சிந்தனைக்குச் சில…. அழுக்காறு - பரணி


.
இருவகை மக்களை இவ்வுலகில் பார்க்கின்றோம். பிறருடைய மகிழ்ச்சியான வாழ்வையும் சீர்சிறப்புக்களையும் பார்த்து தாமும் மகிழ்ந்து உவகையுறுகின்றார்கள் ஒருவகையினர். பிறருடைய சிறப்புக்களைக் கண்டு மனம் புழுங்கி அவர்களில் வெறுப்புக் கொண்டு பொறாமைப்படுகின்றார்கள் இன்னொரு பகுதியினர்.

இவர்களில் பிறராக்கம் கண்டு மகிழ்வோரே சந்தோஷமாகவும் மன அமைதியுடனும் வாழ்கின்றார்கள். பிறராக்கம் கண்டு பொறாமைப்படுவோர் மன அமைதி அற்றுஇ மன உறுத்தலுடன் வாழ்கின்றார்கள். மற்றவர் உயர்வைக் கண்டு பொறுக்க முடியாத குணத்தை அழுக்காறு என்பர். அவர்கள் மனமும் வாழ்வும் அழுக்கு நிறைந்ததாய்த் தீமையே விளைவிப்பதாய் இருக்கும். இதனையே திருவள்ளுவர்

“அழுக்காறு எனஒருபாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்”



என அழகாகக் கூறினார். அழுக்காறு ஒருவனுடைய செல்வத்தை அழித்து அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் தீய வழியில் செலுத்தி விடும்.

பொறாமை மற்றவரிலும் மேலானதைத் தாம் பெற வேண்டும் எனும் பேராசையை உண்டாக்கும். இதனால் நல்லதுஇ கெட்டதை இனங் காண மறந்து நினைத்ததை அடைவதற்கு எவ்வழியும் போகும் நிலைக்கு ஆளாக்கி விடும்.

பொறாமையாகிய அழுக்காறினால் பேராசையாகிய அவாவும், அவாவினால் கோபமும், கோபத்தினால் தீயவார்த்தைகளாகிய இன்னாச் சொல்லும் ஏற்படும். அழுகாறும் பேராசையும் இன்னாச் சொல்லும் குடிகொண்டால் மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களும் அறந்தவறும். நினைப்பதும் சொல்வதும் செய்வதுமாகிய அனைத்துமே பாவகருமங்களாகி அழிவையே தரும்.
“அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தரம்”

என்ற வள்ளுவர் வாக்கின்படி இந்த நாலும் எம்மை அவநெறியில் வீழ்த்தாவண்ணம் அறநெறி சென்று சாந்தியும் சமாதானமும் நிலைக்க வாழ்வோமாக.

பரணி                                

No comments: