தமிழ் சினிமா


.
* வெங்காயம்

* முதல் இடம்


* யுவன் யுவதி
வெங்காயம்

சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நாத்திகவாதங்களை வைத்து படமெடுப்பவர்கள் மிக சொற்பம்.

அதிலும் அதை தைரியமாய் சொல்பவர்கள் மிக சொற்பம். இம்மாதிரியான படங்களுக்கு அதுவும் புதியவர்கள் நடித்து, எடுத்திருந்தால் பத்திரிகையாளர்களும், பகுத்தறிவு பட்டறை ஆட்கள்கூட அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவு சொற்பமே சொற்பம்தான். அது ஒரு தனி சோகக் கதை. இதையெல்லாம் மீறி சாட்டையடியாய் ஒரு படம் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.

பல பேர்களை ஏமாற்றி பணம் பறிப்பது, பொய் ஜோசியம் சொல்வது, நரபலி கொடுப்பது என்று பல சாமியார்கள் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு அடாவடியாக கிராம மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எடுக்கும் தற்கொலை முடிவாலும், மனநிலை பாதிக்கப்படுவதால் பல குழந்தைகள் அனாதைகளாகிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த ஒரு கும்பல் சாமியார்களையும், ஜோசியர்களையும் கடத்துகிறது. இந்தக் கடத்தல்களை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டரை நியமிக்கிறார்கள். இவர் கடத்தல்காரர்களை கண்டுபிடித்தாரா? கடத்தியது யார் என்பதே படத்தின் இறுதி முடிவு.

இந்த விறுவிறுப்பான திரைக்கதையில் ஒரு காதல் ஜோடியின் கதையை இணைத்து படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சங்ககிரி ராஜ்குமார். சத்யராஜ் கௌரவ வேடத்தில் சிறிது நேரம் வந்தாலும் படத்தின் திருப்புமுனைக்கு வழிவகுக்கிறார். நாடகக் கலைஞராக நடித்துள்ள எஸ்.எம்.மாணிக்கம் இயக்குநர் ராஜ்குமாரின் தந்தைதான். இவருக்கு சினிமாவில் தனி இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இயக்குநர் ராஜ்குமாரும் நடித்திருக்கிறார். அவருடைய சேலத்து தமிழ் உச்சரிப்பும், யதார்த்தமான நடிப்பும் மனதில் பதிகின்றன.

இளம் காதல் ஜோடிகளாக வரும் அலெக்சாண்டர், பவீனா ஆகியோரின் நடிப்பு கனகச்சிதம். பவீனாவின் கிராமத்து பேச்சும், குறும்பும் நம்மனதை கொள்ளை கொள்கின்றன. பூ விற்கும் சிறுமி, சைக்கிள் கடைச் சிறுவன், டீ கடை சிறுவன், மனநலம் பாதித்த மூதாட்டி என படத்தில் வரும் துணை கதாபாத்திரங்களும் தங்களது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் கேமராவில் படமாக்கப்பட்டுள்ள படம். கிடைத்த வசதிகளை வைத்து, முற்றிலும் புதுமுகங்களை வைத்து சுவாரஸ்யமாகவே கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். பாட்டி ஒருத்தி பைத்தியமாய் அலையும் காரணத்துக்கான ப்ளாஷ்பேக், என்று ஆரம்பித்து ஒவ்வொரு விஷயத்துக்கும் ப்ளாஷ்பேக் கொஞ்சம் சலிப்படைய வைத்தாலும், இரண்டாம் பாதியில் வரும் கூத்துக்காரர் தன் பையனின் சிகிச்சைக்காக நடுரோட்டில் கூத்து ஆடி தன்னை நிரூபித்து அழுது பணம் பெரும் காட்சி செம டச்சிங். ஆழமானதும்கூட. அந்த கூத்துக்கார நடிகரின் நடிப்பு அருமை.

முக்கியமாய் இம்மாதிரியான கதைக்களனை வைத்து படமெடுக்க, தயாரிக்க நிஜமாகவே தைரியம் வேண்டும் அந்த தைரியம் சங்ககிரி ராஜ்குமாருக்கு இருந்திருக்கிறது. இறுதிக் காட்சியில் சாமியார்களை பார்த்து சிறுமி தேவடியா பசங்களா என்று திட்டும் போது தியேட்டரில் கிடைக்கும் கைதட்டல் சத்தம் ஒன்றே போதும் ராஜ்குமாருக்கு. குறைகள் என்று பார்த்தால் நாடகத்தனமான காட்சிகள், மோசமான துணை நடிகர்கள் நடிப்பு என்று சிலபல விஷயங்கள் இருந்தாலும், தன்னால் இயன்ற சக்திக்கு, கிடைத்த வசதிகளை வைத்து, வழக்கமான படமெடுக்காமல், இவ்வளவு முக்கியமான விஷயத்தை சுவாரஸ்யமான சினிமாவாக கொடுக்க முனைந்ததற்கு நிச்சயம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

இசையமைப்பாளர் பரணியின் இசைத்தாலாட்டில் 'அச்சமென்ன அச்சமென்ன ஆசைத் தமிழே...' பாடல் மனதில் தாளம் போடுகின்றன. பகுத்தறிவு வசனங்களுக்கேற்ப பின்னணி இசையும் படத்திற்கு உயிரூட்டுகின்றன. ஒளிப்பதிவாளர் சபா ரத்தினம் செதுக்கிய காட்சிகளை, செ.மா.செந்தில்குமாரின் படத்தொகுப்பு சிற்பமாக்கி காட்டியிருக்கிறது. சுப. வீரபாண்டியன் மற்றும் அறிவுமதியின் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

பணம் கொடுத்தால் பாதிக்கப்பட்ட மனம் சாந்தியடையாது என்பதையும், மூட நம்பிக்கைக்கு எதிராக தெளிவான கருத்துக்களுடன் முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டுதலை பெற்றிருக்கும் இயக்குநர் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் தோலுரித்துக் காட்ட 'வெங்காயத்தை' பயன்படுத்தியதற்காக பாராட்டியே ஆகவேண்டும். இம்மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு தூண்கள்.


நன்றி விடுப்பு
 
 
முதல் இடம்

ஒரு லோக்கல் ரவுடி கிரிமினல் பட்டியலில் முதல் இடத்தில் வரத் துடிக்கும் வாலிபரின் கதை.

முதல் மாணவனாக தேர்ச்சி பெற வேண்டும், பெரிய டாக்டராக வேண்டும், இன்ஜினீயராக வேண்டும் இப்படித்தான் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் லட்சியங்கள் இருக்கும்.

ஆனால் இந்த படத்தில் வரும் நாயகன் விதார்த்துக்கு காவல்நிலையத்தின் குற்றவாளி பட்டியலில் தனது பெயர் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. இதற்காக முதலில் சின்னச்சின்ன தவறுகளை செய்து வரும் விதார்த், ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தின் குற்றவாளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரவுடியையே கொலை செய்து விட்டு அந்த இடத்துக்கு வரத்துடிக்கிறார். இதற்கிடையில் பள்ளி மாணவி ஒருத்தியுடன் காதல் வேறு வந்து தொலைக்கிறது. அவளோ ரவுடியிசத்தை தூக்கிப் போட்டு விட்டு வரச் சொல்கிறாள். அதே நேரத்தில் அவன் எதிரி ரவுடிகள் அவனை கொல்வதற்கு திட்டம் போடுகின்றனர். தன் உயிரைக் காப்பாற்றுவதா? இல்லை தான் காதலித்த பெண்ணுடன் வாழ்வதா? என்னும் போராட்டத்தில விதார்த் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு அவளோடு சேர்ந்தானா? இல்லையா? என்பதுதான் கதை.

படத்தின் டைட்டில் 'முதல் இடம்' என்று வந்ததும் அடடா... தெரியாம ஏவிஎம்மின் டிவி சீரியல் எதையோ போட போறாங்க போலிருக்கே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு டைட்டிலில் ஒரு எளிமை(?) கிராபிக்ஸ் உலகம் எங்கயோ போயிருச்சு. 'சிவாஜி' படம் எடுத்த ஏவிஎம்முக்கு இது கூடவா தெரியாம போச்சு. டைட்டில்தான் அப்படி என்றால், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகள் டிவி சீரியல்தான் படம் என்பதை சத்தியம் செய்யாத குறையாக நிரூபிக்கின்றன.

ஊரில் சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பொறுக்கித்தனம் செய்து கொண்டு திரியும் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் எமன்குஞ்சுவாக வரும் விதார்த். வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, சட்டை காலறை தூக்கி விட்டுக்கொண்டு அவர் செய்யும் சேட்டைகள் சில நேரங்களில் கோபம் வரவைப்பதாகவும், பல நேரங்களில் காமெடியாகவும் இருக்கிறது. கதாநாயகி கவிதா நாயரின் முகம் முத்தினதாய் பல காட்சிகளில் அக்கா போலிருக்கிறார். கண்கள் சில இடங்களில் க்யூட். கூட வரும் ப்ரெண்ட் கேரக்டரையெல்லாம் நல்லா தேடிப் போடுகிற இயக்குநர் கதாநாயகி விஷயத்தில் சறுக்கியிருப்பது ஏன் என்றே தெரியவில்லை?.

எமன்குஞ்சுக்கு விதார்த் தரும் விளக்கம்... அப்பப்பா... இயக்குநர் இதுக்கு ரூம் போட்டு யோசிச்சிருப்பாரு போலிருக்கு. ரவுடியை பள்ளி மாணவி விரும்புவது போல் காட்டியிருப்பது எல்லாம் பல படங்களில் பார்த்த சலிப்பூட்டும் காட்சிகள்தான். கதாநாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார் இளவரசு. இவர் மகளுக்கு இவரிடமே எல்லாரும் லவ்லெட்டர் கொடுக்க அதற்கு இவர் கொடுக்கிற விளக்கம் இருக்கே அடடடா... நல்ல குடும்பம்டா இதுன்னு சொல்ல வைக்கிறது.

மயில்சாமி ஆங்காங்கே வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். கலைராணி வழக்கமாய் கத்தி கத்தி அழுகிறார். படம் பூராவும் மகன் செய்யும் தவறுக்கெல்லாம் உடைந்தையாய் ஆதரவு அளித்துவிட்டு, இறுதிக்காட்சியின் போது வில்லன் திருந்துவது போல மகன் மீது பாசத்தை பொழிந்து, அவனை திருந்தச் சொல்லி அழுவது செம காமெடி. எதிர்கோஷ்டி வில்லனை வைத்து தருகிற ட்விஸ்ட் ஓகே. இவர்கள் எல்லோரையும் விட ரவுடி பட்டியலில் முதலாம் இடத்தில் இருக்கும் கிஷோர்தான் நிமிர்ந்து நிற்கிறார். தெரியாம அரிவாளை கையில எடுத்துட்டேன், இப்ப அதை எப்படி கீழே போடுறதுன்னு தெரியல என்று பேசும் வசனங்களில் கதையின் முதுகெலும்பாக இருக்கிறார். தன் இடத்தை பிடிப்பதற்காக முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் விதார்த் செய்த கொலையை தான் ஏற்று ஜெயிலுக்கு செல்லும் கிஷோரின் கேரக்டர் டச்.

செல்லத்துரையின் ஒளிப்பதிவு பளிச். டி.இமானின் இசையில் இரண்டு குத்துபாடல்கள் ஓகே. அப்புறம் 'வாந்தே போந்தே....' என்ற அறிவுமதியின் பாடல் கொஞ்சமே கொஞ்சம் மெலடி. 'ஊரு ஊரு தஞ்சாவூரு...' என்ற குத்துப்பாடலுக்கு ஆடும் கீர்த்தி சாவ்லா, ஜொள்ளு பிரியர்களின் வாயில் எச்சில் ஊற வைத்து விடுகிறார்.
'பருத்திவீரன்' டைப் ரவுடிக்கதை, 'களவாணி' டைப் காட்சிகள், 'சுப்ரமணியபுரம்' போன்ற நட்பு, துரோகம், கொலை, என்று நிறைய வைத்து ஒரு கதை சொல்ல முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ஆர்.குமரன். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இவ்வளவு பளிச்சென்ற ரவுடியை தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்கு முன்னால்தான் காட்டியிருக்கிறார்கள். ஆங்காங்கே வரும் குட்டி குட்டி ட்விஸ்டுகள், சில வசனங்கள் அட போட வைத்தாலும், ஹீரோ கேரக்டர் முதல் வில்லன் கேரக்டர் வரை ஒரு குழப்பமான மனநிலை இருப்பதால் ஒன்றும் ஏற மாட்டேன் என்கிறது.

முடிவாக, குற்றவாளி பட்டியலில் முதலிடம் பிடிக்க போராடிய விதார்த்தின் மகன் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதை சொல்லி, இதுதான் உண்மையான முதல் இடம் என்று உணர்த்தும் காட்சியில் இயக்குநர் முத்திரை பதித்திருக்கிறார்.நன்றி விடுப்பு
யுவன் யுவதி

காதலனை கைப் பிடிக்க அமெரிக்காவுக்குப் பயணமாகக் காத்திருக்கும் ரீமா கல்லிங்கல்.

உசிலம்பட்டி கலாசாரத்தில் இருந்து நழுவி அமெரிக்காவுக்குச் சென்று நவீன வாழ்க்கையை வாழ ஆசைப்படும் பரத். இருவருக்குள்ளும் நடக்கும் காதல் விளையாட்டுகளே 'யுவன் யுவதி'.

'கடல் மீன்கள்' தொடங்கி 'மகராசன்' வரை கமலை நாயகனாகக் கொண்டு தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்த, மூத்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம். இந்தியாவே வேண்டாம் எப்படியாவது அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட வேண்டும் என்பது பரத்தின் கனவாக உள்ளது. ஆனால் உசிலம்பட்டியில் இருக்கும் அவரது தந்தை சம்பத்தோ, மகனுக்கு உள்ளூரிலேயே பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்து அவனை உசிலம்பட்டியிலேயே தங்க வைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.அமெரிக்கா செல்ல விசா பெறுவதற்காக வரும்போது, ரீமாவை சந்திக்கிறார் பரத். ஆனால் முதல் சந்திப்பிலேயே இருவரும் மோதிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இப்படி முட்டிக்கொண்டாலும் பரத், ரீமாவை காதலிக்கிறார். ஒருகட்டத்தில் தொலைந்து போன தனது பாஸ்போர்ட் கிடைக்க பரத் முன்வந்து உதவி செய்வதால் அவருடன் நட்பாகிறார் ரீமா. தனது காதலை ரீமாவிடம் பரத் சொல்லிவிட நினைக்கும்போது, தனது கல்யாணத்துக்காகத்தான் ரீமா அமெரிக்காவே செல்கிறார் என்ற விவரம் தெரியவருகிறது. இந்த சூழ்நிலையில் அப்பா பார்த்த பெண்ணை பரத் திருமணம் செய்தாரா? அமெரிக்கா மாப்பிள்ளையை ரீமா மணந்தாரா? என்பதே மீதிக்கதை.

அழகான பொண்ணுக்கு திமிர் ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன், அது உண்மைங்களா?' என்று ரீமாவிடம் முதலில் முறைத்து 'நிறைய பேசற பொண்ணுங்க பசங்களை ரொம்ப அலைய விடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்' என்று சரணடைவது வரை காதல் காட்சிகளில் உருகி உருகி ரொமான்ஸ் காட்டும் பரத்துக்கு கச்சிதமான கதாபாத்திரம். ஆனால் பல காட்சிகளில் உடல்மொழியில் தேவையற்ற அலட்டல்களை குறைத்திருக்கலாம். பரத் நிஜமாகவே திறமையான டான்ஸர்! அப்படிப்பட்டவரையே நடனத்தில் துக்கிச் சாப்பிட்டு விடுகிறார் அறிமுக நாயகி ரீமா கல்லிங்கல். நடிப்பிலும் ரீமா பல காட்சிகளில் பரத்தை பின்னுக்கு தள்ளிவிடுகிறார். "என்னது உசிலம்பட்டிக்காரன்னா கேவலமா? டேய்.. சச்சின் டெண்டுல்கரே கேரளா போனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கரேன்னு கூப்பிட மாட்டாங்க.. சச்சின் டெண்டுல்கரேனு தான் கூப்பிடுவாங்க" என்று சந்தானத்துக்கே உரிய கிண்டலில் தியேட்டர் அதிர்கிறது! சிஷெல்ஸில் பரத்தை தேடி அலைந்து கறுப்பர்களிடம் சிக்கி அல்லோலப்படுவது கலகலப்பு.

ல படங்களில் வில்லனாக ரசித்த அதே சம்பத்துதான் பரத்தின் அப்பா. ஆ... ஊ... என்றால் அரிவாளை தேடும் அவரது கையும் முரட்டு பார்வையும் கிராமத்து ஆசாமிகளுக்கேயுரிய மிடுக்கு. அவ்வளவு கடுமையை கண்களில் காட்டினாலும், தியேட்டரையே நகைக்க வைக்கிறார் மனிதர். ஆனால் என்னதான் ஊரில் அதிகாரம் வாய்ந்த பெரிய மனிதராக இருந்தாலும், எந்த நேரமும் நாலு சுமோக்கள், பத்துக்கும் மேலான மீசை வைத்த வெள்ளுடை மனிதர்களுடன் இருப்பது கொஞ்சம் ஓவர். ஒரேயொரு காட்சியில் வரும் சத்யன் கலகலக்க வைக்கிறார். தமிழ்சினிமாவுக்கு வசனகர்த்தாவாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணன், இந்த படத்துக்கு எழுதியிருக்கும் வசனங்களில் நவீன வாழ்க்கை முறை தெறிக்கிறது. குறிப்பாக கிராமத்தில் மகன் பரத்திடம் அப்பா சம்பத் பேசும் காட்சிகள். கதையில் முக்கிய இடம் பிடிக்கிறது சிஷெல்ஸ் தீவு. தீவைப் படம் பிடித்ததில் செலுத்திய கவனத்தை திரைக்கதையில் செலுத்தியிருக்கலாம்.

ஆச்சரியம், ரொமான்ஸ், சில்மிஷங்கள் இல்லாத காதல் படம். கண்கள் கலங்கி வார்த்தைகளை மென்று விழுங்குவது, உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் கண்­ர் விடுவது என காதல் தோல்வி அடையும் நம்மூர் சினிமா நாயகன் போல் இல்லாமல் படம் முழுவதுமாக மாடர்னாக வந்து நிற்கும் பரத்தின் கேரக்டர் பிளஸ்ஸா? மைனஸா? அதெப்படி அமெரிக்காவுக்கு விசா கிடைக்காதவர்களுக்கெல்லாம், சிஷெல்ஸ் தீவிற்கு விசா கொடுத்து விடுவார்களா என்ன...?, சென்னை சிட்டிக்குள் ஏ.சி., டி.சி., ஆஃபீஸ்தான் உண்டு என்பதை மறந்து, எஸ்.பி., ஆஃபீஸ் வரை போய் வருகிறேன் மாப்பிளை என்று பரத்திடம் இன்ஸ் மாமா சொல்வது என படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள். பரத்-ரீமா காதல் மேட்டர் போரடித்து விடக்கூடாது என்பதற்காக சந்தானத்தை படத்தின் இறுதிக்காட்சிவரை பரத்கூடவே விட்டு காமெடி செய்திருக்கிறார் இயக்குநர் என்றாலும் யுவன் யுவதி பெருசாக எடுபடவில்லை.

அமெரிக்கா சென்று ரீமாவை பரத் சந்திக்கும் காட்சிகள் மிகச்சாதாரணமாக உள்ளது. சென்ற இடத்தில் மனசு மாறி பரத்தை ரீமா காதலிப்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். இதுதான் நடக்கும் என்பதை முதலிலேயே யூகித்து விட முடிகிறது என்பதால் ஸ்கிரிப்ட்டில் சுவாரஸ்யமில்லை. விஜய் ஆண்டனி இசையில் 'ஓ மை ஏஞ்சல்', 'மயக்க ஊசி' பாடல்கள் கேட்க வைக்கின்றன. வசனங்களில் எஸ் ராமகிருஷ்ணனை ஓரிரு இடங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக கிராமத்தில் மகனிடம் சம்பத் பேசும் காட்சிகள். கோவி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில், சிஷெல்ஸூக்கே போய் வந்த உணர்வு. அதேபோல, உசிலம்பட்டி என படத்தில் காட்டப்படும் இடங்களும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு. கிராமத்தில் நடக்கும் ட-வடிவ கிணற்று சண்டைக்காக சண்டை இயக்குநரை பாராட்டலாம்.

நன்றி விடுப்பு  


No comments: