உலகச் செய்திகள்

.
சீனாவில் புயலுடன் கூடிய மழை ; 40 பேர் பலி
நேபாள விமானம் இமாலயத் தொடரில் விபத்து: 15 பேர் பலி
பிரான்ஸ் ஜனாதிபதியாக ஹொலன்டே பதவியேற்பு
சோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய படை தரைவழி தாக்குதல்
சீனாவில் புயலுடன் கூடிய மழை ; 40 பேர் பலி

வடமேற்கு சீனாவில் புயலுடன் கூடிய மழை காரணமாக 40 பேர் பலியாகியுள்ளனர்.

கொன்ஸு மாகாணத்தை தாக்கிய மேற்படி புயலையடுத்து 18 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்தப் புயலால் 350,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30,000 பேர் வீடு வாசல்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பல வீதிகள் சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சென்றடைவது தாமதமாவதாகக் கூறப்படுகிறது.

nantri வீரகேசரி இணையம்

நேபாள விமானம் இமாலயத் தொடரில் விபத்து: 15 பேர் பலி

14/5/2012

இமாலய மலைத்தொடரில் 21 பயணிகளுடன் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேபாள நாட்டின் தனியார் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான இவ்விமானம் அந்நாட்டின் ஜொம்சொம் விமானநிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் பயணம் செய்தோரில் 16 பேர் இந்தியர்கள் எனத்தெரிவிக்கப்படுகின்றது.

nantri வீரகேசரி இணையம்


பிரான்ஸ் ஜனாதிபதியாக ஹொலன்டே பதவியேற்பு

பதவியேற்ற கையோடு ஜெர்மன் விரைவு

16/05/2012
பிரான்ஸ் ஜனாதிபதியாக பிரான் கொயிஸ் ஹொலன்டே நேற்று பதவியேற்றார். 17 ஆண்டுகளின் பின் பிரான்ஸின் முதலாவது சோசலிஸ்ட் தலைவராக அவர் எலிசி அரண்மனைக்கு சென்றார்.

பிரான்ஸ் எதிர்கொண்டுள்ள கடன் பிரச்சினை மற்றும் நிதி நெருக்கடி உட்பட அனைத்து பிரச்சினைகளையும் தாம் புரிந்துகொண்டிருப்பதாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஹொலன்டே குறிப்பிட்டார்.

ஜனாதிபதியாக நேற்று பதவியேற்ற ஹொலன்டே விரைவில் தமது பிரதமரை அறிவிக்கவுள்ளதோடு, நேற்று மதியமே ஜெர்மன் அதிபர் அன்ஜலா மெர்கலை சந்திக்க பெர்லினுக்கு விரைந்தார்.

ஹொலன்டே ஐரோப்பாவில் முன்னெடுக்கப்படும் சிக்கன நடவடிக்கை மற்றும் பிராந்திய நாடுகளின் நிதி நெருக்கடி குறித்து ஜெர்மன் அதிபருடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

மத்திய பிரான்ஸில் அமைந்துள்ள எலிசி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விசேட வைபவத்தில் ஹொலன்டே தனது 5 ஆண்டு தவணைக்காக ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்த வைபவத்தில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி புதிய ஜனாதிபதிக்கு கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஹொலன்டே எலிசி மாளிகையில் தனிப்பட்ட சந்திப்பில் பங்கேற்றார். இதன்போது புதிய ஜனாதிபதிக்கு பிரான்ஸ் அணு செயற்பாட்டுக்கான கடவுச்சொல் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதில் ஜனாதிபதி பதவியேற்பு வைபவத்தில் குறைந்த அளவான அதிதிகளே பங்கேற்றனர். குறிப்பாக ஹொலண்டேவின் துணைவியார் மற்றும் அவரது குழந்தைகள் பங்கேற்கவில்லை என்பது விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் ஹொலன்டே நடத்திய முதல் உரையில் கூறியதாவது :-

‘நாம் சிறப்பான தேசத்தவராவர். பிரான்ஸ் அனைத்து சவால்களையும் வெற்றிகண்ட வரலாறு கொண்டது. பிரான்ஸில் நீதியை நிலைநாட்டுவதே எனது முதல் குறிக்கோள். ஐரோப்பாவை புது வழியில் கொண்டு சென்று உலக அமைதிக்கு பங்கு வகிப்பேன்’ என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஹொலன்டே சாம்ப்ஸ் வீதியில் ஊர்வலமாக சென்று அங்கிருந்த மக்களுக்கு கையசைத்தார். பின்னர் அவர் 19 ஆம் நூற்றாண்டின் கல்வி சீர்திருத்தவா தியான ஜுலிஸ் பெர்ரி மற்றும் நோபல் விருது வென்ற இரசாயனவிய லாளர் மேரி கியூரியின் அடக்கஸ்தலத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள 57 வயதான ஹொலன்டே தனது முதல் வேலையாக பிரான்ஸ் பிரதமரை தேர்வு செய்யவுள்ளார். பிரான்ஸ் பாராளுமன்றத்தின் சோசலிஸ்ட் குழுவின் தலைவரான ஜீன் மார்க் அய்ரோல்ட் பிரதமராக தெரிவாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஜனாதிபதி ஹொலன்டே ஜெர்மன் அதிபர் மெர்கலுடன் இரவு விருந்தில் பங்கேற்க நேற்று மதியமே ஜெர்மனிக்கு விரைந்தார்.

nantri thinakaran

சோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய படை தரைவழி தாக்குதல்

சோமாலிய கடற்கொள்ளை தளங்கள் மீது ஐரோப்பிய ஒன்றிய படைகள் முதல் முறையாக தரைவழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்போது பல படகுகள் அழித்து ஒழிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய படை அறிவித்துள்ளது.

சோமாலியாவின் ஹரதீர் துறைமுகத்தில் இருக்கும் கடற்கொள்ளை தளம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதற்காக ஹெலிகொப்டர் மூலம் நேற்று ஐரோப்பிய ஒன்றிய கடற்படையினர் கடற்கொள்ளை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனினும் தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்திய சமுத்திரத்தினூடாக செல்லும் கப்பல்களை கைப்பற்றிவரும் சோமாலிய கடற்கொள்ளையர் அதனை விடுவிக்க கப்பல் சொந்தக்காரர்களிடம் மீட்பு தொகையை கோரி வருகின்றனர். இவ்வாறு சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் தற்போது 17 கப்பல்கள் மற்றும் 300 கப்பல் பணியாளர்கள் பிடிபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

கடைசியாக கடந்த வாரம் அரேபிய கடலில் சென்றுகொண்டிருந்த கிரேக்க நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர் கைப்பற்றினர். லைபீரிய கொடியுடன் சென்ற இந்த கப்பலில் 135,000 தொன் எண்ணெய் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடற்கொள்ளையர் மீதான தாக்குதல் நேற்று இரவில் இருந்து தொடர்வதாக ஐரோப்பிய படை குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் சோமாலிய பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என அது கூறியுள்ளது

nantri thinakaran




No comments: