந்தும் இதை நான்கு பின்னணி பாடகர்கள் பாடும் வரை இழுத்தடித்து குறைந்தது 45 நிமிடங்கள் திரை இட்டீர்கள்
இதை பார்கவேண்டியவர்கள் நிகழ்சிக்கு வராத தமிழர்கள், அல்லது ஆஸ்திரேலியா அரசாங்க உறுப்பினர்கள். வருகை தந்த மக்களுக்கு வேண்டுமானால் ஒரு 10 நிமிடம் காட்டி இருக்கலாம்.
இதனை தொடர்ந்து செல்வி மீனாவின் உரை.
சகோதரி நீங்கள் எம் மண்ணுக்கு செய்த உதவி ஒருவராலும் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று.மட்டுமல்லாது எல்லோராலும் செய்ய முடியாத ஒன்று.
ஆனால் இதே பேச்சை என்னும் எத்தனை தடவைகள் நாங்கள் கேட்பது ?
இந்த பேச்சு இடம்பெற வேண்டிய மேடை இது வல்ல சகோதரியே - அரசியல் மேடைகளில் தான் இது பேசப் பட வேண்டும்
அடுத்த கொடுமை - Greens MP ஒருவர் இலங்கை அதிபரையும் அவரது சகோதரர் இருவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என்று சொன்னவுடன் - அப்பாவி மக்கள் கை தட்டுகிறார்கள். யாராவது இப்படி ஒரு விடயத்தை பேசிவிட்டால் கை தட்ட நாம் ஒரு போதும் சிந்திக்கவே மாட்டோம்
ஆனால் ஒரு நிமிடம் சிந்திப்போமேயானால், OBAMA வை விட வேறு எவராலும் இந்த காரியத்தை செய்ய முடியாது என்பது எம் எல்லோருக்கும் நன்றாக தெரியும். இருந்தும் கை தட்டுவதில் எமக்கு ஒரு சின்ன சந்தோசம்.
இதை அடுத்து இன்னுமொரு சகோதரர் பேசினார். அவர் முகத்தில் தெரிந்த உணர்ச்சி அவரது பேச்சில் இருக்கவில்லை, ஏன் என்றால் அவர் எழுதி வந்த பேச்சை அவராலேயே வாசிக்க முடியவில்லை.
அவர் பேசும் பொழுது யாரும் இலங்கை போகக்கூடாது என்று சொன்னார். சகோதரனே உமது பெற்றோர் உறவினர் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது, அனால் பெற்றோர்கள் இலங்கையில் இருப்பவர்களை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இதை தொடர்ந்து ஒரு நாடகம் ஆரம்பமானது. பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பொலி
துக்கம் அனுஷ்டிக்க வந்த இடத்தில் சிரிப்பொலி. இதற்கு மேல் பொறுமை இல்லாமல் நான் சென்று விட்டன். நான் சென்ற பிறகு நாடகத்தில் ஏதாவது அறிவு பூர்வமாக சொன்னார்களா என்று எனக்கு தெரியாது.
நான் உங்களிடம் எல்லாம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான், எமது மக்களுக்கு ஒன்று என்றால் கூட்டம் கூட நாம் பலர் தயங்குவது இல்லை. இந்த கூட்டங்கள் உணர்வு பூர்வமாக இருப்பதை விட அறிவு பூர்வமாக ஆக்க பூர்வமாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் .
இவ்வாறன நிகழ்வுகளில் மக்கள் குறைவாக காணபடுவது இதனால் தான் என்று என்ன தோன்றுகிறது.
யுத்தம் முடிந்து விட்டது என்பதை நான் உட்பட பலர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
ஆனால் இன்றைய நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும் ? முள்ளு கம்பிகளுக்கு பின்னால் வாழ்பவர்களுக்கு எப்படி குரல் கொடுக்க வேண்டும் ? வீடுகளுக்கு திரும்பிய மக்களுக்கு எவ்வாறு உதவி புரியலாம் போன்ற விடயங்களை ஆராய வேண்டும்.
இவற்றை எல்லாம் விட்டு விட்டு சிட்னியில் எத்தனை அமைப்புக்கள் இருக்கின்றன , அவரை விட எமது கூட்டத்துக்கு அதிகமான மக்கள் வந்திருந்தார்களா ? என்பதில் தான் போட்டி.
ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கும் தெரியும். உங்கள் முயற்சிகளுக்கு நன்றி
தயவு செய்து எதை யார் எழுதியிருப்பார்கள், இவர்களது நோக்கம் என்னவாக இருக்கும் என்பதில் நேரத்தை விரயம் செய்யாமல் ,
அடுத்து வரும் நிகழ்வுகளில் என்ன செய்து எம் உறவுகளுக்கு உதவலாம் என்பதை கலந்து சிந்தியுங்கள்

யாருடைய மனதையும் புண் படுத்த இதை நான் எழுதவில்லை, புண் பட்ட என் மனதுக்கு மருந்து தேடும் ஒரு முயற்சி மட்டுமே.
நன்றியுடன்
முட்டாள் தமிழன்

kirrukan said...

[quote]அடுத்து வரும் நிகழ்வுகளில் என்ன செய்து எம் உறவுகளுக்கு உதவலாம் என்பதை கலந்து சிந்தியுங்கள்[quote]

புலத்தில் இருந்து தாயக உறவுகளுக்கு உதவிகளை பலர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.,சிட்னியில் பல நிகழ்ச்சிகள் தாயக உறவுகளுக்காக‌ நடைபெற்று இருக்கின்றன.சில உறவுகளுக்கு அந்த உதவி இன்னும் கிடைக்கவில்லையோ தெரியவில்லை.....
கட்டுரையாளர்...
[quote] 500 இற்கு மேற்பட்ட இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களு
சிட்னி நிகழ்வில் 600 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு [quote]
பின்னூட்டம் எழுதியவர்....
[quote]இவ்வாறன நிகழ்வுகளில் மக்கள் குறைவாக காணபடுவது இதனால் தான் என்று என்ன தோன்றுகிறது.[quote]

கட்டுரையாளரும்,பின்னூட்டம் எழுதியவரும் மக்கள் கலந்து கொள்ளவில்லை இந்த நிகழ்வுக்கு என்ற கருத்தை பரப்புவதில் கூடிய அக்கறை செலுத்துவது போல தெரிகின்றது.
சிட்னியில் நிகழ்வு நடை பெற்ற மண்டபம் மக்கள் கூட்டமாகத்தான் இருந்தது .அந்த மண்டபத்தில் 700 பேர் வரை அமர்ந்திருந்து பார்க்கலாம். ஆகவே மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் என்றே சொல்லவேண்டும்...
[quote]OBAMA வை விட வேறு எவராலும் இந்த காரியத்தை செய்ய முடியாது என்பது எம் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.[quote]
ஒபாமா வினாலும் இதை செய்ய முடியாது என்பதும் எல்லோருக்கும் தெரியும்
.இருந்தும் இப்படியான்வர்களின் செயல்பாடுகள் மூலம் ஒரளவுக்கேனும் சர்வதேச அளவில் போர்குற்ற விசாரனையை செயல் படுத்த முயற்சி செய்யலாம் அல்லவா?

[quote]யுத்தம் முடிந்து விட்டது என்பதை நான் உட்பட பலர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.[quote]
யுத்தம் முடிவடைந்து விட்டது நான் ஏற்றுக்கொள்கிறேன்
ஆனால் யுத்தம் உருவானதற்கான காரணம் இன்னும் முடிவடையவில்லை
அதுவும் முடிவடைந்தால் உங்கள் விருப்பம் நிறைவடையும் அதுவரை இது தொடர்கதை....காரணம் சமுகத்தில் முட்டாள் இருப்பான் ,கிறுக்கன் இருப்பான்,புத்திசாலி இருப்பான், போராளி இருப்பான்.....எல்லாத்திற்க்கும் மேல் அரசியல்வாதி இருப்பான்..

ஒருத்தன் முட்டாள்தனமாக சிந்தித்தால் இன்னோருவன் கிறுக்குத்தனமாக சிந்திப்பான்