கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)

.
"அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன தெரியுமா? இந்த விருது எனக்கு கிடைக்குமென்று என் பதின்மூன்று வயதிலேயே எனக்கு தெரிந்திருந்தது.

ஆம்.., அப்பவே நினைவு தெரிந்த போதே பெரிய ஆளுன்னு நினைப்பெனக்கு. என் நண்பன் சொல்லுவான் பெரிய மயிருடா நீன்னு சொல்லுவான், எனக்கு மனசுல தோணும் ஆமாண்டா நான் பெரிய மயிருதான்‘னு தோணும். ஏன்னா அப்படி ஒரு நம்பிக்கை எனக்கு என் மேல, இந்த வாழ்க்கை மேல.

முடியாதுன்னு நான் எதையுமே சொல்லமாட்டேன். வானத்தை தொட முடியுமான்னா முடியும்பேன். உலகத்தை தூக்க முடியுமான்னா தூக்கி ஒரு சுண்டுவிரல்ல நிறுத்தட்டுமா'ம்பேன். அப்படி ஒரு அசாத்திய நம்பிக்கை வேணும். அது எனக்கு இருந்தது. அது என்னை தீயா வளர்த்துச்சி. விவேகானந்தர் சொல்வாரு “எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்ன்னு’ அதை கேள்விப் படும் முன்னரே, எதுவாக நினைக்கிறனோ அதுவாக ஆவேன்னு நான் கனவு கண்டிருக்கிறேன். இது இப்படி தான்னு உணர்ந்திருக்கிறேன். நாம என்ன ஆவனும்றதை உண்மையில் நாமதான் தீர்மானிக்கிறோம். தீர்மானிக்கணும்” அழுந்த சொல்லி விட்டு அமைதியாக வளாகத்தையே பார்த்தார்.


“என் நண்பன் தான் எனக்கு முதல் நேசமானவன், அதேநேரம் என் முதல் எதிக்கும் சமமானவன் அவன்தான். என் சில நல்லவைகளுக்கு கூட இருந்தும், நிறைய இடத்தில் என்னைக் கெடுத்தவனும் அவன்தான். ஆனால், எங்கிருந்தாலும் யாருடன் இருந்தாலும் நாம் தான் நம்மை பக்குவமா வைத்துக் கொள்ளனும், நம் நல்லதை நோக்கி சிந்திப்பது நாமாகத் தான் இருக்கணும். நான் சிந்திப்பேன், யாருடன் சேர்ந்தாலும் எங்கே போனாலும் என் நடத்தை பற்றி சிந்திப்பேன். இப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஒழுக்கம் குறித்த ஒரு வரையறையினை எப்பொழுதும் வைத்திருப்பேன். அதை உடைப்பதே அவனுக்கு நோக்கமாக இருக்கும். நேரா எழுந்து வருவான் “நீ ஆம்பளையா இருந்தா இதை தாண்டி காட்டுடா பார்க்கலாம்னு சொல்லிட்டு ஒரு கட்டையை தூக்கி அவன் தலைக்கு மேல வெச்சிட்டுப் போவான். என்னால் அப்படி சாதாரணமா போயிடமுடியாது. அதை தாண்டுவதில் மட்டுமே எனது கவனமிருக்கும்.

எனக்கு அங்கே என்னை ஆம்மபலைன்னு நிரூபிக்கிறது எண்ணமில்லை, இது முடியாதா? முயற்சித்தா இதை தாண்டிக் காட்ட முடியாதான்னு ஒரு வேகம் வரும், அதுக்காக அதை தாண்டும்வரை சாப்பிடாமலோ தூங்காமலோ இருக்கமாட்டேன். தாண்டி தாண்டி பார்ப்பேன் முடியிற வரை முயற்சி செய்வேன், சாப்பிடலானாலும் பரவாயில்லை தூங்குற நேரமாயிடுச்சா தூங்க போய்டுவேன். லட்சியத்தை கவனமா தான் வெல்லனும். அதை வெல்லும் உறுதி உள்ளளவுக்கு நம்மை நாம் சக்தி படுத்திக்கணும். நம்மை நாம எப்பவும் பலம்மா வைத்துக் கொள்ளனும்.." பேசிக்கொண்டே வளாகத்தை சுற்றிப் பார்க்கிறார். வளாகம் கட்டுண்டு போனதுபோல் காது கொடுத்து அமர்ந்திருந்தது. ஜானகிராமன் மீண்டும் தொடர்ந்தார்..

"ஆனாப்பாருங்க அன்றைக்கு இரவு முழுக்க எனக்கு அதை எப்படி தாண்டுவதுன்னு தான் எண்ணமிருக்கும். மறுநாள் விடிந்ததும் அந்த கட்டையை தூக்கி என் தலைக்குமேல இரண்டுமடங்கு வைத்துவிட்டு தாண்டிப் பார்ப்பேன். தாண்டி தாண்டி சாந்திரம் வானம் மூடும் முன் அந்த உசரத்தைத் தொடுவேன். அதை தொடுறேன் பாருங்க அப்பதான் அந்த நண்பன் மேல எனக்கு மரியாதை வரும். ஏன்னா மறைமுகமா நம் வெற்றிக்கு நண்பர்களும் காரணாமா இருக்கிறார்கள். எனவே நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மிக முக்கியம் என்பதை இளைஞர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்" விருது வழங்கும் விழா நேரடி ஒளிபரப்பாக தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்டது. எல்லோரும் அவரின் வார்த்தைக்குள் சிக்கி அழுத்தமாக அமர்ந்திருந்தனர்.

"முக்கியமா நம்மோடுள்ள நண்பர்கள் தான் அந்த பருவத்துல நமக்கு உலகமாவே தெரியறாங்க, அதனால நீங்கல்லாம் நல்ல நண்பர்களை, உங்களின் திறனை பலத்தை வெளிப்படுத்தும், உங்களை ஊக்குவிக்கும் நண்பர்களை, தன்னைச் சுற்றி இருப்பதுபோல் அமைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு நட்பென்பது நம்மை ஊக்கப் படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, நிச்சயமாக நம்மை மட்டப்படுத்துவதாக இருக்கக் கூடாது. நண்பர்களுக்கும் துரோகிகளுக்கும் நிறைய இடைவெளியுள்ளது அதை கண்டுணர்ந்து நம் நண்பர்களை மட்டும் நாம் அடையாளம் தெரிந்து அவர்களிடத்தில் நட்பையும் மதிப்பையும் அன்பையும் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

ஆனால் அவன் எனக்கு அப்படியில்லை, அவனுக்கு எண்ணம் என்னை ஊக்குவிப்பதில் இல்லை மட்டப் படுத்துவதிலோ அல்லது என்னைக் கேளிக்கையாக்கி பிறரை சிரிக்கவைத்து அவன் தன்னை புத்திசாளியாகக் காட்டிக்கொள்வதிலோ தானிருந்தது.

அதையெல்லாம் கடந்து வந்தும் இச்சமுதாயம் குறித்து நிறைய சிந்திப்பேன், சமுதாய சீர்கேட்டை தட்டிக் கேட்கவேண்டுமென்று முனைவேன். அதற்கென்னை தயார்படுத்திக் கொள்ளும் முயற்சியாக உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக் கலைகளைப் பயிலத் துவங்கினேன். அப்போதெல்லாம் அவனும் என் உடனிருப்பான். பயிற்சியின் பொருட்டு நான் இரண்டு மூன்று செங்கற்களை அடுக்கி உடைக்க முயற்சிக்கும் வேலையில் இன்னும் இரண்டினை எடுத்து அதன்மீது வைத்துவிட்டு இப்போது உன்னால் உடைக்கமுடியுமா, எங்கே உடைத்துக்காட்டு என்பான். மேலே ஒருபடி சென்று கேளிக்கையாய் ஏதேனும் செய்து சிரிக்கவும் செய்வான்.

அதை உடைக்காமல் நான் விட்டதேயில்லை. அதன்மீது இன்னொரு கல் சேர்த்துவைத்து அதையும் உடைத்துக் காட்டுவேன். பிற்காலத்தில் நிறைய செயல்களை நான் முடியும் என்று ஏற்று சவாலிற்கு தயாராக நிற்க இதுபோன்ற தருணங்கள் எனக்குள் அடியுரமாகப் பதிந்து என் மனதிற்குள் பலமாகயிருந்தது. எதை செய்ய நினைத்தாலும் நிச்சயம் நம்மால் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை அதிகமாய் எனக்குள் இதுபோன்ற தருணங்களே வளர்த்துத் தந்தது.

அதோடு, அவனோடு நான் நின்றுவிடவில்லை. என்னை வளர்த்தவர்கள்.. அதுபோல் ஊரெல்லாம் உலகின் தெருவெல்லாம் நின்றிருந்தார்கள்...

வீட்டில் அப்போதெல்லாம் கடுமையான வறுமை இருந்தது. ஒருவேளை சோற்றை கூட இரண்டுமூன்று நாளுக்கு தண்ணீர் ஊற்றிவைத்து நாலணா பூண்டு ஊருகாயோடு பழயசாதமாக சாப்பிடுவோம். சிலநாட்கள் அந்த ஊறுகாய் கூட இருக்காது. இன்னும் சில நாட்கள் அந்த பழையசாதமும் மிஞ்சாது. பட்டினியில் காய்ந்த வையிறுகளால் மறக்கப்பட்ட நாட்கள் எத்தனை எத்தனையோ..

வேறு வழியின்றி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போயிருக்கலாம், ஆனால் வேலை செய்துக் கொண்டே படித்தாலென்ன என்று நான் இரவில் வேலை செய்துக்கொண்டு பகலில் படித்து வந்தேன்.

எங்களின் வீடு அப்போது மணலி எனும் பேரூரை சார்ந்திருந்தது. அங்கெல்லாம் பற்றவைப்பாளர் என்றால் அப்போது ஒரு பெரிய மதிப்பிருந்தது. அந்த தொழிலை கற்றுக் கொண்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்றார்கள், சம்பாதிச்சா வீட்டின் துயரம் தீருமென்று புரிந்துக் கொண்டேன். அம்மாவின் கண்ணீரைத் துடைக்க என் கண்ணில் நெருப்பெரிய ஆரம்பித்தது.

மதிய வேலையில் உணவுண்ண போகமாட்டேன், என் ஆசான் செய்வது போலவே நானும் இரண்டு துண்டு இரும்பை எடுத்து பற்றவைத்துப் பார்ப்பேன். கண்கள் இரண்டும் தீயாய் எரியும். எறிந்த கண்களில் உருளைக் கிழங்கோ வாழைப்பழத் தோளோ கட்டிக் கொண்டு படுப்பேன், மீண்டும் மறுநாள் பற்றவைப்பு நடக்கும், மீண்டும் கண்கள் எரியும், போகும் வரும் பாதை கூட சரியாக தெரியாது. இருந்தும் இடைவிடாது முயற்சித்து பயிற்சி எடுத்து எடுத்து ஒருவழியாக கைதேர்ந்த வெல்டர் ஆனேன். அதாவது பற்றவைப்பாளன் ஆனேன்..

பற்றவைப்பு பணி என்றால் என்ன, அதிலுள்ள நுணுக்கங்கள் என்னென்ன, எதை அதில் வென்றால் பெரிய ஆளாக அதில் இருக்கலாம் என்று அத்தொழிலின் எல்லாம் முனையிலும் பார்த்தேன். சூழ்சுமம் புரியத் துவங்க பெரியதொரு ஆளென்று அதில் பேரெடுத்தேன். அதைக் கண்டும் பொறாமைப் பட்டது உலகம்.

‘என்னடா கிழிச்ச நீ வெல்டரென்றால் பெரிய ஆளுன்னு நினைப்பா? வெல்டரென்றால் முட்டாளென்று தெரியாதா உனக்கு? என்றார்கள். கோபம் பொத்துக்கொண்டு வந்தது, கோபத்தை அடக்கிக் கொண்டேன், வேறென்ன செய்யவேண்டும் என்றேன். என்ன செய்வாய், உன்னால் என்ன செய்ய முடியும் ‘வெல்டர் என்றால் இப்படித் தான், காலத்திற்கும் இப்படித் தான் சிந்திக்கவே தெரியாத அறிவிலியாக இருக்க வேண்டும், அரைத்ததைத் தான் அரைக்கவேண்டும் என்றார்கள்.

வார்த்தைகளின் சூட்டை இதயத்தில் போட்டுக் கொண்டேன். எனக்கு மேல் வேறென்ன என்று பார்த்தேன், இதே துறையில் இன்னும் வேறென்ன செய்யலாமென்று எல்லோரிடமும் விசாரித்தேன், என் நடை அடுத்து இன்ஸ்பெக்டராக மாறியது. கனவு கண்காணிப்பாளனாவதில் பூத்தது.

பகலில் கண்காணிப்பாளனுக்காகப் படித்துக் கொண்டே இரவில் வேலை செய்தேன். ஒவ்வொரு இரும்பின் இணைப்பையும் பற்றவைத்தப் பின் அதை ஒரு கண்காணிப்பாளனாகவே பார்ப்பேன். என் நோக்கம் மெல்ல மெல்ல நகர்ந்து வெற்றிகண்டு அதற்கான படிப்பும் முடிந்தது. எனைப் பார்த்து என்னோடு இருந்தவர்கள் எல்லாம் படிக்க ஆரம்பித்தார்கள். நான் பற்றவைப்பாளன் ஆனபோது என் தொழிலை வேறு பத்து பேருக்கேனும் கற்றுக் கொடுத்திருப்பேன். அந்த பத்திலிருந்து அது நூறு பேருக்கேனும் அத்தொழில் பரவியிருக்கும்.

அதுபோல் நான் படிக்க ஆரம்பித்தபோது என்னோடிருந்த பத்து பேரும் படிக்க ஆரம்பித்தனர். எனக்கு கீழேயிருந்த நூறு பேரும் படிக்க இசைந்தார்கள். இன்று நூறைக் கடந்த எத்தனையோ பேர் சாதாரண வேலையிலிருந்து படித்த வேலைக்கு மாறி வந்துள்ளனர். நம் வெற்றியை நாம் அப்படி பிறரோடு சேர்த்து அமைத்துக் கொள்ளவேண்டும். நம் வெற்றி கூட அப்படி பிறர கண்ணை உருத்தாமல் வாய்க்கவேண்டும். நம்மோடுள்ளவர்களை நம்மைவிட மேலாக வளர்ப்பது நம்மை வளர்த்துக்க் கொள்வதற்கே சமம்.

பின் மெல்ல படித்து படித்து மேலே வர வர ஒரு கட்டத்தில் கண்காணிப்பாளனாக வேலையும் கிடைத்தது. அங்கு போனால் பொறியாளனின் கைபொம்மைதான் கண்காணிப்பாளன் என்றனர். அதாவது ஒரு இன்ஜினியருக்கு கீழ்படிந்து தான் இன்ஸ்பெக்டர் எல்லாம் இருக்கனும் என்று எழுதாத சட்டம் ஒன்றினை வைத்தார்கள். அங்கே ஒரு பொறியாளன் சொல்வதே மறுப்பில்லா தீர்ப்பானது. ஏதேனும் சரி என்றாலும் அவன் தவறு என்று சொன்னால் அது தவறு தான், காரணம் அவன் தான் பொறியாளன் நீயல்ல என்றார்கள். அதும் அந்த பொறியாளன் வேற்று இனமாக இருந்தால் அதன் அழுத்தமும் துரோகமும் அளவிட முடியாத அளவிற்கு நீடித்தது.

பொறுக்கமுடியாமல், அடிமைத்தனம் மறுத்து திமிரும் இனமானம் உள்ளே சுடர்விட்டு எரிய, சிலிர்த்துக் கொண்டது உணர்வுகள் மீண்டும். வானமே எல்லையென்று எண்ணம் கொண்டேன். உழைக்கும் ஒவ்வொரு துளி வியர்வையும் நாம் நம் வாழ்வின் நன்மைக்கு வேண்டி முன்னதாக இடும் முன்பணம் போன்று என்று உணர்ந்துக் கொண்டேன். இரவும் பகலும் வேலையும் படிப்புமாய் அலைந்து அலைந்து திரிந்ததில் பொறியாளனாகி பின் அதிலும் முதிர்ச்சி பெற்று மேலாளராகக் கூட ஆகமுடிந்தது என்னால். லட்ச லட்சமாய் சம்பாதிக்க முடிந்தது. அத்தனையையும் முடியும் என்று செய்து காட்டியபின், என்னோடு சேர்த்து பலரை என் உயரத்திற்கு மாற்றிவிட்ட பின் அந்த வேலையையும் விட்டுவந்தேன். எழுத்தொன்றே உயிரென்று லட்சியம் பூண்டேன்..

காரணம் என் நோக்கம் வெறும் பணம் அல்ல. என் லட்சியமென்பது வெல்வதில் மட்டுமேயிருந்தது. என் வெற்றியை வழியென பிறருக்கும் காட்டுவதிலேயே இருந்தது. நினைத்தால் முடியுமென்பதை என் மக்களுக்கு போதித்து, என் இளைஞர்களுக்குப் போதித்து, என் ஏழ்மைக் குடிகளின் வறுமையை போக்குவதில் மட்டுமேயிருந்தது.

அதற்கென போராடிய வாழ்வினிடையே எனக்கு உதவிய இன்னொரு ஆயுதம் தான் இந்த எழுதுகோல்” தன் சட்டைப்பையில் கைவைத்துக் காட்டினார். அப்போது சட்டைப்பையிலிருந்த அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. எடுத்துப் பேச எண்ணுவதற்குள் இணைப்பு துண்டித்துப் போக, அதை அப்படியே சட்டைப்பையில் போட்டுக் கொண்டு தொடர்கிறார்..

“ஆம் தோழர்களே, எதையோ சாதிப்பேன் எதையோ சாதிப்பேன் என்றெண்ணிய எனக்கு ஞானாவாக்காக உள்ளே பதிவானது என் எழுத்து தான். எழுத எழுத எழுத்து என்னுள் பிரவாகமாகப் பரவியது. எழுத்தினால் என் அருகில் இருப்போர் மாறக் கண்டேன். எழுத்தினால் இச்சமூகத்தின் சீர்கேட்டை சுட்டிக்காட்ட முடிவதைக் கண்டேன். எழுத்தின் இடுக்களில் ஒரு காலத்தின் வாழ்தலின் பதிவிருப்பதைக் கண்டேன். எழுத்தினால் உலகைப் புரட்டிப் போடமுடியுமென்று நம்பினேன். என் அடுத்த லட்சியம் எழுத்தானது. எழுத்தின் இறுதி என் வாழ்வானது. வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் இந்த விருது பதிவு செய்யுமென்று அன்று நம்பினேன்”

சொல்லிவிட்டு அங்குமினும் பார்த்தார்..

“சொன்னால் நம்ப மாட்டீர்கள் தெருவில் நடக்கையில் என்னைச் சுற்றி யாருமே இல்லாத போதும் நான் எண்ணிக் கொள்வேன் ‘என்னைச் சுற்றி மனிதர் நிற்கிறார்கள், ‘அவர்கள் என்னை பெரிய எழுத்தாளனாகப் பார்க்கிறார்கள். அதோ போறான் பார் அவன் அந்த பெரிய விருதை வாங்கியவன் என்று பேசிக் கொள்கிறார்கள் என்று எனக்குள்ளேயே எண்ணிக்கொள்வேன்.

ஆனால் தோழர்களே, என் லட்சியம் அந்த விருதை பெறுவது அல்ல. அந்த விருதை பெரும் அளவிற்கு என்னை உயர்த்திக்கொள்வது” மக்கள் கூடம் மொழிகடந்து சோ.. வென கைதட்டியது.

“அந்த என் லட்சியக் கோட்டினை நான் அடைய இதுவரை எழுதியது நூற்றிற்கும் மேலான புத்தகங்கள். நூறு புத்தகங்கள் எழுதியவனை என் வீட்டின் நான்கு தெரு தள்ளியவனுக்குக் கூட தெரியாது. கேட்டால் அவன் ஏதோ எழுதுறானாம் என்பார்கள் சிலர்.

எத்தனை உயர்வான வேலையை விட்டுவந்தேன் தெரியுமா, எவ்வளவு பெரிய சம்பாதியத்தை ஒதுக்கி விட்டு வந்தேன் தெரியுமா? ஏன் வந்தேன், எழுத்தின் மீது வைத்த நம்பிக்கை. எழுத்தினால் நான் இங்கு வந்து நிற்க முடியுமென்று நான் கொண்ட நம்பிக்கை. இங்கு வந்துவிட்டால் என் உணர்வுகள் மதிக்கப் படும், மதிக்கப் பட்ட உணர்வுகளால் என் கீழுள்ளோரை என்னளவிற்கேனும் உயர்த்திக் கொண்டுவர முடியாதா என்றொரு ஏக்கம்.

ஆனால் என் சமுதாயம் அப்படியில்லை. சுயநலம் புழுத்துக் கிடந்தது என் சமுதாயத்தில். அடுத்தவன் செத்தாலும் ஒதுங்கிப் போனது என் சமுதாயம். தன் காலில் சேறு படுமெனில் அடுத்தவன் முகத்திலும் சேற்றை வாறிப் பூச கங்கணம் கட்டிக் கொண்டு வறுத்தமின்றி திரிந்தனர் என் தலைமுறையினர்.

அதைக் காணும்போதெல்லாம் துடித்தேன், தவித்தேன்.., இப்படி இருக்கிறதே என் இளைஞர் சமுதாயம் என்று வேதனைப் பட்டேன். என்று திருந்துமிந்த மனிதர் கூட்டம் என்று அழுதேன். அழைவர அழைவர அதை ஒவ்வொன்றையும் மிக அருகில் சென்று பார்த்து வலிக்க வலிக்க எழுதினேன்.

ஆனால் கொடுமை பாருங்கள் எழுதுவதை படிக்கவும் இம்மக்கள் தயாரில்லை. இனமாகக் கொடுத்தால் கூட வாங்கி தூரம் எறிந்தனர். எறிந்ததையும், ஏறியாததை எறியும் முன்னரும் சென்று பொறுக்கிக் கொண்டு தெரு தெருவாய் அலைந்தேன். என் புத்தகங்களை சுமந்துக் கொண்டு போய் விற்கமுடிந்த இடத்திலெல்லாம் நானே விற்றேன்.

காலையில் ரயிலிலேறி சென்னை கோட்டை நிறுத்தத்தில் இறங்கும் வரை ஒவ்வொரு இடைநிறுத்தமாக இறங்கி ஏறி இறங்கி ஏறி யாரேனும் வாங்குவார்களா என்று தேடி தேடி அலைவேன். வாங்கிப் பார்ப்பார்கள் திரும்பிக் கொடுத்துவிடுவார்கள். சிலர் புத்தகமா படிக்கிறதில்லைங்க என்பார்கள்.

சரி படிப்பவர்கள் இப்படித் தானே, எங்கேனும் பதிப்பகங்களில் விற்க முயல்வோம் என்று எண்ணி ஒவ்வொரு பதிப்பகமாக ஏறி இறங்குவேன் ‘கவிதையா வேண்டாங்க என்பார்கள், கவிதை போட்டால் யாருங்க வாங்குறா என்பார்கள், பத்திரிகையில எல்லாம் எழுதி இருக்கீங்களா என்று கேள்வி கேட்பார்கள், நூறு புத்தகம் எழுதி என்ன பிரயோஜனம் பேப்பர்ல பேர் வந்திருக்கா? டீவில பேட்டி குடுத்திருக்கீங்களா என்பார்கள். போட்டுட்டு போங்க ஆறுமாசம் கழித்து வாங்க வித்தா பணம் தறோமென்று அலட்சியப் படுத்துவார்கள். எங்கோ ஒருசிலரின் அனுதாபம் என் முகம் கண்டு வழியும், ஏதேனும் வைப்பு வந்தால் தெரியப்படுத்துறேன் விலாசம் கொடுத்துட்டு போங்கன்னு வங்கி வைப்பாங்க.

விதியென்று எண்ணி விலாசமோ புத்தகமோ கேட்பதை எதையேனும் கொடுத்துவிட்டு, இருப்பதை கொண்டுப்போனவாறே தலையில் சுமந்துக் கொண்டு வீடு நோக்கி வருவேன். நான் எழுதியதை நான் மட்டுமே சுமக்க வேண்டுமோ என்று வருத்தம் உள்ளே விஷமாக பரவி வலிக்கும். ஆனாலும் எனக்கு நம்பிக்கை இருந்தது என் உலகம் எனை ஒருநாள் திரும்பிப் பார்க்குமென்று. ஒருநாள் என் படைப்புக்களை எல்லோரும் படிப்பார்கள் என்று.

என் மக்களுக்கு எட்டும்வரைதான் வேதனை எல்லாம், எட்டிவிட்டால் விட்டவரில்லை என் இனத்தாரென்று நம்பினேன். என்றாலும், இவைகளுக்கு மத்தியிலும் என்னை வளர்த்த நண்பர்களும் உண்டு. யாரோ ஒரு நண்பன் படிப்பான், படித்துவிட்டு கைவலிக்கும் வரைப்போட்டு கைகுலுக்குவான், அவன் என் மீது காட்டும் மதிப்பு என்னை என் நம்பிக்கையின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தும்.

அதோடு, அவர்கள் கொண்டுபோய் வேறெங்கேனும் காட்டுவார்கள், அவர்கள் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்து நல்லா எழுதியிருக்கீங்களே என்பார்கள். கொஞ்சம் விழுந்த தலை நிமிரும். அக்கம் பக்கமிருந்து யாரேனும் வந்து இனாமாக கொடுத்தால் வாங்கி படித்துவிட்டு பயங்கரமா எழுதியிருக்கியே என்பார்கள். யாரையேனும் நாமாக கட்டாயப் படுத்தி படிக்கக் கொடுத்துவிட்டால் அதை படித்து முடித்ததும் அடுத்த படைப்பை தானாக வந்து வாங்கிபோய் படிப்பார்கள். ஆக, அங்கெல்லாம் என் எழுத்திற்கான அடியுரம் பதியத் துவங்கியது. என் எழுத்தின் மீதான உயர்ந்த நம்பிக்கை வந்தது.

ஆனால், என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே!! விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா?

-—————–+++——————+++——————–

தொடரும்..

வித்யாசாகர்

No comments: