.
தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்
தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்
ஏறாவூர் அல்.அக்சா கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைப்பு
சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்
ஊடகங்களில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி
சரத் பொன்சேகா பிணையில் விடுதலை
தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்
14/5/2012
ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து தனியார் பஸ் நடத்துநர் ஒருவரும் சாரதி ஒருவரும் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
கண்மண் தெரியாமல் தாக்கப்பட்ட இருவரையும் ஓமந்தை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். முதலில் தனியார் பஸ் நடத்துநரைத் தாக்கிய காலில்லாத இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை இந்த இருவரும் தாக்கியதாக ஓமந்தை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்தே நடத்துநரும் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கவீனரான சிப்பாய் தனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்மையாகவே காயமடைந்த தனியார் பஸ் நடத்துநரும், சாரதியும் ஓமந்தையில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை முன்னிரவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்துள்ளதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்த சிவிலுடையில் வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் பின்னால் வந்த கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் வழியில் மாறி ஏறியுள்ளார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வவுனியா பஸ் ஒன்றில் மிதி பலகையில் பயணம் செய்த பயணி ஒருவர் பின்னால் வந்த பஸ் வண்டிக்கு கைகளினால் சைகை காட்டிய வண்ணம் வந்துள்ளார்.
இதனை அவதானித்த பயணியான அங்கவீனமான முன்னாள் இராணுவச் சிப்பாய் எழுந்து சென்று மிதி பலகையில் பயணம் செய்த பிரயாணியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டாராம். இந்த வாய்த்தர்க்கத்தையடுத்து அங்கவீனராகிய சிப்பாய் அந்தப் பயணியைத் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து பயணியும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பஸ் வண்டி ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியை வந்தடைந்தது.
சோதனைச் சாவடியின் நடைமுறைக்கமைய நடத்துநர் இறங்கிச் சென்று வாகன இலக்கத்தைப் பதிவு செய்துவிட்டு வந்தபோது பஸ் வண்டியின் பின்பக்கத்தில் வைத்து அவரை மறித்த அங்கவீனராகிய முன்னாள் சிப்பாய் அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். ஆசனத்தில் இருந்தபடி, சைட் கண்ணாடி வழியாக இதனை அவதானித்த சாரதி இறங்கிச் சென்று நடத்துநரை ஏன் அடிக்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு அங்கிருந்த வேறு இராணுவத்தினரும் இணைந்து கூட்டமாகச் சேர்ந்து நடத்துநரையும் சாரதியையும் கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவ நேரத்தில் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் வண்டி மற்றும் வவுனியா நோக்கி வந்த பஸ் வண்டி ஆகியவற்றில் வந்த பயணிகள் அனைவரும் நேரில் கண்டுள்ளனர்.
இவ்வாறு தாக்கியதன் பின்னர், பின்னால் வந்த கொழும்பு பஸ் வண்டியில், முன்னால் வந்த வவுனியா பஸ் வண்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் மாற்றி ஏற்றி அனுப்பி வைத்த ஓமந்தை சோதனைச் சாவடி இராணுவத்தினர் வவுனியா பஸ் வண்டியைத் தடுத்து வைத்துக்கொண்டு தாக்கப்பட்ட பஸ் நடத்துநர், சாரதி ஆகியோரை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன், இவர்களால் தாக்கப்பட்டதாகப் பொய் முறைப்பாடு செய்த அங்கவீனரான முன்னாள் சிப்பாயை வழிப்பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
நீதி நியாயத்திற்கு மாறாக தான்தோன்றித்தனமாக ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் நடந்து கொண்ட விதத்தை நேரடியாகக் கண்ட பயணிகள் அனைவரும் அச்சத்திற்கு உள்ளாகினார்கள். பொதுமக்களுடன் சுமுகமாகப் பழக வேண்டிய இராணுவத்தினர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்களே என்று பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
நன்றி வீரகேசரி
ஏறாவூர் அல்.அக்சா கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைப்பு
15/5/2012
கிழக்கு மாகாணத்தில் யுத்த வெற்றிக்குப் பின்னர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி அல். அக்சா கிராமத்தில் நேற்றிரவு 9:00 மணியளவில் மூன்று குடிசைகள் எரியூட்டப்பட்டுள்ளன.
85 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டு வசித்து வரும் இக்கிராமத்தில் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளமை மூன்றாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இடத்துக்கு விஜயம் செய்த ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவரும் நகர சபை உறுப்பினருமான எம்.எல்.றவுபாசம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததோடு மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இதுவரையில் கிடைத்த தகவல்களின்படி குறித்த இடத்துக்கு எந்த பாதுகாப்பு அதிகாரிகளும் வருகை தரவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்
வீரகேசரி இணையம்
சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்
ஊடகங்களில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி
16/05/2012
தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
நேற்றுக் காலை அலரி மாளிகையில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்த சந்திப்பில், இலங்கையின் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். பரஸ்பர நம்பிக்கையையும் நட்புறவையும் மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுவது மிகவும் அவசியமென்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
விசேடமாக பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளும் வன்முறைகள் பற்றிய படங்களுடனான சிறிய செய்திகளை கூட பெரிதுபடுத்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டு மென்றும், இவ்விதம் செய்வது பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களின் வன்முறைகளுக்கு மதிப்பளிக்கக்கூடியதாக அமையலாம் என்று ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.
“சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான இனவாதத்தையும் நாம் நிராகரி க்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி கூறினார்.
இலங்கையின் முன்னேற்றத்தையும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகளையும் இனவாதம் சீர்குலைத்துவிடுவதன் காரணமாக வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஊடாக எந்தவிதத்திலும் இனவாத ஆக்கக்கூறுகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாமென அனைத்து ஊடக தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இலங்கையிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதையே தான் பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment