இந்தியாச் செய்திகள்


இந்தியா, நேபாளத்தில் நில நடுக்கம்: 19 பேர் பலி


19/9/2011
இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமை மையமாக வைத்து நேற்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிச்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்ததுடன் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

இதில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் 13 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நில அதிர்வுகள் நேபாளத்தில் பல இடங்களிலும், வங்கதேசத்திலும், பிற இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளன.

இந்திய நேபாள எல்லைப் பகுதியிலுள்ள மலைகளில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் கூறுகின்றன. முழுமையான ஆட்சேதம் பொருட்சேதம் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையே பூகம்பத்தால் நேபாள தலைநகர் காத்மண்டுவில் பிரித்ததானிய தூதரக சுவர் இடிந்து விழுந்ததில் குறைந்தது 5 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் விரிசல் கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிக்கிம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் மாநிலமே இருளில் மூழ்கியது.

நேற்று மாலை 6.11மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்துமக்கள் பெரும் பீதியுடன் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர்.பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. தரைக்குக் கீழே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியின் பல பகுதிகளில் மக்கள் நில அதிர்வுகளை உணர்ந்தனர். டெல்லியின் தென் பகுதியில் தான் நில அதிர்வு அதிகளவில் உணரப்பட்டது.

பீகார் மாநிலம் பாட்னா, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, உ.பி. மாநிலம் லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

வடக்கே டெல்லி முதல் கிழக்கே கிழக்கு நேபாளம் வரை பல பகுதிகளை நிலநடுக்கம் ஆட்டிப் படைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

அங்கே மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி


No comments: