மொனம் கலைகிறது - 3 - றணிலின் இராசதந்திரமும் கிழக்கின் உடைவும்:-

.
நடராஜா குருபரன்
மௌனம் கலைகிறது - 3 - றணிலின் இராசதந்திரமும் கிழக்கின் உடைவும்:-
றணிலினது சனாதிபதியாகும் தனிப்பட்ட கனவு கலைந்தபோதும் அவரது இராச தந்திரம் எவ்வாறு விடுதலைப்புலிகளை ஒடுக்குவதிற் பங்காற்றியது என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை விரிவாக்கும் நடவடிக்கைகளிலும் றணில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததை ஏற்கவே விபரித்திருந்தேன் அக்காலத்தில் றணில் தனது பணிக்கு துணையாக அமெரிக்காவுடன் அப்போது நெருக்கத்தை கொண்டிருந்தவரும் மேலைத்தேச அரசியற் பொருளாதார கொள்கைகளில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தவருமான மிலிந்த மொறகொடவையும் இணைத்துக் கொண்டார்.


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்காவின் காலத்தில் விடுதலைப் புலிகளை சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் வீழ்த்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் விட்ட இடத்தில் இருந்து றணிலின் ராஜதந்திர நகர்வு ஆரம்பித்தது.
முதலில் சமாதான முயற்சிகளுக்கு பக்க பலமாக நின்ற இணைத் தலைமை நாடுகளையும் அவற்றுடன் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இந்தியாவையும் தமது பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கைகளை றணில் சிறப்பாக மேற்கொண்டார்.
இந்த வகையில் நான் ஏற்கனவே விபரித்திருந்த றணிலின் அமெரிக்க விஜயங்களுக்கு ஒப்பானதாக  பிரித்தானியாவுக்கும் றணில் விக்கிரமசிங்க விஜயங்களை மேற்கொண்டார். 2002 -2003 இடைப்பட்ட காலத்தில்லவர் பிரித்தானியாவுக்கு இரண்டு விஜயங்களை மேற்கொண்டிருந்தார். 
பிரித்தானிய பிரதமர் ரொனி பிளயரை டவுனிங் ஸ்றீற் அலுவலகத்தில் றணீல் சந்தித்த ஒரு விஜயத்திலும் நான் செய்தியாளனாகக் கலந்து கொண்டிருந்தேன்.
 
(பிரித்தானியாவுக்கான இலங்கையின் தூதரக அதிகாரி மற்றும் அப்போதைய பிரதமரின் ஊடகப் பிரிவின் முக்கியஸ்த்தருடன் குருபரன்)
அமெரிக்க விஜயத்தைப் போன்றே பிரித்தானிய விஜயத்தின் போதும் பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பு, அபிவிருத்தி என பல விடயங்கள் இருதரப்பாலும் பேசப்பட்டன. இதில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பிரிட்டிஷ் காவற்துறையினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. மெட்ரோ பொலிற்றன் காவற்துறை மற்றும் பிரித்தானியப் புலனாய்வுத்துறை ஆகியவற்றுடன் விசேட சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. முன்னர் அமெரிக்க விஜயத்தின் போது எவ்வாறு பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் ஊடக தரப்பினருக்குத் தெரியாது மறைக்கப்பட்டனவோ அதுபோன்றே இந்த விஜயத்தின்போதும் மேற்கொள்ளப்பட்ட பல இரகசிய உடன்படிக்கைகளும் சந்திப்புகளும் ஊடகவியலாளர்களுக்குத் தெரியாது மறைக்கப்பட்டன. பிரித்தானியக் காவற்துறையுடனான சந்திப்புக் குறித்து எனக்கும் தெரிய வந்ததனால் அவை குறித்து ஊடகங்களில் அறிக்கையிட வேண்டாம் எனக் கேட்கப்பட்டும் இருந்தோம்.
 21 டிசம்பர் (ஆண்டு) இந்திய விஜயம் ஒன்றையும் றணில் மேற்கொண்டிருந்தார். அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய், துணைப்பிரதமர் அத்வானி, வெளிநாட்டமைச்சர் யஸ்வந்சின்கா, அருண்ஜெட்லி உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். பிரதமர் வாஜ்பாயுடனான சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு வர்த்தகம் தொடர்பில் றணில் உடன்பாடுகளை எட்டியிருந்தார். இது பற்றி டெல்லியில் இருந்து யு.கு.டீ கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிட்டு இருந்தது.
* PM meets Indian leaders> focus on trade and defence ties 
NEW DELHI> (AFP) - Prime Minister Ranil Wickremesinghe began a series of meetings with India's political leadership here yesterday> the first day of an official visit aimed at boosting defence and economic ties. 
First to arrive at the Prime Minister's hotel suite was Indian Foreign Minister Yashwant Sinha> who held talks with the Prime Minister for about 40 minutes. 
Sinha declined afterwards to divulge the contents of the discussions, merely saying they were part of the "ongoing process of consultations between India and Sri Lanka". 
Prime Minister, Wickremesinghe who arrived here late Sunday, then held a 45-minute meeting with Deputy Prime Minister Lal Krishna Advani before setting off for talks with Prime Minister Atal Behari Vajpayee. 
Wickremesinghe also met Commerce Minister Arun Jaitley. Today, the last day of his visit, he will hold talks with the civil aviation and petroleum ministers> as well as opposition leader Sonia Gandhi. 
Officials in Sri Lanka said at the weekend that the talks with Vajpayee would focus on a Comprehensive Economic Partnership Agreement to upgrade the free trade pact between the two South Asian neighbours. Sri Lanka was expected to request more training opportunities for its military personnel in prestigious Indian defence colleges, while New Delhi has offered to sell more military-related hardware to the island. 
Wickremesinghe's visit comes four days after Sinha attended a meeting in Colombo of a joint commission that reviews the entire gamut of bilateral relations. 
2002ல் கைச்சாத்தாகிய யுத்த நிறுத்த உடன்பாடு மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு  நோர்வே ஏற்பாட்டாளர் அந்தஸ்த்தில் இருக்க ஐரோப்பிய ஒன்றியம், யப்பான், அமெரிக்கா ஆகிய இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தன. இந்தவகையில் இந்திய விஜயத்தின் பின் உடனடியாகவே 2002 டிசம்பர் 30 ஆம் திகதி றணில் யப்பானுக்கும் பயணமாகினார். 
றணில் சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்குச் சமாந்தரமாக  இணைத் தலைமை நாடுகளையும், அவற்றோடு முரண்டு பிடித்துக்கொண்டிருந்த இந்தியாவையும் இலாவகமாகக் கையாளும் இராசதந்திரத்தைக் கைப்பிடித்தார்.
அதே நேரம் உள்நாட்டில் விடுதலைப் புலிகள் தாமாகவே சமாதான முயற்சிகளுக்கு எதிரானவர்களாக மாறக்கூடிய  களச் சூழ்நிலைகளை உள் நாட்டில் றணில் உருவாக்கினார். 
விடுதலைப்புலிகள் மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் மாற்றுத் தமிழ் அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள் மீது நடத்தும் தாக்குதல்களைக் கண்டும் காணாது அனுமதித்து வந்தார். இதனால் தமிழ்த்தரப்புகளிடம் இருந்தே நாளாந்தம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடுகள் செல்லுகின்ற நிலை உருவானது. சமாதானகாலத்தில் விடுதலைப்புலிகளால்  பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் சர்வதேச நாடுகளின் தூதரகங்களை நாடி அவர்களிடம் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த முறைப்பாடுகளைத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். சமாதானத்தை உருவாக்க முயன்ற சர்வதேசத்திற்குத் தமிழ்த் தரப்பினர் மூலமே  புலிகள் வன்முறையாளர்கள் என்பதனை றணில் சொல் லி  வைத்தார். இது அவரது மாமனார் ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் இராச தந்திரத்திற்கு ஒப்பான நடவடிக்கையாகும். றணிலின் இராசதந்திரம் புலிகளை இந்திய ராணுவத்துடன் மோத வைத்து புலிகளையும் ஈழத்தமிழர்களையும் இந்தியாவின் நிரந்தர எதிரிகளாக்கிய ஜே. ஆரின் சாமர்த்தியத்திற்கு ஒப்பானது. 
சமாதான காலத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் காரணமாகவும் இணைத்தலைமை நாடுகள் விடுதலைப்புலிகள் மீது அவநம்பிக்கை அடைந்திருந்தனர்.
மறுபுறம் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்த முரண்பாடுகள் தொடர்பாகவும் றணில் கவனம் செலுத்தி எண்ணை வார்க்கத் தொடங்கினார். 
யுத்த நிறுத்த உடன்பாடு கைச்சாத்தாவதற்கு முன்பு இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் கிழக்கின் அப்போதைய சிம்ம சொப்பனம் எனக் கருதப்பட்ட கருணா அம்மானை கொல்வதற்கான திட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தனர். இதனை அப்போது சமாதானப் பேச்சில் கலந்து கொண்ட அரச தரப்பினருடன் தனிப்பட்ட வகையில் உரையாடும் போது அறிந்துகொண்டேன். (இது கருணாவுக்கும் தெரியும்) 2002 பெப்ரவரி இறுதிவாரத்தில் கொல்லப்பட இருந்த கருணாவின் விதி யுத்த நிறுத்த உடன்பாட்டால் மாற்றி அமைக்கப்பட்டது. யுத்த நிறுத்த உடன்பாடு காரணமாக அந்தத் திட்டத்தை உடனடியாகவே கைவிடும்படி றணில் விக்கிரமசிங்க கிழக்கின் அப்போதைய தளபதி சாந்தகோத்தாகொடவுக்கு உத்தரவிட்டு இருந்தார்.  ( இது குறித்து கருணாவுக்கும் இப்போதும் உயிருடன் இருக்கும் புலிகளின் தலைவர்களுக்குத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.)
இந்த நிலையில் ஏற்கனவே 2001ன் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின் தலைமைக்கு தெரியாமல் தனது படையணியுடன் நடந்து மட்டக்களப்பிற்கு சென்ற கிழக்கின் தளபதியான கருணா அம்மானுக்கும் புலிகளின் தலைமைக்கும்; இடையில் ஏற்பட்டு இருந்த கருத்து முரண்பாடுகளைத் துல்லியமாக அறிந்து கொண்ட றணிலும் அவரின் நெருங்கிய உதவியாளர்களும் அதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். ஆனால் துர்ப்பாக்கியம் இந்த முரண்பாட்டை தீர்த்து பலமான ஒற்றுமையை கட்டி எழுப்புவதில் புலிகள் தோல்வி அடைந்திருந்தனர்.
காரணம்;  புலிகளின் தலைமை கருணாவோடு தமக்கு இருந்த முரண்பாட்டை தீர்பதற்கு புலனாய்வின் ஊடான காய்நகர்த்தல்களையே மேற்கொண்டிருந்தனர். அதற்காக தம்மோடு இருந்த முரண்பாட்டைக் கருத்திற்கொண்டு சமாதான பேச்சிற்கு கருணாவை அனுப்பிவிட்டு அவர் வெளிநாட்டில் இருக்கும் வேளையில் அவருக்கும் கரிகாலனுக்கும் பதில் பானு, றமேஸ், கௌசல்யன் போன்ற தமக்கு நெருக்கமான தளபதிகளை கிழக்கில் பலம்பெறச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 
ஆனால் கிழக்கை ஏறத்தாள 15 வருடங்களாகத் தனது கிடுக்கிப் பிடியில் வைத்திருந்த கருணாவுக்கு இவை புரியாமலுமில்லை. சமாதானப் பேச்சிற்கு வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கூட கிழக்கின் கட்டுப்பாட்டைத் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்தேயிருந்தார்.
இரண்டாவது தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்காலத்தின் போது  கருணாவுக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் இடையிலான விரிசல் இன்னும் வெளிப்படையாகத்தெரியத் தொடங்கியது.  
மூன்றாவது ஒஸ்லோப் பேச்சுவார்த்தையின் போது ஒருநாள் கருணாவோடு உரையாடும் போது எமது வானொலிக்கான சிறப்புப் பேட்டி ஒன்றைத் தருமாறு கேட்டிருந்தேன். (கருணா இதனை வாசித்தால் அவருக்கு ஞாபகம் வரக்கூடும்) அப்பொழுது அவர் சிரித்துக் கொண்டு கூறினார்: 'குருபரன் உங்கள் வானொலி பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னை ஊடகங்களுக்கு செவ்வி கொடுக்க வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். பாலா அண்ணையிடம் கேளுங்கள். அல்லது தமிழ்ச் செல்வனிடம் கேளுங்கள் எனச் சொன்னார். போர் நிலவிய காலத்தில் வீறு கொண்ட' தமிழ் இளைஞர்களின் ஆதர்ச புருஷனாகக் கருணா இருந்ததை எவரும் மறுக்க முடியாது. கருணாவின் பேட்டி எமது வானோலி நேயர்களை வேகுவாகக் கவர்ந்திருக்குமென்பதில் சந்தேகமற்றிருந்தேன். அதனால் அவரிடம் வற்புறுத்திக் கேட்டதன் பின்பு எமது உரையாடலின் பின்பு சிறு பேட்டி ஒன்றைத் தந்தேயிருந்தார். அது உடனடியாகவே தொலைபேசிவழியாக எமது வானொலியில் ஒலிபரப்பானது.  
இந்த உரையாடலின் பின்பு கருணா விரைவில் புலிகளில் இருந்து உடைந்து செல்லக்கூடும் என்ற என் எண்ணம் வலிமை அடைந்திருந்தது. இக்காலத்தில் அரசாங்க படைகளின் அப்போதைய கிழக்கின் தளபதியும் பின்னர் ராணுவத் தளபதியாக இருந்தவருமான சாந்தகோத்தாகொடவும் அரச தரப்பிற் பேச்சில் கலந்து கொண்டிருந்தார். 
மூன்றாவது ஒஸ்லோப் பேச்சுவார்த்தை என நினைக்கிறேன். அமைச்சர் மிலிந்த மொறகொட, கிழக்கின் படைத்தளபதி சாந்தகோத்தாகொட மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தோம். அவ்வேளையிற் பலவிடயங்கள் பேசப்பட்ட போதும் உங்களுக்குப் பிடித்தமானவர் யார் என்ற கேள்வி ஒன்றுக்கு அரசாங்க அமைச்சர் மிலிந்த மொறகொடவும் கிழக்கின் தளபதி சாந்தகோத்தாகொடவும் கருணாதான் தமக்கு பிடித்தமானவர் எனப் பதிலளித்திருந்தனர். ஒருகாலத்தில் வன்னிக் களமுனையில் நேருக்கு நேர் மோதிய இருவரும் இப்போ ஒரே மேசையில் பேசுகிறோம். அவரிடம் இராணுவத்திறமைகள் மட்டுமே உண்டு என நினைத்தோம் ஆனால் அவரிடம் நல்ல அரசியல் சிந்தனையும் பார்வையும் ஆற்றலும் இருப்பது வியப்பாக உள்ளது. பேச்சுவார்த்தை மேசையிலும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுகிறார் எனக் கூறினார்கள்.
இந்த உரையாடலும் கருணா மெல்ல மெல்லப் புலிகளின் கூண்டில் இருந்து நகருகிறார் அல்லது நகர்த்தப்படுகிறார் என்பதனைத் தெளிவாக்கியது. ஓவ்வாரு பேச்சுவார்த்தகளின் போதும் அரசாங்கத் தரப்பினர் கருணாவுடன் தனியாக பேசுவதற்கு முயன்றனர் அல்லது பேசினர் என்பது உண்மையானது. இதனை இப்பொழுதும் கருணா மறுக்க மாட்டார் என நம்புகிறேன்.
இவை மட்டுமல்லாது மூன்றாவது பேச்சுவார்த்தையின் பின்பு கருணா வன்னி செல்வதனைத் தவிர்த்திருந்தார். ஓவ்வொரு தடவையும் கிழக்கிற்கு செல்லும் உலங்கு வானூர்தி அவரையும் அவரது உதவியாளர்களையும் நேரடியாகவே கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வரும். பேச்சு வார்த்தை முடிந்ததும் கருணா குழுவினரை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் உலங்கு வானூர்தி மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லும்.
இவ்வாறு அரசாங்க மற்றும் இராணுவத் தரப்பினருடனான பயணங்களும் கருணா சாந்த கோத்தகொட மற்றும் மிலிந்த மொறகொட ஆகியோருக்கிடையில் நட்பு விரிவடைய வளர காரணமாயிருந்தன. 
இந்தவிடத்தில் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் நேரிடையாக அல்லது அவர்களின் அனுசரணையுடன் மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகளில் கிழக்குமாகாணம் புறக்கணிப்புக்களை எதிர் கொண்டிருந்தமையையும் கவனிக்க வேண்டும்.
சமாதான காலத்தில் வன்னியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில அபிவிருத்திகள், ஆடம்பரவாழ்வு நோக்கிய நகர்வுகள் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை. இந்த ஏற்றத்தாழ்வுகளை அரச தரப்பினர் கருணாலுடனான தமது உரையாடல்களின் போது அவ்வப்போது சொல்லிப் பிரதேச வாதத்தை தூண்டும்  வேலைகளையும் சிறப்பாக மேற்கொண்டனர்.
இவை ஒருபுறமாக நடந்து கொண்டிருக்கும் போது மறு முனையில் விடுதலைப்புலிகளின் பொருட்கொள்வனவு மற்றும் வியாபாரச் செயற்பாடுகள் தொடர்பாக தராளவாதப் போக்கை றணில் கடைப்பிடித்தார். தாராளவாதம் என்று சொல்லும் போது வன்னிக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் தங்குதடையின்றி அனுப்பினார். சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்டவர்கள் அனைத்து வியாபார நடவடிக்கைகளிலும் இறங்கினர். கொக்கோகோலா, பால்மா வகைகள், உரவகைகள், வாகன உதிரிப் பாகங்கள், வாகனங்கள் எனப்பலவகையான, பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் நேரடி முகவர்களாகச் செயற்படத் தொடங்கினர். இதனால் சமாதான காலத்தில் வன்னிப்பகுதி ஒரு குட்டிச்சிங்கப்பூராக மாறியிருந்தது என பலரும் கூறத்தலைப்பட்டிருந்தனர். முக்கியமான வீதிகள் யாவும் 'கம்பள' வீதிகளாக மாறின. கொழும்பில் புதிதாக இறக்குமதி செய்யப்படும் புதிய ரக வாகனங்கள் வன்னியிற் புலிகளின் தளபதிகளிடமும் உடனே இருக்கும்.
கொழும்பில் இருக்கும் ஆடம்பர வீடுகளுக்கு ஈடான வீடுகளாக தளபதிகள் தங்கும் வீடுகள் மற்றும் அவர்களின் அலுவலகங்கள் மாற்றம் அடைந்தன. புலிகளின் 90 வீதமான அலுவலகங்களிற் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் உபயோகத்திற்கு வந்தது. மென்பானங்கள் தாராளமாக கிடைத்தன. புலிகளின் பொறுப்பாளர்களின் அலுவலகங்களில் நவீன மடிக்கணணிகள் பெருமளவுக்கிருந்தன. பணம் கரைபுரண்டோடியது. காரணம் வன்னிக்குச் செல்லும் பொருட்களுக்கும் வன்னியைத் தாண்டி யாழ் செல்லும் பொருட்களுக்கும் புலிகள் விதித்த வரி மூலம் பெருமளவான பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர். 
இவற்றை நான் இங்கு சொல்வதற்காரணம் அரசியல் ரீதியானது. என்னேனில் ஜே.வீ.பீ உள்ளிட்ட இலங்கையின் கடும் போக்காளர்கள் பலர் றணிலின் இந்தத் தாராளவாதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தபோதும் றணிலின் இந்தத் தாராளவாதம் 2002ற்கு பின்பு  புலிப்போராளிகளிடம் குறிப்பாக படைத் தலைவர்களிடம் முன்பிருந்த போராடும் உணர்வை மழுங்கடிப்பதில் பங்காற்றியது. பல தளபதிகள் திருமணவாழ்வில் நுழைந்திருந்தனர் பெற்றோராகியிருந்தனர். ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காட்டு வாழ்க்கை திடீரென சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நகர வாழ்வாக மாறிய போது அதனை எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான அறிவூட்டல்களோ அல்லது முன்னேற்பாடுகளோ  புலிகளிடம் இருந்திருக்கவில்லை.
யுத்தகாலத்தில் கிழக்கு எப்படி மிகவும் பின்தங்கியிருந்ததோ அதே நிலைமைதான் சமாதான காலத்திலும் இருந்தது. வீதிகள் குன்றும் குழியுமாக இருக்க வன்னி வீதிகள் கம்பளத்தரைகளாக மாறி இருந்தன.
இங்கே மிக முக்கியமான பதிவொன்றைச் செய்தாக வேண்டும். சுனாமிப் பேரலையின் பின்பு கனேடியத் தேசிய வானொலி ஒன்றின் செய்தியாளரை வடக்கு கிழக்கிற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பொன்று ஏற்பட்டது. ஒருவாரப் பயணம். முதலில் வடக்கிற்கு சென்றோம் அங்கே அனர்த்த கால அவசர சேவைப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கான பாரிய அலுவலகம் ஒன்று கட்டப்பட்டு நவீன மடிக்கணனிகள் மூலம் தரவுகள் பதியப்பட்டு ஒரு அரசாங்கம் எப்படிச் செயற்படுமோ அந்தத்தரத்திற்கு புலிகள் செயற்பட்டார்கள்.
ஆனால் கிழக்கின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் மிக வசதியற்ற நிலைமைகளிலேயே பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.  சம்பூரில் புலிகளின் அலுவலகத்தில் இருந்த திருமலைத் தளபதி சொர்ணம் மற்றும் எழிலன் ஆகியோருடன் உரையாடும் போது குறிப்பாக சொர்ணத்துடனான உரையாடலின் போது இந்த நிலைமை குறித்து அவர் மிகவும் வேதனையுடன் காணப்பட்டார்.
குறிப்பாக சொர்ணத்துடன் உரையாடும் போது 'வளங்கள் சரியாகப் பகிரப்படாமை என்ற பிரச்சனை வெளியில் மட்டும் அல்ல புலிகளிடமும் இருக்கிறது. இதனைச் சீர்செய்ய முயற்சிக்கிறோம் என்ன செய்வது கிழக்கின் நிலமை இவ்வாறாகத்தான் தொடர்கிறது' எனக் கூறினார். 'இது எனது தனிப்பட்ட கருத்து ஊடகச்செய்தியிடலுக்கு அல்ல' எனவும் அவர் கூறினார். திரு பதுமன் அவர்களுக்குப் பின் நியமிக்கப்பட்ட  சொர்ணமும் அவர்களூம் கூடச் அதிருப்திகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதனை அவரது உரையாடல் புலப்படுத்தியிருந்தது.
இதற்கு இன்னும் ஒரு உதாரணத்தை இங்கு சொல்லலாம். திருமலையின் மூதூர் சம்பூர் பகுதியின் உட்கிராமம் ஒன்றின் ஊடாக செல்லும் போது மிகவும் பின்தங்கிய பகுதியின் ஊடாக ஒரு பெண் தனது சிறு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஒரு பொதியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை எமது வாகனத்தில் ஏற்றினோம் அவருடன் உரையாடுகையில் அவர் கூறினார் கிரமத்தில் இருந்து சிறு நகரத்தில் இருக்கும் சிறு வைத்தியசாலைக்கு செல்வதென்றாலோ அல்லது பொருட்களை பெறுவதற்கு செல்வதென்றாலோ 5 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும்.  போக்குவரத்து எதுவும் இல்லை என்றார். ஆனால் சமாதான காலத்தில் இப்படியான ஒரு சூழலை வன்னயின் எந்தக் கிராமத்திலும் பார்க்க முடியாது. கல்வி சுகாதாரம், மருத்துவம் சமூக முன்னேற்றம், அபிவிருத்தி என்னபன யுத்தகாலத்தில் எப்படி இருந்தனவோ அதே நிலைதான் சமாதானம் நிலவிய 3வருடகாலத்திலும் நிலவின.
சமாதான காலத்தில் திடீரெனெ ஊதிப்பருத்த வன்னியின் நிலமைகளுக்கு ஈடாக கிழக்கின் நிலமைகளை முன்னேற்றுவதற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுத்திருந்ததாக என்னால் அந்தக்காலத்தில் உணர முடியவில்லை. கிழக்கு தொடர்பாக அவர்கள் அக்கறையற்றிருந்தனரோ என்ற ஆழமான கேள்விக்கும் கருணாவின் பிளவுக்கான சூழ்நிலைகளுக்கும் தொடர்புகள் உள்ளன. 
கருணா புலிகளுடன் கொண்டிருந்த முரண்பாட்டிற்கு தனது தவறுகளை மறைப்பதற்கு, காட்டு வாழ்வில் இருந்து நகர வாழ்வுக்கு தன்னை மாற்றுவதற்கு பிரதேச வாதம் என்ற ஒரு அரசியல் முலாத்தை பூச இந்த நிலமைகள் வழிவகுத்தனவேனவும் கூறலாம். இது பற்றி கருணாவின் பிளவின் பின் எமது வானொலி செய்தியில் ஒலிபரப்பான கருணா தரப்பினரின் அறிக்கை ஒன்றில் அடிக் குறிப்பாக 20 வருடம் புலிகளின் தலைமை குறித்தும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அலட்டிக் கொள்ளாத கருணாவுக்கு இப்போதுதானா தவறுகளாக தெரிகிறது என கேள்வி எழுப்பி இருந்தேன். அன்று மாலை தொலைபேசியில் இணைந்து கொண்ட மார்க்கன் என்ற தளபதி 'அண்ணை புலிகள் மட்டும் தான் கொழும்புக்கு வந்து சுடுவார்கள் என நினைக்காதீர்கள் நாமும் கொழும்பு வந்து சுடுவோம்' என மிரட்டினார்.
இவ்வாறான சூழலிலேயே பிரதேசவாதம் என்பதனைக் கையிலெடுத்த கருணா தனக்கென தனியான சாம்ராஜ்யத்தைக் கிழக்கில் உருவாக்கியிருந்தார். வன்னியில் இருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளை அவர் 2002ன் பின் ஏற்றதாக எனக்கு தெரியவில்லை. பணச் சேகரிப்பு ஆட்திரட்டல் உள்ளிட்ட யாவுமே கருணாவின் கட்டுப்பாட்டுள் வந்தது. பேச்சுவார்த்தை காலத்தில் அரசாங்கப் படைத்தரப்போடு ஏற்பட்ட நெருக்கமும் அரச தரப்பினரோடு ஏற்பட்ட புரிந்துணர்வும் அவரது தற்துணிச்சலை இன்னும் அதிகரித்தன. இதன் பின்னான அதிர்ச்சிதரும் விடயங்கள் அடுத்த பாகத்தில் தொடரும்
 Nantri globaltamilnews

1 comment:

kirrukan said...

[quote]யுத்தகாலத்தில் கிழக்கு எப்படி மிகவும் பின்தங்கியிருந்ததோ அதே நிலைமைதான் சமாதான காலத்திலும் இருந்தது. வீதிகள் குன்றும் குழியுமாக இருக்க வன்னி வீதிகள் கம்பளத்தரைகளாக மாறி இருந்தன[quote]

ம்ம்ம்ம். .....கேட்கிறவன் ... என்றால் எருமைமாடும் ஏரொபிளேன் ஒடுமாம்


இப்ப இவர் என்ன சொல்லவாரார் எல்லாத்துக்கும் காரணம் ரணிலும் ஜ.தே.கயும் தான் ..மகிந்தா நல்லவர் வல்லவர் என்றோ