விடியலைத் தேடிய விழிகள். -கவிதை -செ;பாஸ்கரன்


.

கண்ணிமையின் படபடப்பில்
மின்னல் முளைத்துப் போகிறது
காற்றுக்கூட மெல்லவீசி
உன் மூச்சுக்காற்றைத் தேடுகிறது
வாழ்க்கையின் தத்துவங்கள் போல
நீ வந்து வந்து போகிறாய்
தென்றலின் அசைவில்கூட 
தென்னைமரம் சிலிர்த்துக் கொள்வதுபோல்
உன் வருகையில் நான் உயரப் பறக்கிறேன்
காலைத் தொட்டுச் செல்லும் நதிநீர்போல்
தலையைத் தடவிப்பார்க்கும் தென்றல்போல்
வந்த இடமும் போன இடமும் தெரியாது 
சூனியமாய் சுற்றுகிறது வாழ்க்கை

வற்றிப்போன ஓடையொன்று
வரைந்து விட்டுப்போன சித்திரம் போல
வந்து போன உன் நினைவுகளும்
சித்திரமாய் மனதில் பதிந்து கிடக்கிறது.

ஆற்று மணலை காற்றள்ளித் தூற்றியது போல
உன் சிரிப்பொலியும் சிதறிக்கிடக்கிறது
எவரின் பார்வையும் பட்டுவிடாதபாலைவனம்
இருள்மூடிக்கிடக்கும்போதும்
நீ மட்டும் பிரகாசமாய்
இருளைக்கிளித்து இசைமீட்டுகிறாய்

தேசத்தின் சுவடுகள் தேடி
நீ தடம்பதித்து நடந்தாய்
சுவடுகள் அழிந்த தேசத்தில் 
உன் பாதச்சுவடுகளும் கருகிப்போனது
காற்றும் கண்ணீர் சிந்தியதை
அன்றுதான் பார்த்தேன்
நீ மட்டும் கலகலத்து சிரித்து
காற்றில் மிதக்கின்றாய்
உன் விடியலைத் தேடிய விழிகள்
படபடக்கும் போது
மின்னல் சிரிக்கிறது.

3 comments:

Anonymous said...

very good kavithai

Selvi said...

"தேசத்தின் சுவடுகள் தேடி
நீ தடம்பதித்து நடந்தாய்
சுவடுகள் அழிந்த தேசத்தில்
உன் பாதச்சுவடுகளும் கருகிப்போனது
காற்றும் கண்ணீர் சிந்தியதை
அன்றுதான் பார்த்தேன்"

நல்ல வரிகள். இதமான மழையின்போது எழுந்திடும் வாசம்போல் உள்ளது.

பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பு வெளிவர உள்ளதாம் எங்கே எப்போது என்ற விபரங்களை தவறாது அறிவியுங்கள்

Ramesh said...

கவிதை அருமையாக உள்ளது செ.பாஸ்கரன். தொடர்து எழுதுங்கள்.

என்ன ஆசிரியர் குழு தீவிரமாக செயற்படுவது போன்று தெரிகிறது. சிட்னி மெல்பன் நிகழ்வுகள் எல்லாம் ஒரே அடியாக படங்களுடன் வந்து தூள் கிளப்புகின்றது. எங்கே படலைக்கு படலை தேடுகிறேன் காணவில்லை?

நீண்ட நாள் இலங்கை சென்று திரும்பியுள்ளேன். இனி குற்றம் குறைகள் எழுதலாம் என்று யோசிக்கிறன்
மீண்டும் வருவேன்

இரமேஸ்
( என்ன புதிதாக பெயர் என்று யோசிக்கவேண்டாம் இலங்கையில என்ர தாத்தா பண்டிதர் சொல்னவர் ரமேஸ் எண்டு எழுதுவது தவறாம் இரமேஸ் என்று எழுதவேண்டுமாம் வேலையில என்ன தமிழா எழுதப்போறன் சரி முரசில எழுதுவம் எண்டுதான்)

அன்புடன் இரமேஸ்