காயங்களிலிருந்து ஒளிரும் புன்னகை -


ஸ்ரீலங்கா இனவாத அரசு தமிழ்த் தேசத்தின் இருப்பைச் சிதைத்து, தமிழ்ப் போராளிகளை நிராயுதபாணியாக்கி, தனது ஆயுத பலம் கொண்டு அடக்கிவிடக் கடுமையாகப் பிரயத்தனப்பட்ட சூழலில் தமிழ், சிங்களப் பேரினவாதத்தின் கால்களுக்குக் கீழே துப்பாக்கி முனையில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட இனமான முஸ்லிம்களின் வலிகளும் அலறல்களும் 1980களின் பிற்பகுதியில் நவீனக் கவிதையாகப் பரிணமித்தது. வதையுண்ட மனித வாழ்வின் அவலங்களைப் பாடும் இக்கவிதைகள் வாழ்வுக்கும் இறப்புக்குமிடையிலான மையத்திலிருந்து எழுகின்றன. துயருற்று அலையும் மனித ஆன்மாக்களின் குரலாக ஒலிக்கும் இவை கொடுமைகள் நிறைந்த அவலப்பரப்பின் அனுபவங்களையும் அவற்றை எதிர்கொண்ட முறைகளையும் எடுத்துரைக்கின்றன. மீள முடியாத புதைகுழிக்குள் சிக்குண்டு பேரிடருக்குள் அகப்பட்டுத் துக்கித்து வாழும் மக்களின் அனுபவச் சூட்டில் மிளிரும் இக்கவிதைகள் ஈழத்தின் பொய்மையான மாயத்திரைகளைக் கிழிக்கின்றன. காலங்காலமாக மனிதத் தியாகங்களினூடாகக் கட்டி எழுப்பப்பட்ட புனித பிம்பங்களைத் தகர்க்கின்றன. சிதைவின் அழிபாட்டிலிருந்து எழும் இக்குரல் காலத்தின் பக்கங்களில் மனித வாழ்வின் அபத்தங்களை எழுதிச் செல்கிறது.

1983இல் தென்னிலங்கையில் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டு, அவர்கள் உடைமைகள் சூறையாடப்பட்டுச் சொந்த மண்ணிலேயே இருப்பின் வேர்கள் பிடுங்கி எறியப்பட்ட நிலையில், இனப்பற்று, இனவிடுதலையின் அடையாளமாகவும் ஒடுக்குமுறைக்கெதிரான குரலாகவும் எழுந்த தொகுப்பே மரணத்துள் வாழ்வோம். “மொழி உணர்வுக்கு அப்பாலே தமிழ்ச் சமூகத்தின் மொத்தமான விடுதலை உணர்வைப் பிரதிபலிக்கும் கவிதைகளாக மரணத்துள் வாழ்வோம் என்னும் தொகுதி அமைந்திருந்தது” என்னும் றமீஸ் அப்துல்லாஹ்வின் கூற்றை மொழி, இன உணர்வுக்கப்பால் வதையுண்ட சமூகத்தைப் புரிந்துணர்வுடன் அணுகிய சகமனிதனின் கூற்றாகவே நாம் காணலாம்.

முப்பத்தொருவரின் எண்பத்திரண்டு படைப்புகளை உள்ளடக்கி வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் தொகுப்பில் இடம்பெறும் எம். ஏ. நுஃமானின் நேற்றைய மாலையும் இன்றைய காலையும், துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும், வரலாற்றுக்குருடர், புத்தரின் படுகொலை என்னும் நான்கு கவிதைகளும் தமிழருக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன் முறைகளைப் பாடுகின்றன. தமிழரின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நன்கறிந்துகொண்ட உண்மை இஸ்லாமியனின் தார்மீகக் குரலாய் இவை ஒலிக்கின்றன. இலங்கைத் தமிழரின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் உரிமையோடு உயிர்வாழும் உரிமையும் பௌத்த, சிங்கள இனவாத அரசால் மறுக்கப்பட்ட நிலையில் பகிரங்கப்படுத்தும் முயற்சியாகவே மரணத்துள் வாழ்வோம் கவிதைகள் அமைகின்றன.

இன்றையச் சூழலில் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்களாகவும் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் பங்காளிகளாகவும் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இருந்துள்ளனர். இஸ்லாமியர்களின் படைப்பிலக்கியங்களும் தமிழ் உறவுகளுடன்; உணர்வுபூர்வமாக ஆற்றிய இன்னோரன்ன பிற செயல்பாடுகளும் எடுத்துரைக்கின்றன. இதற்கப்பால் பௌத்த சிங்கள இனவாத அரசு சிறுபான்மை இனமான முஸ்லிம்கள்மீது கொண்டிருந்த விரோதப் போக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பலரையும் இணையச் செய்தது. குறிப்பாகக் கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரியப் பிரதேசங்களை அரசு பறிப்பது, அவற்றில் திட்டமிட்ட முறையில் சிங்களக் குடியேற்றங்களை உண்டாக்குவது, கிழக்கு முஸ்லிம்களின் சனச்செறிவைக் குறைப்பது, முஸ்லிம்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவது முதலான காரணங்களால் தமிழாயுதக் குழுக்களுடன் இணைந்து போராட வேண்டிய சூழ்நிலைக்குக் குறிப்பிட்டளவு முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் தள்ளப்பட்டனர். ஆயினும் ஒட்டுமொத்த வட கிழக்கு முஸ்லிம்களும் தமிழ் மக்களும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து தமிழ் ஈழ விடுதலைக்குப் போராடக்கூடிய நிலைமை காணப்படவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் போராட்டக் குழுமத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டவராகவே காணப்பட்டனர். தமிழ் மக்களின் வலியுண்ட வாழ்வைப் புரிந்துகொண்ட வடகிழக்கு முஸ்லிம்கள் தம்மாலான தார்மீக உதவிகளைச் செய்தனர். நிதி, பொருளாதார உதவிக்கப்பால் தமிழ்ப் போராளிகள் பலரை அரச பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து பாதுகாத்தவராகவும் இவர்களே விளங்கினர். ஆயினும் தமிழ்த் தலைமைகளும் வெகுசன முற்போக்கு அமைப்புகளும் போராட்டக் குழுக்களும் முஸ்லிம்களின் ஆதரவையும் அவர்களின் இதயசுத்தியுடனான நடத்தைசார் மாற்றங்களையும் உணர்ந்துகொள்ளத் தவறின. மறுபுறத்தில் தெற்கு முஸ்லிம் தலைமைகள் சிங்களத் தலைமைகளுடன் இணைந்து தமிழ் முஸ்லிம் விரோதப் போக்கை வளர்த்ததுடன் தமிழ்ச் சமூக நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் முயற்சிகளிலும் இறங்கின.

தம் சொந்த நலனை உயர்த்திக்கொள்வதற்காகச் சிங்களத் தலைமைகளுக்கு விசுவாசமாக இருந்த தெற்கு முஸ்லிம் தலைமைகள் தம் சமூகத்தின் நலன்கள் உரிமைகளைக்கூடக் கருத்தில் கொள்ளவில்லை. திட்டமிட்ட முறையில் சிங்களப் பேரினவாத அரசு முஸ்லிம்கள்மீது இன ஒடுக்குமுறையைப் பிரயோகித்த சந்தர்ப்பங்களில்கூடத் தெற்கு முஸ்லிம் தலைமைகள் வெகுசனரீதியாக மக்களைத் திரட்டித் தம் எதிர்ப்பை வெளியிடவில்லை. கிழக்கு முஸ்லிம்களுடன் சுமுகமான உறவை வைத்திராத தெற்கு முஸ்லிம் தலைமைகளில் நம்பிக்கையற்ற கிழக்கு முஸ்லிம்கள் தமக்கெனச் சுயமான அரசியல் தலைமையை உருவாக்கி அதன் கீழ் ஒன்றிணைந்தனர். “கிழக்கு முஸ்லிம்களின் சனத்தொகையும் அடர்த்தியான பரம்பலும் சமயச்சார்புக்குரிய பொருளாதார முறையும் இணைவுமே முஸ்லிம்களுக்கெனத் தனியான அரசியல் இயக்கத்தைத் தோற்றுவித்தது” என்னும் விக்டரின் கூற்று இதைத் தெளிவுபடுத்தி நிற்கிறது. (முஸ்லிம் தேசமும் எதிர்காலமும், பக். 24) இக்கால கட்டத்தில் தமிழ், முஸ்லிம் இன ஐக்கியத்தைக் குலைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இனச்சிதைவு நடவடிக்கைகள் முஸ்லிம் அரசியல்வாதிகளைத் தமிழ்க்கட்சியில் இணைந்து தேர்தல்களில் போட்டியிடவைத்தன. இவ்வகையில் போட்டியிட்டுத் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தியவராகக் காரியப்பர், எம். எம். முஸ்தபா, எம். சி. அஹமட், எம். ஈ. எச். முகம்மதலி முதலானோரைக் கூறலாம். இக்காலகட்டத்தில் தமிழ்த் தலைமைகள் முஸ்லிம், தமிழ் இனங்களுக்கிடையே செல்வாக்குமிக்க முஸ்லிம் ஒருவரைக் கட்சியில் போட்டியிடவைப்பதன் மூலம் ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் கவனம் செலுத்தியனவேயன்றி முஸ்லிம் மக்களின் சமூகநலனில் அக்கறை காட்டவில்லை என்பது வெளிப்படை.

இதன் விளைவாகத் தமிழ்க் கட்சியிலிருந்து வெற்றிபெற்ற அரசியல்வாதிகள் அதிலிருந்து விலகி ஆட்சியிலிருந்த சிங்களக் கட்சிகளுடன் தம்மை இணைத்துக்கொண்டனர். இந்நிலையைக் கருத்தில் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களைத் தொப்பிப் பிரட்டிகளாகவும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாகவும் தமிழ் மக்களிடம் அடையாளப்படுத்தினர். இக்காலப்பகுதியில் முளைவிட்ட தமிழ் விடுதலை அமைப்புகள் முஸ்லிம்கள்மீது அதிகாரரீதியான உறவுமுறையைக் கையாண்டபோது தமிழர்கள்மீதான வெறுப்புணர்ச்சி முஸ்லிம்களிடத்தில் வலுத்தது. இத்தருணத்தில் தமிழ் அமைப்புகள் கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மீது பணம் பறித்தல், கப்பம் அறவிடல், முஸ்லிம் பகுதியிலுள்ள தனியார், அரச நிறுவனங்களில் பலாத்காரமான முறையில் பணத்தை அபகரித்தல், சமூகவிரோதிகள், அரச உளவாளிகள் என்னும் பெயரில் முஸ்லிம் இளைஞர்கள்மீது வன்முறைகளைப் பிரயோகித்தல் முதலான செயற்பாடுகளில் ஈடுபட்டன. இதன் நிமித்தம் முஸ்லிம் இளைஞர்களும் தமிழ் மக்கள்மீது வன்முறைகளைப் பிரயோகித்தனர்.

இவ்வகையில் தமிழ் முஸ்லிம் இன உறவுகளிடையே ஏற்பட்ட விரிசல்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கையரசு அதன் உளவுத் துறையான என். ஐ. பி யையும் “ஊர்க்காவற்படை” என்னும் பெயரில் சேர்க்கப்பட்ட ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களையும் தமிழருக்கெதிராக ஏவிவிட்டது. அத்துடன் 1985களில் தமிழீழ விடுதலை இயக்கங்களில் இணைந்திருந்த முன்னாள் போராளிகளையும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களையும் இணைத்து “ஜிகாத்” என்னும் அமைப்பையும் உருவாக்கியது. இவ்வமைப்பு முழுக்க முழுக்க அரசக் கூலிப்படைகளாய் இயங்கியமையால் தமிழருக்கெதிரான வன்முறைகளை அதியுச்சமாகப் பிரயோகித்தது. தமிழ் முஸ்லிம் விரோதப் போக்கை எண்ணெய் ஊற்றி வளர்த்த ஜிகாத் தமிழ் முஸ்லிம்களிடையே நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க முயன்ற மூதூர்மஜித், காத்தான்குடி அகமட்லெவ்வை போன்றோரைச் சுட்டுப் படுகொலைசெய்தது. 1985இல் ஈழத்தில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை முன்னின்று நடாத்திய இவ்வமைப்பு தமிழ் முஸ்லிம்களிடையே ஏற்பட்ட பிணக்குகள் பலவற்றுக்கும் காரணமாக இருந்தது.

தமிழ் முஸ்லிம் விரோதநிலை அதிவேகமாக வளர்ந்த நிலையில் அந்நிகழ்வின் பிரதிபலிப்பாக ஏராளமான எதிர்ப்பிலக்கியங்கள் தோற்றம் பெற்றன. சமுதாய மாற்றத்திற்கான எழுச்சி இல்லாத சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் தன்னம்பிக்கையுடன் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் சமூக அடக்குமுறைகளை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தவும் எதிர்ப்பினூடாகச் சமுதாய எழுச்சியையும் கிளர்ச்சியைத் தூண்டும் வகையிலும் உருவாக்கப்பட்ட எதிர்ப்பிலக்கியங்கள் வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களைக் கண்ணீராலும் குருதியாலும் எழுதிச் செல்பவை. நசிவுண்டு நலிவுற்ற மக்களின் எதிர்ப்பின் குரலாக வெளிப்படும் இவ்விலக்கியங்கள் சமூக அவலங்களைச் சித்தரிப்பவை. குறிப்பாக எண்பதுகளுக்குப் பின் தோற்றம் பெற்ற இன ஒடுக்குமுறைக்கெதிரான இலக்கியங்களுக்குள் உணர்வை, தம் எதிர்ப்பை வெளிப்படுத்தப் பலராலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட இலக்கிய வடிவம் கவிதையே. சிங்கள அரசாங்கத்தின் மேலாதிக்க ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்க் கவிதைகள் எழுந்ததுபோல் தமிழ், சிங்கள ஆயுதக் குழுக்களின் மேலாதிக்கத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து முஸ்லிம் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் எழுந்தன. சொந்த நாட்டுக்குள்ளேயே ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, அகதியாக்கப்பட்டு எதிர்கால வாழ்வு கேள்விக்குள்ளான சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோரின் துன்பியல் குரலே எண்பதுகளுக்குப் பின்னர் தோன்றிய ஈழத்து முஸ்லிம் கவிதைகள்.

முஸ்லிம்களின் மீதான தமிழர்களின் அடக்குமுறையை வெளிப்படுத்தி, கவிதைகள் வெளிவருவதற்கு முன்னரே சிங்களவரின் அடக்குமுறையை வெளிப்படுத்தும் கவிதைகள் முஸ்லிம்கள் பலரால் தமிழில் பாடப்பட்டுள்ளன. சிங்கள அரசால் அம்பாறை மாவட்டத்திலுள்ள “தீகவாவி” புனித நகராகப் பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம் விவசாயிகளின் ஏராளமான காணிகள் பறிபோயின. இப்பின்னணியில் எழுந்த கவிதையே எம். எச். எம். அஸ்ரஃபின் மணியோசை. பெரியவிசாரையில் அமைந்திருக்கும் பௌத்த விகாரைக்கு உடல் உழைப்பை நல்கிய முஸ்லிம்களை அசூசிகளாகக் கருதி அவர்கள் நிலங்கள் பறிக்கப்பட்ட நிலையில் துன்புற்ற மனித மனத்தின் நிழற்பிரதியாக இக்கவிதை விளங்குகிறது.

மனித உயிர்கள் பலிப்பொருட்களாய் ஆக்கப்பட்ட நிலையில் இனக் குரோதங்களின் வன்மையில் ஊறித் திளைத்துக் காரெனப்படியும் நிசப்தமற்றுக் குருதி வடியும் இரவுகளை எம். எச். எம். அஸ்ரஃபின் பேய்களும் வெளிவரா இரவுகள், ஆத்மாவின் கவிதைகள் காணால்போன இரவு, சத்தியபாலனின் கூத்து முதலானவை சித்தரிக்கின்றன.

“பேய்களும் பிசாசுகளும்கூட/ இந்த இரவுகளில் வெளிவருவதில்லை / மந்திரவாதிகளுக்கும் வேலையில்லை / அத்தனை பயம் / ஆறுமணியுடன் / ஊரே அடங்கிவிடுகிறது.”
(நான் என்னும் நீ, பக். 154)

என அச்சுறுத்தும் இருளைக் காட்சிப்படுத்தும் அஸ்ரஃப் அவ்விருளில் நடமாடுபவர்களால் ஏற்படும் விளைவுகளை அச்சம் தொனிக்க எடுத்துரைக்கிறார். வெளிச்சமே இல்லாத ஈர இருளில் பிரயத்தனப்பட்டு நடக்கும் நாளாந்த வாழ்வியல் “எப்போது விடியப் போகிறது. இவ்வறையை விட்டும் வெளிவருவதும் எப்படியோ” (நான் எனும் நீ பக். 154) என்னும் வரிகளில் அவை துல்லியமாய் வெளிப்படுகின்றன.

வன்முறைகளையும் கொடிய யுத்தத்துக்குட்பட்டு வாழ்வாதாரமின்றித் தவித்த ஈழ மக்களின் வாழ்வியலையும் கவிதையில் வெளிக்கொணர்ந்தவர்களில் முக்கியமானவர் எம். ஏ. நுஃமான். இவரின் அவர்களும் நீயும் என்னும் கவிதை இராணுவத்தாலும் போராளிகளாலும் கொடுமைக்குள்ளாகிச் சொல்லவொன்னாத் துயரை அனுபவித்த மக்களின் வாழ்வைப் பேசுகிறது. விசாரணை என்னும் பெயரில் அழைத்துச்செல்லப்பட்டோர் காணாமல்போன கதையைக் கூறும் இக்கவிதை.

“ஜீப்வண்டியில் வந்தனர்/உன் வீட்டுக்கதவைத் தட்டினர்/ விசாரணைக்காக/ உன்னை இழுத்துச் சென்றனர்/ உன் தாய் அழுதாள்/கதறினாள் மன்றாடினாள் / அவர்களின் முகாமுக்குச் சென்று /விசாரித்தபோது/இல்லை/ நாங்கள் கூட்டி வரவில்லை/என்று மறுத்தார்கள்/. . ./ இப்போது உன்முறை/நீ காட்டுக்குள் இருந்து/கால் / நடையாய் வந்தாய்/என் வீட்டுக்கதவைத் தட்டி/ விசாரணைக்காக என்னை/இழுத்துச் சென்றாய்/. . ./உன் முகாமுக்கு வந்து/விசாரித்தபோது/நாங்கள்கூட்டி வரவில்லை/என்று மறுத்தாய்/ என் தசை பிய்ந்து/எலும்புகள் நொறுங்கி/ என் இரத்தம் மண்ணில் கலந்தது.”

தீவிரவாதப் பொறிக்குள் அகப்பட்டு மோசமான முறையில் நசுக்கப்பட்ட அந்தராத்மாவின் மனோ நிலையை இக்கவிதை நுண்ணுணர்வுத் தளத்தினூடாகக் காட்சிப்படுத்துகிறது.
1985களின் கலவரப் பின்னணியில் முஸ்லிம் சகோதரி கடத்தப்பட்ட போர்க்காலத் துயரை நெஞ்சுருகச் சொல்லும் பிறிதொரு கவிதை ஸெய்த்தூன்.

“துப்பாக்கிகள் உரத்துப் பேசிய / ஓர் அந்திக் கருக்கலில் / அவளை நாங்கள் இழந்திருந்தோம்”
(காணாமல் போனவர்கள், பக். 45)

இக்கவிதையில் ஸெய்தூனின் இழப்பைப் பதிவுசெய்யும் அஸ்ரஃப் சிஹாப்தீன் அவள் கடத்திச் செல்லப்பட்டதை “நாட்படாத ஒரு கோழிக்குஞ்சைப் பருந்து தூக்கியதுபோல் யாருக்கும் தெரியாமல் அவர்கள் உன்னைத் தூக்கிச் சென்றார்கள்” என்னும் உவமைக் கூடாக எடுத்துரைக்கிறார். ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் தமிழ்ப் பேரினவாதத்துக்கு எதிராக எழுந்த முதல் கவிதையாக இது பதிவுசெய்யப்படுகிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
இத்தொகுப்பில் இடம்பெறும் நெருடும் நினைவுகள் பிராந்தியக் கட்டமைவின் சிதைவைத் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலுக்கூடாக வெளிப்படுத்துகிறது. இனவேற்றுமையின்றி ஆலெனத்தளைத்தூன்றி ஒன்றற வாழ்ந்த வாழ்வு நிலைகுலைந்து போனதைப் பாடுகிறது. மனவனத்தில் நந்தவனம் தொகுப்பில் இடம்பெறும் கபீர் முகமது நிஜாலின் சுதந்திரம், எம்.நவாஸ் சௌபியின் பூர்வீகம் புதைந்த போரின் கைகள் (பேராயுதமும் கவிதையிடம் சரணடைதலும் பக். 45 - 48) முதலான கவிதைகள் இத்தளத்திலேயே இயங்குகின்றன.

பூர்வீகம் புதைந்த போரின் கைகள் கவிதை வாழ்தலுக்கான இருப்புகள் துண்டிக்கப்பட்டு ஆயுதமுனையில் வலுக்கட்டாயமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இக்கட்டான தருணத்தில் தமிழ் உறவொன்றை நினைத்தழும் ஈரமுள்ள முஸ்லிமின் குரலாக ஒலிக்கிறது.

“உம்மாவும் ராத்தாக்களும் / பாவாடைக் கரையினுள் கட்டியிருந்த / பணத்தினைப் பிடுங்கியும்/ வாப்பாவின் கச்சைக்குள் / மறைத்து வைத்த நகைகளை / கோரி அள்ளியும் / உடுத்த புடவைகள் போக / புதிய புடவைகளைப் பறித்தும் / அவர்கள் எங்களை வெறுமையோடு / வழியனுப்பியபோதும் / பக்கத்து வீட்டுப் பவளம் அம்மாவை / பிரிந்த கவலையிலேயே / நாங்கள் சென்றோம்.”

உணர்வின் மையத்திலிருந்து எழும் இக்கவிதை உடைமைகள் துண்டாடப்பட்ட நிலையில் உறவின் மீது கொண்ட அன்பின் நீட்சியை ஈரவரிகளால் எழுதிச் செல்கிறது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் 1990கள் கறைபடிந்த காலப்பகுதி. தமிழ்ப் போராளி களால் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் அதிகளவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலப்பகுதி இது. இனவாத உணர்வுகளால் வெறியூட்டப் பெற்ற தமிழாயுதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கெதிரான ஒடுக்குமுறையை ஆயுதமுனையில் அரங்கேற்றிய குரூரகாலப் பகுதியாக 1990கள் காணப்படுகின்றன. 1990, 12 யூலை அன்று குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம்களும் இதேயாண்டு ஓகஸ்ட் 3இல் காத்தான் குடிப் பள்ளிவாசலினுள் 103 முஸ்லிம்களும் 1990 ஓகஸ்ட் 11இல் ஏறாவூரை அண்டிய முஸ்லிம் கிராமத்தில் 116 முஸ்லிம்களும் 1992 ஏப்ரல் 29இல் அழிஞ்சிப் பொத்தானைக் கிராமத்தில் 69 முஸ்லிம்களும் 1992 ஜீலை 15இல் கிரான் குளத்தில் பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டு 22 முஸ்லிம்களும் படுகொலை செய்யப்பட்டமை ஈழத்தில் இனமேலாதிக்கத்தின் அதி உச்ச பாசிஸ நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டன.

ஈழப் போராட்ட வரலாறு வெட்கித் தலைகுனியவைத்த சம்பவங்களில் ஒன்றாகக் காத்தான்குடிப் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட படுகொலையைக் கூறலாம். ஹீஸைனியா தைக்காவிலும் மீராஜும்மா பள்ளிவாசல்களிலும் இஸாத்தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்களைப் படுகொலை செய்தமை ஈழப்போரியல் வரலாற்றின் படுபாதகச் செயலாகக் கருதப்படுகிறது. இப்படுகொலைகளை முன்னிறுத்தி வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் அதிவிசேடக் கவனத்தைப் பெற்ற தொகுப்பாகச் சிவந்த பள்ளிகள் குறிப்பிடப்படுகிறது. இது தவிரக் காத்தான்குடியிலிருந்து வெளிவந்த இரத்தராத்ரி, சல்லடைத்தேசம் முதலான நூல்களிலும் மனிதாபிமானமற்ற இவ்வீனச் செயல் குருதி வெடில்களுடன் உள்ளத்தை உருக்கும் வகையில் பதிவுசெய்யப்படுகிறது.

ஈழத்தின் முதலாம் பள்ளிவாசல் படுகொலை 1976 ஒக்டோபர் 2 புத்தளத்தில் நிகழ்த்தப்பட்டது. இக்காலப்பகுதியில் புத்தளத்தில் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தால் முஸ்லிம் பகுதிகள் அனைத்தும் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாயின. அச்சந்தர்ப்பத்தில் புத்தளம் பள்ளிவாசல் தொழுகையில் இருந்த முஸ்லிம் மக்கள் மீது பொலிஸார் சுட்டதில் முஸ்லிம்கள் அறுவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 1985 ஏப்ரல் 7இல் மன்னாரிலுள்ள அளவக்கைப் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட படுகொலைச் சம்பவமானது தீராத பழியைத் தமிழ் விடுதலை அமைப்பின் மேல் போட்டுச்சென்றது. இவற்றில் அதியுச்சத் தாக்கத்தையும் மீளாத வலியையும் ஏற்படுத்தியவை காத்தான்குடி பள்ளிவாசல்கள் படுகொலைகள். மனிதநேயமற்ற கொடுங்கோலர்களால் நிகழ்த்தப்பட்ட இப்படுகொலையைச் சேரனின் காத்தான்குடி கவிதை வன்மையாகக் கண்டிக்கிறது. ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டுப் பலிகொள்ளப்பட்ட உருக்குலைந்த சடலங்களின் மீதெழும் இக்குரல் கொலையாளிகளையும் தாண்டிக் கொலைசெய்யப்பட்ட சமூகத்தையும் சாடுகிறது.

“பிரார்த்தனைக் கூடத்தில் / சிதறுண்டிருக்கும் உடல்களின் / மேல் அவற்றிடை / ஒரு இராட்சதக் கொலைக்கரம் / உருக்கிய குருதிச் சேற்றில் / அந்தகாரத்தில் ஒலித்துக்/ கொண்டிருக்கும் அலறலில்/ அசைவிழக்கிறது காலம் / தமிழன் என்னும் / என் அடையாளக் கூறின் மேல் / வெட்கம் / இருள் விரவிப்படிகிறது.”

தாய் தடுத்தும் பள்ளிவாசலுக்குத் தொழச் சென்ற மகன் சூடுபட்டு இறந்ததைக் கண்டு தாய் எழுப்பும் மரண ஓலமும் வலியின் பதிவுமே பஹ்மியா ஷரீப்பின் காத்திருமகனே. பள்ளிவாசலுக்குச் சென்று சடலத்தைத் தேடும் தாயின் மனோநிலை உள்ளம் நெகிழும் வண்ணம் இக்கவிதையில் பதிவுசெய்யப்படுகிறது.

“மலைபோலக் குவிந்திருந்த / மையித்துக் கும்பலுக்குள் - உன் / மஞ்சள்நிறச் சட்டையைத்தான் / மடைச்சி நான் தேடி நின்றேன் / இரத்தக் கடலுக்குள் / உருமாறிப்போயிருந்தாய் / கண்ணோடு வாயும் திறந்திருக்க / உயிர் மட்டும் துறந்திருந்தாய்.”
(சல்லடைத்தேசம், பக். 54)

ஒப்பாரிப் பாடலமைப்பில் எழுதப்பட்ட இக் கவிதை மகனை இழந்து தாய் படும் துயரை அப்பழுக்கின்றிக் காட்சிப்படுத்துகிறது. இப்பாடலில் வாய்மொழிப் பாங்கையும் எழுத்துப் பாங்கையும் இணைத்துச்செல்லும் (semioral) மரபு கைக்கொள்ளப்படுகிறது.

என். ஆத்மாவின் செங்கோல் ஸ்ரீ சிவப்பூ கோல், 13 ஆண்டுக் கத்தம் முதலான கவிதைகளில் பள்ளிவாசல் படுகொலைகள் நிதர்சனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அரபுச் சொற்களை உள்வாங்கிப் பிதிர்கொடுக்கும் நிகழ்வுகளுக்கூடாக விரியும் 13 ஆண்டுக்கத்தம் 1990களில் துப்பாக்கிகளால் எழுதப்பட்ட குருதி படிந்த கோர இரவுகளை மீட்டிப் பார்க்கிறது.

“வெடிப்பிழந்த முதுகின் / முள்ளந்தண்டால் கிழிந்த / சகோதரனும் சேர்ந்து / நூற்றிச்சொச்சம் / சுஹதாக்கள் மீராஜீம்மாப்பள்ளி / ஹீஸைனியாத் தைக்கா / கொலைக்களங்கள் இரண்டு// கண்ணீரால் கழுவி / கபனிட்ட துணியில் / செந்நீர் கசியத்தூக்கிக் கொடுத்து / பதின்மூன்று ஆண்டுகள்.”
(சல்லடைத்தேசம், பக். 36)

சமூகப் பண்பாட்டு வாழ்வியலிலிருந்து பிறக்கும் இக்கவிதை பதின்மூன்று ஆண்டுக் கால வெந்துயரின் கொடுமையை எடுத்துரைக்கிறது. ஈழமெங்கும் விதைக்கப்பட்ட மனிதப் படுகொலைகளின் ரணங்களைக் குருதி சொட்டச் சொட்ட வெளிப்படுத்தும் செங்கோல் ஸ்ரீ சிவப்பூ கோல் கவிதை கொலைகளை நிகழ்த்தும் வேட்டை மிருகங்களின் முகத்திரைகளைக் கிழிக்கிறது.

“அரசன் எழுந்தான் / அப்பாவி தொடை, கணைக்காலென்புகளால் / ஆசனத்திலிருந்து / வலது கையில் / எழுவன் குளத்துச் சிங்கள மக்களின் /புத்தம் புதிய குருதி நிரம்பிய கிண்ணம் / ஒரு மிடறு குருதியருந்தியபடி / திறந்துகிடந்த அடுத்த அறையை எட்டிப்பார்த்தான் / அறைச்சுவரிலே / ஆணியடித்துக் கொழுவப்பட்ட 103 தொப்பிகள் / காத்தான்குடிப் பள்ளிவாசலில் சுட்டுக்குதறப்பட்டவர்களின் தலைகளிலிருந்து / கழற்றி எடுத்து வரப்பட்ட மாவீரச்சின்னங்களவை”
(மிக அதிகாலை நீல இருள், பக். 50)

வன்மைமிக்க உருவகக் காண்பியான படிமமொழிக் கூடாக விரியும் ஆத்மாவின் கவிதை மொழி வீரியமிக்கது. உணர்ச்சியும் உண்மையும் மிக்க இம்மொழி அடர்த்தியும் ஆழ்பொருண்மையும் கொண்டது. வேட்டையாடப்பட்ட வாழ்விழந்த மக்களின் துன்பியல் கதையைப் பேசும் இக்கவிதை அம்பிளாந்துறைச் சந்தியில் அகாலமரணமடைந்த 157 ஹாஜிமார்களையும் நினைவுகூருகிறது. உருவகப் படிமங்களுக்கூடாகக் கதைக் கூற்றுபோல் இயங்கும் ஆத்மாவின் இக்கவிதை நிகழ்வின் நிஜங்களுக்கூடாகப் புன்மையின் ரணங்களை எடுத்துரைக்கிறது.

காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகளின் அபத்தங்களைப் பேசும் கவிதைகளாக மௌலவி எம். எம். எம். புஹாரியின் கண்ணீரில் குளித்த காத்தான்குடி, றஹுமின் சிகப்பு இரவு, சாந்தி முகைதீனின் சுஜீதிலே சாய்ந்த ஷீஹாதாக்கள், வாழைச்சேனை அமரின் நீ வரும் காலைப்பொழுது, இப்னுகையாமின் 206 மீஸான் கட்டைகளுக்கும் ஒரு கைகுலுக்கலுக்குமிடையில், மதியன்பனின் இரத்த ராத்ரி, மௌலவி வி.மி.வி. ஸீபைரின் எங்கே அந்த டாக்டர் முதலான பலவற்றைக் கூறலாம். இனச்சுத்திகரிப்பின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட இப்படுகொலைகள் ஓந்தாச்சிமடம், ஒலுவில், பாலமுனை, ஏறாவூர் எனத் தொடர்ந்தன.
பள்ளிவாசல் படுகொலையை அடுத்து 1990 ஓகஸ்ட் 12இல் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரும் படுகொலைச் சம்பவம், ஏறாவூரில் உறங்கு நிலையிலிருந்த 126 முஸ்லிம்கள்மீது நிகழ்த்தப்பட்டது. சுட்டும் வெட்டியும் நரபலி கொடுக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை மதியன்பனின் இரத்த ராத்ரி கவிதை உணர்வுபூர்வமாய்ப் பதிவுசெய்கிறது.

“ஏறாவூரிலும்/கொலைகாரக்/கும்பலொன்று/சின்னவர் பெரியவர்/ஆண்கள் பெண்கள்/பேதமில்லாமல் / சுட்டும் வெட்டியும்/தங்கள்/நரவேட்டையை/ நடத்தி முடித்தது.”

நிகழ்வின் தகவல் குறிகாட்டியாய் இயங்கும் இக்கவிதை ஏறாவூரில் நிகழ்ந்த படுகோரச் சம்பவம் ஒன்றை வெந்துயரின் நிழல் படிமமாய் எடுத்துரைக்கிறது. ஏறாவூர் படுகொலை நிகழ்த்தப்பட்ட சூழலில் கர்ப்பிணித் தாயை வெட்டிக்கொன்ற வேட்டை மிருகங்கள் அவரது வயிற்றைக் கீறிக் குறைமாதச் சிசுவை வெளியே எடுத்து அம்மிக்கல்லில் வைத்து நசுக்கிக் கொன்றனர். இக்கொடிய செயல்

“என்ன செய்தன/இந்த/ஈரக்குழந்தைகள்..?/கர்ப்பிணியின் வயிற்றை/கத்திமுனையால்/ குத்திக் கிழித்து/குதறித் துப்பின”
(இரத்தராத்ரி, பக். 24)

இக்காலப்பகுதியில் மட்டும் குறிப்பாக 1990 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 13ஆம் திகதிக்குள் 265 முஸ்லிம்கள் கிழக்கில் படுகொலைசெய்யப்பட்டதாக விக்சன்ட் பெரேராவின் பாராளுமன்ற அறிக்கை கூறுகிறது. (நவமணி 11.08.2002)
சோலைக்கிளியின் மலம் கழிக்கும் பேய்க்காற்று 1992 ஜீலை 15இல் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்டு 22 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை எடுத்து விளக்குகிறது. இக்கவிதையும் பிறிதொரு முஸ்லிம் கர்ப்பிணிப்பெண் குரூரமான முறையில் சிதைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதை எடுத்துரைக்கிறது.

“வாகனத்தை மறித்தனர்/இறக்கினர் இழுத்தனர்/இனம் இனமாகப் பிரித்தனர்/ஓர் இனம்போக/ஓர் இனத்தை வெட்டினர்/குத்தினர் சுட்டனர்/ பிள்ளைத் தாய்ச்சியை வெட்டிச் சிசுவை/ எடுத்துத் தெருவில் நசித்தனர்/என்றெல்லாம் / இன்றைய காற்று /என் மனதுக்குள் கழித்த / மலத்தில்/மனிதத்தின் நாற்றம் தாங்காமல்/ சூரியன் ஒருதரம் ஆடி நின்றது.”
(சல்லடைத் தேசம், பக். 23)

1992 ஏப்ரல் 29இல் பொலனறுவை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான அழிஞ்சிப்பொத்தானையில் 69 முஸ்லிம்கள் மிலேச்சத்தனமான முறையில் படுகொலைசெய்யப்பட்டதை அஷ்ரஃப் சிஹாப்தீனின் குரும்பட்டி மிகச் சிறப்பாக விளித்து நிற்கிறது. இனவெறியோடும் இரக்கமற்ற குரூரங்களுடனும் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில் பிஞ்சுப்பாலகன் ஒருவன் தென்னைமரத்தில் வீசி அறைந்து கொல்லப்பட்டான். இக்கொடுமையின் ஈனம் அவலத்தின் பிரதிமையாய் முன்னிறுத்தப்படுகிறது.

“அழிஞ்சிப்பொத்தானைக்குள் / வெறிநாயாய்ப் புகுந்து வேட்டையாடுகையில் / பாலகரைத் தூக்கித் தென்னையில் அறைகையிலே / உதிர்ந்து விழுந்தது காண் / அந்தக்குறும்பட்டி.”
(மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள், பக். 20)

இங்குக் குரும்பட்டி என்னும் ஆழ்பொருண் குறியீட்டுக்கூடாக உள்ளம் நெகிழும் வண்ணம் சிறுவனின் இழப்பை மிகத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டும் அஷ்ரஃப் சிஹாப்தீனின் சிதைவுக்குள்ளான மானிடநேயத்தைத் துன்பியலின் அனுபவமாய்ப் பதிவுசெய்கிறார்.
நீதியின்மையோடும் குருதியோடும் அத்துமீறல்களோடும் கவியும் மரணவெளி முஸ்லிம் கவிதையெங்கும் விரவி நிற்கிறது. கந்தக நெடியையும் சாவின் துயரத்தையும் மரண ஓலத்தையும் படைப்பாக்கப் பொருளாகக் கொண்டு எழுந்த ஈழத்து முஸ்லிம் கவிதைகள் துயரின் பதிவாகவும் வரலாற்றின் கறைபடிந்த பக்கமாகவும் தன்னை முன்மொழிகிறது.
கொடிய யுத்தத்தால் தந்தை, தாய், கணவன், நண்பன், பிள்ளையை இழந்த ஜீவான்மாக்களின் வேதனைக்குரல் ஈழத்து முஸ்லிம் கவிதைகளின் அடிநாதமாய் ஒலிக்கிறது. ஆரோக்கிய வாழ்வு சிதைக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வாழ்வியல் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள சூழலில் காணாமல்போன வாப்பாவைக் கேட்டு அடம் பிடித்தழும் மகனின் நிதர்சன வாழ்வைக் காட்சிப்படுத்துகிறது ஓட்டமாவடி அறபாத்தின் தொலைதல்.

“இரு பிணையல் எருதுடன்/வண்டிலோடு போனவாப்பா/ விறகெடுத்து வருவாரென-நீ/வாசலில் நின்றழுதாய்/ காடேகிய குருவிகள் திரும்பின/நம் மாமர உச்சியில்/ குடியிருக்கும் கொக்கும் திரும்பியது/பொந்திலிருந்து / மரங்கொத்தியும் திரும்பியது/உன் வாப்பா மட்டும் /திரும்பவில்லை.”
(வேட்டைக்குப்பின், பக். 14)

ஓட்டமாவடி அறபாத்தின் அஞ்சலி, இன்னொரு மாலைப்பொழுதிற்காய் ஆகிய கவிதைகளில் மரணமும் மரணம் எதிரொலிக்கும் விளைவும் மனைவி, நண்பன் எனும் உயிரிகளின் மன அவஸ்தைகளுக்கூடாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. ஏ. ஜி. எம். ஸதக்காவின் டிசம்பர் 26 என்னும் கவிதையும் இப்பின்னணியிலேயே எழுதப்பட்டது.

“துயரங்களில் வெந்து / தொலையும் ஜீவிதம் / நம்பிக்கை சுடர்விடும் / பூபாளப் பட்சிகள் /ஒரு கணந்தான் / எல்லாம் முடிந்தது / விதி / யுக சூனியத்தை எழுதிற்று.” (போர்க்காலப் பாடல்கள், பக். 74)

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமிடையில் நிகழும் மனித ஜீவியம் ஸதக்காவின் கவிதையில் உயிர்ப்புடன் ஒளிர்கிறது.
துப்பாக்கிச் சன்னங்களின் வேட்டையில் சிதைவுண்ட மனித வாழ்வு எம். ரிஷான் ஷெரீப்பின் பின்னங்கால் வடு என்னும் கவிதையில் துல்லியமாக வெளிப்படுகிறது.

“பலத்த அரவங்களோடு/அப்பேய்கள் நுழைந்திற்று ஏதும் சொல்ல வாயெழாக்கணம்/கோரமாயிருந்தவற்றின் / அகலத் திறந்த/வாயிலிருந்து கடுஞ்சொற்களும்/ துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக் கண்டு/ மேலுமச்சத்தில் விதிர்விதித்து/மூர்ச்சையுற்றுப் போனேன்/ விழித்துப் பார்க்கையில்/பிணமாயிருந்தார் அப்பா / ஊனமாயிருந்தேன் நான்/அம்மாவும் அக்காவும் / எங்கெனத் தெரியவில்லை”

என விபரணப் பாணியில் இயங்கும் இக்கவிதை வலி நிறைந்த உயிர்ப்பின் கணங்களை விழி பனிக்க எடுத்துரைக்கிறது.

“இன்றுவரை / குறி பிசகிய / துப்பாக்கி ரவை விட்டுச்சென்ற / ஒற்றைக்காலின் சாம்பல் வடு / அப்பா, அம்மா, அக்கா, சுற்றம் குறித்த நினைவுகளை / இனி வரும் நாட்களிலும் ஏந்தி வரக்கூடும்.”
(வீழ்தலின் நிழல், பக். 60)

இங்குச் சொற்கள் முடிவுறும் இடத்தில் அனுபவம் எல்லைகளைத் தாண்டிக் கவிதையாகத் தன்னை முன்மொழிகிறது.

கிழக்கிலங்கையின் எல்லைப்புள்ளிகளாக அமையும் ஓட்டமாவடியும் வாழைச்சேனையும் முறையே முஸ்லிம்களும் தமிழர்களும் செறிந்து வாழும் அயற்பிரதேசங்கள். இனத்தின், மதத்தின் பெயரால் இவ்விரு கிராமங்களிலும் நிகழ்ந்த அனர்த்தங்கள் அநேகம். கலவரத்தின் பெயரால் கொள்ளையிடப்பட்ட மனித உயிர்களும் உடைமைகளும் எண்ணிலடங்காதவை. இவை பற்றிய பதிவுகள் இலக்கியத்தில் மிகக் குறைந்தளவிலேயே இடம்பெறுகின்றன. 27. 06. 2002 அன்று வாழைச்சேனைக்குச் சமையல் தொழில் நிமித்தம் சென்ற எச். எம். ஜனுதீன் முகம்மத், எச். எம். ஜனூஸ்தின் ஆகிய சகோதரர்கள் சித்திர வதைக்குட்பட்டுத் தமிழீழ விடுதலை அமைப்பால் கொல்லப்பட்டபோது வ. ஐ. ச. ஜெயபாலனால் எழுதப்பட்ட வெட்கத்துடன் ஒரு அஞ்சல் அநீதியின் பெயரால் நிகழ்த்தப்படும் உயிர்ப்படுகொலைகளைக் கண்டிக்கிறது. இவ்விருவரினதும் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யும் உரிமை மறுக்கப்பட்டு அவருடல்கள் டயரால் எரிக்கப்பட்ட கொடுஞ் செயலை உணர்வுத் தளத்தில் பதிவுசெய்கிறது ஜெயபாலன் கவிதை.

“தாய்மண் காக்க வீழ்ந்த/மாவீரர்களே/சற்றுத்தள்ளிப்படுங்கள் தாயின் / கண்ணீரில் நனைந்து/இனிச் சுவர்க்கம் என ‘துஆ’ ஓதும் ஊரார் மண்எடுக்க/ மீஸான்கட்டையின் புதைக்கிற/உரிமையும் மறுக்கப்பட்ட இவருக்காக.” 
(மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள், பக்.31, 32)

முஸ்ஸிம் மக்களின் தனித்துவத்தை மறுதலித்து, தமிழ் முஸ்லிம் உறவைச் சிதைத்துத் தமிழ்த் தேசிய மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் 1990 ஒக்ரோபர் 23இல் வடமாகாணத்தில் இருந்து பலவந்தமாக 24 மணிநேர அவகாசத்தில் 60 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் தங்கள் மண்ணை விட்டு விரட்டப்பட்டனர். இதன் காரணமாக 128 பள்ளிவாசல்களும் 26 இஸ்லாமியப் புனித ஸ்தலங்களும் 189 அரபு ஆரம்பப் பாடசாலைகளும் 1400 வர்த்தக ஸ்தாபனங்களும் 15 ஆயிரம் வீடுகளும் பாழடிக்கப்பட்டன. முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்குக் காரணம் காட்டிக் கொடுப்புகளும் முஸ்லிம் ஊர்க்காவல்படை போன்ற அமைப்புகளின் செயல்பாடும்தான் எனக் கூறுவது நீதிக்குப் புறம்பானது. அர்த்தமற்ற இம்மலினமான நடவடிக்கையால் உரிமையை இழந்து, உடமையை இழந்து கண்ணீரும் கம்பலையுமாக முஸ்லிம்கள் வெளியேறியதை அவருடைய கவிதைகள் உணர்வு பூர்வமாக எடுத்துரைக்கின்றன. தேசியத்தின் கால்களால் நசுக்கப்பட்ட வலியுண்ட வாழ்வின் ரணங்களை முஸ்லிம் கவிதைகள் எடுத்துரைக்கின்றன. சீரழிக்கப்பட்ட வாழ்வின் எச்சங்களாக நிற்கும் இக்கவிதைகள் holocaust literature எனப்படும் பேரழிவு இலக்கிய வகையைச் சார்ந்தவை.

முஸ்லிம்கள் வடபுலத்தில் இருந்து விரட்டப்பட்ட சூழலில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்த ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களாக சு. வில்வரத்தினம் வ. ஐ. ச. ஜெயபாலன் முதலானோரைக் கூறலாம். நிலாந்தனின் யாழ்ப்பாணமே ஓ யாழ்ப்பாணமே நூலில் முஸ்லிம்கள் விரட்டப்பட்டது ஒரு சோகமான நிகழ்வின் பதிவாக இடம்பெற்றபோதிலும் அது முழுமை பெறவில்லை. வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தைக் கண்டித்து ‘ஈழத்தின் தேசியத் தற்கொலை’ என்னும் தலைப்பில் சரிநிகரில் (நவம்பர் 1990) சேரன் எழுதிய கட்டுரை முக்கியமானது. “முஸ்லிம்களின் தார்மீக உரிமைகளை மழுங்கடிக்கும் இச்செயற்பாடு தமிழ் சுதந்திரத்தையே அர்த்தப்பாடற்ற ஒரு செயலாக மாற்றிவிடும்” எனச் சேரன் கூறிக் கண்டித்தமையும் இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

ஜெயபாலனின் யானை, எட்டாவது பேய், அழுவதே விதியென்றால் என்னும் கவிதைகள் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தைப் பொதுமைத் தளத்திலிருந்து கண்டிக்கின்றன.

“முஸ்லிம் என்று பழித்துக் கச்சத்துண்டையும் பறித்துக்கொண்டு ஊரைவிட்டு நாமே விரட்டிய நம்குடி” (யானை) எனத் தமிழரின் அநாகரிகச் செயலைக் கண்டிக்கும் ஜெயபாலன் “உங்கள் காலடியைத் தொட்டு மன்னிப்பீர் என்று வாய்விட்டு அலறாமல் எம் இனத்தின் கைவிலங்கு ஒருபோதும் ஒடிவதில்லை” (அழுவதே விதியென்றால்) எனக் கூறிச் செய்த பாதகச்செயலுக்குப் பாவமன்னிப்பு கோருகிறார்.

முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமை மறுக்கப்பட்ட சூழலில் அவர்களுடைய பாரம்பரிய பூமியில் அவர்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் அவர்களுக்கேயான சமூக அரசியல் உரிமைகள் தமிழீழப் பிதேசங்களில் வழங்கப்பட வேண்டும் என்னும் ஆக்ரோஷமான குரல்கள் எம். ஆர். ஸ்ராலின், சேரன், சி. புஸ்பராஜா முதலான புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட சூழலில் சு. விஸ்வரத்தினத்தினுடைய நெற்றிமண் தாயக பூமிக்கு முஸ்லிம்கள் திருப்பி அழைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கோரி நின்றது.

“அவர்களும் தமது இல்லிடம் மீண்டு/அல்லாவெனக் கூவி/தொழுகை வடுவை / தம் மண்ணில்/புதுப்பித்துவருடுகையில்/விழிஉடைத்துப் பாயுமே/பல்லாண்டுகளாய் / தேங்கிக்கிடந்த/நீரருவி/அதில்முழுகித்திளைக்கும்/அந்தப் பொழுதில்தான் / கழுவப்படும்/எனது காலக்கறை/முழுமைபெறும் என் விடுதலை” 
(மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள், பக். 155)

நெற்றி மண் செய்த செய்கைக்காகக் காயம்பட்டு அழும் மனதும் பழியை நீக்கிப் பாவத்திலிருந்து விடுபட வேண்டும் என்னும் அவாவும் மிக நேர்த்தியாய் வெளிப்படுத்தும் இக்கவிதை சு. வியின் களங்கமற்ற அப்பட்டமான இதயத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

வாழ்வு சிதைக்கப்பட்டு, வாழ்வாதார உண்மை மறுக்கப்பட்டு, சமூக அடையாளம் தொலைந்த நிலையில், அகதி முகாமில் அழிவுண்ட வாழ்வின் சின்னமாய் முடங்கியிருப்பது துயரத்திலும் துயரமானது. அவ்வன்பாலைக்குள் உழன்று அகதி முகாமுக்குள் முடங்கிக்கிடக்கும் ஓர் அன்னையின் தாலாட்டாக முகிலும் அன்பு முகையதீனின் கவிதை நிர்மூலமாகி நடைப்பிணமாய் வாழும் மனித ஜீவியத்தை வெளிப்படுத்துகிறது. தம்வாழ்வை எண்ணி நொந்தழும் தாயின் மனம் அகதி முகாமில் ஓர் அன்னையின் தாலாட்டு கவிதையில்

“வஞ்சகர்கள் வந்தெங்கள் வாழ்வில் விளையாடி யதால் / வஞ்சகமே இன்று நாம் அகதிகளாய் மாறியுள்ளோம் / உன்னை அணைத்து ஓடிவரும் போதுனது / கண்ணான வாப்பாவைக் கல்நெஞ்சர் கொன்றார்கள்/ . . . இருந்ததையும் பறித்தார்கள் ஈரமில்லா அரக்கர்கள் /அருந்துவதற்கும் நீரின்றி அழுதழுது ஓடிவந்தேன்”
(மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள், பக். 104)

என வலியும் வேதனையும் கொண்ட அனுபவச் சுழிப்பின் நிகழ் உருவாய்க் காட்சிப்படுத்தப்படுகிறது.

வடபுலத்திலுள்ள முல்லை மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர்கள் முல்லை முஸ்ரிபா, இளைய அப்துல்லாஹ் முதலானோர். முல்லை மண்ணிலிருந்து ஏதிலியாக வெளியேற்றப்பட்ட கொடுங்கணங்களைச் சித்திரிக்கும் இக்கவிஞர்களின் கவிதைகள் முல்லை மண்ணிற்குத் திரும்பிச் செல்கின்ற ஏக்கத்தையும் அம்மண்மீது இவர்கள் கொண்ட அவாவையும் எடுத்துரைக்கின்றன. முல்லை முஸ்ரிபாவின் வித்தியானந்தாரிகளுக்கு கவிதை இப்பின்னணியிலேயே முகம்கொள்கிறது.

“நாளை மறுநாளொரு நாள் / நானுஞ் சுற்றுஞ் சுமந்து என் மண்ணுக்கு வருவேன் / அழகா என் வேரிலிருந்து / அழகாய் விருஷித் தெலுதலுக்காய் . . .” 
(இருத்தலுக்கானஅழைப்பு, பக். 18)

மேன்மை பூத்த மண்மீது கொண்ட பற்றும் வேர் கொண்ட வாழ்வும் இக்கவிதையெங்கும் விரவி நிற்கிறது.

1995. 10. 30 அன்று மாலை இடம்பெயர்வு பற்றிய புலிகளின் அறிவித்தலையடுத்து யாழ்பாணத்தை விட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். இவ்வாறு யாழிலிருந்து வன்னிக்கு மக்கள் இடம்பெயர்ந்தபோது இளைய அகதிகளை நோக்கி முல்லை முஸ்ரிபாவின் குரல் இனிமையும் இரக்கமும் கொண்ட உண்மை அன்பின் பிரதிமையாய் ஒளிர்கிறது.

“ஏன் இளைய அகதிகளே நீவிர் முல்லைக்கே இரங்குவீராயின் / நீராவிப் பிட்டிக்கே வருக என வீட்டில் வசிக்குக / சுற்றத்து வீடுகளில்லெல்லாம் சூழ்ந்தே குடியிருப்பதாக / முற்றத்து ரோஜவிடமென் முகத்தைக் காண்பதாக”
(இருத்தலுக்கான அழைப்பு, பக். 24)

வன்கொடுமைகள் இழைத்து வலியோடு அனுப்பியவனை ஈரமாய் நேசிக்கிறான் இக்கவிஞன் முரணற்ற பேதம் மறந்து சமூகத்தை நேசிக்கும் ஓர் உண்மை இஸ்லாமியன். முல்லை முஸ்ரிபாவின் கவிதைகள் சு. வில்வரத்தினம் கூறுவதுபோல் மென்மையின் கூர்மையும் கூர்மையின் மென்மையும் கொண்டவை.

தான் வேரூன்றிய நிலத்தையும் அதிலிருந்து தான் பிடுங்கியெறியப்பட்ட நிலையையும் உணர்வின் வழி நின்று பாடும் பிறிதொரு கவிஞன் ‘அனஸ்’ எனப்படும் இளைய அப்துல்லாஹ்வின் பிணம் தின்னும் தேசம் அல்லல்பட்டு அகதி வாழ்வில் அவஸ்தைப்படும் அனுபவங்களை உணர்வுபூர்வமாய்ப் பாடுகிறது. யுத்த சூழலுக்குள் அகப்பட்டு நலிவுற்ற சமூகத்தின் கதையாய் மிளிரும் இத்தொகுப்பு ஈழத்தின் சமகால அரசியலைச் சமூகவாழ்வின் குறுக்கு வெட்டுமுகமாய் நின்று விளக்குகிறது.

“உயிரொழுகி ஊனமிழந்த என் தாயகத்தைவிட்டு/ விலகியிருந்து புத்தளத்து உப்பு சுவாத்தியத்தில் / போக்கிடம் தேடியலைந்த பொழுதுகளை இன்னும் / மறக்கமுடியவில்லை” 
(பிணம் செய்யும் தேசம், பக். 280)

என்னும் குரல் ஒரு மனிதனின் தனித்துவமான குரலன்று. அது தான் சார்ந்த வதையுண்ட சமூகத்தின் தார்மீகக் குரல். “என் அழகிய மண்ணை விட்டு விரட்டப்பட்டது/ பாரம்பரிய உரிமை பறிக்கப்பட்டது/ தேசம் இழந்தது எல்லாமுமே ரணங்களாய்” என்னும் அப்துல்லாஹ்வின் கூற்று வலியில் ஒளிரும் கணங்களைப் பேரவலத்தின் பால் இட்டுச்செல்கிறது.

ஈழப் போராட்ட வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களுள் பிறிதொரு கறுப்புப் பக்கமாக மூதூர் முஸ்லிம்கள் தாயக பூமியிலிருந்து விரட்டப்பட்டதைக் கூறலாம். 29. 05. 2006 அன்று தமிழீழ யுத்தக் குழுக்களால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்திற்கு அமைவாக 04. 08. 2006இல் முஸ்லிம்கள் தங்கள் பூர்வீகக் கிராமத்தைவிட்டு வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். முஸ்லிம்கள் செறிந்து வாழும் மூதூரை யுத்தகளமாகத் தேர்ந்தெடுத்து மனிதக் கேடயங்களாக மக்களைப் பயன்படுத்தித் தம் வன்மத்தை தீர்த்துக் கொண்ட தமிழ்ப் போராட்டக் குழுவின் செயல் மனிதநாகரிகத்திற்கு அப்பாற்பட்டது. கபிர் முகமது நிஜாமின் எங்கே என(மூ)தூர் என்னும் கவிதை இந்த அனுபவத்தின் வலியை நுண்ணுணர்வுத் தளத்தில் பதிவுசெய்கிறது.

“மூட்டைமுடிச்சேதுமின்றி விட்ட மூச்சோடு மட்டும் / நம் காலே வாகனமாய் முப்பது மைல்தூரம் / நடந்து கந்தளாயக்குள் வழுந்தோம் நினைக் / கையில் - இன்றும் என் காலில் தைத்தமுள் / புதுரணமாய் வலிக்கிறது.”
(மனவனத்தில் நந்தவனம், பக். 80)

வாழ்விழந்து வதிவிடமற்று நிர்மூலமான மனித வாழ்வின் துயர் அங்கதமாய் அதேசமயம் அழுத்தமாய்ப் பதிவுசெய்யப்படுகிறது.

பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இனவாதக் கட்டமைப்பும் சிறுபான்மையினருக்கான ஒடுக்குமுறையும் தமிழர்களைப் போல், தமிழ் பேசும் முஸ்லிம்களையும் பாதித்த சூழலில் ஈழப் போராட்டத்தில் முஸ்லிம்களும் போராளிகளாக இணைந்து போராடினர். ஹனீபா, ஹசன், அனய் மிஹிலாலீ, அன்வர் போன்ற பிரபலமானவர்கள் உட்பட முஸ்லிம் இளைஞர்கள் பலரும் றிஸ்மியா முதலான முஸ்லிம் யுவதிகளும் ஈழப் போராட்டத்தில் இணைந்து பங்காற்றிக் களப்பலியாயினர். மதிக்கப்பட வேண்டிய மகத்தான இத்தியாகங்கள் தீரன், முல்லை முஸ்ரிபா/பஹீமாஜஹான் கவிதைகளில் நினைவுகூரப்படுகின்றன.

தீரனின் மாவீரர் மேஜர் அன்பு என்கின்ற முகமது அன்வர் ஞாபகமாக கவிதை தமிழீழ வரைபடத்தைக் கண்களில் ஏந்திப் போராடப்போன அன்வர் யாரும் அறியாவண்ணம் களப்பலியாகி ஒரு மூலையில் விதைக்கப்பட்டு இருந்ததை மனப்பூர்வமாகக் காட்சிப்படுத்துகிறது. ஒப்பந்தக் காலத்திலாவது போராடப்போன மகன் திரும்பி வருவான் என வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் தாயின் மனத்துயரும் இக்கவிதையில் புலப்படுகிறது.

“நீ திரும்பி வரவில்லை இதுவரை/ தீ அணைத்து/ தீபங்கள் ஏற்றி ஒப்பந்தம் செய்து / ஒப்பங்கள் இடும் இந்நேரம்/ உம்மா பாவம் மகிழ்கிறாள்/ உன்னைக் கண்டு/ உச்சிமுகரத்துடிக்கிறாள்” 
(மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள், பக். 38)

தமிழ்ப் பேரினவாதிகள் முஸ்லிம்களைத் துடிக்கத் துடிக்கத் தொடர் வேட்டையாடிய சூழலில் போராடப்போன றிஸ்மியாவை நினைவுகூருகிறது. முல்லைமுஸ்ரிபாவின் மயூரா என்றாகிவிட்ட றிஸ்மியாவுக்கு:

“துப்பாக்கி வக்கிரம் பேசி / எமதான தேசத்தைக் காவு கொண்டு இருந்த அக்கினி ராத்திரி ஒன்றில்/ நீயும் காணாமல் போயிருந்தாய் துவக்கோடு // “எங்களது மஸ்ஜிதுக்குள் / சுஜூத்தில் தியானித்து இருந்த சிரசுகள் கொய்து / தம் வீர வரலாற்றுக்கு மாலை சூடிக் கொண்டிருந்தவரின் / கறை பட்ட கைகளோடு / கைகோர்த்தே நீயும் போயிருந்தாய் முந்தைநாள்.”
(மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள், பக். 160)

தமிழ்த் தலைமைகளின் தவறான முடிவுகளால் இனங்கள் துண்டாடப்பட்ட நிலையில் தமிழ்ப் போராளிகளுடனான றிஸ்மியாவின் இணைவு யதார்த்தத்திற்குச் சாத்தியமற்ற ஒன்று ஆகினும் நிஜம் தந்த வலி கவி எங்கும் ஊடறுத்துப் பாய்கிறது. அவலமும் அவலத்துக்கான எதிர்ப்பையும் மீறி உணர்வு நிலையில் இக்கவிதை தன்னைப் பதிவுசெய்கிறது.
தமிழர்களையும் தமிழர்களின் போராட்டத்தையும் புரிந்துணர்வுடன் அணுகியவராகப் பெரும்பாலான முஸ்லிம்கள் இருந்துள்ளனர். ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழருக்கெதிரான வன்முறைகள் மக்களின் அரசியல் வாழ்வைச் சிதைத்து அவர் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய வேளையில் தமிழர்களின் ஆயுதம் தாங்கிய அரசியல் போராட்டம் வெகுசனப் போராட்டமாக உருவெடுத்தது. இச்சூழலின் பின்னணியை நன்கு விளங்கிக்கொண்ட முஸ்லிம்கள் அதைக் கவிதையின் பேசுமொழியாக்கினார்.

இவ்வகையில் குறிப்பிடத்தக்க கவிதைகளாக ஃபஹீமாஜஹானின் முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு, ஒரு கடல் நீரூற்றி முதலானவற்றைக் கூறலாம். பாடசாலைக் காலத்தில் வன்முறையைக் கண்டு படிப்பை இடைநிறுத்தி போராடச் சென்ற ஆதிரையென்னும் போராளியை நினைவுகூரும் முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு கவிதை முஸ்லிம் ஜீவன்கள் தமிழ்ப் போராளிகள்மீது கொண்ட அன்பையும் அவர்கள்மீது கொண்ட மதிப்பையும் உள்ளன்புடன் வெளிப்படுத்துகிறது. சுதந்திர வேட்கையுடனும் இலட்சியக் கனவுகளுடனும் போராடச் சென்ற தோழி அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகித் துன்புற்று வருந்தக் கூடாது என்பதை

“உன் நகர்வுகளை மோப்பம் பிடிக்கும் / அறிமுக மற்ற சப்பாத்துக் கால்கள் / எமது வாழ்விடங்களில் பதிந்து செல்லலாம் / நீ கவனமாயிருந்து இலட்சியத்தை வெற்றிகொள்” 
(ஒரு கடல் நீரூற்றி, பக். 35)

என்ற ஃபஹீமாஜஹானின் வாசகங்கள் மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. உறவுகள்மீதான நேசிப்புகள் இன, மத, அரசியலைக் கடந்து புதிய வண்ணங்களுடனும் அர்த்தச் செறிவுடனும் ஃபஹீமாவின் கவிதைகளில் வெளிப்படுகின்றன.

1990களின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள்மீது தமிழ், சிங்களப் பேரினவாதிகளால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோதிலும் முஸ்லிம்கள் பலர் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவராகவும் போராட்டத்தின் நியாயப்பாட்டைப் புரிந்துணர்வுடன் அணுகியவராகவும் காணப்பட்டனர். ஆயினும் இக்காலத்தில் தமிழ்க் காடையர்களைப் போல் முஸ்லிம் காடையர்களாலும் தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறையான தாக்குதல்களும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூர், வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர். மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.

இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன. தமிழர்களைப் போல் முஸ்லிம்களும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. 1990களில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் இழைத்த கசப்புணர்வுகள், குரோதங்கள் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மறக்கப்பட வேண்டியவை. மன்னிக்கப்பட வேண்டியவை.

வன்முறை வரலாற்றை மனித அவலங்களுடன் வெளிப்படுத்தும் ஈழத்து முஸ்லிம் நவீனக் கவிதைகள் அரசியல்மயப்படுத்தப்பட்ட சமூகத்தின் காலப்பிரதிகளாகவும் தமிழீழ வன்முறைகளை வலிதரும் அவலங்களுடன் வெளிப்படுத்தும் கருத்துப் பெட்டகங்களாகவும் விளங்குகின்றன. ஆட்கடத்தல், சித்திரவதை, இடப்பெயர்வு, அகதிவாழ்வு, கைது செய்தல், இனப்படுகொலை என்னும் தொடர்வன் முறைகளுக்கு ஊடான சமகால வாழ்வையும் அதன் வரலாற்றையும் குருதியுடனும் கண்ணீருடனும் பகிரும் முஸ்லிம் நவீனக் கவிதைகள், மொழியின் ஆகக்கூடிய சாத்தியப்பாட்டைக்கொண்டு இயங்குகின்றன. விடுதலையின் பெயரால் மௌனமாக்கப்பட்டவரின் காயங்களில் இருந்தும் பிறக்கும் இக்கவிதைகள் உணர் திறன் கொண்டவை. சத்தியமானவை. சிந்தனையாழமும் பன்முகத் தன்மையும் கொண்டவை. நெருக்கடிக்குள்ளான புறவாழ்வின் ஊடனான கவிதைகளின் எல்லைகளை ஓரளவுக்குச் சாத்தியமாக்க முனையும் இக்கவிதைகள் விடுதலையின் பெயரால் வாழ்ந்த கதையையும் வஞ்சிக்கப்பட்ட கதையையும் கூறிச் செல்கின்றன.

- அந்துவன் கீரன்

நன்றி
காலச்சுவடு - இதழ் 148, ஏப்ரல் 201

4 comments:

kirrukan said...

தீயினால் தீயை

இரும்புக் குழல்களின்
இலக்குகாளாக்காப்பட்டு
இரத்தம் சிந்துகிறது
எம் வாழ்வு ‍அது
கக்கும் அன‌லில் கருகி
செயலிழ‌க்கிறது,
கந்தகம் கல‌ந்த காற்றுப் பட்டு
கசங்கலாலகிப் போகிறது.

இனவாதத் தீ
எம் வாழ்வை
சுட்டு பொசுக்குகியன்றது
நான்கு புறமும்
தீயின் நாக்குகள் எமை
விழுங்க வருகிறபோது
கண்முன்னே தெரியும்
சுவாலைக்கு விலகி
பின்னோக்கி நகர்தாலும்
பொசுக்கப்படுவது நிச்சயம்
எனவே
நாங்களும் தீ வளர்ப்போம்
கண்ணிலும் நெஞ்சிலும்


சூரியநிலா(2001) பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற கவிதை புத்தகதிலிருந்து பெண் போராளி கவிஞை எழுதியது

SOORIAN said...

கிறுக்கன் நீங்கள் தெரிந்து எழுதுகிறீர்களோ அல்லது தெரியாமல் எழுதுகிறீர்களோ தெரியாது இந்த போராளி எழுதியதுபோல்

பின்னோக்கி நகர்தாலும்
பொசுக்கப்படுவது நிச்சயம்
எனவே
நாங்களும் தீ வளர்ப்போம்
கண்ணிலும் நெஞ்சிலும்

எதிரி செய்வதுபோல நாங்களும் செய்யவேண்டும் என்ற பாடத்தின் படி நடந்து சிங்களவன் செய்ததுபோலவே 24 மணித்தியாலத்தில் காலம் காலமாக வாழ்ந்த முஸ்லிம் மக்களை உடுத்த உடுப்போடு கலைத்து வெட்டி கொன்றதன் பயன் என்ன என்பது இப்பவாவது விளங்கவில்லையா

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

kirrukan said...

[quote]முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்[quote]

அது ஏன் தமிழ் மக்களுக்கு மட்டும் பழமொழி வாழ்க்கை வாழவிட்டால் சாமி குற்றமாகி போய்விடுகிற‌து சூரியன்?தமிழன் மட்டும் எது நடந்ததோ அது நல்லாவே நட‌ந்தது..எது நட‌க்க இருக்கிறதோ அதுவும் நல்லாவே நட‌க்கும் என்று முட்டாளாக‌ வாழவேண்டியிருக்கு..

kirrukan said...

யாழில் கடத்தப்பட்ட தமிழ் சிறுவன் முஸ்லிமாக மாற்றப்பட்ட நிலையில் மீட்புயாழ்ப்பாணத்தில் ஒருவருடத்திற்கு முன்னர் முஸ்லிம்களால் கடத்தி செல்லப்பட்ட 13 வயது சிறுவன் முஸ்லிமாக மாற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தந்தையை இழந்தவனாவான்.
.
சண்டிலிப்பாய் இரட்டைப்புலம் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு சென்றகொண்டிருந்த வேளை கடந்த வருடம் காணமற்போனதாக அவரது தாயாரால் மானிப்பாய் பொலிஸிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் யாழ். நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் முஸ்லிம் உடையணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான் இதனை அவதானித்த சிறுவனது அயலவர்கள் சம்பவத்தை தாயாருக்கு தெரியப்படுத்தினர்.
.
தாயார் மானிப்பாய் பொலிஸாரின் உதவியுடன் சிறுவனை இனம் கண்டுள்ளார். பொலிஸார் சிவில் உடையில் ரஜிராமை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூன்று முஸ்லிம்களையும் கைது செய்தனர்.
.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நான்காவது சந்தேக நபரும் நேற்றுமுன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
.
வழக்கை விசாரித்த நீதிவான் சிறுவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.
கடத்தல் சம்பவம் குறித்து தெரிவித்ததாவது:

"நான் சம்பவ தினத்தன்று பாடசாலை நோக்கி சீரணிச் சந்திக்கு சென்று கொண்டிருந்தேன். ஹைஏஸ் வாகனத்தில் வந்த இரண்டு பேர் உனக்கு அப்பா இருக்கிறாரா என்று கேட்டனர்.

இல்லை என்றேன். அம்மா இருக்கிறார என்று கேட்டனர். ஆம் என்றேன். தங்களுடன் வருமாறு கேட்டு எனது கையைப்பிடித்து ஏற்றி சென்று விட்டனர். அவர்கள் என்னை யாழ். நகரில் உள்ள வீடொன்றுக்குள் அழைத்துச் சென்று பாடசாலைச் சீருடையை மாற்றி சாரமும் சேட்டும் அணிவித்தனர். பின்னர் மட்டக்களப்பு காத்தான் குடிக்கு கொண்டு செல்ல வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சுன்னத்துச் சடங்கு செய்தனர்.

வைத்தியர் ஒருவரே அதனைச் செய்தார். அத்துடன் எனக்கு அன்வர் எனப் பெயரும் வைத்தனர். நஜீப் என்பவரது வீட்டிலே நான் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். அங்கு தினமும் காலை 6 மணிக்கு எழுந்து பதுரியா பள்ளி வாசலில் குடிதண்ணீர் அள்ளி குறித்த வீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.

அவர்களின் 6 ஆம், 7 ஆம் தரத்தில் படிக்கும் இரண்டு பிள்ளைகளை சைக்கிளில் கூட்டிச் சென்று அழைத்து வர வேண்டும் இடைநேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்.

இந்த நிலையிலேயே நகரில் உள்ள புடைவைக் கடையொன்றில் ஜெமில் என்பவர் என்னைக் கொண்டுபோய் சேர்த்து விட்டார். அங்கிருந்தே நான் எனது தாயாரால் மீட்கப்பட்டேன் என்றான் சிறுவன்.
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கடத்தப்பட்டு கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்தப்படுவது தெரிய வந்த நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த சிறுவனின் தந்தையார் 4 வருடங்களுக்கு முன்னதாக நோய் காரணமாக இறந்து விட்டார். சிறுவனுக்கு சகோதரனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நன்றி: ஈழநாதம்.