பிரிவாற்றாமை -கவிதை -ப.மதியழகன்


.

இறுகிய முகங்களுடன்
நகருகிறது புகைவண்டி
கையசைப்பில் தெரிகிறது
வலியும், வேதனையும்
சிறு கோடுகளாய்
மறையும் வரை
நெஞ்சைவிட்டு அகலவில்லை
அவள் முகம்
என்னையொத்த அலைவரிசை
உள்ளவரை பிரியும் போது
என்னில் பாதியை நான் இழக்கிறேன்
அவள் விட்டுச் சென்ற
கைக்கடிகாரம்
எனது இதயத் துடிப்பை
அதிகப்படுத்துகிறது

மாநகரத்தில் அவளுக்கு
பிடித்தமான இடங்களுக்கு
அடிக்கடி சென்று வருகிறேன்
அந்த இடங்களில்
அவள் விட்டுச் சென்ற பிரதியை
பெற்றுக் கொள்வதற்காக
தனிமையெனும் கூர் வாள்
என்னைக் குத்திக் கிழிக்கும் போது
அவளது பெயரை உச்சரிக்கிறேன்
எனது கண்கள் பனிக்கிறது.

No comments: